Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

Published:Updated:
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...

சிவகங்கைச் சீமை என்றும் செட்டிநாடு என்றும் போற்றிப் புகழப்படும் ஊர்களில், காரைக்குடியும் ஒன்று. இந்த ஊரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி. தாத்தாவும் பேரனும், ஸ்வாமி தரிசனத்துக்காக இந்த முறை வந்தது, இங்கேதான்!

''மயூர நகரம், அரச வனம், கண்ணபுரம் (கிருஷ்ண நகரம்), மயூரகிரி, சிகண்டி மலை, சிகிமலை, குன்றை நகர், குன்றைன்னு பல பெயர்கள் இருந்தாலும் குன்றக்குடிங்கறதுதான் எல்லாராலயும் சொல்ற பெயரா அமைஞ்சிருக்கு'' என்றார் தாத்தா.

உடனே பேரன், ''அது ஏன் தாத்தா, மயூரம்... மயூரம்னு நிறைய பேர் இந்த ஊருக்கு?'' என்று கேட்டான்.

''முருகப் பெருமானோட வாகனமான மயில், தனக்கு நேர்ந்த சாபத்தால், இந்த மலைக்கு வந்து தவம் இருந்தது. ஒரு கட்டத்துல, இந்த மலையே மயிலின் வடிவத்துக்கு மாறிடுச்சாம். அப்படி மயில் வந்து தவம் செஞ்சு, சாப நிவர்த்தி அடைஞ்சதால, மயூரகிரி, மயூர நகரம் என்றெல்லாம் இந்த மலைக்கும் ஊருக்கும் பெயர் அமைஞ்சதா சொல்லுது ஸ்தல புராணம்! சிகின்னா சம்ஸ்கிருதத்துல மயில்னு அர்த்தம், தெரிஞ்சுக்கோ'' என்று விளக்கம் கொடுத்தார் தாத்தா.

##~##
''சரி தாத்தா... மயில் கதை சொன்னீங்க சரி. கண்ணபுரம்னு இந்த ஊருக்குப் பேர் இருந்ததாவும் சொல்றீங்க. கண்ண பரமாத்மாவுக்கும் இந்தத் தலத்துக்கும் என்ன சம்பந்தம்?'' என்று கேட்டுவிட்டு தாத்தாவையே ஊடுருவிப் பார்த்தான் பேரன்.

''இங்கே எழுந்தருளிய முருகப்பெருமான் மீது பேரன்பு கொண்ட கண்ணபிரான், 'இந்தத் தலத்துக்குச் சென்று, கந்தகுமாரனை வணங்குங்கள்’னு பாண்டவர்கள்கிட்ட அறிவுறுத்தினார். அதன்படி அவங்க வழிபட்டதால, கண்ணபுரம், கிருஷ்ண நகரம்னு பேரு அமைந்துச்சு!

அதுமட்டுமா? திருக்கயிலாயத்தில் முருகப்பெருமானுக்கு அழகிய மயில் ஒன்றை வாகனமாகத் தந்தார் சிவபெருமான். அப்போது, நான்முகன் பிரம்மாவும் திருமாலும் தேவர்களும் அங்கே இருந்தாங்க. திருமாலிடமும் பிரம்மாவிடமும் மயில் அபசாரப்பட்டதாம். இதனால் கோபமான முருகக் கடவுள், மலையாகக் கடவதுன்னு மயிலை சபிச்சார்.

அதன்படி, அரச வனமா இருந்த இடத்துக்கு வந்த மயில், மலையே உருவெனக் கொண்டு நின்றது. இங்கே, சதாசர்வ காலமும் முருகக் கடவுளை நினைச்சபடியே, கடும் தவத்தில் இருந்தது மயில். இதில் மகிழ்ந்த கந்தக் கடவுள், விமோசனம் தந்து அருளினார். வடக்கு நோக்கிய முகமும் தெற்கு நோக்கிய தோகையுமாக, மலை வடிவில் நிற்கிறது மயில்.

