Published:Updated:

தியானம், தவம், வைராக்கியம்... தனக்காக வாழாத தயாளன்! - மகாபெரியவா ஜயந்தி தினப் பகிர்வு

தியானம், தவம், வைராக்கியம்... தனக்காக வாழாத தயாளன்! - மகாபெரியவா ஜயந்தி தினப் பகிர்வு
தியானம், தவம், வைராக்கியம்... தனக்காக வாழாத தயாளன்! - மகாபெரியவா ஜயந்தி தினப் பகிர்வு

ஒருபோதும் எளிய மக்களும், பிற மதத்தவர்களும் அவரை அணுகுவது பிரச்னையாக இருக்கவில்லை. இது மிகவும் முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. பெரியவா முன்பாக எல்லா மதத்தவர்களும் உரிமையோடு பேசியிருக்கிறார்கள். அவரும் அவர்களிடம், அவர்களின் நம்பிக்கைக்கு விரோதம் ஏற்படாதபடி அன்போடு நடந்துகொண்டிருக்கிறார்.

கா பெரியவாவின் புகைப்படம் ஒன்றை பெரும்பாலும் அனைவரும் பார்த்திருப்போம். ஒரு படித்துறையில் ஒரு கோணியைப் போன்ற சிறு போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்திருக்கும் படம். அந்தப் படத்தைக் காண்கிற மகா பெரியவாவின் பக்தர்கள் மட்டுமல்ல, யாரும் ஒரு கணம் சிலிர்க்காமல் இருக்க முடியாது. 

நாடும் உலகமும் பெரிதும் மதித்துப் போற்றிய மாபெரும் துறவி, என்றைக்குச் சந்நியாசம் மேற்கொண்டாரோ அன்றிலிருந்தே தம் வாழ்க்கை முழுமையையும் எளிமையாக அமைத்துக்கொண்டார். அதற்கான சாட்சிகளில் ஒன்றுதான் மேலே குறிப்பிடப்பட்ட படத்தின் காட்சி.

தியானம், தவம், வைராக்கியம்... தனக்காக வாழாத தயாளன்! - மகாபெரியவா ஜயந்தி தினப் பகிர்வு

ஆதி சங்கரர் தோற்றி வைத்த ஞானப் பரம்பரையில் ஒருவரான நாள்முதலாகச் சுவாமிகள், எளிமையையே தன் அணிகலனாகப் பூண்டுகொண்டிருந்தார். அவர் உடை எப்போதும் எளிய கைத்தறியால் ஆனதாக மட்டுமே இருந்திருக்கிறது. பட்டு வஸ்திரங்களை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. உணவில் பெரும் நாட்டமில்லாதவர். நெல் பொறியும் பாலும் பழமுமே பெரும்பாலான நேரங்களில் அவரின் உணவு. பணத்தின் பின் செல்லாத மனம். இதெல்லாம் அவருக்கு இயல்பாக அமைந்த குணங்கள். இவற்றை அவர் மிக வைராக்கியமாகக் கைக்கொண்டார். தன் வாழ்க்கை முழுமையும் அதை உலக நன்மைக்காகக் கைக்கொண்டார். 

மனிதர்களுக்கு உறக்கம் திருப்தியை அளிக்கிறது. மன அமைதியைத் தருகிறது. உறக்கம் இயல்பான சாமானியர்களுக்கான அமைதியைத் தரும் மார்க்கமென்றால், ஞானிகளுக்குத் தியானமே உள்ளார்ந்த அமைதியை நிலைநிறுத்தும் முறை. அவர்களிலும் வைராக்கியம் மிக்கவர்கள் தவம் மேற்கொள்கின்றனர். அப்படிப் பெரியவா மேற்கொண்ட தவமே அவரது எளிமை.

ஒருபோதும் எளிய மக்களும், பிற மதத்தவர்களும் அவரை அணுகுவது பிரச்னையாக இருக்கவில்லை. இது மிகவும் முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. பெரியவா முன்பாக எல்லா மதத்தவர்களும் உரிமையோடு பேசியிருக்கிறார்கள். அவரும் அவர்களிடம், அவர்களின் நம்பிக்கைக்கு விரோதம் ஏற்படாதபடி அன்போடு நடந்துகொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் ஏராளமான உதாரணங்கள் அவர் வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளில் காணக்கிடைக்கிறது. 

தியானம், தவம், வைராக்கியம்... தனக்காக வாழாத தயாளன்! - மகாபெரியவா ஜயந்தி தினப் பகிர்வு

ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெண்மணி இந்திய ஞானிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்களைத் தரிசிக்க இந்தியா வந்தார். ஆனால், இந்தியாவில் துறவிகள் எல்லாம் அவர் படித்த, கேள்விப்பட்ட செய்திகளில் காணப்பட்டதுபோல இல்லை என்று அவருக்குத் தோன்றியது. பெரும்பாலான துறவிகள், ஆடம்பரமாக இருந்தார்கள். அவர்களைத் தரிசிக்க மிகவும் செலவு செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் தோற்றத்திலிருந்து உபதேசம் வரை அனைத்தும் கொஞ்சம் மிகையாக இருப்பதாக அவர் நினைத்தார். இந்த வருத்தத்தை தனக்கு அறிமுகமாயிருந்த தென்னிந்திய நண்பரோடு பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், ஒருமுறை காலடி சென்று வாருங்களேன் என்றார். பெரியவா அப்போது காலடியில்தான் இருந்தார்.

அடுத்த இரு நாள்களில், அவரது விசா முடிவடைகிறது. ஒரே நாளில் சென்று தரிசனம் கிடைக்காமல் திரும்பினால், அனைத்தும் வீணாகும் என்ற கவலை. ஆனாலும் மனம் காலடியை நோக்கியே சிந்தித்திருக்கவும், அந்தப் பெண்மணி காலடி நோக்கி விரைந்தார். அங்கிருந்த மடத்தின் அதிகாரிகளிடம் தன்னைப் பற்றிச் சொல்லி பெரியவாவின் தரிசனம் இன்றே கிடைக்குமா என்று கேட்டார். அவர்களும் அதற்கு ஏற்பாடு செய்தனர்.

பெரியவா தோட்டத்தில் நின்றுகொண்டிருந்தபோது அந்த அம்மையார் அவரைத் தரிசித்தார். பெரியவா காஷாயமும் கையில் தண்டமும், கமண்டலமும் சுமந்தபடி நின்று தரிசனம் கொடுத்தார். அந்தப் பெண்மணிக்கு அந்தத் தரிசனம் மனம் நிறைவைத் தந்தது. எளிமையே உருவாகத் திகழ்ந்த பெரியவாவின் தரிசனத்தைக் கண்டதும் அவர் கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தபடி இருந்தது. பெரியவா, அவருக்கு ஒரு மாம்பழத்தைப் பிரசாதமாகத் தந்து ஆசி வழங்கினார். 'இந்தியா எளிமை நிறைந்த ஞானிகளின் பூமிதான் என்பதை என் வாழ்நாள் முழுக்கச் சொல்வேன்' என்று  அந்தப் பெண் தன் நண்பரிடம் தெரிவித்துச் சென்றாராம். 

தியானம், தவம், வைராக்கியம்... தனக்காக வாழாத தயாளன்! - மகாபெரியவா ஜயந்தி தினப் பகிர்வு

பெரியவா அடிக்கடி மௌனவிரதம் இருப்பார். ஒரு முறை விரதத்தைத் தொடங்கினால் எப்போது முடிப்பார் என்று யாருக்கும் தெரியாது. அவரே முடித்தால்தான் உண்டு. அப்படி ஒரு முறை அவர் மௌனவிரதம் இருக்கத் தொடங்கினார். அன்று மடத்துக்குப் பார்வையற்றவர்கள் பள்ளியிலிருந்து பெரியவாவை தரிசனம் செய்ய மாணவர்கள் வந்தனர். இதை அறிந்ததும் பெரியவா, தன் விரதத்தைக் கைவிட்டார். பார்வையற்றவர்களுக்குத் தரிசனம் என்பது சொற்களின் வழியாகத்தானே சாத்தியம். அதனால் அவர் தன் விரதத்தை முக்கியமாக எண்ணாமல், வந்திருந்த குழந்தைகள் மனம் நிறையுமாறு அவர்களுக்கு ஆசி மொழியும் பிரசாதமும் வழங்கி அனுப்பி வைத்தார். 

பெரியவாவிடம் பக்தர்கள் முறையிட்டுதான் அவர்களின் சிரமங்களை அவர் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அவர்கள் வாய்விட்டுச் சொல்லாமலும், தூரமாய் இருந்து நினைத்துக்கொண்டாளுமே, அவர் அருள் செய்த தருணங்கள் அநேகம். இந்தியா முழுவதும் பெரும்பாலும் நடந்தே யாத்திரை செய்து அருள் செய்த பெரியவா சில நாள்கள் கல்கத்தாவிலும் தங்கியிருந்தார். அங்கிருந்து திரும்பி வந்த சில நாள்கள் கழித்து, பெரியவா, மடத்தின் காரியதரிசியை அழைத்து, கல்கத்தாவில் ஒரு முகவரிக்கு உடனடியாக  500 ரூபாய் பணத்தை அனுப்பச் சொன்னார். பெரியவா சொன்னால் அதன்பின் ஏன், எதற்கு என்று கேட்கும் வழக்கம் இல்லை. அனுப்பி வைத்தார்கள். சில மாதங்கள் கழித்து, கல்கத்தாவிலிருந்து பணம் பெற்ற அந்தப் பக்தர் வந்தார். வந்தவர் பெரியவரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். அதன்பின்,

"பெரியவா, நீங்க பணம்  அனுப்பின  அன்னைக்குத்தான், என் தகப்பனார் எதிர்பாராத விதமா இறந்துட்டார். கைல ஒரு காசு இல்லை. என்னடா செய்யப்போறோம் பகவானேன்னு உங்களைத்தான் தியானம் பண்ணிக்கிட்டு இருந்தேன். வாசல்ல தபால்காரர் வந்து நின்னார். என்ன சொல்றது பெரியவா, அந்தப் பணத்துலதான் அப்பாவுக்குக் காரியங்கள் பண்ணினேன்" என்று சொல்லி, கண்ணீரோடு அவர் பாதங்களில் பணிந்தார்.

மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் அவரை 'நடமாடும் தெய்வம்' என்று பக்தர்கள் அழைத்ததில் என்ன பிழை இருக்கிறது...  மகா பெரியவா ஜயந்தி தினமான இன்று அவரை வணங்கி, குருவருளையும் திருவருளையும் பெறுவோம். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு