Published:Updated:

அறிந்துகொள்ளும் தருணத்திலிருந்து ஆட்கொள்ளும் தருணம் வரை... பாபாவின் மகிமை! #SaiBaba

குரு, பக்குவப்படாத உயிர்களைப் பக்குவப்படுத்துவதையே தன் பணியாகக் கொண்டவர். தூரங்களைக் கடந்தும் காக்க வல்லவரான பாபா, அருகில் இருக்கும் ராமதாஸியைக் கைவிடுவாரா என்ன?

அறிந்துகொள்ளும் தருணத்திலிருந்து ஆட்கொள்ளும் தருணம் வரை... பாபாவின் மகிமை!  #SaiBaba
அறிந்துகொள்ளும் தருணத்திலிருந்து ஆட்கொள்ளும் தருணம் வரை... பாபாவின் மகிமை! #SaiBaba

ஷீரடி சாய் பாபா, தன் வாழ்நாள் முழுவதும் சர்வ சமய சமரசத்தையே போதித்து வந்தார். தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்கு, அவர்கள் இறைவனை அடைவதற்குரிய பாதையாக அவர் போதித்தது ஒற்றைப் பாதையல்ல. நம் முன்னோர் வகுத்த அத்தனை பாதைகளுமே இறைவனை அடைவதற்கான மார்க்கங்கள்தான் என்பதை அறியாதவரா சாயிநாதர்? அதனால்தான், தன்னிடம் வந்த பக்தர்களுக்கு அவரவர் மனநிலைக்கேற்ப இறைவனை அடைவதற்கு உரிய பாதையைக் காட்டி, அந்தப் பாதையில் அவர்களை வழிநடத்தவும், வழித்துணையாக உடன் செல்லவும் செய்தார். இங்கே மேகாவின் விஷயத்தில் பாபா அருள்புரிந்த நிகழ்வை நாம் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

ஷாமா, சாயியின் ஆகச் சிறந்த பக்தர். எப்போதும் சாயிநாதரின் திருவடிகளையே தியானித்திருப்பவர். துவாரகாமாயியில் எப்போதும் சாயிநாதனின் அருகிலேயே இருந்து சேவை செய்பவர். ஒரு தருணம், ராமதாஸி என்கிற பண்டிதர், பாபாவை தரிசனம் செய்ய துவாரகாமாயி வந்து, அங்கேயே சில காலம் தங்கியிருந்தார். ராமதாஸியின் அநுஷ்டானங்கள் மிகக் கடுமையானவை. நாள்தோறும் அவர் அதை விடாது கடைப்பிடித்துவந்தார். அவரிடம் 'விஷ்ணுசகஸ்ரநாம' நூல் ஒன்றும் இருந்தது. அதை வைத்து தினமொருமுறை பாராயணம் செய்யும் வழக்கமும் அவருக்கு இருந்தது.

வேத நூல்களைப் படிப்பதனாலேயே ஞானம் எய்திவிட முடியாது. வாசிக்கும் எதுவும் நம்மை ஞானியாக்கிவிடாது. வாசித்ததன் சாரத்தை, நம் ஆன்மாவில் புகுத்த வேண்டும். ஆன்மாவில் புகுந்த ஞானம், நம்மை வாழ்வில் வழிநடத்தும். அப்படியின்றி உதட்டளவில் உச்சரிப்பதில் பயன் இல்லை. ராமதாஸி முன்கோபியும் சிடுசிடுப்பும் உள்ளவராக இருந்தார். அவருடைய ஆன்மா பக்குவப்படவில்லை என்பதை சாயி உணர்ந்தார். 

குரு, பக்குவப்படாத உயிர்களைப் பக்குவப்படுத்துவதையே தன் பணியாகக் கொண்டவர். தூரங்களைக் கடந்தும் காக்க வல்லவரான பாபா, அருகில் இருக்கும் ராமதாஸியைக் கைவிட்டுவிடுவாரா என்ன? ராமதாஸிக்கு ஞானம் வழங்கத் திருவுளம் கொண்டார். 

ராமதாஸி ஒருநாள் காலை நீராடச் சென்றபோது, சாயி தன் ஸ்தானத்திலிருந்து இறங்கி ராமதாஸின் பொருள்கள் இருக்கும் இடத்துக்கு வந்தார். அங்கே 'விஷ்ணு சகஸ்ரநாம' நூல் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு ஷாமாவிடம் சென்றார்.

"ஷாமா, இதை நீ வைத்துக்கொள்" என்றார்.

ஷாமாவுக்கோ பயம். அது ராமதாஸியுடையது என்பதை அவர் அறிவார். தன் பொருள்களைப் பிறர் பயன்படுத்துவதை அவர் விரும்பமாட்டார் என்பதும் அவருக்குத் தெரியும். பாபாவிடம், அதை வேண்டாம் என மறுத்துப் பார்த்தார்.

"ஷாமா, இதன் மகிமை அறியாமல் மறுக்கிறாய். கலியுகத்தில், நாமசங்கீர்த்தனமே முக்திக்கு வழி. இந்த நூல் அந்த இறைவனின் ஆயிரம் நாமங்களை உள்ளடக்கியது. இதில் ஒரு நாம ஜபம்கூட உன்னை இந்த ஜன்மத்தின் பாவங்களிலிருந்து விடுவித்து நற்பேறு வழங்கவல்லது. இதை வேண்டாம் என்று சொல்லாதே" என்று வற்புறுத்தி அவர் கையில் தந்தார்.

பாபா தரவிரும்புவதை யார்தான் மறுக்க முடியும்? ஷாமா வாங்கிக்கொண்டார்.

ராமதாஸி திரும்பிவந்தார். தன் நூலை ஷாமா வைத்திருப்பதைக் கண்டு கோபம் கொண்டார். கடுமையான வசைமொழிகளை அவரை நோக்கி வீசினார். அடுத்துத் தாக்கிவிடுவாரோ என்று எல்லோரும் அஞ்சினர். அப்போது பாபா அங்கு வந்தார்.

"ராமதாஸி, நீ இவ்வளவு நாளும் இவற்றையெல்லாம் கற்றும் ஞானம் எய்தவில்லையா? கோபத்தில் வார்த்தைகளை வீசுகிறாய். அது சரியல்ல. சொற்களால் அடுத்தவர் மனதை நோகடிப்பதைப் போன்ற பாவம் வேறு என்ன இருக்கிறது... நீ அந்த நூலில் உள்ளவற்றைச் சொல்லிச் சொல்லி மனப்பாடம் செய்துவிட்டாய். இனி உனக்கு எதற்கு அந்த நூல்? மேலும், விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்களை அறிவாய். அதன் மகிமையை, அடுத்தவருக்கும் பகிர்ந்து தர வேண்டாமா. தான் மட்டுமே இந்த நற்பேறுகளைப் பெற வேண்டும் என்று நினைப்பது, தான் மட்டுமே இந்த உலகில் சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு ஈடானது இல்லையா. பணம் இருந்தால் இது போன்ற ஆயிரம் நூல்களை நீ வாங்கலாம். ஆனால், எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒரு நல்ல மனிதனின் காயம்பட்ட இதயத்தைச் சரிசெய்ய இயலுமா... இனி இப்படிப் பேசாதே" என்று அறிவுறுத்தினார்.

ராமதாஸி ஒரு கணம் அமைதியானார். சாயி சொல்வதில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்டார். தன் பக்குவப் படாத தன்மைக்கு வருந்தினார். ஆனாலும், தன் வசமிருந்த புனித நூல் ஒன்று குறைந்ததில் சிறு வருத்தம் இருந்தது. 

"சாயி, நான் விஷ்ணு சகஸ்ரநாமத்தை மனம் உவந்து அவருக்குத் தருகிறேன். அதற்குப் பதிலாக அவரிடமிருக்கும் புண்ணிய நூல் ஒன்றை அவர் எனக்குத் தரவேண்டும்" என்று வேண்டினார். ஷாமாவும் மகிழ்வோடு தன்னிடமிருந்த நூல் ஒன்றை வழங்கினார். இருவரும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.

*
சாயிநாதனை ஒருவர் அறிந்துகொண்ட தருணத்திலிருந்து, அவரை ஆட்கொள்ளும் தருணத்தை சாயி எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர் தன்னை வெளிப்படுத்தி தன்வசமாக்குவார். 

மம்லதாராக இருந்த பக்தர் ஒருவர் தனது நண்பருடன் ஷீரடி வந்தார். நண்பரோடு ஊர் சுற்ற மட்டுமே தான் வருவதாகவும், ஒருபோதும் துவாரகாமாயி வந்து சாயி போன்ற ஒரு பக்கீரின் கால்களில் விழப்போவதில்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். சாயியை வணங்கா விட்டாலும் பரவாயில்லை, தன்னோடு துவாரகாமாயியிக்கு வருமாறு அவர் நண்பர் வேண்டிக்கொண்டார்.

நண்பரும் மம்லதாரும் துவாரகாமாயிக்குச் சென்றனர். உள்ளே சாயி அமர்ந்திருக்கும் இடத்துக்குச் சென்றனர். மம்லதார் ஒருகணம் தயங்கி நின்றார். பின் அவர் கண்களில் நீர் பெருகியது. அப்படியே சாஷ்டாங்கமாக சாயியின் பாத கமலங்களில் விழுந்து பணிந்துகொண்டார். பார்த்துக்கொண்டிருந்த அவர் நண்பருக்கு ஆச்சர்யம். சாயி, அவரை எழுப்பி பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்தார்.
வெளியே வந்தபின் நண்பர் மம்லதாரிடம், "என்ன நடந்தது, ஏன் அப்படி மெய்சிலிர்க்க நமஸ்காரம் செய்துகொண்டாய்?" என்று கேட்டார்.

அதற்கு மம்லதார், "நான் பார்த்தபோது, அந்தப் பீடத்தில் அமர்ந்திருந்தது சாயி அல்ல. சாட்சாத் ராமச்சந்திரமூர்த்தியே. எல்லாமுமாக இருக்கிறவரைக் கண்டபின் நமஸ்கரிக்காமல் இருப்பது எப்படி?’’ என்று கண்ணீர் மல்கக் கேட்டார்.
சாயியே அவர் பக்தர்களுக்கு மும்மூர்த்திகளாகவும் இருந்து அருள்பாலிக்கிறார்.    
 

மேலும் ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.