Election bannerElection banner
Published:Updated:

நவகிரக தோஷங்கள் தீர்க்கும் அன்னை காமாட்சியின் 'மூக பஞ்சசதீ' துதி..!

நவகிரக தோஷங்கள் தீர்க்கும் அன்னை காமாட்சியின் 'மூக பஞ்சசதீ' துதி..!
நவகிரக தோஷங்கள் தீர்க்கும் அன்னை காமாட்சியின் 'மூக பஞ்சசதீ' துதி..!

நவகிரக தோஷங்கள் தீர்க்கும் அன்னை காமாட்சியின் 'மூக பஞ்சசதீ' துதி..!

வெள்ளிக்கிழமை அம்பிகைக்கு உகந்த நாள். இந்த நாளில் அம்மனைத் துதித்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. அம்மனின் பல்வேறு நாம ரூபங்களையும் துதிக்கத் தனிப்பட்ட ஸ்தோத்திர மாலைகள் இருக்கின்றன. 'லலிதா சகஸ்ரநாமம்', 'மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம்' என இருப்பதுபோல காஞ்சி காமாட்சி அம்மனைத் துதிக்கச் சிறப்பு மிக்க ஒரு நூலே உண்டு. அந்த நூலின் பெயர் 'மூக பஞ்ச சதீ.' இதை இயற்றியவர் மூகர். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த மூகர், காஞ்சி காமகோடி மடத்தின் இருபதாவது பீடாதிபதி ஆவார்.    

500 ஸ்தோத்திரங்களைக் கொண்ட இந்த நூல், ஐந்து தலைப்புகளில் அமைந்துள்ளது. 'ஆர்யா சதகம்', 'பாதாரவிந்த சதகம்', 'ஸ்துதி சதகம்', 'கடாக்ஷ சதகம்', 'மந்தஸ்மித சதகம்' என்ற ஐந்து பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் 100 ஸ்லோகங்களைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் ஒரு சிறப்பினைக் கொண்டது.  

மூகர் பிறக்கும்போதே பேசும் திறன் அற்றவராக இருந்தார். மூகர் என்னும் வடமொழிச் சொல்லின் பொருள் ஊமை என்பது. சிறுவயதிலிருந்தே காஞ்சி காமாட்சி அம்மன் மேல் பக்தி கொண்டவராக இருந்த மூகர், அம்மனின் சந்நிதியிலேயே அமர்ந்திருப்பார். அன்னையின் சந்நிதியில் மற்றுமொரு ஞானி அமர்ந்து கடுமையாக தியானம் செய்வார். அவரின் தவத்திற்கு மெச்சிய அன்னை, அவரை நேரில் சந்தித்து ஞானமருள வேண்டி அவர் முன் தோன்றினார்.

அப்போது அங்கு அமர்ந்திருந்த மூகர், அன்னையைக் கண்டதும், பேச்சு வராததால் உணர்வுப் பெருக்கால் 'பே...பே' என்று சத்தம் எழுப்பினார். அதைக் கேட்டுத் தன் தவம் கலைந்த கோபத்தில்  கண்விழித்த அந்த ஞானி, எதிரே நின்ற பெண்ணைப் பார்த்ததும் அந்தப் பெண்தான் சத்தம் எழுப்பியிருப்பாள் என்று நினைத்து, 'போ... போ...' என்று சீறி விரட்டினார். ஆனால், எதிரே இருந்த மூகரோ அனுதினமும் அன்னையின் திருவுருவத்தை தரிசித்து அவளின் ரூப சௌந்தர்யத்தை அறிந்தவர் ஆதலால், வந்திருப்பவள் அன்னை என்று அறிந்து அவரைப் பணிந்துகொண்டார். உடனே அன்னையும், அவள் தரித்திருந்த தாம்பூலத்தை மூகருக்குத் தந்தாள்.

அதுவரை பேசும் திறனற்றிருந்த மூகர், அந்தக் கணம் முதல் கவிபாடும் வல்லமை பெற்றுப் பேசத் தொடங்கினார். அன்னையின் மீது அவர் அருளிய ஸ்தோத்திரமே 'மூக பஞ்ச சதீ' அல்லது 'ஸ்துதி சதகம்' என்று வழங்கப்படுகிறது.

மூக பஞ்ச சதீ  முழுமையையும் பாராயணம் செய்ய ஞானம் கிட்டும் என்பது மகாபெரியவர் வாக்கு. ஆனால், இதன் ஒவ்வொரு பகுதியையும் பாராயணம் செய்ய சில சிறப்புப் பலன்களைப் பெறமுடியும் என்று பெரியோர்கள் தங்கள் அனுபவத்தில் கண்டு சொல்லியிருக்கிறார்கள். 

ஆர்ய சதகம் அன்னையின் நாம மகிமைகளைச் சொல்வது. அன்னை காமாட்சியின் நாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே அவள் ஓடிவந்து நம்மைக் காப்பாள். சிறப்புகள் வாய்ந்த ஆர்ய சதகத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக, ஆர்ய சதகம் முழுமையையும் பாராயணம் செய்ய வாக்குவன்மை ஸித்திக்கும். ஆர்ய சதகத்தின் 'வித்யே விதாத்ரு' என்று தொடங்கும் ஒரு ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து சொல்லி வர, மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 

திருமண வாழ்வில் பிரச்னை இருப்பவர்கள், ஒரு பௌர்ணமி அன்று தொடங்கி அடுத்த பௌர்ணமிக்குள் 5 முறை ஆர்ய சதகத்தை பாராயணம் செய்தால், தம்பதிகளுக்குள் மன ஒற்றுமை ஏற்பட்டு இல்லறம் இனிக்கும் என்கின்றனர் பெரியவர்கள்.

அதேபோல திருமணம் கைகூடாத வரன்கள், 'ஸ்மர மதன வரணலோலா' என்று தொடங்கும் ஆர்ய சதகத்தின் 91 வது ஸ்லோகத்தைச் சொல்லிவர விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

'பாதாரவிந்த சதகம் ' அன்னையின் திருப்பாதங்களின் எழிலையும், அவற்றின் மகிமைகளையும், அவற்றில் சரணடைவதன் மூலம் கிட்டும் நற்பயன்களையும் போற்றுகிறது. மனக் கவலைகள் தீர்ப்பவள் காமாட்சி. பாதாரவிந்த சதகத்தின் 'கதா தூரீகர்த்தும்' என்று தொடங்கும் 22 வது ஸ்லோகத்தைப் பாராயணம் செய்துவர மனக் கவலைகள் தீரும்.

இன்று பெரும்பாலானவர்கள் நவகிரகப் பெயர்ச்சி  குறித்தே கவலை கொள்கின்றனர். அன்னையின் பாதாரவிந்தங்களைச் சரணடைந்தபின் எந்த வினையும் அணுகாது. அவளின் தாமரைப் பாதங்களைச் சரணடைய சகலமும் வெற்றியாகும் என்னும் பொருள் தரும் 'ததாநோ பாஸ்வத்வாம்' என்று தொடங்கும் இந்தச் சதகத்தின் 59 வது பாடலை மனப்பாடம் செய்து தினந்தோறும் சொல்லிவர, நவகிரகங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும், நன்மைகள் கூடும்  என்பது ஐதீகம்.

அதே போல நோய்கள் நீங்கி நிவாரணம் பெறவும் ஒரு ஸ்லோகம் சொல்லப்படுகிறது. மந்தஸ்மித சதகம் என்னும் அன்னையின் புன்னகைச் சிறப்பினைப் பாடும் பாடல்களில் 'இந்தானே பவ' என்று தொடங்கும்  94- வது பாடலை மனப்பாடம் செய்து பாடிவர நோய்களிலிருந்து நிவாரணம் கிட்டும் என்பது நம்பிக்கை.

இத்தனை மகிமைகளை உடைய 'மூக பஞ்ச சதீ' யை வாழ்வில் ஒருமுறையாவது முழுமையாய் பாராயணம் செய்வது நன்மை பயக்கும். இத்தனை வாக்கு வன்மையோடு திகழ்ந்த கவி மூகரின் முற்பிறவி குறித்த கதை மிகவும் சுவாரசியமானது.

மன்னன் போஜராஜன் சபையில், கவி காளிதாசன், பவபூதி,வரருசி ஆகிய புலவர்கள் இருந்தனர். இவர்களில் யார் சிறப்பு மிக்கவர் என்றொரு போட்டி ஏற்பட்டது. இதற்குத் தீர்ப்புச் சொல்ல, அன்னை காளியே அரூபமாக அவையில் எழுந்தருளி, 'பவபூதியும், வரருசியுமே சிறந்த கவிஞர்கள் ' என்று சொன்னாள். இதனால் கோபமுற்ற காளிதாசன் அன்னை காளியை நோக்கி, "அப்படி யானால் நான் யாரடி?" என்று கேட்டான்.

அதற்கு அன்னை, "நானும் நீயும் வேறு வேரல்ல. இருவரும் ஒருவரே. ஆனபோதும், நீ, யாரடி என்று என்னை ஒருமையில் அழைத்ததால் அடுத்த பிறவியில் பேசும் திறன் அற்றவனாகப் பிறப்பாய்" என்று சொல்லி மறைந்தாள். காளிதாசரே, மறுபிறவியில் மூகராகப் பிறந்தார் என்பது நம்பிக்கை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு