Published:Updated:

மழைக்கன்னி வழிபாடு, தவளை விடுதல்... தமிழர்களின் மழைவழிபாட்டுச் சடங்குகள்!

மழைக்கன்னி வழிபாடு, தவளை விடுதல்...  தமிழர்களின் மழைவழிபாட்டுச் சடங்குகள்!
மழைக்கன்னி வழிபாடு, தவளை விடுதல்... தமிழர்களின் மழைவழிபாட்டுச் சடங்குகள்!

டந்த ஆண்டு, உத்தரப்பிரதேசத்தில் கடுமையான வறட்சி நிலவியது. மழை வரவேண்டும் என்று வேண்டி, அங்கிருந்த விவசாயி ஒருவர், மாடுகளுக்குப் பதிலாகத் தன் இரு மகள்களை, ஏரில் பூட்டி நிலத்தில் உழுதார். காரணம் கேட்டபோது, பெண்கள், களத்தில் சிரமப்படுவதைக் கண்டால், இறைவன் மனம் இரங்கி மழை பொழிவான் என்று சொன்னார். இப்படி ஒவ்வோர் ஊரிலும் மழையை வரவழைக்க, வித்தியாசமான நம்பிக்கைகளும், சடங்குகளும் உள்ளன. மழை பொழிய, பொழிந்துகொண்டேயிருக்கும் மழையை நிற்க வைக்க... எனப் பழங்குடி மக்களிடம் காணப்படும் சடங்குகள் அநேகம். 

மழைக்கன்னி வழிபாடு, தவளை விடுதல்...  தமிழர்களின் மழைவழிபாட்டுச் சடங்குகள்!

தற்போது, தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் போக்க, இந்துசமய அறநிலையத்துறை பல்வேறு வழிபாடுகளைச் செய்யச் சொல்லி அறிவுறுத்தியுள்ளது. அவை அனைத்தும் கோயில் சார்ந்த, வைதீக வழிபாட்டு முறைகளின் அடிப்படையிலானவை. இதேபோன்று, தமிழ்ச் சமூகத்தில் மழை வேண்டிச் செய்யும் வழிபாடுகள் பல காணப்படுகின்றன. எளிய மக்கள் மேற்கொள்ளும் அந்தச் சடங்குகள், இன்று காலப்போக்கில் மறைந்து வருகின்றன. அப்படிப்பட்ட சடங்குகள் சிலவற்றைக் காணலாம்.  

சங்க இலக்கியத்தில், 'மலைவான் கொள்கென உயர்பலி தூஉய்' என்று தொடங்கும் கபிலர் இயற்றிய ஒரு பாடல் உண்டு. மலையின் தெய்வமான முருகக்கடவுளுக்குப் பலியினைத் தூவி மழை வேண்டும் என்று மலைக்குடிகளான குறவர்கள் வேண்டுவதாக அந்தப் பாடலில் ஒரு செய்தி உள்ளது. தெய்வங்களை வேண்டிக்கொள்வதன் மூலம் மழையைப் பெறமுடியும் என்பது உலகளாவிய நம்பிக்கை.  

மழைக்கன்னி வழிபாடு, தவளை விடுதல்...  தமிழர்களின் மழைவழிபாட்டுச் சடங்குகள்!

திருப்புன்கூரில் மழையில்லை. அந்த ஊர்மக்கள், மழை பொழிந்தால் பன்னிரண்டு வேலி நிலத்தைக் கோயிலுக்கு எழுதி வைப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். மழை பெய்ய ஆரம்பிக்கிறது. ஆனால், தொடர்ந்து மழை பொழிகிறது. இப்போது மழை நின்றாக வேண்டும். மீண்டும் இறைவனிடம், மழை நின்றால் மற்றுமொரு பன்னிரண்டு வேலி நிலத்தை எழுதி வைப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். மழை நிற்கிறது. இதையே சுந்தரர் தமது, `வையகம் முற்றும் மாமழை மறந்து' என்னும் தேவாரப் பாடலில் பதிவு செய்துள்ளார். 

தமிழக கிராமங்கள் முழுவதும் கோயில் கொண்டிருப்பவள், மாரியம்மன். மாரி என்றால் மழை. மழையைத் தரும் தெய்வம் ஆதலால் அவள் மாரியம்மன். மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றி வழிபடுவார்கள். பொதுவாக ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் வழக்கம் உண்டு. மழை பொய்த்த காலங்களில் மழை வேண்டி கூழ் ஊற்றும் வழக்கமும் உண்டு.

மழைக்கன்னி வழிபாடு, தவளை விடுதல்...  தமிழர்களின் மழைவழிபாட்டுச் சடங்குகள்!

ஊரில் இருக்கும் இளம்பெண்கள் அனைவரும், வீடு வீடாகச் சென்று அரிசி அல்லது பிற தானியங்களைத் தானமாகப் பெறுவர். அப்படிப் பெற்று வந்த தானியங்களைக் கொண்டு, உப்பில்லாத கூழ் காய்ச்சுவர். அதை மண் கலயங்களில் இட்டு அனைவரோடும் பகிர்ந்துகொள்வர். பின்பு, ஊரில் இருக்கும் வயது முதிர்ந்த பெண்கள் கூடிக் கூழ்காய்ச்சிய கலசத்தைப் போட்டு உடைப்பர். பின்பு மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி பாடியபடி மயானத்தை நோக்கிச் செல்வர்.

``மானத்த நம்பியல்லோ
மக்களைத்தான் பெத்தோமையா
மக்களைத்தான் காப்பதற்கு
இப்போ மழை பெய்யவேணும்
மழைக்குவரம் கேட்டு நாங்க
மருகுகிறோம் சாமி "   

மூத்தவர்கள் அழுதபடி செல்ல, இளம்பெண்கள் அவர்களைத் தொடர்ந்து செல்வர். ஒரு துன்பியல் நாடகம் போன்ற இந்தக் காட்சி காண்போர் மனதைக் கரைக்கும். இளம்பெண்கள், மூத்த பெண்களைத் தேற்றி, ``அம்மா, நம் பஞ்சமெல்லாம் தீர்ந்துபோகும். அந்தக் கடவுள் நமக்குக் கருணை காட்டுவார். மழைபொழியும்" என்று சொல்லி அவர்களைத் தேற்றி ஊருக்குள் அழைத்துச் செல்வர். இப்படியான சடங்கு நடக்கும்போது, அதைக் காணும் மழைக்கடவுளும் மனமுருகி மழை தருவார் என்பது அவர்கள் நம்பிக்கை. 

சில ஊர்களில் `மழைக்கன்னி வழிபாடு' என்ற ஒரு வழிபாடும் உண்டு. மழையைக் கன்னிப் பெண்ணாக நினைத்து மண்ணில் சிலை செய்வர். பின்பு ஊர் முழுவதும் அரிசியை தானமாகக் கேட்டு வாங்கிப் பொங்கல் வைப்பர். அதை அந்த மழைப்பெண் பொம்மைக்குப் படைத்து வழிபடுவர். 
         
                       `மேலி பிடிக்கும் முகம்
                         முகம் வாடி கிடக்குதே… 
                         கலப்பை பிடிக்கும்  
                         கை சோர்ந்து கிடக்குதே
…!'

என்று கேட்போர் உருகும் விதத்தில் உருக்கமாகப் பாடுவர். இப்படிச் செய்துகொண்டிருக்கும்போதே, சில நேரங்களில் மழை வந்துவிடும் என்று சொல்கிறார்கள். அப்படி மழை வரவில்லை என்றால், இந்தச் சடங்கு முடிந்ததும் அந்தப் பொம்மையை அடிக்கும் வழக்கும் சில ஊர்களில் உண்டு. 

மழைக்கன்னி வழிபாடு, தவளை விடுதல்...  தமிழர்களின் மழைவழிபாட்டுச் சடங்குகள்!

தர்மபுரிப் பகுதிகளில் , `தவளை நீரில் விடும் `சடங்கு ஒன்று நடைபெறும். சிறுவர்கள் சேர்ந்து இந்தச் சடங்கைச் செய்வர். தவளை ஒன்றைப் பிடித்து களிமண்ணில் பொதிந்து எடுத்துக்கொள்வர். பின்னர் அந்தத் தவளையை ஒரு பலகையில் வைத்துத் தூக்கிக்கொண்டு `மழைப்பாட்டு' என்னும் பாட்டைப் பாடிக்கொண்டே ஊரைச் சுற்றிவருவர்.

`பெய்யுமாலம்மா பெய்யுமாலோ
பேயாமழை பெய்யுமாலோ
நல்லமழை பெய்யுமாலோ  
நாடுசெழிக்கப் பெய்யுமாலோ
ஊசிபோல மின்னிமின்னி
ஊர்செழிக்கச் செய்யுமாலோ
காசுபோல மின்னி மின்னி
காடுசெழிக்கப் பெய்யுமாலோ
பணத்தைப் போல மின்னிமின்னி
பட்டணமெல்லாம் பெய்யுமாலோ' 

என்று பாடிக்கொண்டே வந்து ஊரெங்கும் அரிசி, காசு முதலியனவற்றை தானமாகப் பெறுவர். பின் அதில் படையல் இட்டு தவளைக்குப் படைத்து, பின் அந்தத் தவளையை ஏரியில் விடுவர். இந்தச் சடங்கு மிகவும் பழைமையானது என்பதற்கு முக்கூடற்பள்ளுவில் வரும் `நீர்ப்படு சொரித்தவளை மழையைக் கூப்பிட்டுப் பெய்ய வைக்கும்' என்னும் வரியே ஆதாரம்.  

இவைதவிர்த்து, சில ஊர்களில் பெண்கள் மட்டும் கூடிச் செய்யும் பூஜைகள் உண்டு. சில இடங்களில் கழுதைகளுக்குத் திருமணம் செய்துவைப்பது, கொடும்பாவி எரிப்பது போன்ற விநோதமான சடங்குகளும் இடம்பெறும்.

Vikatan