Published:Updated:

`நம்பிக்கை, பக்தியை ஒருபோதும் சாயி வீணாக்குவதில்லை!’ #saibaba

`நம்பிக்கை, பக்தியை ஒருபோதும் சாயி வீணாக்குவதில்லை!’ #saibaba
`நம்பிக்கை, பக்தியை ஒருபோதும் சாயி வீணாக்குவதில்லை!’ #saibaba

இறைவனைத் தேடுகிறபோதெல்லாம் உடனே அவர் காட்சிகொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறோம். சிலமுறை தேடியதுமே அவனைக் காணக்கிடைக்கவில்லை என்றால் மனம் நொந்து `இறைவனே இல்லை' என்கிறோம். தேவையின் பொருட்டுத் தேடுகிறவர்களுக்குத் தோல்வியே கிடைக்கிறது. ஆனால், அன்போடு அவனைத் தேடுகிறவர்கள் அவனைக் காணும் வரைக்கும் ஓய்வதில்லை. அப்படித்தான் பாயாஜாபாயும். சாயி எத்தனை இடங்களுக்கு மாறினாலும் அவர் தேடித் தேடி அலைந்து அவருக்கு உணவு அளித்தார். அந்தத் தாயின் அன்பில் சாயி மனம் மகிழ்ந்து அவரைத் தாயாகவே பாவித்தார்.

``ஓ, லாஸி (அம்மா), ஒரு ரொட்டித் துண்டைப் போடு'' என்று தன் திருக்கரம் ஏந்தி சாயிநாதன் ஷீரடியில் உள்ள வீடுகளின் முன்பு நிற்பாராம். ஒரு கையில் ஒரு சதுரத் தட்டு. மற்றொரு கையில் தகரக் குவளை. அவருக்குப் பிட்சையிடுவது எல்லோருக்கும் வாய்க்கும்பேறு அல்ல. அப்படி வாய்த்தவர்கள் அவர்மேல் அன்பு பாராட்டியவர்களாகவே இருந்தார்கள். அப்படி பாபாவின்மீது அன்பு செய்த அன்னையர் ஏராளமானோர் ஷீரடியில் இருந்தனர். அவர்களுள் பாயாஜாபாயின் அன்பு கொஞ்சம் உயர்ந்தது. தாயாகித் தயைசெய்யும் பாபாவுக்கே தாயாகிப் பசி தீர்த்தவர் பாயாஜாபாய்.

பாயாஜாபாய் சாயிநாதர் மேல் பெரும் பக்தி கொண்டிருந்தார். அந்தப் பக்தி அன்பினால் ஆனது. ஒரு கட்டத்தில் அவர் சாயிநாதரைத் தன் பிள்ளையாகவே நினைத்துக்கொண்டார். எந்தத் தாய்தான் தன் மகன் உணவுக்காக அடுத்தவர் வீட்டு வாசலில் பிட்சை கேட்டு நிற்பதை விரும்புவார்? சாயிநாதரோ தினமும் ஊர் எங்கும் உள்ள வீடுகளுக்குச் சென்று ரொட்டித் துண்டை யாசித்துக்கொண்டிருந்தார். பாயஜாபாயின் மனம் துடித்தது. அதை நிறுத்த வேண்டும் என்று  நினைத்தார்.

எளியவர்களைப்போல வயிற்றுப் பசிக்காகப் பிட்சை எடுப்பவரா பாபா. அப்படியானால் அவர்தான் பிட்சை எடுத்த உணவுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி காக்கைக்கும் பூனைகளுக்கும் நாய்களுக்கும் உண்ணப் பகிர்ந்து தருவாரா. அவரிடமிருந்து உணவில்லாதவர்கள் உரிமையோடு வந்து உணவு எடுத்துப் போவார்களே..! மசூதியைச் சுத்தம் செய்யும் பெண், தினமும் தனக்கும் தன் பிள்ளைகளுக்குமான ரொட்டிகளை அவர் பிட்சை பெற்று வந்தவற்றிலிருந்து கேட்காமலேயே எடுத்துச் செல்வாளே. அவர் எடுத்த பிட்சை அவருக்கானது மட்டுமா என்ன ? 

