Published:Updated:

பொறுமையையும் பக்தி வைராக்கியத்தையும் பாபா ஒருபோதும் வீணாக்குவதேயில்லை !

பொறுமையையும் பக்தி வைராக்கியத்தையும் பாபா ஒருபோதும் வீணாக்குவதேயில்லை !
பொறுமையையும் பக்தி வைராக்கியத்தையும் பாபா ஒருபோதும் வீணாக்குவதேயில்லை !

தெய்வத்தின் தன்மை, அதைப் பரிபூரணமாக நம்புவோருக்கு எப்போதும் வெளிப்பட்ட வண்ணம் இருக்கும். நம்பிக்கையே இறைசக்தியை மேலும் வலிமையுள்ளதாக மாற்றுகிறது. நிகழ்பவை எல்லாம் விதி என்றும் அதை மாற்ற இயலாது என்றும் முடிவு செய்து, இறைவனை மனசாந்திக்காக வழிபடுவதென்பது ஒருவித ஞானநிலை. என்றபோதும், எல்லா விதியையும் மாற்றும் வல்லமை நாம் வழிபடும் தெய்வத்திற்கு உண்டு என்னும் பக்தி வைராக்கியமே பலன் தருவதும் வாழ்வை அர்த்தப்படுத்துவதுமாகும். நம் கண்கண்ட தெய்வம் ஷீரடி சாய்பாபாவினை குருவாகவும் தெய்வமாகவும் அடைந்த நாம், பக்தி வைராக்கியத்தின் மூலம் அடையமுடியாத காரியங்கள் எதுவுமே இல்லை. அதற்கு, சாயியைச் சரணடைந்து தன் தீவினையை அகற்றிக்கொண்ட பீமாஜி பாடீல் நமக்கெல்லாம் முன்னுதாரணம்.

எல்லாத் துயரங்களையும்விட மிகவும் கொடியது நோய். அது வாழ்வின் ஆதாரமான நம்பிக்கையைக் கொன்றுவிடும். நோயினால் துன்பமுறும் உடல் எதையும் விரும்பாது. அதை ஆசுவாசப்படுத்துகிற வைத்தியர்களைத் தேடியலையும். அப்படித்தான் பீமாஜிபாடீல் தன்னைக் குணப்படுத்தும் வைத்தியரை நாள்தோறும் தேடியலைந்து கொண்டிருந்தார். நாளுக்கு நாள் அவரது நோய் முற்றி க்ஷயரோகமானது. அடிக்கடி ரத்த வாந்தி எடுப்பவராகவும், இருமிக்கொண்டேயிருப்பவராகவும் பாடீல் இருந்தார். வைத்தியர்கள் எல்லாம் தோற்றுப்போய் அவஸ்தை அதிகமான தருணத்தில் அவரது நண்பரான நானா சாஹேப், பாடீலை பாபாவை நோக்கி வழிநடத்தினார்.

நம் துன்ப காலத்தில் தெய்வத்தைத் தேடுகிறோம். அந்த தெய்வத்தைக் காட்டியருள்பவர் குருநாதர். இங்கு பாடீலுக்கு நானா குருவானார். ஷீரடி சென்று சாயிநாதனை தரிசிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று அறிவுறுத்தினார். பாடீலும் ஷீரடி வந்தார். பாபாவுக்கு முன்பாக நானாவுடனும், ஷாமாவுடனும் அமர்ந்தார். தன் குறைகளையெல்லாம் தீர்த்து அருளவேண்டும் என்று பாடீல் வேண்டிக்கொண்டார். ஆனால் சாயியோ அதைக் கண்டும் காணாதவராக இருந்தார்.


