Published:Updated:

வானம் தொடுவோம்!

9ஆம் ஆண்டு சிறப்பிதழ்

வானம் தொடுவோம்!

9ஆம் ஆண்டு சிறப்பிதழ்

Published:Updated:
வானம் தொடுவோம்!
வானம் தொடுவோம்!
வானம் தொடுவோம்!
##~##
ருத்துவப் பட்டம் பெற்றுவிட்டபோதும், நம்முடைய புராண இதிகாசங்களை அலசி ஆராய்ந்து கட்டுரைகள் எழுதுவதோடு, சொற்பொழிவுகளும் ஆற்றி வருபவர் டாக்டர். தேவ்தத் பட்நாய்க். ஃபன்டலூன், பிக் பஸார் நிறுவனங்களை நடத்தும் ஃப்யூச்சர் குரூப்பில், முதன்மை நம்பிக்கை அதிகாரி. அதாவது,  சீஃப் பிலீஃப் ஆபீசர். தலைமையியல் தகுதிக்கான பயிற்சியை ஊழியர்களுக்கு அளித்து வருபவர். இதிகாச பாத்திரங்கள் மற்றும் மகாபாரதம் குறித்த சுமார் இருபது நூல்களின் ஆசிரியர். இவை உலகம் முழுக்கப் பரபரப்பாக விற்பனை ஆகின்றன.  

நவீன நிர்வாக இயலில் சிக்கல்களை விடுவிக்கும் சிந்தனைகளைத் தம் சொற்பொழிவுகளாலும், கட்டுரைகளாலும் பரப்பி வருபவர் தேவ்தத் பட்நாயக். 'விணீஸீணீரீமீனீமீஸீt விஹ்tலீஷீsமீ’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள், இங்கே தமிழில் இதழ்தோறும் உங்களுக்காக...

அவர், ஏழைப் பூசாரி. கடுமையான வறுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், ஒருநாள் கோயிலுக்குச் சென்று கடவுளின் திருமுன் நின்று பிரார்த்தித்தார். 'வறுமையில் இருந்து எனக்கு விடிவு கிடைக்காதா?’ என ஏக்கமும் தவிப்புமாக மனமுருகி வழிபட்டுவிட்டு, வீடு திரும்பினார்.

அன்று இரவு, அந்தப் பூசாரி வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு தங்கப் பானையை வைத்துச் சென்றார் கடவுள்.

விடிந்ததும் கொல்லைப்புறம் வந்த பூசாரி, தங்கப் பானையைக் கண்டார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பேரானந்தத்துடன் பானையை நெருங்கினார். அந்தப் பானை நிறையத் தண்ணீர் இருந்தது. அதை அப்படியே எடுத்து வெளியே கொட்டிய பூசாரி, பானையுடன் சந்தைக்குச் சென்றார். அங்கே, அதை நல்ல விலைக்கு விற்பனை செய்தார். கிடைத்த பணத்தில் தனது கடனையெல்லாம் அடைத்தார். வீட்டாருக்குத் தேவையான பரிசுப் பொருட்களுடன், பணக்காரராக வீடு திரும்பினார்.

வானம் தொடுவோம்!

சில நாட்களிலேயே அவரது குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றின. பெற்றோர், மனைவி, பிள்ளைகள்... என ஆளாளுக்கு பங்குத் தொகையைக் கேட்டு நச்சரிக்கத் தொடங்கினர். பிரச்னை நாளுக்கு நாள் வேர் விட்டு வளர்ந்து, வேறு வேறு கிளைப் பிரச்னைகளாகப் பரிணமித்தது!

அந்தப் பூசாரி மன நிம்மதி இல்லாமல் தவித்தார். திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை?! எனவே, மீண்டும் கடவுளின் சந்நிதானத்தைத் தேடி ஓடினார். 'அந்தத் தங்கப் பானையைத் தந்து, எனது பிரச்னைகளைத் தீர்த்து வைக்காமல் மேலும் அதிகமாக்கி, இப்போது எனது வாழ்வையே சிக்கலாக்கிவிட்டீரே..!'' என்று கடவுளிடம் குறைப்பட்டுக்கொண்டார்.

''தங்கப் பானையா... எந்த தங்கப் பானை?! ஓகோ... நீ அதைச் சொல்கிறாயா? அந்தப் பானையில் எதுவும் இல்லையா? அது காலியாகவா இருந்தது? அதில் இருந்ததை என்ன செய்தாய்?'' என்று கேட்டார் கடவுள்.

''அது... அதில் ஏதோ தண்ணீர் போன்று இருந்தது. அதைக் கொட்டிவிட்டு, தங்கப் பானையை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்றேன். ஏன் சுவாமி, நான் செய்தது தவறா?'' என்று கேட்டார் பூசாரி.

''அடடா! அவசரப்பட்டுவிட்டாயே! உனக்கும் உன் குடும்பத்துக்கும் தேவையான 'திருப்தி’ என்கிற அமிர்தத்தை அல்லவா அதில் நிறைத்துத் தந்தேன். அதை நீங்கள் யாருமே ஒரு சொட்டுக்கூடக் குடிக்கவில்லையா?'' என்றார் கடவுள்.

பூசாரி திகைத்துப் போனார்.

நாம் செய்யும் ஒவ்வொரு வேலையுமே 'திருப்தி’ என்ற அமிர்தம் நிறைந்த தங்கப் பாத்திரம்தான். நம் நிலுவைக் கணக்குகளுக்குப் பணம் கட்ட வழங்கப்படும் சம்பளம்தான் பாத்திரம். நமது விருப்பத்தைப் பூர்த்தி செய்து, நாம் முக்கியமானவர் என்ற நிலையைத் தரும் பதவிதான் பாத்திரம். ஆனால், ஒவ்வொரு பணியிலும் திறமையாகவும், உணர்வுபூர்வமாகவும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வழி வகை இருக்கிறது. ஒவ்வொரு பணிக்குள்ளும், நம்மை வளர்த்துக்கொள்ள ஒரு விதை அடங்கியிருக்கிறது. அதை நாம் வளரவிட்டால் போதும்.

துரதிர்ஷ்டவசமாக, பணிவாய்ப்புகள் எல்லாமே பொருளாதாரக் கண்ணோட்டத்தில் (பாத்திரமாக) மட்டுமே பிரதானமாகப் பார்க்கப்படுவதால், கற்றுக்கொள்ளும் வழிமுறைகள் (தண்ணீர்) நமக்கு முக்கியமானதாகப் படுவதில்லை. அதை அலட்சியப்படுத்திவிடுகிறோம்!

இந்த அணுகுமுறையை மாற்றிக்கொண்டால்... வளர்ச்சியில் நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் வானம் தொடலாம்!

- தொடரும்...