Published:Updated:

மதுரை மீனாட்சியின் அருள் விளக்கும் 5 நிகழ்வுகள்! #MaduraiChithiraiFestival

சுமார் 3,000 ஆண்டு பழைமை வாய்ந்த மதுரை மாநகரில், இறைவன் சொக்கநாதரும், அன்னை மீனாட்சியும் எழுந்தருளியிருக்கும் ஆலயம் குறித்த செய்திகள் பலவும், புராணங்களிலும், வரலாற்றிலும் காணப்படுகின்றன. அப்படி, மீனாட்சியம்மன் ஆலயத்தோடு தொடர்புடைய சில சுவாரசியமான சம்பவங்கள்

மதுரை மீனாட்சியின் அருள் விளக்கும் 5 நிகழ்வுகள்! #MaduraiChithiraiFestival
மதுரை மீனாட்சியின் அருள் விளக்கும் 5 நிகழ்வுகள்! #MaduraiChithiraiFestival

'துரை' என்றால், 'இனிமை' என்று பொருள். தமிழர்கள் வரலாற்றோடு மிகவும் இணைந்து பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயணித்த மதுரை நகரம், ,'மதுரை' எனப் பெயர் பெறக் காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. பாண்டியர்கள், மதி நிறைந்த தம் தலைநகரை 'மதிரை' என்றே ஆரம்பத்தில் அழைத்தனர் என்றும் அதுவே மருவி 'மதுரை' ஆனது என்றும் சொல்கிறார்கள்.

மதிரை என்பது ஆதிப் பெண் தெய்வமொன்றின் பெயர் என்றும் அதுவே மாறி மதுரை ஆனது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இவை எல்லாவற்றையும்விட பொருத்தமானதாகத் தோன்றும் காரணம் ஒன்று உண்டு. 

முற்காலத்தில், கடல்கோள்களால் நகரங்கள் அழிந்தன. தம் நகர் கடல்கோள்களால் அழியக்கூடாது என்று நகர் எங்கும் மதில் எடுத்ததால் 'மதில் நிரை நகராக' விளங்கியது. அதுவே பின்னாளில் மதுரை ஆனது என்கின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட இந்தப் பெயரையே பாண்டிய மன்னர்கள் வரலாற்றுக் காலத்திலும் தம் நகருக்குப் பெயராக்கினர். மருதநிலம் நிறைந்த பகுதியாக விளங்கியதாலும் அது 'மருதை' என்று அழைக்கப்பட்டது. அதுவே பின் மருவி,  மதுரை ஆனது என்பதும் பொருத்தமே.

சுமார் 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில், இறைவன் சொக்கநாதரும் அன்னை மீனாட்சியும் எழுந்தருளியிருக்கும் ஆலயம் குறித்த செய்திகள் பலவும், புராணங்களிலும் வரலாற்றிலும் காணப்படுகின்றன. அப்படி, மீனாட்சியம்மன் ஆலயத்தோடு தொடர்புடைய சில சுவாரஸ்யமான சம்பவங்கள்.

1. அன்னைத் தமிழுக்கு இறங்கிவந்த அங்கயற்கண்ணி!

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபர சுவாமிகள், தாம் இயற்றிய 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' நூலை மதுரைக் கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் அரங்கேற்றினார். அப்போது அங்கு அர்ச்சகரின் 5 வயதுள்ள பெண் குழந்தை, மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குமரகுருபரரின் பாடல்களைக் கேட்டு ரசித்தது. அரங்கேற்றம் முடிந்ததும், மன்னரின் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்தது. அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருக்கையில், குழந்தை ஒடிச் சென்று அன்னை மீனாட்சியின் சந்நிதிக்குள் மறைந்தது. 'வந்தது, அன்னை மீனாட்சியே' என்று அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். அன்னைத் தமிழுக்கு அம்மை இறங்கி வந்ததில் என்ன வியப்பு!

2. பாண்டியனுக்கிரங்கிப் பரமன் பாதம் மாற்றி ஆடிய தலம்!

பக்தி, கருணை, அன்பு ஆகியன பகுத்தறிந்து வினையாற்றும் பண்புகள் அல்ல. பாண்டிய மன்னர்களுள் ஒருவரான ராஜசேகர பாண்டியன், நடமாடும் ஈசன் மேல் பெரும் பக்தி கொண்டவன். எப்போதும் இடது பாதம் தூக்கி நடமிடும் இறைஉரு கண்டு மனம் வருந்தினான். கற்சிலைக்குக் கால்வலிக்குமா என்று பகுத்தறியவில்லை அவன் பக்தி. ஒரே பாதம் தூக்கியிருந்தால் நோகுமே என்றுதான் பதறினான். அனுதினமும் அவனைக் கால்மாற்றி ஆடுமாறு வேண்டினான். தன் வேண்டுதலைக் கேட்காத ஈசனைக் கண்டு கதறினான். ஈசன் தன் பிரார்த்தனையைக் கேட்காதபோது வாழ்வதில் என்ன பொருள் இருக்கிறது என்று உயிர் விடவும் துணிந்தான். பக்தர் உயிர்விடப் பரமன் பொறுப்பானா... இடப வாகனத்தோன் தன் இடது பாதம் இறக்கி வலது பாதம் தூக்கி ஆடினான். இன்றும் பாதம் மாற்றி ஆடிய அந்தத் திருமேனியை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசிக்க முடியும்.       

