Published:Updated:

இந்திய ஞான மரபின் இரு சூரியன்கள்... ஆதிசங்கரர், ராமாநுஜர் ஜயந்தி விழாப் பகிர்வு!

இந்திய ஞான மரபின் இரு சூரியன்கள்...  ஆதிசங்கரர், ராமாநுஜர் ஜயந்தி விழாப் பகிர்வு!
இந்திய ஞான மரபின் இரு சூரியன்கள்... ஆதிசங்கரர், ராமாநுஜர் ஜயந்தி விழாப் பகிர்வு!

ந்தக் குழந்தைக்கு அப்போது ஐந்து வயதிருக்கும். ஆற்றில் இறங்கியபோது முதலை அதன் காலைக் கவ்விக்கொண்டது. குழந்தையின் தாய் துடித்தாள். அப்போது அந்தக் குழந்தை, 'என்னை லோக க்ஷேமத்துக்காக சந்நியாசம் புக அனுமதிப்பதாகச் சொல்... இந்த முதலை என்னை விட்டுவிடும்' என்றது. தாய்க்கோ பெரும் தவிப்பு. 'பால் மணம் மாறாத குழந்தையை சந்நியாசம் புக அனுமதிப்பதா அல்லது கவ்வியிருக்கும் முதலைக்கு இரையாக்குவதா' என்கிற சஞ்சலம். வேறுவழியின்றி சந்நியாசம் ஏற்கச் சம்மதிக்கிறார். இந்த உலகின் இன்பம் என்ன என்று அறியாத வயதிலேயே இந்த உலக இன்பங்களைத் துறந்து, ஞானம் தேடிப் புறப்பட்ட அந்தக் குழந்தையே ஆதிசங்கரர்.

இந்திய ஞான மரபின் இரு சூரியன்கள்...  ஆதிசங்கரர், ராமாநுஜர் ஜயந்தி விழாப் பகிர்வு!

பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர், பலகாலம் அலைந்து திரிந்து, பல்வேறு இன்னல்களுக்குட்பட்டு எட்டெழுத்து உபதேசம் பெற்றார். 'அதைத் தொடர்ந்து உபதேசித்தால் மோட்சம் கிட்டும்' என்ற அவர் குரு, 'அதை அடுத்தவர்களுக்குச் சொன்னால், உனக்கு மரணம் ஏற்படும்' என்றும் எச்சரித்தார். இந்த உலகில் அநேக மக்கள் மீளமுடியாத துயரில் தவிக்க, தான் மட்டும் மோட்சம் செல்வது எப்படி சரியாகும் என்று எண்ணிய அந்த சீடன், கோயில் சுவற்றின் மீது ஏறி நின்று எளிய மக்களை அழைத்து எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். விஷயத்தைக் கேள்விப்பட்ட  குரு, ''என்ன காரியம் செய்துவிட்டாய், நான் கூறியதைக் கேட்காமல் அனைவருக்கும் மந்திரோபதேசம் செய்த நீ நரகத்துக்கல்லவா செல்வாய்?'' என்று கேட்க, அதற்கு அவர், ''குருவே, மன்னிக்க வேண்டும். நான் ஒருவன் நரகத்துக்குச் சென்றாலும், என்னிடம் எட்டெழுத்து மந்திரம் உபதேசம் பெற்ற ஆயிரக்கணக்கானவர்கள் பகவானின் திருவடிகளை அடைவார்களே'' என்று கூறினார். அதைக் கேட்ட குரு மெய்சிலிர்த்தவராக, ''நீரே எம்பெருமானார்'' என்று சொல்லிப் பூரித்தார். குருநாதரால் 'எம்பெருமானார்' என்று அழைத்துச் சிறப்பிக்கப்பட்ட அந்த மகான் ஶ்ரீராமாநுஜர்.

இந்திய ஞான மரபில் தோன்றிய இந்த இரண்டு சூரியன்களுக்குள்ளும் பல ஒற்றுமைகள் உண்டு. பல நூற்றாண்டு இடைவெளியில் வாழ்ந்தவர்களாக இருந்தபோதும், இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் வைகாசிமாத பஞ்சமி திதியில் அவதரித்தவர்கள். இருவரும் நட்சத்திரங்களுள் திரு என்னும் சிறப்பு பெற்ற திருவாதிரை நட்சத்திரத்தை ஜன்ம நட்சத்திரமாகக் கொண்டவர்கள். இருவரும் உலக நன்மைக்காய் துறவுபூண்டு திக்விஜயம் செய்தவர்கள்.

இந்திய ஞான மரபின் இரு சூரியன்கள்...  ஆதிசங்கரர், ராமாநுஜர் ஜயந்தி விழாப் பகிர்வு!

சங்கரரின் குரு கோவிந்த பாதர் என்னும் ஆசார்யர். கோவிந்த பாதர், பதஞ்சலி முனிவரின் மறுபிறப்பு. பதஞ்சலி முனிவரோ ஆதிசேஷன் அவதாரம். ஒருமுறை, பாற்கடலில் பள்ளிகொண்டிருந்தபோது மகாவிஷ்ணு மகிழ்வோடு புன்னகைத்தார். மாதவனின் முகத்தில் தவழ்ந்த அந்த மந்தகாசத்தின் ரகசியம் என்னவென்று பாம்பணை சேஷன் கேட்டபோது,  தில்லையம்பதியில் ஈசன் ஆடும் நடனத்தின் அழகைக்கண்டு இன்புற்றதாகச் சொன்னார். இதைக் கேட்டதும் ஆதிசேஷனுக்கும், ஈசனின் நடனக் கோலத்தை தரிசிக்க ஆசை வந்தது. அதற்காக ஆதிசேஷன் வேண்டிக்கொள்ள, பூவுலகில் பதஞ்சலியாகப் பிறந்து ஈசனின் நடனத்தைக் காணும் வரமளித்தார் திருமால். பதஞ்சலியாகப் பூவுலகில் தோன்றி இறைவனின் நடனம் கண்ட ஆதிசேஷனே, மறுபிறப்பில் கோவிந்த பாதராக அவதரித்தார். ராமாநுஜாச்சாரியார் ஆதிசேஷனின் அவதாரம் என்கின்றன புராணங்கள். ஆதிசேஷன் மூலம் சங்கரர், ராமாநுஜர் இருவருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் இந்த ஆத்மார்த்தத் தொடர்பே இருவரின் மகிமையை நமக்கு விளக்கிவிடும்.    

இருவரும் முதலில் பயின்றது அத்வைதமே. சங்கரர் அதை வளர்த்தெடுத்துத் தனி மதமாக ஸ்தாபித்தார். அது அந்தக் காலகட்டத்தில் தேவையாகவும் இருந்தது. சங்கரரின் காலத்தில் பௌத்தம் கோலோச்சியது. சங்கரரின் அத்வைதத்தையே 'மாயாவாத பௌத்தம்' என்றனர் பௌத்தர். ஆனால், சங்கரர் அவர்களையெல்லாம் வாதத்தில் வென்றார். ஏற்கெனவே வைதிக மதத்திலிருந்த 27 பிரிவுகளை ஒன்றிணைத்து 6 தனிப் பெரும் பிரிவுகளாகச் செய்தார். அது அந்தக் காலத்தின் தேவையாக இருந்தது.

இந்திய ஞான மரபின் இரு சூரியன்கள்...  ஆதிசங்கரர், ராமாநுஜர் ஜயந்தி விழாப் பகிர்வு!

ராமாநுஜரின் முதல் குரு யாதவப் பிரகாசர் ஒரு அத்வைத ஞானியே. அவரிடம் பயின்ற அத்வைதத்தில் இருந்த சாரத்தை ஆராய்ந்து, மக்களுக்கு எளியதாகச் சொல்ல விசிஷ்டாத் வைதத்தை உருவாக்கினார். தத்துவங்கள் இருவேறாக இருந்தபோதிலும் இருவரும் அந்த கோவிந்தனை மகிமைப் படுத்தியவர்கள்தான்.

இருவருமே பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதியவர்களே. ஆதி சங்கரர், சைவம் - வைணவம் என்கிற பாகுபாட்டை இல்லாது செய்தார். அவர் எழுதிய பாஷ்யங்களுள் மிகவும் முக்கியமானது விஷ்ணு சகஸ்ரநாம பாஷ்யம். இதை அவர் எழுதியது குறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைச் சொல்வதுண்டு. 

சங்கரர் லலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுத விரும்பி அமர்ந்தார். அப்போது அங்கு இருந்த சீடரிடம் லலிதா சகஸ்ரநாம ஏடுகளை எடுத்துவரச் சொன்னார். அவர் சென்று, சில ஏடுகளை எடுத்துக்கொண்டுவந்து தந்தார். தான் கேட்டது அதில்லை என்பதை அவருக்குச் சொல்லி, 'போய் லலிதா சகஸ்ரநாமம் எடுத்துவா' என்று ஏடுகள் இருக்கும் இடத்தைக் காட்டி, அதை எடுத்துவரச் சொன்னார். அந்த சீடனோ சென்று, மறுபடியும் விஷ்ணு சகஸ்ரநாம ஏடுகளைக் கொண்டு வந்தார். சங்கரர் மீண்டும், லலிதா சகஸ்ரநாம ஏடுகளைக் கேட்க, மீண்டும் அந்த சீடன் விஷ்ணு சகஸ்ரநாமத்தையே கொண்டுவந்து தந்தார். இதேபோல் மூன்றுமுறை நிகழவும், சங்கரர், 'நான் கேட்பது என்ன, நீங்கள் தருவது என்ன?' என்று கடிந்துகொண்டார். அதற்கு அந்தச் சீடன் மெய்சிலிர்க்க, "நான் ஒவ்வொரு முறையும் லலிதா சகஸ்ரநாம ஏடுகளைத்தான் எடுப்பேன். ஆனால் ஒரு சிறுமி தோன்றி, `அதை வைத்துவிட்டு இதை எடுத்துப்போ' என்று இதைத் தந்து அனுப்புகிறாள். அவள் முகத்தைப் பார்த்து மறுக்கும் துணிவு எனக்கில்லை" என்று சொன்னார். சங்கரர் அந்த சீடர் சொன்ன இடத்தில் சென்று பார்க்க, அங்கு யாரும் இல்லை. 

இந்திய ஞான மரபின் இரு சூரியன்கள்...  ஆதிசங்கரர், ராமாநுஜர் ஜயந்தி விழாப் பகிர்வு!

உடனே தியானம் செய்த சங்கரர், 'அன்னை லலிதாம்பிகையே தன்னை விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் பண்ணப் பணிக்கிறாள்'

இந்திய ஞான மரபின் இரு சூரியன்கள்...  ஆதிசங்கரர், ராமாநுஜர் ஜயந்தி விழாப் பகிர்வு!

என்று புரிந்துகொண்டார். இன்றளவும், வைணவம், சைவம் ஆகிய இரு மரபு அடியார்களுக்கும் பெரும் ஞானச் சுரங்கமாக விளங்குவது சங்கரர் அன்று செய்த அந்த பாஷ்யமே.

இருவரும் தம் வாழ்க்கையின் சாரமாக, மாந்தருள் பேதம் இல்லை என்பதை மண்ணுலகுக்கு உணர்த்தியவர்கள். சிவபெருமானே ஒரு முறை, சங்கரர் முன் சாமானிய மனிதனாகத் தோன்றி, பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை என்றும் அனைவருள்ளும் இருப்பது அந்த பிரம்மமே என்பதையும் உபதேசித்தார். அப்போது சங்கரர் பாடிய 'மனீஷா பஞ்சகம்' உயர்ந்த பக்குவப்பட்ட ஆன்ம ஞானமாகக் கருதப்படுகிறது.

அரங்கனை ஏற்றவர்கள் எவ்வர்ணத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் வைணவர்களே என்று அவரின் அடியவர்களுக்குப் போதித்தார். அரங்கன் முன்பாக அனைவரும் சமம் என்பதைத் தொடர்ந்து போதித்துவந்த ராமாநுஜர், தம் சீடர்களுள் சாதி பேதம் பாராட்டாத தன்மை கண்டு அனைவரும் வியந்தனர். சோழ மன்னன், ராமாநுஜர் மேல் சினம் கொள்ள, இந்த சாதி மறுப்புக்கொள்கையும் ஒரு காரணம் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள்.

இது போன்ற பல்வேறு ஒற்றுமைகள் நிரம்பியது இவ்விரு மகான்களின் வாழ்க்கை. இருவரின் ஜயந்தி தினம் நாளை. இந்த நாளில் அந்த மகான்களைத் துதித்து நல்லருள் பெறலாம்.

Vikatan