Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

9ஆம் ஆண்டு சிறப்பிதழ்

கதை கேளு... கதை கேளு...

9ஆம் ஆண்டு சிறப்பிதழ்

Published:Updated:
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...

ந்த உலகில், நம் மனத்துக்குப் பூரண நிறைவை ஏற்படுத்திக் கொடுக்கிற இடம்... கோயில்கள்தான்! ''பத்து நாளா ஒரே கவலை, டென்ஷன்! நான் எப்போதும் போற கோயிலுக்குப் போனாத்தான் மொத்த பாரமும் இறங்கினது

போல இருக்கும்'' என்று பிள்ளையார் கோயிலுக்கோ, பெருமாள் கோயிலுக்கோ, சிவ ஆலயத்துக்கோ சென்று வழிபடும் அன்பர்களைப் பார்த்திருக்கிறேன்.

''புதுசா கார் வாங்கினேன். முதல் வேலையா எங்க குலதெய்வக் கோயிலுக்கு குடும்ப சகிதமாப் போய், பொங்கல் படையல் வெச்சு, சாமி கும்பிட்டுட்டு வந்தேன்'' என்று நிம்மதியும் நிறைவுமாக நண்பர்கள் பலர் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மைதான். கோயில் என்பது இறைவன் குடிகொண்டிருக்கும் அற்புதமான, அழகான வீடு! நம்மைப் படைத்த கடவுளுக்கு, மாபெரும் மன்னர்கள் பலரும் மிகப் பிரமாண்டமான முறையில் கோயிலைக் கட்டிக் கொடுத்திருக் கிறார்கள். கோபுரம், நுழைவாயில், பிராகாரம், மண்டபங்கள், சந்நிதிகள் என எத்தனை இடங்கள்? எத்தனை விஷயங்கள்? அப்பேர்ப்பட்ட உன்னதமான கோயில்களுக்குச் சென்று ஆகம விதிகளின்படி வழிபடுவதும், பிரார்த்தனை செய்வதும் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளும், உயிர்ப்பித்துக் கொள்ளும் காரியம்.

ஓர் ஆலயம், தோற்றத்தில் பிரமாண்டம் காட்டி நம்மை பிரமிக்கச் செய்கிறது என்றால், அந்தக் கோயில் அமைந்ததன் பின்னணிக் கதைகள் அதைவிட ஆச்சரியமூட்டுபவை. கோயில் இப்படியிப்படித்தான் இருக்க வேண்டும் என்றும், பூஜைகள் இந்தந்த முறைகளில்தான் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆகமங்கள் சொல்கின்றன. அந்த விதிகள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், கோயிலுக்குச் சென்று, சந்நிதிக்கு முன்னே நின்று, நாலணாவுக்குச் சூடம் வாங்கி ஏற்றிவிட்டு, கண்மூடிப் பிரார்த்தனை செய்து, நிம்மதியுடன் திரும்புகிற சராசரி மக்கள்தானே நாம்?!

##~##
தமிழ்கூறும் நல்லுலகில் ஊருக்கு ஊர் கோயில்கள்; தெருவுக்குத் தெரு ஆலயங்கள். சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னர்களும், பாண்டிய நாட்டை அரசாண்ட ராஜாக்களும், சேர நாட்டு அரசர்களும் கட்டிய கோயில்கள் அனைத்தையும் சென்று தரிசிப்பதற்கு இந்தவொரு ஜென்மம் போதாது!

உபன்யாசங்களுக்காக ஊர் ஊராகப் போய்க் கொண்டிருக்கிறவன் நான். அந்த ஊரில் இறங்கியதும் அங்குள்ள கோயிலுக்குச் சென்று, அது யார் கட்டிய கோயில், எந்தெந்த மகரிஷிகள் தவம் செய்தனர், யார் யாருக்கெல்லாம் இறைவன் அங்கே அருள்பாலித்தான்... என யோசித்தபடியே கோயிலை வலம் வருவேன். ஸ்வாமியையும் தாயாரையும் ஸேவித்துவிட்டு, அன்று உபன்யாசத்தை முடித்துக் கொண்டு, அந்த ஊரைவிட்டுக் கிளம்புவதை வழக்கமாகக் கொண்டவன் நான்.

ஆனால், கோயில் என்பது இவை மட்டும்தானா? ஒரு கோயிலில் இருப்பவை நாம் குறிப்பிடுவனவோ, பார்ப்பதுவோ மட்டும்தானா? அவற்றையெல்லாம் கடந்து, அள்ள அள்ளக் குறையாத அருமையான, ஆச்சரியமான தகவல்கள் ஆலயங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அப்படியான தகவல்களைத் தேடிக் கண்டுகொண்டு, அடுத்தடுத்த இதழ்களில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

'கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். இந்தாங்க பிரசாதம்’ என்று தருபவர்களிடம் அந்த ஆலயத் தின் சிறப்பு என்ன என்று கேட்டால், விழி பிதுங்கி நிற்பார்கள் பலர்.

ஆயிரமாயிரம் கதைகளைத் தனக்குள் வைத்திருக்கிற கோயில் குறித்த தகவல் களை ஒவ்வொன்றாக அலசி, ஆராய்ந்து, பரஸ்பரம் உங்களிடம் பரிமாறிக் கொள்கிற முயற்சியே இது!

பேரனுக்குப் பரீட்சை முடிந்து லீவு ஆரம்பமாகப் போகிறது. அவனையும் அழைத்துக்கொண்டு ஆன்மிகச் சுற்றுலா செல்வதென்று தீர்மானித்து, ரயிலில் டிக்கெட்டும் முன்பதிவு செய்துவிட்டார், தாத்தா. பேரனுக்கு டூர் போகிற சந்தோஷம் தாங்கவில்லை.

'தாத்தா, எப்ப தாத்தா கிளம்பறோம்?’ என்று தினமும் தாத்தாவிடம் நச்சரிப்புதான். 'முதல்ல எந்தக் கோயிலுக்குத் தாத்தா போகப் போறோம்?’ என்று ஆர்வமான விசாரிப்புதான்!

''பொறுடா கண்ணா... இப்பவே எல்லாத்தை யும் சொல்லிட்டா, உனக்கு சுவாரஸ்யமா இருக்காது. எங்கூட நீயும்தானே வரப் போறே? அப்ப நீயே நேர்ல பார்த்து தெரிஞ்சுக்க'' என்று அவனது ஆர்வத்தீயை மேலும் தூண்டிவிட்டுக்கொண்டு இருக்கிறார்.

என்ன... தாத்தா- பேரனுடன் கோயில் கோயிலாகச் சென்று பார்க்க, நீங்களும் தயாராகிவிட்டீர்கள்தானே?

- தரிசிப்போம்
படம்:  ஜெ.வேங்கடராஜ்