3. சந்தனம் எனத் தேய்ந்தவனை மன்னவன் ஆக்கிய ஈசன்!

வணிகர் குலத்தில் பிறந்த மூர்த்தி நாயனார், தினமும் மதுரை இறைவனுக்கு சந்தனக் காப்பு சாற்றி வழிபடுவது வழக்கம். அந்தக் காலகட்டத்தில், பெரும்படையுடன் வந்து மதுரையைக் கைப்பற்றினான் சமண சமயத்தைச் சேர்ந்த மன்னன் ஒருவன். சமண சமயத்தைச் சார்ந்தவன் சைவ சமயத் தொண்டுகள் தொடர அனுமதிப்பானா? ஈசனுக்குச் செய்யப்பட்ட சடங்குகள் நிறுத்தப்பட்டன. மூர்த்தி நாயனாரோ, ஈசனுக்குச் சந்தனக் காப்பிடாத கைகள் எதற்கு என்று வருந்தி, தன் கைகளைக் கல்லில் தேய்த்துக்கொண்டான். உதிரம் பெருகியது. பக்தன் பதறவில்லை, பரமன் பதறினான். பாய்ந்து அசரீரி ஒலித்துத் தடுத்தான்.

அன்றைய நாள் இரவிலேயே அந்த மன்னன் மடிந்தான். வாரிசில்லாத அவனுக்குப் பின் அரியணை ஏறி ஆட்சி செய்ய ஆளில்லாததால், பட்டத்து யானையிடம் மாலை தந்து அனுப்பினர் மந்திரிகள். மூர்த்தி நாயனார், கைகள் தேய்ந்த நிலையில் மண்டபத்தில் அமர்ந்திருந்தார். பட்டத்துயானை அவர் அருகே வந்து மாலையிட்டு மன்னனாக்கியது. காலமெல்லாம் மூர்த்தி நாயனார் சிவத் தொண்டாற்றி நல்லாட்சி புரிந்தார்.

4. அந்நியரால் அணைக்க முடியாத அருள் விளக்கு!

1330-ம் ஆண்டு அந்நியர் மதுரையின் மீது படையெடுத்து வென்றனர். அவர்கள் நோக்கம் ஈசன் ஆலயத்தை, இல்லாமல் செய்வதுதான். இதையறிந்த கோயில் அர்ச்சகர், கருவறை வாசலைக் கருங்கல் கொண்டு மூடி, கயிலாய வாசனை மண்மூடி மறைத்தார். அர்த்த மண்டபத்தில் ஒரு லிங்கத்தை அமைத்து, அவரே மூலவர் என்று நம்பும்படி செய்தார். பகைவனும் வந்து லிங்கத்தைச் சிதைத்தான். ஆலயக் கதவுகளை அடைத்துப் பூட்டினான். 12 ஆண்டுகள் கடந்தன.

கம்பண்ணா என்கிற வீரர் தோன்றி அந்நிய சக்திகளை அழித்தார். ஆண்டவன் ஆலயத்தை மீண்டும் திறந்தார். என்ன அதிசயம், கருவறைக்குள் 12 ஆண்டுகளுக்கு முன் ஏற்றிய தீபம் அணையாது சுடர்விட்டபடியே இருந்தது. சிவனாரின் திருமேனியில் பூசியிருந்த சந்தனம், அன்று பூசியதுபோல அப்படி மணத்தது. 

5. பக்தனுக்காகச் சமைத்த மீனாட்சி!

ஒருகாலத்தில், மீனாட்சியம்மன் கோயில் மடைப் பள்ளியில் ஸ்ரீநிவாசன் என்பவர் பணி புரிந்தார். அன்னையின் அருளால், அமுது சமைப்பதைப் போலவே, அருந்தமிழில் கவி சமைக்கவும் திறன்பெற்றிருந்தார். அங்கயற்கண்ணியின் மீது அருந்தமிழில் பாடல்கள் இயற்றினார். ஒருநாள், அவர் அதிகாலையில் சமைக்க வேண்டியிருந்ததால், அன்னையை நோக்கி, 'சீக்கிரம் எழுப்பிவிடம்மா' என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றார். அயர்ந்து உறங்கிவிட்டார்.

உழைத்த களைப்பில் உறங்கும் குழந்தையை எழுப்ப எந்த அன்னைக்கு மனம் வரும்? ஸ்ரீநிவாசனை எழுப்பாமல், அன்னையே அவருக்கு பதிலாகச் சமைத்து வைத்தார். இரவில் சமைக்க வெளிச்சம் வேண்டுமல்லவா, அதற்காகத் தன் மூக்குத்தியை, கழற்றிவைத்தவள், உலகத்தவருக்கு ஸ்ரீநிவாசனின் பக்தியின் பெருமையை உணர்த்த தடயமாக அதை விட்டுப்போனாள்..!