Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

பிரீமியம் ஸ்டோரி
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...
##~##
மு
த்துநகர் எனப் போற்றப்படும் தூத்துக்குடி யில் அமைந்துள்ள ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீசங்கரராமேஸ்வரர் கோயிலில்அற்புதத் தரிசனம் கிடைத்தது தாத்தாவுக்கும் பேரனுக்கும்!

''தாத்தா... ஸ்வாமிக்கு சங்கரராமேஸ்வரர்னு பேர் எதனால வந்துச்சு தாத்தா?'' என்று பேரன் கேட்டுவிட்டு, பதிலுக்காக தாத்தாவின் முகத்தையே ஆவலோடு ஊடுருவிப் பார்த்தான்.

''திருமந்திர நகர்னு ஒரு ஊர். எது தெரியுமா?

தூத்துக்குடிதான்! இதைச் சங்கரராம பாண்டியன்னு ஒரு மன்னன் ஆட்சி பண்ணிட்டிருந்தான். சிற்றரசன்தான். ஆனாலும், சிவபக்தியில உசந்தவனா இருந்தான். அவன் மனைவியும் மிகச் சிறந்த சிவபக்தை. ஆனாலும், மன்னனுக்கும் மகாராணிக்கும் ஒரேயரு குறை... குலம் தழைக்கவும் மனை சிறக்கவும் கொஞ்சி விளையாடவும் குழந்தை இல்லையேங்கறதுதான் மிகப் பெரிய வருத்தம்!

'இது எந்த ஜென்மத்து சாபமோ? வினைப் பயனோ?’ன்னு ரெண்டு பேரும் புலம்பாத நாளில்லை; போகாத கோயில் இல்லை. அப்படித்தான் ஒருமுறை பெரியவங்க வழிகாட்டுதல்படி, மன்னனும் மகாராணியும் காசிக்குப் போனாங்க. அங்கே கங்கையில குளிக்கறபோது... 'திருமந்திர நகர்ல இருக்கிற வாஞ்சா புஷ்கரணியில நீராடி, புத்திர காமேஷ்டி யாகம் பண்ணு! புஷ்கரணிக் கரையில் தோன்றும் சிவலிங்கத்தை வழிபட்டு வா! புத்திர பாக்கியம் கிட்டும்’னு அசரீரி கேட்டுதாம்!

உடனே ஊருக்குத் திரும்பி, திருமந்திர நகர் புஷ்கரணில நீராடிட்டு கரைக்கு வந்தா, அங்கே திருநீற்றுப் பை ஒண்ணு இருந்துது. அந்தப் பையை எடுத்து, விபூதியை எடுத்து நெத்தியில பூசிக்கும் போது திரும்பவும் ஒரு அசரீரி... 'இங்கே தென்படும் சிவலிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்புவாயாக!’ன்னு கேட்டுது.   அதன்படி, கிழக்குப் பார்த்தபடி சிவலிங்கத்தையும், தெற்குப் பார்த்தபடி அம்பாளையும் பிரதிஷ்டை செய்து, பிரமாண்டமா கோயில் கட்டினான் மன்னன். சங்கரராம பாண்டியன் கட்டிய கோயிலில் குடியிருக்கும் இறைவனுக்கும் ஸ்ரீசங்கர ராமேஸ்வரர்னு திருநாமம் அமைஞ்சுது. அதற்கு அடுத்த வருஷம்... மகாராணிக்கு அழகிய ஆண் குழந்தை ஒண்ணு பிறந்ததுன்னு சொல்லுது கோயில் வரலாறு.

கதை கேளு... கதை கேளு...

இன்னிக்கும் குழந்தை வரம் கேட்டு எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வந்துட்டே இருக்காங்க. அப்படிப் பிறந்த குழந்தைகளுக்கு சங்கரராமன், சங்கரபாகம், சங்கரி, சங்கரேஸ்வரி, பாகம்பிரியாள்னு பேர் வைக்கிறாங்களாம். கோயில்ல இருக்கிற ராஜுபட்டரும் செல்வம்பட்டரும் சொல்ற தகவல் இது.  

பிள்ளை பாக்கியம் கேட்டு வரும் பெண்கள், அம்பாளுக்கு மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்வாங்க. இங்கே வந்து மஞ்சளை அவங்களே இடிச்சு, தூளாக்கித் தருவாங்க. மஞ்சள் மிக உன்னதமான கிருமி நாசினி, உனக்குத் தெரியும்தானே?!'' என்று ஆர்வத்துடன் கேட்டார் தாத்தா.

''ஆமா தாத்தா! என் பாடப் புஸ்தகத்துல கூட வந்திருக்கு!'' என்றான் பேரன், கண்கள் பிரகாசிக்க.  

''பாடம்னவுடனே ஞாபகம் வருது... கோயிலுக்குப் பக்கத்துல வேத பாடசாலை இருக்கு பார்த்தியா? சிவபெருமானோட தோழர் ஆலால சுந்தரர் பேர்ல, 'ஆலால சுந்தர வேத சிவாகம வித்யாலயம்’னு பாட சாலைக்கு அழகா பேர் வைச்சிருக்காங்க. கோயில் அர்ச்சகர்கள் ராஜு பட்டரும், செல்வம் பட்டரும்தான் இந்தப் பாடசாலையைப் பாத்துக்கறாங்க. அந்தக் கால வேதத்துலேர்ந்து இந்தக் காலத்துக்குத் தேவையான கம்ப்யூட்டர் வரைக்கும் எல்லாமே கத்துக் கொடுக்கறாங்க!'' என்றார் தாத்தா.

''இதான் வாஞ்சா புஷ்கரணியா தாத்தா? இதுல இப்ப குளிக்க முடியாது போலிருக்கே?'' என்றான் பேரன்.

''ஆமாம்! இதைக் கொஞ்சம் சீரமைக்கணும். அந்த நிலைமைலதான் இருக்கு. பக்தர்கள் மனசு வைச்சா, சீக்கிரமே இதைச் சீரமைச்சுட லாம்!'' என்று ஒரு பெருமூச்சுடன் சொன்னார் தாத்தா.

''அம்பாள் பத்தி சொல்லுங்க தாத்தா?'' என்றான் பேரன்.

''திருமந்திர நகர்ல புலவர் ஒருத்தர் இருந்தார். முருகப்பெருமான் மேல கொண்ட பக்தியில, நிறையப் பாடல்கள் பாடியிருக்கார். அவர் பேர் சங்கரமூர்த்தி. ஆனாலும், மக்கள் எல்லாரும் அவரை வீரபாண்டிப் புலவர்னுதான் கூப்பிட்டாங்க.

ஒருநாள், அபிபக்தாம்பிகைங்கற பாகம்பிரி யாள், இந்தப் புலவரோட கனவுல வந்தா. 'என் பிள்ளையைப் பாடுவதுபோல், என்னையும் பாடேன்’னு கேட்க, நெக்குருகிப் போயிட்டார் புலவர். அம்பாளைப் பத்திப் பிள்ளைத் தமிழ் பாடினார். இன்னிக்கும் கோயில்ல அவர் பாடல்களைத்தான் பாடுறாங்க! தமிழ்ல இருக்கிற 96 சிற்றிலக்கியங்கள்ல இதுவும் ஒண்ணு.

சித்திரை- தேர்த் திருவிழா, பிரம்மோத்ஸவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசியில் திருக்கல்யாணம்னு விழாக்களுக்குப் பஞ்சமே இல்லை. வழிபாட்டுக் குழுவினர் மாசாமாசம் பௌர்ணமியில் 108 மாவிளக்கேத்தியும், சித்ரா பௌர்ணமியில் 504 மாவிளக்கேத்தியும் வழிபடுறாங்க! அம்பாளுக்கு புஷ்பப் பாவாடை, ஆயிரத்தெட்டு அர்ச்சனைன்னு அமர்க்களப்படும், அன்னிக்கி!'' என்ற தாத்தா, ''இந்தக் கோயிலோட இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? சைவ- வைணவ ஒற்றுமையை வலியுறுத்துற அற்புதமான கோயில் இது! இந்தச் சிவாலயத்தை ஒட்டியே ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலும் இருக்கு. அங்கே போலாமா?’ என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திருக்காமல், பேரனின் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டார்.

- தரிசிப்போம்
படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு