Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

Published:Updated:
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...

'ஏன் தாத்தா... மன்னார்குடிக்கா போறோம்? இந்த ரயில் அங்கேதான் போகுதா?'' - ரயிலில் ஏறியதும் ஏறாததுமாகக் கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கிவிட்டான் பேரன். 'ஆமாம்’ என்றார் தாத்தா, பலமாகக் கொட்டாவி விட்டுக்கொண்டே. 'அந்த  ஊர் எப்படியிருக்கும்’ என்கிற ஆவலில் பேரன் ஜன்னல் வழியே ஓடும் மரங் களையும், தந்திக் கம்பங்களையும் வேடிக்கை பார்த்தபடி வந்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சாவூரில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது மன்னார்குடி. காலையில் மன்னார் குடியில் இறங்கி, குளித்துவிட்டு, முதல் வேலையாகக் கோயிலுக்கு நடந்து வந்தார்கள் தாத்தாவும் பேரனும்!

##~##
''இந்த ஊருக்கு மன்னார்குடின்னு ஏன் பேரு வந்துச்சு தாத்தா?'' - தாத்தாவின் விரல் பிடித்து நடந்தபடியே கேட்டான் பேரன்.  

''கண்ணா... ஒருகாலத்துல இந்த ஊருக்கு ராஜமன்னார்குடின்னுதான் பேரு. ராஜமன்னார்ங்கறது பெருமாளோட பேரு. இங்கே இருக்கிற கோயில்ல ராஜமன்னார் என்கிற ராஜகோபால ஸ்வாமி அருள்பாலிக்கிறதால, ஊருக்கும் ராஜமன்னார்குடின்னு பேரு வந்துச்சு. அதுக்கும் முன்னால, ராஜமன்னார்கோயில்னுதான் இந்த ஊருக்கே பேரு. 300 வருஷத்துக்கு முன்னால, தஞ்சாவூரை நாயக்க மன்னர்கள் ஆட்சி செஞ்சு வந்தாங்கன்னு உன் சரித்திரப் பாடத்துல படிச்சிருக்கியா... நாயக்கர்கள் காலத்துலதான் மன்னார்குடின்னு பெயர் வந்ததாம்!''- விளக்கம் தந்தார் தாத்தா.    

'அப்படியா தாத்தா!’ என்று வியந்த பேரன், ''இந்தக் கோயிலுக்கும் ஊருக்கும் வேறென்ன சிறப்புகள் இருக்கு தாத்தா?'' என்று கேட்டான்.

''ஒரு கோயில்னா அங்கே மூர்த்தி அதாவது ஸ்வாமி, தலம் அதாவது அந்த க்ஷேத்திரம், அடுத்ததா அங்கேயுள்ள தீர்த்தம் - இந்த மூணுமே பெருமையாவும் சிறப்பாவும் இருக்கிறது பெரிய விஷயம்! அந்த வகையில தலம், தீர்த்தம், மூர்த்தம் மூணுலயும் சிறப்புப் பெற்றது மன்னார்குடி. அதுமட்டுமா? மகாபாரதத்துல பீஷ்மர்கிட்டே, செண்பகாரண்யமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தைப் பற்றி புலஸ்தியர் தெரிவிச்சிருக்கார். ஒரே ஒரு நாள் ராத்திரி, இந்தத் தலத்தில் தங்கினாலே போதும்... ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலன்கள் கிடைக்குமாம்!'' என்றார் தாத்தா.

''செண்பகாரண்யம்னா என்ன தாத்தா?''

''அது வேறொண்ணுமில்லை... செண்பக மலர்கள் சூழ்ந்த வனம்னு அர்த்தம்!'' என்று தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும்போதே கோயில் வாசலுக்கு வந்துவிட்டார்கள் இரண்டு பேரும். செண்பகாரண்யம், வண்துவராபதி, தட்சிண துவாரகை, வாசுதேவபுரி, ஸ்வயம்வக்த க்ஷேத்திரம் (தானே தோன்றியது) என்றெல்லாம் புகழப்படும் கோயிலை நினைத்து வியந்தபடி பேரனை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் தாத்தா.

கதை கேளு... கதை கேளு...

''காவிரிக் கரையில இருக்கிற தலங்கள் எல்லாமே சிறப்பு வாய்ந்தவைதான் கண்ணா! திருக்குடந்தை எனப்படும் கும்பகோணத்தில், காவிரிக்கரைக்கு அருகில், ஹேமபுஷ்கரணிங்கற தீர்த்தம்- அதாவது குளம் இருந்துது. அதற்குத் தென் கிழக்கே செண்பகவனம் இருந்தது. அந்த வனத்தில் ஆயிரத்தெட்டு முனிவர்கள் தவமிருந்தாங்க. அவங்கள்ல, வஹ்னிமுகர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவருக்கு கோபிலர், கோப்பிரளயர்னு ரெண்டு பசங்க. தவத்துலயும் பக்தியிலயும் ரொம்பச் சிறந்தவங்களா இருந்தாங்க, அவங்க! ஐந்தீ எனப்படும் பஞ்சாக்னிக்கு மத்தியில், 'ஓம் நமோ நாராயண நம:’ங்கற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்லி, ஒற்றைக் கால்ல நின்னு, பெருமாளை நினைச்சு தவமிருந்தாங்க!

இவங்களோட தவத்துல மகிழ்ந்துபோன பெருமாள் அவங்களுக்குக் காட்சி தந்தார். 'என்ன வரம் வேணும்?’னு கேட்டார். பெருமாளைத் தரிசனம் பண்ணினதுலயே திருப்தியும் பரவசமுமா ஆகிட்டவங்களுக்கு வேறென்ன வேணும்?! 'எங்களுக்கு மோட்சம்தான் வேணும். எப்போதும் உன் திருவடியிலயே இருக்கணும்’னு கேட்டாங்க.

'அவ்வளவுதானே... துவாரகையில இருக்கிற கண்ணபிரானைத் தரிசனம் பண்ணிக் கேளுங்க. நிச்சயம் மோட்சம் கிடைக்கும்’னு அருளினார்'' என்று சொல்லிவிட்டு, கையில் கொண்டு வந்திருந்த பாட்டிலைத் திறந்து இரண்டு மிடறு தண்ணீரைக் குடித்தார் தாத்தா.

''ம்... அப்புறமா அவங்க ரெண்டு பேரும் துவாரகை போனாங்களா தாத்தா?'' என்றான் பேரன்.

கதை கேளு... கதை கேளு...

''ஆமாம்... ரெண்டு பேரும் துவாரகையை நோக்கிப் போயிட்டிருந்தாங்க. வழியில புண்ணிய நதிகள்ல நீராடி, அங்கேயிருந்த திருமாலின் அழகான ஸ்தலங்களைத் தரிசனம் பண்ணிட்டே போனாங்க! போற வழியில், எதிர்ல நாரத முனிவர் வந்தார். அவர்கிட்டே, 'நாங்க துவாரகைக்குப் போயிட்டிருக்கோம். அங்கே போய் கண்ணபிரானைத் தரிசிக்கப் போறோம்’னாங்க. அதைக் கேட்டதும் நாரதர், 'அடடா! அங்கே கண்ணன் இல்லையே! கம்சன் முதலான தீயவர்களை அழித்து, விதுரன் முதலான நல்லோரைக் காத்து, திரும்பவும் அவர் திருமாலாக வைகுண்டத் துக்கே போய்விட்டாரே!’ன்னு சொன்னார். அவ்வளவுதான்... சகோதரர்கள் ரெண்டு பேரும் அந்த ஏமாற்றம் தாங்காமல் மூர்ச்சையாயிட் டாங்க'' என்று சொல்லி நிறுத்தியவர், உள்ளே கோபுரம் கொடிமரத்தை வணங்கி, கருடாழ்வாரைக் கடந்து, மகா மண்டபத்தின் வழியே பேரனை அழைத்துச் சென்றார்.

''அப்புறம் என்னாச்சு தாத்தா?'' என்று பேரன் கேள்வியால் கொக்கி போட... தாத்தா தொடர்ந் தார்:  ''மூர்ச்சையான ரெண்டு பேரையும் எழுப்பி, 'உங்கள் பக்தி அளப்பரியது. நீங்க துவாரகைக்கும் நந்தகோகுலத்துக்கும் சென்று அந்தத் தலங்களைத் தரிசனம் பண்ணுங்க. அப்புறம் சோழ வள நாட்டில், குடந்தைக்குத் தெற்கே உள்ள செண்பகாரண்யத்துக்குச் சென்று தவம் இருங்க. 'ஓம் நமோ பகவதயே வாஸு தேவாய’ எனும் மந்திரத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன். அதை இடைவிடாது சொல்லிக்கிட்டுருங்க’ன்னு அந்த மந்திரத்தையும் உபதேசிச்சுட்டுப் போனார் நாரதர்.

அதன்படி, கோபிலரும் கோப்பிரளயரும் துவாரகையெல்லாம் போய் தரிசித்தார்கள். அப்புறம், இங்கே கும்பகோணம் பக்கத்துல இருக்கிற இந்தத் தலத்துக்கு வந்தாங்க. 'பெருமாளே... ஸ்ரீகிருஷ்ண லீலைகளை எங்களுக்குக் காட்டியருளணும்’னு பிரார்த்திச் சாங்க. பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருப்பானா கோவிந்தன்? ஸ்ரீகிருஷ்ண லீலை களைக் காட்டினான்!'' என்று தாத்தா சொல்லிவிட்டு, ''இனி ஸ்வாமி தரிசனம் பண்ணின பிறகுதான் அடுத்த கேள்விக்கு வாயைத் திறக்கணும், சரியா?'' என்று பேரனின் கையை இன்னும் கெட்டியாகப் பிடித்தபடி, சந்நிதி சந்நிதியாக வலம் வந்தார். அப்படியே பிரசாதங்களைப் பெற்றுக்

கொண்டு, மண்டபத்தில் அமர்ந்து பேரனுக்குக் கொடுத்தவர், ''இப்ப நீ என்ன கேக்கறியோ கேளு!'' என்றார். முகம் மலர்ந்தான் பேரன்.

''ஸ்ரீகிருஷ்ண லீலைகளைக் காட்டினார்னு சொன்னீங்களே... அது என்ன லீலைகள் தாத்தா?''னு கேட்டான் பேரன்.      

''சொல்றேன். ஸ்ரீகிருஷ்ணன் முதல்ல, பரவாசு தேவனா காட்சி தந்தார். அவன்தானே மூலப் பரம்பொருள்! அடுத்து ஸ்ரீகிருஷ்ணாவதார வைபவம். அப்புறம், பூதனை வதம், தாய் யசோதையின் மடியில் படுத்து பால் அருந்துதல், சாயக் கொண்டையுடன் அழகு மாயன் தவழ்ந்து விளையாடல், நவநீத நாட்டியம், ஆநிரை மேய்த்தல், வெண்ணெய்க் களவு, புன்னைமரக் கண்ணன், ஸ்ரீவேணுகோபாலன், உரலில் கட்டுண்டது, மாடு மேய்க்கையில் கோலைக் கீழே ஊன்றி, அதன்மேல் திருத்தலையை வைத்துக் காட்டியது, கலமும் கயிறும் கொண்டு பால் கறந்தது, கபித்த வத்ஸாஸரர்கள் வதம், ஸ்ரீகாளிங்க நர்த்தனம், பெண்களின் மஞ்சளழச்சை தன் திருமேனியில் காட்டியருளல், சங்கு, சக்கரம், கதை, வில் கொண்ட கோலம், குரவைக் கூத்து, இடையருக்கு அவதாரம் காட்டி அருளியது, கோவர்த்தனகிரி தூக்கி வருதல், இடையர்களுடன் அமுது உண்ணல், பாரிஜாத அபஹரணம், கோபிகா லீலை, கிருஷ்ண துலாபாரம், குவலாய பீடம் எனும் யானையை வதம் செய்தல், முஷ்டீக - காணுர வதம், தேணுகாசுர வதம், கம்ச வதம், திரௌபதியின் மானம் காத்தல், பாண்டவர்களுக் காகத் தூது செல்லல், கீதோபதேசம்னு அத்தனை கோலங்களையும் காட்டினார் கிருஷ்ணர். முக்கியமா, இன்னொரு அழகுக் கோலத்தையும் காட்டினார். அது என்ன கோலம் தெரியுமா?'' என்று சொல்லி விட்டு, பேரனைப் பார்க்க... அங்கே உத்ஸவரின் அற்புதத் தரிசனம்.

இருவரும் மெய்ம்மறந்து தரிசித்தனர்!

- தரிசிப்போம்
படங்கள்:  ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism