Published:Updated:

எல்லா மனிதர்களுக்குள்ளும் இருப்பவன் இறைவனே... வேதத்தின் சாரமாகும் மகாருத்ர ஜபம்!

எல்லா மனிதர்களுக்குள்ளும் இருப்பவன் இறைவனே... வேதத்தின் சாரமாகும் மகாருத்ர ஜபம்!
எல்லா மனிதர்களுக்குள்ளும் இருப்பவன் இறைவனே... வேதத்தின் சாரமாகும் மகாருத்ர ஜபம்!

கலியுகத்தில் மகிமை நிறைந்த வழிபாடு என்பது நாம ஜபமே. மிகவும் எளிய மக்களும் இறை நாமத்தைச் சொல்லி முக்திப்பேற்றை அடைவதற்காகவே நாம ஜபம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிலும் சிவபெருமானைத் துதிக்க நமக்குக் கிடைத்திருக்கும் மிகச் சுலபமான ஜபம் `சிவா' என்பது. கேட்பதற்கு எளிமையாய்த் தோன்றும் இந்த நாமம், வேதத்தின் மொத்தச் சாரத்தையும் தன்னுள் அடக்கியுள்ளது. 

எல்லா மனிதர்களுக்குள்ளும் இருப்பவன் இறைவனே... வேதத்தின் சாரமாகும் மகாருத்ர ஜபம்!

ரிக், யஜூர், சாம வேதங்களுள் மையமானது யஜூர் வேதம். அதில் இரண்டு பிரிவுகள். ஒன்று சுக்ல யஜூர், மற்றொன்று கிருஷ்ண யஜூர். கிருஷ்ண யஜூரே வேதங்களின் மையம் எனக் கருதப்படுகிறது. இதன் மையமாக அமைந்துள்ளது ஶ்ரீ ருத்ரம். ஶ்ரீ ருத்ரம் மொத்தம் 11 அநுவாகங்களைக் (பாகங்களை) கொண்டது. 11 அநுவாகங்களில் மையத்தில் உள்ள சொல் `நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரம். அதன் மத்தியில் அமைந்து, வேத மூலத்தின் சாரமாக விளங்குவது `சிவா' என்னும் நாமம். `சிவா' என்று முழுமனதோடு உச்சரிக்கும் பொழுது ஒட்டுமொத்த வேதத்தையும் பாராயணம் செய்தபலன் கிடைக்கும். `வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே' என்று திருஞானசம்பந்தர் சிறப்பித்துச் சொல்வதும் இதைத்தான். 

பொதுவாக, வேதபாராயணமே தவம் என்று உபநிடதம் சொல்லுகின்றது. `தத்தி தபஸ் தத்திதபகா' என்னும் வரிக்கு `வேதபாராயணமே உயர்ந்த தவம்' என்று பொருள். வேதம் முழுமையையும் பாராயணம் செய்ய முடியாதவர்கள், ருத்ர ஜபத்தையாவது பாராயணம் செய்யவேண்டும் என்பதாக முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

எல்லா மனிதர்களுக்குள்ளும் இருப்பவன் இறைவனே... வேதத்தின் சாரமாகும் மகாருத்ர ஜபம்!

ஶ்ரீ ருத்ரம், சிவபெருமானின் தோற்றம் மற்றும் குணங்களை விவரிக்கிறது. `ஓம் நமோ பகவதே ருத்ராயா...' என்று தொடங்கும் ருத்ரம், சிவபெருமானின் குணத்தையும் அவர் தரித்திருக்கும் வில் மற்றும் அஸ்திரங்களையும் வணங்குகிறது. அவரது தோற்றத்தையும், ஆபரணங்களையும்,  வர்ணித்துச் செல்லும் ருத்ரம், முக்கியமான ஒரு தத்துவத்தினை நோக்கி மையமிட்டு நகர்கிறது. 

அது, இந்த உலகிற்கும் சிவபெருமானுக்குமான உறவைப் பேசுவது. இந்த உலகம் (ஜகதாம் பதயே) முழுமையுமே அவர்தான். இந்த உலகில் மட்டுமல்ல மேல் உலகங்களில் இருக்கும் தேவர்களின் இதயமாகவும் (தேவானாம் ஹ்ரிதயேப்ய) அவரே இருக்கிறார். எல்லா தேவர்களின் அந்தராத்மாவாக இருந்துகொண்டு பக்தர்களுக்கு அருள்பவரும் (விசின்வத்கேப்யோ) அவரே. இந்த உலகில் ஞானியாய் ஜொலிப்பவனும், மூடனாய் மருள்பவனும் அவரே. 

ஓடும் தேராகவும், அதைச் செய்த தச்சராகவும் இருப்பவர் அவரே. குயவராக, வேடராக, மீனவராக என்று இந்த உலகில் இருக்கும் அனைத்து ரூபங்களிலும் அவரே இருக்கிறார் என்கிறது ருத்ரம். நீண்ட ஜடாமுடி கொண்டவரும் அவர்தான், அதே சமயம் தலையில் முடியில்லாமல் இருக்கிறவரும் (வ்யுப்தகேஸாய) அவர்தான். குள்ளரும் அவர்தான், ஆஜானுபாகுவாக இருப்பவரும் அவர்தான். அவரே, வேதத்தால் துதிக்கப்படுபவரும், வேதத்தின் முடிவாக இருப்பவரும் அவரே என்கிறது ருத்ரம்.

எல்லா மனிதர்களுக்குள்ளும் இருப்பவன் இறைவனே... வேதத்தின் சாரமாகும் மகாருத்ர ஜபம்!

ருத்ரம், ஓர் உயரிய குணத்தையும், அதற்கு எதிரான தாழ்வான குணத்தையும் சொல்லி, இரண்டும் ஈசனின் குணங்களே என்று சொல்கிறது. `வீரமாக இருப்பவர் மட்டுமல்ல, கோழையாக இருப்பவரும் அவர்தான்' என்கிறது. இதேபோல தோற்றம், தொழில், திறமை என அனைத்தையும் பகுத்துக்காட்டி அனைத்தும் ஈசனின் வடிவங்களே என்று போற்றுகிறது.

இறைவன், இந்த உலகம் முழுமையும் வியாபித்திருக்கிறவன். இந்த உலகில் இருக்கும் அசையும் அசையாப் பொருள்கள், ஜந்துக்கள், மானுடர்கள் அனைவரும் ஈஸ்வர வடிவமே என்பதுதான் ருத்ரம் விளக்கும் தத்துவம். உயிர்களில் பேதமில்லை என்பதுதான் வேதம் வெளிப்படுத்தும் ஞானம். இதை அறிந்துகொள்ளும்போது, மனதுள், சக மனிதர்கள் மேலாக நமக்கு வெறுப்பு தோன்றுவது நீங்கி, அன்பே வெளிப்படும். இதை உருவாக்குவதுதான் ருத்ரத்தின் நோக்கம் எனவும் எண்ணத் தோன்றுகிறது.  

ருத்ரஜபம் செய்வதன் மூலம், சகலவிதமான உலகாயதமான நன்மைகளையும் பெறலாம் என்கின்றனர் ஞானிகள். கல்வி, செல்வம், உடல் ஆரோக்கியம் ஆகியன கிடைக்கும். ருத்ரத்தின் `நமக'த்தைத் தொடர்ந்து வரும் சமகம் மனிதர்களுக்கு, இந்த உலகில் வாழத் தேவையானவற்றைப் பட்டியலிடுகிறது. வேதத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் சகல நன்மைகளையும் அடையமுடியும் என்பதே இதன் பொருள். ருத்ரத்தின் கடைசியாக, `ம்ருத்யுஞ்சய ஸ்தோத்திரம்' அமைந்துள்ளது. `ம்ருத்யு' என்றால் `யமன்'. யமனை வெல்வதற்கான மந்திரம். இதைச் சொல்வதன் மூலம் யமபயம் நீங்கும்.  

எல்லா மனிதர்களுக்குள்ளும் இருப்பவன் இறைவனே... வேதத்தின் சாரமாகும் மகாருத்ர ஜபம்!

இத்தனை பெருமைமிகு ருத்ர பாராயணத்தை ஆன்மிகப் பெரியோர்கள் கூடி, `மகா ருத்ர ஜபம்' என ஒரு வைபவமாக ஏற்பாடு செய்து அதை நடத்துவது வழக்கம். அப்படி ஒரு மகா ருத்ர ஜபம், மும்பையில் நடக்கவிருக்கிறது. 13.5.19 அன்று தொடங்கும் மகாருத்ர ஜபத்தை மும்பைவாழ் பக்தகோடிகள் இணைந்து நடத்துகிறார்கள். ஶ்ரீ எஸ்.ஶ்ரீதர் சர்மா ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்வை, நெருல் பக்த சமாஜ் இணைந்து நடத்துகின்றனர். மகாருத்ரம் 18.5.19 வரை, 5 நாள்கள், பிளாட் நம்பர் 13, செக்டார் 29, நெருல் கிழக்கு. நவி மும்பை 400706 என்னும் முகவரியில் நடைபெறுகிறது. ருத்ரம் நடைபெறும் 5 நாள்களிலும் சிறப்பு வேள்விகளும் நடைபெற இருக்கின்றன. மகா ருத்ர ஜபத்தில் கலந்துகொள்வதன் மூலம் இறைவனின் அருளையும் ஐஸ்வர்யத்தையும் ஒருங்கே பெறலாம். 

Vikatan