நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

லகில், மிக நீண்ட பயணம் எது தெரியுமா? வாழ்க்கைதான்! அலுப்பும் சலிப்பும், மகிழ்ச்சியும் துள்ளலும், அயர்ச்சியும் வேதனையும் கொண்டதுதான் இந்த வாழ்க்கைப் பயணம். ஆனால், 'நாளை நாம் இருப்போம்’ என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கைதான், இதில் உள்ள ஒரே சுவாரஸ்யம்!

அப்படி நாளையும், நாளை மறுநாளும் அடுத்த மாதமும் வருடமும் வாழ்வதற்கு, வாழ்க்கைப் பயணத்தை ஓட்டுவதற்கு நல்லதொரு வாகனம் தேவை. அந்த வாகனம் அடிக்கடி மக்கர் செய்து இம்சிக்காமல் இருக்க வேண்டும். அல்லது, பழுதடைந்து தடாலென்று வழியில் நிற்காமல் இருக்க வேண்டும்.

நாம் வைத்துக் கொண்டிருக்கிற டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களைக்கூட, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் ஸ்டேஷனில் விடுகிறோம். 'இன்ஜின்ல வேற மாதிரி சத்தம் வருது’, 'பிரேக் லூஸாயிருச்சு’, 'சைலன்ஸர் கவர்ல இருக்கிற நட் விழுந்து தடதடன்னு ஆடிக்கிட்டிருக்கு’... என்றெல்லாம் சொல்கிறோம். 'மைலேஜ் தரமாட்டேங்குது’ என்று சரிசெய்யச் சொல்கிறோம்.

இத்தனைக்கும் வாகனத்தை வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் மட்டுமே ஓட்டிச் செல்வார்கள். இன்னும் சிலர், அலுவலக வேலைகளுக்காக இங்கேயும் அங்கேயும் அலைவதற்குப் பயன்படுத்துவார்கள். சிலர், வாகனத்தை வார விடுமுறை நாட்களில் மட்டுமே எடுத்து, ஓட்டுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும், அந்த வாகனத்தைச் சீர்செய்வதிலும் செப்பனிடுவதிலும் அதிக அக்கறை காட்டுவார்கள்.

##~##
வெறும் இரும்பும் போல்ட்டுகளும் கொண்டு வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கே அவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என்றால், ரத்தமும் சதையுமாக, நம்முடனே பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்திருக்கிற நம் உடம்பு என்கிற வாகனத்துக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இன்னும் சொல்லப் போனால், வீடு - அலுவலகம், அலுவலக வேலைகள், வார விடுமுறை... என்று மட்டுமே அந்த வாகனத்தை நாம் இயக்குவதில்லை. ஒருநாளின் 24 மணி நேரமும் இயக்குகிறோம். வருடத்தின் 365 நாட்களும் அந்த வாகனத்துடனேயே பயணிக்கிறோம்.

காய்கறி வாங்கக் கடைக்குச் சென்றாலும், முடி வெட்டிக் கொள்வதற்காக சலூனுக்குச் சென்றாலும், உறவினர் வீட்டு விசேஷங்களுக்குச் சென்றாலும்... அலுவலகம், வெளியூர், வெளிநாடு, கோயில்கள், மருத்துவமனைகள், அக்கா வீடு, அத்தை வீடு... என எங்கு சென்றாலும், எப்போது சென்றாலும் அந்த வாகனம் இல்லாமல் நாம் செல்வதே இல்லை; அப்படிச் செல்வதும் இயலாத ஒன்று!

உடல் என்கிற வாகனமின்றி நம்மால் இயங்க முடியாது; இன்னும் சொல்லப் போனால், உடல் இல்லாது போனால் நாமே இல்லையே!

ஆகவே, இந்த உடல் இருக்கும் வரைக்கும்தான் அவர் பெயர் ரமேஷ்; இவர் பெயர் சுரேஷ்; அவள் பெயர் பாமா; இவள் பெயர் ஹேமா என்பதெல்லாம்! அந்த உடலானது மொத்த சக்தியையும் திறனையும் செயல்பாட்டையும் இழந்துவிட்டால், நமக்கும் உடலுக்குமான, அதாவது ஆன்மாவுக்கும் உடலுக்குமான பந்தம் அங்கே... அறுந்துவிடுகிறது. ஆகவே உயிர் இருக்கும்வரை உடல் இருக்கும்.

வாழ்க வளமுடன்!

அப்படி உயிர் இருக்கும் வரை மாடாக உழைத்து, ஓடாகத் திரியும் அந்த உடல் என்கிற வாகனத்தை, நாம் கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பராமரித்துக் கொள்வது நம் கடமை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படிப் பேணிக் காப்பதற்கான வழிமுறைதான், மனவளக்கலைப் பயிற்சி! அந்தப் பயிற்சியில் உடலைப் புத்துணர்ச்சிப்படுத்தி, பலமூட்டுவதுதான் மகராசனப் பயிற்சி முறை!

கால், கை, இடுப்பு, தொடை, முதுகு, முழங்கால், கழுத்து, தோள்கள்... எனப் பல உறுப்புகள், பல வடிவங்கள் கொண்ட இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து, வேற்றுமையிலும் ஒற்றுமைப்படுகிற விதமாக, இந்த மகராசனப் பயிற்சி அனைத்துப் பாகங்களுக்கும் நற்பலன்களை கற்பக விருட்சமென அள்ளித் தருகிறது. ஆகவே, மகராசனப் பயிற்சியில் அனைவரும் ஈடுபடுவது நல்லது.

இப்போது, மகராசனத்தின் அடுத்த கட்டப் பயிற்சிக்குச் செல்வோம்.

இதுவரை இந்தப் பயிற்சியில், மல்லாக்கப் படுத்துக் கொண்டிருந்தோம். இனி செய்யப் போகிற பயிற்சியில், குப்புறப் படுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து, இரண்டு கால்களையும் முழங்கால் பகுதி வரைக்கும் நன்றாக மடக்கி வைத்துக் கொள்ளுங்கள். பெருவிரல்கள் எனப்படும் கட்டைவிரல்களில் துவங்கி, குதிகால்கள் வரைக்கும் பாதங்கள் இரண்டும் சேர்ந்தே இருக்கவேண்டும். அதேபோல், இரண்டு முழங்கால்களும் பிரியாமல், இடைவெளி இல்லாமல், சேர்ந்திருக்க வேண்டும் என்பதும் அவசியம். வழக்கம்போல், கைகள் இரண்டும், இரண்டு பக்கமும் உடலில் இருந்து சற்று தள்ளியே இருக்கட்டும்.

சரி... இந்தப் பயிற்சியைச் செய்வோமா?

இப்போது, உங்களின் உடலை வலது பக்கமாகவும், இடது பக்கமாகவும் மாறி மாறித் திருப்புங்கள். அப்படித் திருப்புகிற போது, உங்கள் ஒரு உள்ளங்கை தரையைப் பார்த்தபடியும், இன்னொரு கையின் புறங்கையானது தரையைப் பார்த்தபடியும் இருக்கட்டும்.

வாழ்க வளமுடன்!

தலை தூக்காமல், தரை தொட்டது தொட்டபடியே இருக்க, கால்களை முழங்கால் வரை மடக்கியபடி, வலது - இடது என பக்கங்களில் திருப்பி, மூன்று மூன்று முறை செய்யுங்கள்.

இதன் அடுத்த கட்டமாக, குப்புறப் படுத்துக்கொண்டு, வலது கணுக்காலை இடது கணுக்கால் மீது வைத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு காலின் மீது மற்றொரு காலை, குறுக்காகப் போட்டுக் கொள்ளுங்கள். இது அடுத்த நிலைப் பயிற்சிகளில் ஒன்று!

இந்த நிலையில் இருந்துகொண்டு, பழையபடி கைகளை மட்டும் திருப்பி, உடலை மட்டும் திருப்பி, தலை தூக்காமல், கால்கள் பிரியாமல், முழங்கால்களின் இணைப்பை அகற்றாமல், வலது பக்கமாகத் திருப்புங்கள். அடுத்து இடது பக்கமாகத் திருப்புங்கள். இப்படி வலதும் இடதுமாக, சுமார் மூன்று மூன்று செய்யுங்கள்.

இதையடுத்து, இடது கணுக்காலை வலது கணுக்கால் மீது போட்டுக் கொள்ளுங்கள். போன பயிற்சிக்கும் இந்தப் பயிற்சிக்குமான வித்தியாசம் இது மட்டும்தான்! அப்போது வலது கணுக்கால் மீது இடது கணுக்கால்; இப்போது, இடதின் வலது கணுக்கால்! அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்த நிலையில் இருந்தபடி, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக உடலைத் திருப்பி மூன்று மூன்று முறை பயிற்சி செய்யுங்கள்.

இந்த மகராசனப் பயிற்சியைத் தொடர்ந்து பத்து நாட்கள் செய்து வந்தாலே, உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நம்மால், மிக எளிதாக உணரமுடியும்.

சாக்லேட்டைச் சாப்பிட்டால்தான் அது இனிக்கும் என்று சொல்லமுடியும் நம்மால்! அதுபோல், இந்தப் பயிற்சியைச் செய்தால்தான், அதன் மகத்துவத்தை உங்களால் உணர்ந்து சொல்ல முடியும்!

உணர்தல், கற்றலின் முதல்படி! தெளிதல், அதன் அடுத்த கட்ட வெற்றி! என்ன... சரிதானே?!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா