Published:Updated:

பட்டாணி ராவுத்தர் காவல்காக்கும் ஆதிகோரக்கநாதர்... திருபுவனத்தில் கோயில்கொண்ட சித்த புருஷர்!

பட்டாணி ராவுத்தர் காவல்காக்கும் ஆதிகோரக்கநாதர்... திருபுவனத்தில் கோயில்கொண்ட சித்த புருஷர்!
பட்டாணி ராவுத்தர் காவல்காக்கும் ஆதிகோரக்கநாதர்... திருபுவனத்தில் கோயில்கொண்ட சித்த புருஷர்!

ருமுறை, சிவபெருமான் உமையவளுக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தபோது, அருகில் இருந்த நீரில் மிதந்துகொண்டிருந்த மீன் ஒன்று அதைக் கேட்டது. ஈஸ்வரனின் உபதேசத்தைக் கேட்டதன் விளைவாக, அது மனித உருவம் அடைந்தது. மீனாக இருந்து மனிதராக உருக்கொண்டதால் அவருக்கு 'மச்சேந்திரர்' என்று பெயர் ஏற்பட்டது. சிவபக்தியைத் தன் வாழ்வாகக் கொண்ட மச்சேந்திரர், ஊர் ஊராகப் பயணித்து சிவ வழிபாடு செய்ய ஆரம்பித்தார். அப்படி ஒருநாள் அவர் கோரக்பூர் வந்தபோது, ஒரு வீட்டின் முன்பு  வந்து நின்று யாசகம் கேட்டார். 

பட்டாணி ராவுத்தர் காவல்காக்கும் ஆதிகோரக்கநாதர்... திருபுவனத்தில் கோயில்கொண்ட சித்த புருஷர்!

தனக்கு தானமிட்ட பெண்மணி, குழந்தைப் பேறின்றி வருந்தி வருவதை அறிந்துகொண்டார். உடனே, சிறிதளவு விபூதியை அந்தப் பெண்மணியிடம் கொடுத்து அதனை உட்கொண்டு மகப்பேறு அடையுமாறு ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். ஆனால் அந்த பெண்ணோ பிறர் பேச்சைக் கேட்டுப் பயந்து, அந்த விபூதியைக் குப்பைமேட்டில்  வீசிவிட்டாள்.

12 வருடங்கள் கழித்து மச்சேந்திரர் மீண்டும் அந்தப் பகுதிக்கு வந்தார். அந்தப் பெண்ணிடம் 'எங்கே உன் மகன்?' என்று கேட்டார். அந்தப் பெண்ணோ, பயத்துடன், அந்த விபூதியைக் குப்பை மேட்டில் வீசிவிட்டதாகச் சொன்னாள். உடனே, அந்தக் குப்பைமேட்டுக்கு அருகே சென்ற மச்சேந்திரர் 'கோரக்கா' என்று கூப்பிட, அந்த குப்பைமேட்டிற்குள் இருந்து 12வயது மதிக்கத் தக்க பாலகன் ஒருவன் வெளியே வந்து, மச்சேந்திரருக்கு அடிபணிந்து வணங்கி நின்றான். சுற்றி நின்றவர்கள் எல்லாம் ஆச்சர்யத்தில் உறைந்தனர். 

பட்டாணி ராவுத்தர் காவல்காக்கும் ஆதிகோரக்கநாதர்... திருபுவனத்தில் கோயில்கொண்ட சித்த புருஷர்!

அவர்தான் பின்னாளில் மாபெரும் சித்தபுருஷராக விளங்கிய கோரக்கர். மச்சேந்திரரை தரிசித்த கணத்திலிருந்து கோரக்கர் அவரின் சீடராகிவிட்டார். மச்சேந்திரர் கூடவே பயணித்தார். மச்சேந்திரருடன் இருந்து ஞானமார்க்கத்தையும் யோக மார்க்கத்தையும் கற்றுத் தேர்ந்தபோதும், கோரக்கர் குருவை விஞ்சிய சீடரானார். அவரது இறுதிக்காலம் தமிழகத்தில் கழிந்தது. அப்போது அவர் செய்த அற்புதங்களைக் கண்டு மக்கள் அவர் மேல் பக்தி கொண்டனர். 

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் அவர் பயணம் செய்தபோது, அங்கிருந்த சிவனுக்கு கங்கையால் அபிஷேகம் செய்ய விரும்பினார். அதை அறிந்த அத்திரி முனிவர், கங்கையை அந்த இடத்திலேயே வரச் செய்தார். அதுவே, இன்றும் அங்கு பாயும் கடனா நதி என்று சொல்லப்படுகிறது. கோரக்கரால் வழிபடப்பட்ட அந்த சிவனுக்கும் 'கோரக்கநாதர்' என்றே பெயர். 

பட்டாணி ராவுத்தர் காவல்காக்கும் ஆதிகோரக்கநாதர்... திருபுவனத்தில் கோயில்கொண்ட சித்த புருஷர்!

இவ்வாறு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட கோரக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடக்குப் பொய்கை நல்லூரில் ஜீவசமாதியடைந்ததாகச் சொல்கிறார்கள். வைகை நதிக்கரையில் அமர்ந்து கோரக்கர் சிவ வழிபாடு செய்தபோது சிவபெருமானின் அருள் பெற்றார். அந்த இடத்தில், சித்தபுருஷரான கோரக்கருக்கு ஆலயம் அமைந்துள்ளது. 

இந்தத் தலத்தின் மற்றுமொரு விசேஷம், அங்கு காவல் தெய்வம் பட்டாணி ராவுத்தர் என்பதுதான். கோரக்கர், மகாராஷ்டிர மாநிலத்தில் யாத்திரை செய்தபோது  பட்டாணி ராவுத்தர் என்பவர் கோரக்கருக்குப் பலவாறு தொல்லைகள் செய்துவந்தார். ஆனால், கோரக்கரின் மகிமையைப் புரிந்துகொண்டதும், அவருக்கே சீடராகிவிட்டார்.   

திருபுவனத்தில் ஆதிகோரக்கநாதர் ஆலயத்திற்கு உள்ளே செல்லுவதற்கு முன்பு புளியமரத்தின் அடியில் அமர்ந்து காவல்தெய்வமாக இருந்து கோரக்கரைக் காத்துச் சேவை செய்துவருகிறார் பட்டாணி ராவுத்தர். இவருக்கு மாசி மாதத்தில் பச்சைக்கொடி ஏற்றி விழா எடுக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று முஸ்லீம் பக்தர்களும், மல்லிகைப்பூ, சந்தனம் ஊதுபத்தி கொண்டு வழிபட்டுவருகின்றார்கள். 

ஆலயத்துக்குள், சப்தகன்னியர்கள் சந்நிதியும், விநாயக கோரக்கர் சந்நிதியும் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளன. கோயிலையொட்டி, மடப்பள்ளி, முடியிறக்கும் கூடம்,  நீராடும் இடம்  என்று தனித்தனி அறைகள் உள்ளன. 

பட்டாணி ராவுத்தர் காவல்காக்கும் ஆதிகோரக்கநாதர்... திருபுவனத்தில் கோயில்கொண்ட சித்த புருஷர்!

இங்கு கோரக்கநாதரை வழிபட்டால், வாத நோய் தீரும் எனவும், மாணவர்களுக்குப் படிப்பில் மந்தநிலை போகும் எனவும் கூறுகிறார்கள். இங்கு வழிபாடு செய்வதன் மூலம் குழந்தைப்பேறும், சனிதோஷம் நீங்கி நல்வாழ்வும்  கிடைப்பதாக இவரை நாடிவரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு தினமும் காலை 8 மணிக்கு, கோரக்கருக்குப் பால் அபிஷேகமும் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் நடைபெறுகிறது. சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகருக்கான எல்லா விசேஷங்களும் இங்கே சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சப்தகன்னியர்களுக்குச் சிறப்புப் பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

Vikatan