மேலும் பிட்சையெடுத்தல் என்பது, `தான்’ என்னும் அகங்காரத்தை அழிக்கும் செயல்தானே. ஞானத்தின் உச்சத்தில் நின்று சாயி செய்த செயல்களை பாயாஜாபாய் உணரவில்லை. அவள் மனம் தாயன்பால் மட்டுமே நிறைந்திருந்தது. தன் மகன் பிட்சை எடுக்கக் கூடாது என்று தவிக்கும் தாய் மனம்.

சாயி போன்ற மகானுக்குத் தாயாக மாறுவது அத்தனை எளிதல்லவே. பாயாஜாபாய் தன் கையால் தயாரித்த உணவுகளை எடுத்துச் சென்று பாபாவுக்கு அளிக்க முயன்றார். காலையில் அவர் பிட்சைக்குக் கிளம்பும் முன்னதாக அவர் சென்று உணவைத் தருவார். பாயாஜாபாயின் அன்பை சாயி புரிந்துகொண்டாலும் தன் இயல்பு மாறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பாயாஜாபாய் தன் மேல் காட்டும் அன்பை சோதித்தறியத் திருவுளம் கொண்டாரோ என்னவோ, ஒருநாள் பாயாஜாபாய் உணவை எடுத்துக்கொண்டு துவாரகாமாயிக்கு வருமுன் வெளியே கிளம்பிவிட்டார்.

துவாரகாமாயியில் சாயி இல்லாததை அறிந்து பாயாஜாபாய் மனம் வருந்தினார். பசியோடு எங்கே தன் பிள்ளை உணவை யாசித்து நிற்கிறதோ என்று கலங்கினார். சாயி போன வழியை விசாரித்துக்கொண்டு அந்த வழியாக நடந்தார். அவர் வந்த பாதை ஊரைவிட்டு வெளியே காட்டுப் பகுதிக்குள் வந்துவிட்டது. ஊருக்குள் சாயி இல்லை. அப்படியானால் அவர் நிச்சயமாக இங்கேதான் இருக்கக்கூடும் என்று தீர்மானித்து அந்தக் கொடுங்காட்டுக்குள் பாயஜாபாய் நுழைந்தார்.

எதிர்பார்ப்பு வீணாகவில்லை. சாயி அங்கே ஒரு மர நிழலில் அமர்ந்திருந்தார். காடுமேடெல்லாம் அலைந்த களைப்பு ஒரு நொடியில் பாயாஜாபாயிக்கு நீங்கிவிட்டது. உணவை, சாயி முன்பாக வைத்து அவரை வற்புறுத்தி உண்ணும்படிச் செய்தார். மறுநாள் சாயி வேறு இடத்துக்குப் போய்விட்டார். 

இறைவனைத் தேடுகிறபோதெல்லாம் உடனே அவர் காட்சிகொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறோம். சிலமுறை தேடியதுமே அவனைக் காணக்கிடைக்கவில்லை என்றால் மனம் நொந்து `இறைவனே இல்லை’ என்கிறோம். தேவையின் பொருட்டுத் தேடுகிறவர்களுக்குத் தோல்வியே கிடைக்கிறது. ஆனால், அன்போடு அவனைத் தேடுகிறவர்கள்  அவனைக் காணும் வரைக்கும் ஓய்வதில்லை. அப்படித்தான் பாயாஜாபாயும். சாயி எத்தனை இடங்களுக்கு மாறினாலும் அவர் தேடித் தேடி அலைந்து அவருக்கு உணவு அளித்தார். அந்தத் தாயின் அன்பில் சாயி மனம் மகிழ்ந்து அவரைத் தாயாகவே பாவித்தார்.

*

சாயி வாழ்ந்த காலத்தில் அநேகப் பெண்கள் அவரிடம் பக்தி செலுத்தினர். அவர்களுடைய பக்தி மிகவும் எளிமையானது. சாயிக்கு ஏதாவது உணவைத் தயாரித்துக் கொடுப்பது அவரை வீட்டுக்கு அழைத்து சுவையான உணவு தருவது என எளிய வழிகளிலேயே அவர்கள் பரப்பிரம்மம் குறித்த ஞானத்தைப் பெற்றனர். 

சாயி பக்தையான பெண் ஒருத்தி ரொட்டி செய்துகொண்டிருந்தாள். அப்போது அங்கே ஒரு நாய் வருகிறது. அந்தப் பெண் அந்த நாய்க்கு ரொட்டியைப் பிய்த்துப் போடுகிறாள். நாய் திருப்தியாக அதை உண்டுவிட்டுச் செல்கிறது. மறுநாள் அவள் சாயிநாதரை தரிசனம் செய்யப் போகிறாள். அப்போது சாயி, `நேற்று நீ தந்த ரொட்டி மிகவும் சுவையாக இருந்தது’ என்றார். எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம் அந்த சாயிதான் என்கிற தத்துவத்தை அவர் அத்தனை எளிமையாய் அவளுக்கு உபதேசித்தார். அவளும் அதைப் புரிந்துகொண்டு காலமெல்லாம் பசியோடு வரும் உயிர்களுக்கு உணவிட்டபடியே இருந்தாள்.

ஒரு பெண் உணவகம் நடத்திக்கொண்டிருந்தாள். அவளும் சாயியைத் தன் இருப்பிடம் வருமாறு வற்புறுத்தினாள். வேறுவழியின்றி சாயி ஒப்புக்கொண்டார். சாயியின் வருகைக்காக அவள் காத்திருந்தாள். அப்போது நாய் ஒன்று வந்துநின்றது. சாயிநாதர் வரும் வேளையில் இந்த நாய்த் தொல்லை இருக்கக் கூடாது என்று நினைத்து அடுப்பில் இருந்த கொள்ளிக்கட்டையை எடுத்து நாய் மேல் வீசினார். நாய் போய்விட்டது. நீண்டநேரமாகியும் பாபா வரவேயில்லை. வாக்குக் கொடுத்துவிட்டு வராமல் போனாரே என்று சாயியிடம் சண்டை செய்ய அவள் துவாரகாமாயி சென்றாள். அங்கு சாயி, `சிலர் என்னை அவர்கள் இடத்துக்கு வரும்படி அழைக்கிறார்கள். போனாலோ கொள்ளிக்கட்டையால் முகத்திலடிக்கிறார்கள்’ என்றார். பாபா கூறியதன் பொருளை அறிந்துகொண்ட அந்தப் பெண், `எல்லா உயிர்களிலும் பாபா இருக்கிறார் என்கிற உண்மையை அறியாமல் போனேனே’ என்று எண்ணி வருந்தி அழுதாள்.

பாபாவுக்கு இனிப்புகள் செய்து கொண்டுவந்து தருவாள் தர்கட். பாபாவும் அதை விரும்பி உண்பார். காரணம், தனக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும் என்பதற்காக அல்ல, தன்னுடைய பக்தர்கள் அன்புடன் கொடுக்கும் எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவருடைய அருள் உள்ளம்தான்.

சாயிநாதர் வாழும் காலத்தில் அவரைத் தந்தையாக, தமையனாக, மகனாகப் பாவித்து அன்பு செலுத்திய மங்கையர் அநேகம். இன்று சாயிநாதரை ஆண்களும் பெண்களும் தொழுகிறார்கள். ஆனால், ஆண்களைவிடப் பெண்களே மிகவும் விரைவாக அவர் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை, பக்தியை ஒருபோதும் சாயி வீணாக்குவதில்லை. வீட்டில் ஒருவர் தன்னை வணங்கினாலும் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் சாயி துணை நிற்கிறார்.  

ஷீரடி சாய் பாபா பற்றி முழுமையாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....

அடுத்த கட்டுரைக்கு