Published:Updated:

துன்பங்கள் சூழும்போது கரையேற்றும் கலம்- சாய்நாதா! #Saibaba

இயற்கையின் புதிர்கள் மக்களைக் கலங்கடிக்கும்போதெல்லாம் அவர்களுக்கு உதவ அங்கே சாயி இருந்தார்.

துன்பங்கள் சூழும்போது கரையேற்றும் கலம்- சாய்நாதா! #Saibaba
துன்பங்கள் சூழும்போது கரையேற்றும் கலம்- சாய்நாதா! #Saibaba

க்தியும் நற்குணங்களும் கொண்டவர்களுக்கு இறைவன் நேரில் வந்து அருள்வான். பரிபூரணமற்றவர்கள் இறைவனை தரிசிக்க முடியாமலும், இந்த உலகவாழ்வில் கடைத்தேற்றமுடியாமலும் போய் சம்சார சாகரத்தில் உழன்று தவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் விமோசனம் பெற என்ன வழி? அந்த வழியை மனிதர்களுக்குக் காட்டி அவர்களை நல்வழிப்படுத்தவே இறைவனின் திருவுள்ளப்படி மகான்கள் அவதரிக்கிறார்கள். அந்தவகையில் நம் புண்ணியபூமியில் எண்ணற்ற மகான்கள் காலங்கள்தோறும் அவதரிக்கவே செய்கிறார்கள். மகான்கள் இறைவன் விதித்த விதியையும் சரி, இயற்கை நியதிகளையும் சரி மாற்றக்கூடிய வல்லமை கொண்டவர்கள். அப்படி ஒரு நிகழ்ச்சியைக் குருநாதர் ஷீரடி சாய்பாபாவின் திவ்ய சரிதத்திலும் நாம் காணலாம்.

பாபா, பரப்பிரம்மத்தின் ஸ்தூல வடிவம் என்பதை அவர் வாழ்ந்த காலத்திலேயே ஷீரடி மக்கள் அறிந்திருந்தனர். இயற்கையின் புதிர்கள் அவர்களைக் கலங்கடிக்கும்போதெல்லாம் அவர்களுக்கு உதவ அங்கே சாயி இருந்தார். ஒருமுறை ஷீரடியில், புயல்காற்றோடு, பெருமழை பெய்து கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. ஷீரடியில் இருந்த வீடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்க ஆரம்பித்தன. விவசாயத்தையே நம்பி இருக்கும் ஷீரடி மக்களுக்கு மழைதான் தேவையன்றி வெள்ளமல்ல. இப்படியே போனால் வெள்ளம் தங்கள் வாழ்க்கையை மூழ்கடித்துவிடும் என்று அஞ்சி அவர்கள் துவாரகாமாயியில் தஞ்சம் புகுந்தனர்.

எதிர்பாராத நாளில் பெருகும் பெருமழையைப் போல்தான், எதிர்பாராத தருணத்தில்தான் துன்பங்கள் நம்மை வந்தடைகின்றன. துன்பங்கள் சூழ்ந்து நிற்கும் நேரத்தில், எத்தனை திடமனம் கொண்டவர்களாக இருந்தாலும் கொஞ்சம் தடுமாறித்தான் போகிறோம். அப்பொழுதெல்லாம் பற்றிக்கொண்டு கரையேற ஒரு கலம் நமக்குத் தேவைப்படுகிறது. அந்தக் கலம்தான் குருநாதர். அதுவரை நாம் அவர் மகிமையை அறியாதவர்களாக இருந்தாலும் அவர் நாமத்தை உச்சரித்த மாத்திரத்தில் வந்து நம்மைக் கரையேற்றுகிறவர் அவர்தான்.     

சாயிநாதன் தன்னை நாடி வந்த அத்தனை மக்களுக்கும் அடைக்கலம் தந்தார். இந்திரனின் கோபத்தால் பெய்த பெருமழையில் மாடு கன்றுகளை இழந்து, வெள்ளத்துக்கு அஞ்சிச் சரணடைந்த மக்களை, கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணர், கோவர்த்தனமலையைக் குடையாகப் பிடித்து அனைவருக்கும் அடைக்கலம் தந்து காப்பாற்றியதுபோல், ஷீரடியின் மக்களுக்கு துவாரகாமாயியில் இடமளித்துக் காத்தார் பாபா. 

மழையின் உக்கிரம் குறையவேயில்லை. மக்கள் கலங்கினர். நம் வாழ்வை யாரை நம்பி ஒப்படைக்கிறோமோ, அவர் அருகில் இருக்கும்போது நாம் கலங்கக் காரணம் இருக்கிறதா என்ன? ஆனாலும், முழுமையாய் நாம் சரணடையாதவரை இந்தச் சந்தேகச் சலனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பாபா, மனிதர்களின் பலவீனங்களைப் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் செய்யும் சிறுபக்தியைக் கூடக் கொண்டாடி, அவர்களைக் காத்து அருள்கிறார்.

ஓயாத பெருமழையை முடிவுக்குக் கொண்டுவர பாபா திருவுளம் கொண்டார். வாசலுக்கு வந்து, ``உன் சீற்றத்தை அடக்கு" என்று அதட்டினார். பஞ்சபூதங்களும் பாபாவுக்குள் அடக்கம். அவை, அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டவை. புயலும் மழையும் படிப்படியாகக் குறைந்து வானம் நிர்மலமானது. ஷீரடியின் மக்களோ அவரைப் புகழ்ந்து போற்றித் தங்கள் வீடுதிரும்பினர். 

*

மனிதர்கள், கடவுளை விடவும் சடங்குகளையும், ஆருடத்தையும் அளவுக்கு அதிகமாக நம்புகிறார்கள். ஒரு கட்டத்தில் அவற்றைக் கண்டு அஞ்சவும் செய்கிறார்கள். நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் அவர்கள் நினைவுகளில் நின்று அவர்களுடைய பணிகளுக்குத் தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறது. இவற்றையெல்லாம் சாயிநாதனை ஏற்றுக்கொண்டவர்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. பாபாவின் அனுமதியின்றி அவர்களுக்கு எதுவும் நிகழ்வதில்லை. 

ஷீரடியில் வாழ்ந்தவர், பாபு சாஹேப். ஒருநாள் அவரை அந்த ஊரின் பிரபல ஜோதிடர் நானா சாஹேப் சந்தித்தார். பாபு சாஹேப்பின் ஜாதகத்தை ஏற்கெனவே அறிந்திருந்த காரணத்தால், அவர் பாபுவிடம், ``இந்த நாள் உங்களுக்கு அமங்கலமான நாள். ஏன், உங்கள் உயிருக்குக்கூட ஆபத்து வந்துவிடலாம்" என்றார்.

பாபுவின் மனம் சஞ்சலம் கொள்ளத் தொடங்கிவிட்டது. நானா ஒரு விஷயத்தை கணித்துக் கூறினால் எல்லாம் சரியாக நடக்கும் என்பதை பாபு அறிவார். தனது ஒரே அடைக்கலமான பாபாவைச் சரணடைந்து, அவர் விட்ட வழி என்று இருந்துவிடலாம் என்று பாபு முடிவு செய்தார்.   

துயரம் படிந்த முகத்தோடு துவாரகாமாயிக்கு வந்தார். பாபாவிடம் அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் பாபாவோ, பாபுவின் முகவாட்டத்தை அறிந்துகொண்டார். பின் பாபுவை அழைத்து, 

``என்ன பாபு, இந்த நானா என்ன சொல்லி உன்னைப் பயமுறுத்தினார் ? அஞ்சவேண்டாம். அவனிடம், `சாவு என்னை எப்படி நெருங்குகிறது என்று பார்க்கலாம்' என்று சொல்" என்றார். 

பாபுவுக்கு தைரியம் வந்தது. சாயி அருகில் இருக்கும்போது எதற்கு அஞ்சவேண்டும்? பாபு தன் வழக்கமான வேலைகளைத் தொடர்ந்தார். அன்று மாலை, தோட்டத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய பாம்பு படமெடுத்து நிற்பதைக் கண்டார். அதுதான் நானா குறித்த ஆபத்தாக இருக்கலாம். ஆனால் பாபுவின் மனதில் பயம் துளியும் இல்லை. ஆபத்தை விரட்டி அடிக்க பாபாவின் நாம ஜபம் இருக்கிறதே. பயமின்றி அந்தப் பாம்பை அடிக்க ஒரு பெரிய தடியை எடுத்துக்கொண்டுவரச் சொன்னார். தடியைப் பணியாள் கொண்டுவருமுன், பாம்பு, அங்கிருந்து விலகிப் போனது. 

பாபு சாஹேப்பிற்கு, காலையில் நானா சாஹேப், `உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று சொன்னதும், பாபா `அஞ்சவேண்டாம்' என்று சொன்னதும் நினைவுக்கு வந்தன. ஜோதிடப் பூர்வமாக பாபுவின் விதியைக் கணித்திருக்கிறார் நானா. ஆனால், அதே விதியைத் தன் கருணையினால் மாற்றி எழுதியிருக்கிறார் பாபா என்பதைப் புரிந்துகொண்டார் பாபு. அந்த இடத்திலேயே பாபாவைத் துதித்துப் பஜனை செய்ய ஆரம்பித்தார்.

மேலும் சாயிநாதனின் அற்புதங்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.