Published:Updated:

பரிந்துரை... இந்த வாரம்... மேடைப் பேச்சு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பரிந்துரை... இந்த வாரம்... மேடைப் பேச்சு
பரிந்துரை... இந்த வாரம்... மேடைப் பேச்சு

நாஞ்சில் சம்பத்

பிரீமியம் ஸ்டோரி

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள்.  இந்த வாரம் நாஞ்சில் சம்பத்...

பரிந்துரை... இந்த வாரம்... மேடைப் பேச்சு

மிழகத்தைப் பொறுத்தவரை மேடைகளும் ஒலிபெருக்கி களும்தான் அரசியலைத் தீர்மானித்தன. 1967-ல் ஆல்போல் படர்ந்து அறுகு போல வேரூன்றி இருந்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதற்கு அண்ணா வாள் ஏந்தவில்லை. தனது நாக்கையே நம்பியிருந்தார். அவரது பேச்சை ஏற்று மக்கள் திராவிட இயக்கத்தின் பின்னால் திரண்டார்கள். அதற்குப் பிறகு அரை நூற்றாண்டு கடந்தும் காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. தமிழகத்தில் அண்ணா நிகழ்த்திய அதிசயத்தை சர்வதேசத்தில் லிங்கன், ஒபாமா, சர்ச்சில் போன்றவர்கள் நிகழ்த்திக்காட்டினார்கள்.

அரசியலுக்கு மட்டுமென்று இல்லாமல் ஆன்மிகத்துக்கும் மேடைப்பேச்சு அவசியம். அரசியல் அல்லாத தமிழக வரலாற்றில் தனது மேடைப்பேச்சுத் திறனால் உச்சம் பெற்றவர்கள் கிருபானந்தவாரியார் மற்றும் கி.வா.ஜகந்நாதன். உச்சரிக்கக் கடினமான சந்தத் திருப்புகழைக் கடைக்கோடித் தமிழர் வரை கொண்டு சேர்த்தார் வாரியார். கி.வா.ஜ-வின் ‘அபிராமி அந்தாதி உரை’ மற்றும் ‘திருமுருகாற்றுப்படை உரை’ பற்றி இன்றளவும் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அதேபோல, மகாபாரத உரைக்குக் கீரன், கீதைக்கு கிரிதாரி பிரசாத், ஆழ்வார்களின் தமிழுக்கு ஸ்ரீனிவாச ராகவன் எனப் பலரை உதாரணம் சொல்லலாம். வாரியார் எனும் ஞானசூரியன் நிகழ்த்திய அதிசயத்தைச் சமகாலத்தில் நிகழ்த்துவதற்கு எவரும் இல்லை. அரசியலைப்போல ஆன்மிகமும் தனது இயல்பைத் தக்கவைத்துக்கொள்ள... நெறி பிறழாமல் இருக்க மேடைப்பேச்சு அவசியம். 

பரிந்துரை... இந்த வாரம்... மேடைப் பேச்சு

டிரெண்டிங் உலகத்தில் மேடைப்பேச்சு தனது இருப்பிடத்தைப் பிடித்துக்கொள்வது எளிதாக இல்லை.  இருந்தும் தமிழகம் தனது மேடைப்பேச்சு நாகரிகத்தை விடாமல் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் மறைந்த சிலம்பொலி செல்லப்பன் தனித்துவமானவர். இராவண காவியம், சிலப்பதிகாரம் எனத் தொடர்ந்து உரையாற்ற அவரால் மட்டுமே முடியும். இப்போதைய இளைய தலைமுறைகளையும் கவரும் வகையில் பேசக்கூடிய ஆற்றல் உடையவர் சுகி.சிவம்.  திராவிட முன்னேற்றக் கழகத்தின்  துரைமுருகன், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் இன்றைய யுகத்திலும் மேடைப்பேச்சின் துருவநட்சத்திரங்கள். 

மேடைப்பேச்சுக்கு அடிப்படை, தகவல்களைத் தெரிந்து தன்னை அப்டேட்டாக வைத்திருப்பது.அன்றாடம் வருகின்ற செய்தித்தாள்களின் தலையங்கங்களை, நடுப்பக்கக் கட்டுரைகளைப் படித்து நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது ஆன்மிகம், அரசியல் இரண்டுக்கும் பொருந்தும். ஊடக உலகத்தில் பேச்சாளர்களைவிட மக்கள் அத்தனையும் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் மேடையேறிப் பேசுபவர்கள் தனக்கு முன்னால் இருக்கும் மக்கள் அறிவாளிகள் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு பேச வேண்டும். அதற்காகப் பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. ஒருநாள் புத்தகம் படிக்க மூன்று மணிநேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். செய்தித்தாள்களைக் குறிப்பெடுத்துக்கொள்ள ஒருமணிநேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உரக்கச் சத்தம் போட்டு வாசிக்கப் பழக வேண்டும். எந்தவொரு புத்தகம் அல்லது கட்டுரையாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை வாசிக்க வேண்டும். தொடக்க நிலைப் பேச்சாளர்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடியில் பார்த்துப் பேசப்பழகலாம். திருக்குறள், பாரதிதாசன் மற்றும் பாரதியார் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், ராகுல சாங்கிருத்தியாயனின் `வால்காவிலிருந்து கங்கை வரை’, நீலகண்ட சாஸ்திரியின் `சோழர்கள் வரலாறு’, இறையன்பு எழுதிய `இலக்கியத்தில் மேலாண்மை’ உள்ளிட்டவற்றை வாசிப்பது பேச்சுத்திறனை மேம்படுத்த உதவும். குறிப்பாக, அண்ணாவின் கடிதங்கள், விடுதலை மற்றும் தினமணித் தலையங்கங்களைத் தவறாமல் வாசிப்பது நல்லது.

பரிந்துரை... இந்த வாரம்... மேடைப் பேச்சு


காலையில் எழுந்து வாசிப்பது நல்லது. தொண்டைப் பராமரிப்பைப் பொறுத்தவரை குளிர்ந்த நீரைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இளநீர் மற்றும் பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளலாம். மேடை நாகரிகத்துக்கு இன்ன உடைதான் அணியவேண்டும் என்று விதி இல்லை. அதிலொரு ஒழுங்கு அவசியம். ஒருவர் முகம்சுளிக்கும்படியாகச் செய்திகளைச் சொல்லக் கூடாது. அருவருப்பான பேச்சு நடையைப் பயன்படுத்தக் கூடாது. தொடக்க நிலைப் பேச்சாளர்களுக்கு மேடைச் செய்கைகள் மேடையில் பேசிப் பழகப் பழகத் தானாகக் கைகூடும். சில எழுத்தாளர்களுக்குப் பேச்சு கைகூடாது, சில பேச்சாளர்களுக்கு எழுத்து கைகூடாது. ஆனால், தங்கள் பேச்சில் பதிவு செய்ததை எழுத்திலும் பதிவு செய்யப் பழக வேண்டும். நம்மைப் பற்றி அடுத்த தலைமுறைகள் அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும். 

ஒரு தலைப்புக்காக குறைந்தது நான்கு மணி நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு தலைப்பின் சார்புத்தன்மை, எதிர்த்தன்மை இரண்டையுமே அலச வேண்டியது ஒரு பேச்சாளருக்கு மிகவும் அவசியம். அப்போதுதான் எதிர்த்தரப்பு வாதங்கள் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து அதற்குப் பதில் அளிக்க முடியும்.

ஒருகாலத்தில் வாசிப்பு என்றால் புத்தக வாசிப்பு மட்டுமே. ஆனால் இப்போது இணையம், தொலைக்காட்சி, திரைப்படங்கள், யூடியூப் வீடியோக்கள் எனப் பலவற்றையும் கவனித்தால் மேடைப்பேச்சில் சுவாரஸ்யம் கூடும்.

- தொகுப்பு : ஐஷ்வர்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு