சங்கீத மூம்முர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜரின் 175-வது ஆராதனை விழா திருவையாறில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கமாக 5 நாள்கள் நடைபெறக்கூடிய ஆராதனை விழாவினை, இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக ஒருநாள் மட்டுமே நடத்த தியாக பிரம்ம மகோற்சவ சபா குழுவினர் முடிவு செய்தனர். தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி தினத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியாக இது நடைபெற்றது. திருவையாறு திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது இசை ரசிகர்களின் மனதை உருக வைத்தது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி அமைத்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. இவ்விழா நடைபெறக்கூடிய ஐந்து நாள்களும் திருவையாறு மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் களை கட்டியிருக்கும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் இவ்விழாவில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஒருநாள் மட்டுமே இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவ்விழாவில் கலந்து கொண்ட இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் தெர்மல் மீட்டர் மூலம் சோதனை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா எனவும் சோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக இவ்விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. விழா ஏற்பாடுகளை தியாக பிரம்ம மகோற்சவ சபா செய்திருந்தனர்.

காலை 6 மணிக்கு திருவையாறு திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து அவரது சிலை உஞ்சவிருத்தி பஜனை பாடியபடியும் மேள தாளங்கள் முழங்கவும் பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்குக் கொண்டு வரப்பட்டது. விழாவினை தியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து நாதஸ்வர, மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால், அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து தியாகராஜ சுவாமிகள் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல இசைக்கலைஞர்கள் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ், மஹதி, விசாகாஹரி, கடலுார் ஜனனி, சுசித்தரா உள்பட ஏராளமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்துகொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும், நாதஸ்வர கச்சேரி, பின் உபன்யாசம் நடந்தது. இரவு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.