பிரீமியம் ஸ்டோரி
வானம் தொடுவோம்!
வானம் தொடுவோம்!
##~##
ஜை
ன மதப் புராணங்களில் 'சக்ரவர்த்தி’ என்று குறிப்பிட்டால், அவர் உலகுக்கே சக்ரவர்த்தி என்று பொருள். சக்கரம் வட்ட வடிவமானது. அது, தொடுவானத்தை நாம் நடுவில் நின்று பார்ப்பது மாதிரி இருக்கும். தொலைதூரம் தெரியும். அதுபோல, ஒரு சக்ரவர்த்தி தனது கண்களுக்கு எட்டியவரை உள்ள எல்லாவற்றுக்குமே அதிபதியானவர்!

உலகின் சக்ரவர்த்தியாக மன்னன் ரிஷபனின் மூத்த மகன் பரதன் நியமிக்கப்பட்டபோது, தனது எல்லா சகோதரர்களும் தன்னை வந்து வணங்கவேண்டும் என்று வற்புறுத்தினான். 'அவனை வணங்குவதைவிட, இந்த ராஜ்யத்தைத் துறந்து துறவு மேற்கொள்வதே மேலானது’ என்று முடிவு எடுத்தார்கள், மானம் மிக்க அந்த சகோதரர்கள். ஆனால், ஒரே ஒரு சகோதரன் மட்டும் அண்ணனை வணங்கவும் இல்லை; ராஜ்யத்தைத் துறக்கவும் இல்லை. அவன்தான் ரிஷபனின் இரண்டாவது மகன் பஹுபலி.

இதனால் கோபம் கொண்ட பரதன், தம்பியான பஹுபலி மீது போர் தொடுத்தான். அநாவசியமாக பலர் ரத்தம் சிந்துவதைத் தவிர்க்க, பெரியவர்கள் ஒன்று கூடி, அவர்கள் இருவரும் நேரடியாக மோதி, தங்கள் பலத்தைக் காட்டிக்கொள்ளட்டும் என்றனர்.

பரதனைவிட பஹுபலி பலசாலி. இருவரும் பலமாக மோதிக்கொண்டார்கள். ஒருகட்டத்தில், பஹுபலி கையை உயர்த்தி பரதனைத் தலையில் தாக்குவதற்கான வாகான சந்தர்ப்பம் வாய்த்தது. ஆனால், பஹுபலிக்குத் தன் மூத்த சகோதரனைத் தாக்க மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. அதனால், உயரே தூக்கிய தன் கைகளால் தன் தலைமுடியைப் பிய்த்து எடுக்கத் தொடங்கினான். 'அண்ணனுடன் மோதி ஜெயிக்க எனக்கு விருப்பம் இல்லை. நான் துறவியாகப் போக விரும்புகிறேன்’ என்பதை அவ்வாறு செய்கையால் வெளிப்படுத்தினான்.

அவ்வாறே, பஹுபலி தன் இளைய சகோதரர்களுக்குப் பின்னர் துறவு பூண்டதால், அவன் இளைய துறவியாகப் போய்விட்டான். ஏற்கெனவே துறவு பூண்ட அவனுடைய இளைய சகோதரர்கள், அவனுக்கு மூத்தவர்களாகிவிட்டார்கள். அதனால், மூத்த துறவிகளான அவர்களை அவன் வணங்க வேண்டியதாயிற்று.

உண்மையில், இளைய சகோதரர்கள்தானே மூத்தவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும்? ஆனால், துறவு மார்க்கத்தில் - சந்நியாச தர்மத்தில் மூத்தவர்களுக்கு மதிப்பளிப்பதுதான் முறையாக இருந்தது. இது, பஹுபலிக்கு மிகவும் நெருடலாகத் தெரிந்தது.

வானம் தொடுவோம்!

ஆக, பஹுபலி துறவியாகிவிட்டதால், அவன் அதிகாரம் செய்யும் ஆசையையும் விட்டுவிடவேண்டும்; அதே நேரம், இளைய சகோதரர்களை வணங்கி நிற்பதிலும் அவனுக்கு விருப்பமில்லை என்கிற இரண்டுங்கெட்டான் நிலை.

இதுதான் நிறுவனங்களில் இன்று நடக்கிறது. விதிகள் நேர்மையாக, நியாயமாக உருவாக்கப்படுகின்றன. முறையாக விவாதிக்கப்பட்டு, ஒருமனதாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நிறுவனத்தின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அனைவரும் ஒரு குழுவாகச் சேர்ந்து பணிகளைச் செய்து, குறிக்கோளை அடைய வேண்டும். ஆனால், அந்த விதிமுறைகளை அனுசரிப்பதில் குறுக்கீடுகள் வருகின்றன. ஒரு சிலரே அதிகாரக் கட்டமைப்பை மதித்து, நியாயமாக நடந்து கொள்கின்றனர். பலர், இதன் நடைமுறை விதிகளை அனுசரித்து நடந்துகொள்வதில் சிரமப்படுகிறார்கள்.  

போதுமான சம்பளமோ, சம்பள உயர்வோ கொடுத்தபோதிலும், அது அவர்களைச் சமாதானம் அடையச் செய்வதில்லை. தங்களை இன்னும் ஊக்கமளித்து இருக்கவேண்டும் என்று குறை சொல்கிறார்கள். நம்முடைய மிருக ஆசைதான் அதிகார பலத்தைப் பிரயோகிக்கத் தூண்டுகிறது. அதேநேரம், நம்மை யாரும் அதிகாரம் செய்ய அனுமதிப்பதில்லை.

இந்தக் காட்சியைப் பாருங்கள்... ராகுல் துணை மேலாளராக ஒரு கப்பல் நிறுவனத்தில் சேர்ந்தான். ராஜுவும் நந்தாவும் அவனுக்கு உதவியாளர்களாக இருந்தார்கள். அவனுக்கு 'ரிப்போர்ட்’ செய்தார்கள். ஆனால், இருவரும் ராகுலை விடப் பல வருடங்கள் சீனியர். தங்களுடைய பணியைப் பற்றிய செயல்பாட்டு அறிக்கையில் ராகுல் கையெழுத்துப் போடுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதில் என்ன  பிரச்னை என்று ராகுலுக்கு முதலில் புரியவில்லை. ஒரு நிறுவனம் என்றால் விதிமுறைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை அவன் வலியுறுத்தினான்.

ஆனால், பின்னர் பஹுபலியைப் போலவே ராகுலும் உணர்ந்தான். முதலாளியின் மகன் முரளி பதவி ஏற்றுக்கொண்டபோது, அவனுக்கு ராகுல் 'ரிப்போர்ட்’ செய்ய வேண்டியிருந்தது. ராகுல் சீனியர்; அதே நேரம், தன் எஜமானின் மகன் தன்னைவிடத் திறமையிலும் தகுதியிலும் குறைந்தவன் என்பதால், அவனுக்குக் கீழ்ப்படியத் தயங்கினான் ராகுல்.

சக்கரம் சுழல்கிறது! எல்லோருமே அதிகாரம் செய்வதில் உள்ள மேல்- கீழ் படிகளை எண்ணிச் சிரமப்படத்தான் செய்கிறார்கள். பிறரை அதிகாரம் செய்வதற்கும், தாங்களே கீழ்ப்படிவதற்கும் இடையே சிக்கிக்கொண்டு விழிபிதுங்க விழிக்கிறார்கள்.

அப்படியென்றால், இவர்களுக்கு பரதனும் பஹுபலியும்தானே முன்னோடிகள்?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு