பிரீமியம் ஸ்டோரி
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
##~##
டலுக்குச் செய்யப்படுகிற மசாஜ் பயிற்சிகளைப் பற்றிப் பார்த்தோம்; நினைவு இருக்கிறதுதானே?!

மல்லாக்கப் படுத்துக்கொண்டு, வயிற்றுப் பகுதியை உள்ளங்கை கொண்டு அழுத்திவிட்டோம். நுரையீரல் இருக்கும் மார்புப் பகுதியில் கை வைத்து, மென்மையாக மசாஜ் செய்தோம். காது துவாரங்களில், கைவைத்து அடைத்துக்கொண்டு, காது மடல்களை மெள்ள வருடிவிட்டோம். நெற்றிப் பொட்டின் இரண்டு பக்கங்களிலும் கட்டை விரலை வைத்து, அப்படியே மசாஜ் செய்துவிட்டோம்.

அடுத்து, கைகளை கண்கள் மீது வைத்துக்கொண்டு, மூக்கின் இரண்டு பகுதிகளையும் சுண்டு விரல்களால் அழுத்திவிட்டோம்.  நிறைவாக, வலது உள்ளங்கையை முகத்தின் வலது பக்கவாட்டுப் பகுதியிலும், இடது உள்ளங்கையை முகத்தின் இடது பக்கவாட்டிலும் வைத்துக்கொண்டு, கீழிருந்து கன்னங்களை அப்படியே தேய்த்தபடி, மேலே சென்று பிறகு காதோரமாக மேலிருந்து கீழாக தேய்த்தபடி கைகளைக் கொண்டு வந்தோம்.

இந்த மசாஜ் பயிற்சிகளைச் செய்வதால், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில், ஜீவகாந்த ஓட்டம் சீராக இருக்கும். உள்ளுறுப்புகள் அனைத்தும் புத்துணர்ச்சியுடன் செயல்படத் துவங்கிவிடும்.

காதுப் பகுதிகளில் உள்ள இயக்கங்கள் சீராகிவிடும். காதில் வலி இருந்தாலோ, கேட்கும் திறனில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ அந்தக் குறைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி, கேட்கும் திறன் அதிகரிக்கத் துவங்கும்.

வாழ்க வளமுடன்!

முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். துரிதமாக அனைத்து இடங்களுக்கும் பரவும். முகம் பொலிவு பெறும். முகத்தில் தேஜஸ் படரும். மூளைக்குச் செல்லும் நரம்புகள் தூண்டப்பட்டு, செம்மையாக இயங்கத் துவங்கும்.

கண்களில் இருந்த எரிச்சல், நமைச்சல், அரிப்பு முதலானவை விலகும். ஒளி கூடி, பார்வைத் திறன் அதிகரிக்கும்.

ஆகவே, மனவளக் கலையின் முக்கியமான பயிற்சிகளில் ஒன்றான மசாஜ், நம் உடலையும் உள்ளத்தையும் மலர்ச்சிப்படுத்துகிற பயிற்சி என்பதைத் தெளிவுற உணருங்கள்.

அடுத்ததாக, அக்கு பிரஷர் எனும் பயிற்சி குறித்துப் பார்ப்போமா?

நம் உடலில், குறிப்பாக காலில் வலி வந்தால்... விந்தி விந்தி நடப்போம்; அல்லது ஊன்றுகோலின் உதவியுடனோ, நண்பர்கள் எவரின் தோள் மீதாவது கை வைத்தபடியோ மெள்ள மெள்ள நடந்துவிடுவோம். வீக்கமோ வலியோ வந்தால், கால்களைக் கீழே தொங்கவிடாமல், சின்ன ஸ்டூல் மேல் வைத்துக்கொண்டு வேலை செய்வோம். இரவில் ஒன்றுக்கு மூன்றாக தலையணைகளை வைத்துக்கொண்டு, அதன் மீது கால்களை வைத்துத் தூங்குவோம்.

அதேபோல், கைகளில் ஏதேனும் வலி வந்தால், அதிக எடை கொண்ட பொருட்களைத் தூக்கமாட்டோம். ஆனால், சின்னச் சின்ன வேலைகளை கொஞ்சம் வலியைப் பொறுத்துக்கொண்டு, பல்லைக் கடித்துத் தாங்கியபடி, சற்று இடைவெளிவிட்டேனும் செய்துவிடுவோம்.

ஆனால், நம் உடலில் வலி பொறுக்கமுடியாத முக்கியமான பகுதி எது தெரியுமா? கழுத்துப் பகுதிதான். அதிக நேரம் கழுத்தை இப்படியும் அப்படியும் வைத்துக்கொண்டு, கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தாலோ, தூங்கும்போது கழுத்தை  நம்மையும் அறியாமல் தாறுமாறாக வைத்திருந்தாலோ விண்ணென்று ஒரு வலி, கழுத்தைத் துளைத்து இம்சிக்கும். பேருந்து அல்லது ரயிலில் உட்கார்ந்தபடி தூங்கும்போது, கழுத்தை 'குண்டக்க மண்டக்க’ என்று வைத்திருப்பதாலும், கழுத்தில் வலி வந்து நோகடிக்கும். லேசாகக் கழுத்தைத் திருப்பினாலே, வலி சட்டென்று விஸ்வரூபம் எடுத்து நம்மை வதைத்து வறுத்தெடுக்கும்.

யாரேனும் நம் பெயர் சொல்லி அழைத்தால்கூட, சட்டென்று திரும்பமுடியாமல் தவிப்போம். மெள்ள அப்படியே உடலுடன் கழுத்தையும் சேர்த்து 'ரோபோ’ போல் திரும்பிப் பார்ப்போம்.

இந்தப் பிரச்னைகள் வராமல் தவிர்ப்பது எப்படி? முடியும். கவனமான சில பயிற்சிகளால், கழுத்துப் பகுதியில் உள்ள எலும்பு போன்றவற்றுக்கு பலம் சேர்க்கலாம். அப்படிப் பலம் சேர்ப்பதற்கு, அக்கு பிரஷர் என்கிற பயிற்சி பெரிதும் உதவுகிறது.

வாழ்க வளமுடன்!

முதலில், ஒரு விரிப்பின் மீது மல்லாந்த நிலையில் படுத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். இடது கைவிரல்கள், வலது காதுக்குப் பின்புறமாகச் சென்று, கழுத்துக்குப் பின்னால் மூன்றாவது கழுத்து எலும்புப் பகுதியில் தொடுவது போல் இருக்கட்டும்.

இப்போது, மூன்றாவது எலும்பில் ஆள்காட்டி விரலாலும் நடுவிரலாலும் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்தப் பயிற்சி முடியும் வரை, இடது கையையும் விரல்களையும் எடுக்கவே எடுக்காதீர்கள்.

அடுத்து, மார்புப் பள்ளத்துக்கு ஒரு அங்குல அளவில், அதாவது வயிற்றுக்கு மேல் பகுதியில், வலது கையின் ஆள்காட்டி விரலைப் பதித்துக்கொள்ளுங்கள். அதாவது ஆள்காட்டி விரல் கொண்டு 'காலிங் பெல்’ அழுத்துவது போன்ற பாவனையில் விரலை வைத்துக் கொள்ளுங்கள். மற்ற விரல்கள், உடலில் படாதபடி வைத்திருங்கள்.

வயிற்றுக்கு மேலே மார்புக்குக் கீழே ஆள்காட்டி விரலை வைத்திருக்க... அந்த இடத்தை நோக்கி அரை நிமிடம் மனத்தைச் செலுத்துங்கள். இங்கே ஒரு விஷயம்... தியானம் செய்வது போல் கண்களை மூடியபடி இருக்கிறீர்கள்தானே?!

இந்தப் பயிற்சி மிக மிக உயிர்ப்பான பயிற்சி. உடல் முழுமைக்கான மின்சார ஓட்டம் சீராக இயங்குகிறது. உடலில் அதுவரை இருந்த மின் ஓட்டத் தடை யாவும் நீங்கிவிடும். இருதய நோய் வராமல் தடுக்க வல்லது இந்தப் பயிற்சி. தவிர, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, கட்டுக்குள் கொண்டு வருகிற அற்புதமான பயிற்சி இது.

நரம்பு மண்டலத்தை ஒழுங்குப்படுத்தி, செவ்வனே இயங்கச் செய்யும் இந்தப் பயிற்சியை தினமும் செய்து வந்தால், 'கழுத்துக்கு வந்த கத்தி காணாமல் போச்சு’ என்பார்களே... அதுபோல், கழுத்தில் துவங்கி அனைத்து பாகங்களுக்கும் வந்திருக்கிற பிரச்னைகளும் ஓடிப் போய்விடும். இந்த அக்கு பிரஷர் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால், உடலின் எந்தப் பாகங்களிலும் எந்தச் சிக்கல்களும் சிடுக்குகளும் வரவே வராது!

அக்கு பிரஷர் பயிற்சியின் விவரம் இன்னும் இருக்கிறது.

அதற்கு முன்னதாக உங்கள் கழுத்துப் பகுதியையும் வயிற்றுக்கும் மார்புக்கும் இடைப்பட்ட பகுதியையும் ஆள்காட்டி விரலால் கொஞ்சம் தொட்டுப் பாருங்கள்; அழுத்திப் பாருங்கள்!

நம் உடலும் கிட்டத்தட்ட வீடு மாதிரிதான். 'காலிங் பெல்’ அழுத்தினால், வீட்டின் கதவு திறக்கப்படும். உடலில் சில இடங்களில் 'காலிங் பெல்’ போல் அழுத்தினால், அந்த பாகங்கள் கதவு திறந்தது போல் புத்துணர்ச்சியாகும்; சுறுசுறுப்பையும் உத்வேகத்தையும் 'வருக, வருக’ என வரவேற்கும்!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு