Published:Updated:

பங்குனி உத்திரம்... களைகட்டிய மானூர் கோமாளி ஆட்டம்!

பங்குனி உத்திரம்... களைகட்டிய மானூர் கோமாளி ஆட்டம்!
பங்குனி உத்திரம்... களைகட்டிய மானூர் கோமாளி ஆட்டம்!

பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, பழனிக்கு அருகே உள்ள மானூர் கிராமத்தில் நடைபெறும் பாரம்பர்யக் கோமாளி ஆட்டம், இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது.


தமிழகத்தில், புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைவடிவங்களான, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவை தவிர சில பகுதிகளில் மட்டும் நிகழ்த்தப்படும் சில அரிய கலைகளும் உள்ளன. அவற்றுள், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள `மானூரில்’ ஒவ்வொரு வருடமும்  நடைபெறும் கோமாளி ஆட்டமும் குறிப்பிடத்தக்கது. 


கோமாளி வேடமிட்டு ஆடும் ஆட்டமே `கோமாளி ஆட்டம்’. கோமாளி வேடமிட்டவர் ஊரிலுள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று, தீர்த்தக் காவடி எடுக்கும் மக்களை அழைத்துக் கொண்டு `கொடுமுடி’ செல்வார். அங்கு தீர்த்தம் எடுத்துக்கொண்டு பழனிக்குச் செல்வர். பழனி  முருகனுக்குக் கொண்டுவந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்வர். அப்போது ஆடிப் பாடி வழிபாடு செய்துமகிழ்வர்.  


கோமாளி வேடமிட்டு ஆடிப்பாடி மற்றவர்களை மகிழ்வித்து அதே நேரத்தில் முருகனை வழிபடுவதே கோமாளியாட்டத்தின் நோக்கம். கிராமிய இசையான நையாண்டி மேளம் இசைக்க, தெம்மாங்கு, காவடிச்சிந்து, கிளிக்கண்ணி, ஆகிய பாடல்களுக்குக் கோமாளி வேடமிட்டவர் ஆடுவார். பழனியைச் சுற்றிய பல கிராமங்களில் கோமாளியாட்டம் நடைபெற்றாலும், `மானூர் கோமாளியாட்டம்’ மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. மானூர் கோமாளிகளின் கலைத்திறன், மற்ற கோமாளிகளிடமிருந்து வித்தியாசப்படுவது அவர்களின் ஆட்ட நேர்த்தியில்தான். குறிப்பாக மானூர் கோமாளிகள், புன்னாகவராளி ராகம் இசைக்கப்படும்போது அதற்குப் `பாம்பு நடனம்’ சிறப்பாக ஆடுவதில் தேர்ச்சிபெற்றவர்கள். 


ஒரு காலத்தில் கொடுமுடியில் தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த கோமாளி ஆட்டக் கலைஞர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் `மானூர் கோமாளி’ முதலிடம் பிடித்தார். அதிலிருந்து, கொடுமுடியிலிருந்து, பழனி வரும்வரை வழியில் இருக்கும் ஊர்களில் எல்லாம், `மானூர் கோமாளி’க்கென்று ஒரு தனி மரியாதை உண்டானது. மக்கள், கோமாளியின் கால்களில் விழுந்து தங்களின் வேண்டுதல்களைச் சொல்வார்கள். கோமாளியும் சீக்கிரம் நிறைவேற்றுகிறேன் என்று வாக்கு சொல்வார். அப்படிக் கோமாளியிடம் சொல்லப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஓராண்டில் நிறைவேறிவிடும் என்பது இந்தப்பகுதி மக்களின் நம்பிக்கை.


மானுரில் வாழும் மூர்த்தியின் குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைகளாகக் கோமாளி ஆட்டம் ஆடிவருகின்றனர். மூர்த்தியின் தந்தை ஈஸ்வரன், ஈஸ்வரனின் தந்தை குப்பண்ணன் ஆகியோர் இந்த ஆட்டத்தில் புகழ்பெற்றவர்கள்.