அங்கிருந்த நானாவும் ஷாமாவும் அறிந்துகொள்ளுமாறு, பாபா பாடீலின் தீவினைகளை எடுத்துச் சொன்னார். முந்தைய ஜன்மங்களில் நாம் செய்த பாவங்களை நாம் நீக்கமுடியாது என்றும் அவற்றை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று சொன்னார். பாபா சொன்னதில் என்ன பிழையிருக்க முடியும். ஒருவன் தான் செய்த நன்மை தீமைகளுக்கான பலன்களை அனுபவித்துத்தானே ஆகவேண்டும். அப்படிச் செய்வது தேவையிருக்கவில்லையென்றால் நன்மையைக் கடைப்பிடிக்கவேண்டியதும் தீமையைக் கைவிடவேண்டிய தேவையும்தான் என்ன? பாபா, பாடீலைக் கண்டுகொள்ளாமலேயே இருந்தார். ஆனால், அப்பொழுதும் அங்கு ஓர் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது.
பாபாவின் சந்நிதிக்கு வந்து அமர்ந்த தருணத்திலிருந்து பாடீல் வாந்தியேதும் இல்லாமல் இருந்தார். இதை அவரே உணர்ந்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் உறுதியாக பாபாவின் சரணங்களை விட்டு அகல்வதாக இல்லை. தன்னை முற்றும் முழுவதுமாக சரணாகதி செய்தார்.

``பாபா, நான் உம்மைத்தான் நம்பி வந்திருக்கிறேன். எனக்கு வேறு புகலிடம் இல்லை. எனவே, நீங்கள் எனக்கு என்ன அருளினாலும் சரி. மேலும் என் தீவினைகள் அனைத்தும் உங்கள் பாத கமலங்களில் சரணடைந்த கணத்தில் இல்லாமல் போய்விட்டன. எனவே, நான் வேறெங்கும் செல்வதாக இல்லை" என்று சொல்லி பாபாவைத் துதித்தார். 
இதுதான் பக்தி வைராக்கியம். இறைவன் நமக்கு அருளாமல் அவன் திருவடிகளை விடுவதில்லை என்று இறுக அவற்றைப் பற்றிக்கொள்ளும் பக்தி. பாபாவிடம் சரணடைந்து விட்டபின்பு அவரால் முடியாதது என்று ஒன்று இல்லை என்று முழுமையாக நம்புவது அவசியம். பாடீல் அதை மிகவும் சரியாகப் புரிந்துகொண்டார். வைராக்கிய பக்தனை விட்டுக் கொடுக்குமா தெய்வம்? சாயி அவரை நோக்கி அன்போடு புன்னகைத்தார்.

``பாடீல், நீ கவலைகளை விட்டுவிடு. நீ இந்தச் சந்நிதியில் கால்பதித்த தருணமே உன் துயரங்கள் நீங்கிவிட்டன. எனவே, நீ பேசாமல் இரு. இங்கிருக்கும் பக்கிரி அன்பானவர். அவர் உன் வியாதிகளை நிச்சயம் குணப்படுத்துவார்" என்று அருள்மொழி கூறினார். பாடீலை அருகிலேயே ஓர் அடியவர் வீட்டில் தங்கச் சொன்னார். பாபாவின் வார்த்தைகளைக் கேட்டு பாடீலும் தங்கினார்.

அன்று இரவு பாடீலுக்கு இரண்டு கனவுகள் வந்தன. அதில் ஒன்றில் அவர் சிறுவயதில் தன் ஆசிரியரிடம் அடிவாங்கினார். மற்றொன்றில், அவர் மீது யாரோ பெருங்கல்லை வைத்து உருட்டுவதுபோன்ற கொடுங்கனவு. வலியையும் வேதனையையும் அவரால் நிஜமாகவே உணரமுடிந்தது. ஆனால், கனவு நீங்கி எழுந்துகொண்டபிறகு, அவர் புதுமனிதனைப் போல சுவாசித்தார். மறுநாள் அவர் துவாரகாமாயிக்குத் திரும்பும்போது, அவர் நோய்கள் நீங்கிய ஆரோக்கிய மனிதராக இருந்தார். சில நாள்கள் அவர் ஷீரடியில் தங்கி பாபாவின் சேவையில் ஈடுபட்டு பின் தன் ஊர் திரும்பினார்.

பாபாவின் அருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் பொறுமையும் வைராக்கியமும் தேவை. அத்தகைய பொறுமை மற்றும் வைராக்கியம் உள்ள பக்தர்களின் நம்பிக்கையை பாபா எப்போதும் பொய்த்துப் போகச் செய்வதில்லை.

மேலும் பாபாவின் அற்புதங்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

பின் செல்ல