கதை கேளு... கதை கேளு...

அப்புறம்... 'இங்கே என் குற்றம் குறைகளைப் பொறுத்துக் கொண்டு, எனக்கு அருளியது போல, இங்கு எல்லோருக்கும் அருள்புரியணும்’ என மயில் வேண்டுகோள் விடுக்க... 'அப்படியே ஆகட்டும்’னு சம்மதம் தெரிவிச்ச கந்தபிரான்... இங்கே கோயில் கொண்டார்'' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஆலயத்துக்கு அருகில் வந்துவிட்டனர் இரண்டு பேரும்!  

அழகிய குன்றின் மீது இருக்கும் குமரனைக் காண, மலைப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது, அந்த சின்னஞ்சிறிய குன்றக்குடி கிராமம், அவ்வளவு அழகுடன் திகழ்ந்தது.

உள்ளே சென்று, சந்நிதிக்கு அருகில் நின்றதும் தாத்தாவுக்கும் பேரனுக்கும் பேச்சே வரவில்லை. ஆறு திருமுகங்களுடனும் பன்னிரு திருக்கரங்களுடனும் அழகு ததும்பக் காட்சி தந்த ஸ்ரீசண்முகநாதனைப் பார்த்து மெய்ம்மறந்து நின்றனர்.

''செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்மலைக் கந்தன், குன்றை முருகன், தேனாறு உடையான், நேமநாடுடை வள்ளல் என்று கந்தபெருமானுக்குத்தான் இங்கே எத்தனை திருநாமங்கள்! மலையின் கீழே ஒரு கோயில். அங்கே சுயம்பு மூர்த்தமா இருக்கார் ஸ்வாமி. அவருக்குத்தான் தேனாற்றுநாதர்னு பெயராம்! தேனாற்றங்கரையில இருக்கறதால, அவருக்குத் தேனாற்றுத் திருநாதர்னு பெயர்.அகத்தியர் இங்கு வந்து வழிபட்டிருக்கார்.

இன்னொரு சிறப்பான விஷயம்... மலையடி வாரத்துல நான்கு குடைவரைக் கோயில்கள் இருக்கு. மேற்கில் இருந்து கிழக்காக, ஸ்ரீசுந்த ரேஸ்வரர், ஸ்ரீஅண்ணாமலையார், ஸ்ரீமலைக் கொழுந்தீஸ்வரர், ஸ்ரீசண்டேஸ்வரர்னு நாலு கோயில்கள். மலையில, அழகு கொஞ்சும் ஸ்ரீசண்முக நாதர் கோயில். மயிலை விட்டு இறங்கி வந்து, நமக்கு அருள் பாலிக்கிற பாவனையில இருக்கற அழகே அழகு! வலப்பக்கத்துல ஸ்ரீவள்ளியும் இடதுபக்கத்துல ஸ்ரீதெய்வானையும் கொள்ளை அழகுல தரிசனம் தர்றாங்க.

எல்லாக் கோயில்களிலும், மயில்ல முருகக் கடவுள் உட்கார்ந்திருக்க... வள்ளியும் தெய்வா னையும் நின்னுக்கிட்டிருப்பாங்க. இல்லேன்னா, அவரோடயே மயில்ல உக்கார்ந்தபடி தரிசனம் தருவாங்க. ஆனா, இந்தத் தலத்துல பார்த்தியா? மூணு பேரும் தனித் தனி மயில்ல உக்கார்ந்திருக்காங்க! குன்றக்குடி தலத்தின் தனிச்சிறப்பு இது!'' என தலத்தைப் பற்றி விவரித்துக் கொண்டே பிராகார வலம் வந்தார் தாத்தா. சொல்லி முடித்ததும் சஷ்டி கவசத்தை முணுமுணுக்கத் துவங்கினான் பேரன்!

தாத்தாவும் கந்த சஷ்டியைச் சொன்னபடியே பிராகார வலம் வந்தார்.

- தரிசிப்போம்
படங்கள் : எஸ்.சாய்தர்மராஜ்