Published:Updated:

வட இந்தியாவில் தமிழின் புகழைப் பரப்பிய மகான் குமரகுருபர சுவாமிகள்! - குருபூஜை தினப் பகிர்வு

வட இந்தியாவில் தமிழின் புகழைப் பரப்பிய மகான் குமரகுருபர சுவாமிகள்! - குருபூஜை தினப் பகிர்வு
வட இந்தியாவில் தமிழின் புகழைப் பரப்பிய மகான் குமரகுருபர சுவாமிகள்! - குருபூஜை தினப் பகிர்வு

வட இந்தியாவில் தமிழின் புகழைப் பரப்பிய மகான் குமரகுருபர சுவாமிகள்! - குருபூஜை தினப் பகிர்வு

ல்லாடை கட்டி காசிக்குச் சென்றார் குமரகுருபர சுவாமிகள் என்ற ஞானி. அவர், காசியில் ஒரு மடம் எழுப்பி அங்கு தமிழ்த் தொண்டாற்ற விரும்பினார். அப்போது அங்கு வேறொரு  மதத்தின் மன்னர் ஒருவரின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த மன்னர், அறிஞர்களைப் போற்றும் பண்பு கொண்டவர் என்றபோதும், அவரது தாய்மொழியான ஹிந்துஸ்தானி தவிர்த்த வேறு மொழி அறிந்தார் இல்லை. குமரகுருபரரோ, மன்னரிடம் நேரில் உரையாடினாலன்றி தம் எண்ணம் நிறைவேறாது என்பதை அறிந்துகொண்டார். தனக்கு எப்போதும் துணை நிற்கும் கலைவாணியைத் துதிக்க ஆரம்பித்தார். 'சகலகலாவல்லி மாலை' என்னும் துதியை எழுதித் துதித்தார். கலைவாணியின் அருளால், கூடிய விரைவில் அந்த மொழியில் தேர்ச்சியும் பெற்றார். மன்னரைச் சென்று சந்தித்து, அவர் மொழியிலேயே தன் கோரிக்கையையும் முன்வைத்தார். தென் நாட்டிலிருந்து வந்த துறவி, ஹிந்துஸ்தானி மொழியில் கொண்டிருந்த ஆளுமையைக் கண்டு வியந்த மன்னர், அவர் வேண்டுவது செய்வதாக வாக்களித்தார். 

வட இந்தியாவில் தமிழின் புகழைப் பரப்பிய மகான் குமரகுருபர சுவாமிகள்! - குருபூஜை தினப் பகிர்வு

மன்னரின் நன்மதிப்பைப் பெற்றுவிட்டாலும் அவையில் இருக்கும் மற்றவர்கள் அதை அனுமதிப்பார்களா... குமரகுருபரரை வாதத்துக்கு அழைத்தனர். 'அனைவரும் கேட்கும் கேள்விகளுக்கு, கொதிக்கும் சூட்டுக்கோலைக் கையில் பிடித்தபடி பதில் சொல்ல வேண்டும்.' சுண்ணாம்புக் காளவாயில் தள்ளப்பட்ட திருநாவுக்கரசர் எப்படி, நமச்சிவாயனைத் துதித்து அந்த வெம்மையைத் தண்மையாகக் கொண்டாரோ, அதேபோன்று அன்னை மீனாட்சியை மனதுள் துதித்த குமரகுருபரர், அந்தச் சோதனையை ஏற்று அவர்கள் திருப்தியுறும்படி பதிலளித்து அனைவரையும் வென்றார். மன்னர், குமரகுருபரர் கேட்ட இடத்தைத் தர அங்கேயே, அவர் தங்கியிருந்து மடம் ஒன்றை எழுப்பி நீண்டகாலம் தமிழ்ப்பணி செய்தார்.  

நாயன்மார்களுக்கு இணையாக, வாழ்வில் அற்புதங்களைச் செய்தவராகக் கருதப்படும் குமரகுருபரர், தன் வாழ்வில், தெய்வத்தைப் பிரத்யட்சமாகக் கண்டவராகப் போற்றப்படுகிறார். தன், பைந்தமிழ்ப் பாடல்கள் மூலம் திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சியம்மன், கலைவாணி ஆகிய கடவுள்களை நேரில் தரிசித்தவர் என்று கருதப்படும் குமரகுருபர சுவாமிகள், தம் தமிழ்ப் பணி மூலம் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பக்தி இலக்கிய மரபிலும் நீங்காத இடம் பெற்றவர்.

வட இந்தியாவில் தமிழின் புகழைப் பரப்பிய மகான் குமரகுருபர சுவாமிகள்! - குருபூஜை தினப் பகிர்வு

குமரகுருபர சுவாமிகளின் புலமையைக் கேள்விப்பட்ட திருமலை நாயக்கர், அவரை மதுரைக்கு அழைத்து பரிசுகள் வழங்கிச் சிறப்பு செய்தார். மதுரையம்பதி வந்ததும், அன்னை மீனாட்சியைத் தரிசனம் செய்தார் சுவாமிகள். உடனே, மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழை எழுதத் தொடங்கினார். அதைத் திருமலை நாயக்க மன்னர் முன்னிலையில் மீனாட்சியம்மன் கோயிலிலேயே வைத்து அரங்கேற்றும் நாளும் வந்தது.

நூல் அரங்கேற்றம் தொடங்கியது. அப்போது ஒரு சிறுமி, ஒய்யாரமாக நடந்துவந்து திருமலை நாயக்கர் மடியில் அமர்ந்தாள். அவளின் எழிலைக் கண்ட மன்னர், மறுப்பேதும் சொல்லாது அமர்ந்திருந்தார். குமரகுருபரரின் மொழியில் அவையே மூழ்கியிருக்க, அப்போது அந்தச் சிறுமி, மன்னரின் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி எடுத்து, குமரகுருபரரிடம் சென்று, அவர் கழுத்தில் அணிவித்தாள். நடப்பது என்ன என்று அனைவரும் அறிந்துகொள்ளும் முன்னர், அந்தச் சிறுமி மீனாட்சியம்மன் சந்நிதிக்குள் சென்று மறைந்தாள். அன்னை மீனாட்சியே அங்கு சிறுமியாக வந்தாள் என்று அனைவரும் மகிழ்ந்தனர். இதேபோன்று பல்வேறு அற்புத நிகழ்வுகளைக் கொண்டது குமரகுருபரரின் வரலாறு. அனைத்தையும் தாண்டி, அவரது தமிழ்ப் பணி மிகவும் போற்றத்தக்கது.

வட இந்தியாவில் தமிழின் புகழைப் பரப்பிய மகான் குமரகுருபர சுவாமிகள்! - குருபூஜை தினப் பகிர்வு

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம் உள்ளிட்ட 16 சிற்றிலக்கியங்களை எழுதிய குமரகுருபரர் சிற்றிலக்கியங்களின் முன்னோடியாகவே கருதப்படுகிறார். இவர் எழுதிய நீதி நெறி விளக்கம், பிற்கால நீதி நூல்களுள் முதன்மையானது.
இவரது 'நீதி நெறி விளக்கம்' நூல் மிகவும் சுவாரஸ்யமானது. திருக்குறளின் சாரத்தைக் கொண்டு, காலத்துக்கு ஏற்ற வகையில் அதை 102 வெண்பாக்களாகச் செய்தார். பக்தி இலக்கியங்களில் காணப்படும் மேன்மைக்குச் சற்றும் குறையாதவை இந்த நீதி நெறி விளக்கம். இன்றும், மேலாண்மை குறித்துப் பேசுகிறவர்களுக்கான ஆகச் சிறந்த உதாரண வரிகளாக இவரது பாடல்கள் விளங்குகின்றன.

'மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்' (நீதி நெறி விளக்கம் - 53 )

ஒரு செயலை வெற்றி கொள்வது எப்படி என்பதனை விளக்கும் இந்தப் பாடல், மிகச்சிறந்த மேலாண்மைக் கருத்துகளை உள்ளடக்கியது என்று சொல்லலாம். அதேபோல, செல்வத்தின் பயனையும் அதைச் செலவிட வேண்டிய முறைகளையும் குறித்துப் பேசும் குமரகுருபரர்,  

'வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்
தூங்கும் களிறோ துயறுரா - ஆங்கது கொண்டு
ஊரும் எறும்பு இங்கு ஒருகோடி உய்யுமால் 
ஆரும் கிளையோடு அயின்று' (நீதி நெறி விளக்கம் - 37 ) என்கிறார். 

வட இந்தியாவில் தமிழின் புகழைப் பரப்பிய மகான் குமரகுருபர சுவாமிகள்! - குருபூஜை தினப் பகிர்வு

'யானை, ஒரு கவள உணவைத் தவற விடுவதன் மூலம், இழப்பது எதுவுமில்லை. ஆனால், அந்த ஒரு கவளம், ஒரு கோடி எறும்புகளுக்கு உணவாகும். எனவே, செல்வந்தர்கள், தம்மிடம் உள்ளவற்றில் சிறு அளவையாவது மற்றவர்களுக்குத் தர வேண்டும்' என்று பாடுகிறார்.  

காசியில் சுவாமிகள் தங்கியிருந்தபோது, வடமொழிப் புலவர்கள் அவர் எழுதிய நூல்களைப் பயின்று தம் மொழியிலும் குமரகுருபரரின் கருத்துகளை எடுத்துப் பயன்படுத்தினர். பலகாலம் காசியிலேயே தங்கியிருந்து இறைப்பணியும் தமிழ்ப் பணியும் செய்த சுவாமிகள் வைகாசி தேய்பிறை திரிதியையன்று இறைவனடி சேர்ந்தார்.  

இறைவனுக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டு செய்த மகான் குமரகுருபரர் குருபூஜை தினமான இன்று, அவரது பாதம் பணிந்து வணங்கி, அவரை நினைவுகூர்வோம். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு