பிரீமியம் ஸ்டோரி
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் ஒருவர் நற்பெயர் எடுப்பதற்கு இரண்டு விஷயங்கள் நன்றாக இருக்க வேண்டும்.  அவை... உடல் மற்றும் மனம்!

உடலும் மனமும் சிறப்புற இருந்தால்தான், நம் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். உடல் சுறுசுறுப்பாக இருந்து மனம் சோர்வுற்றாலோ அல்லது மனம் விழிப்பு உணர்வுடன் இருந்து உடல் சோர்வாக இருந்தாலோ, நமது செயல்பாடுகள் சிறப்பாக அமையாமல் போவதோடு, நற்பெயர் எடுப்பதும் கடினமாகிவிடும்!

'வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் - அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?’ என்று கவியரசு கண்ணதாசன் அழகாகச் சொல்லியிருப்பார் ஒரு பாடலில்! இது, இல்லற வாழ்க்கைக்கு மட்டுமின்றி, நம் தேக ஓட்டத்துக்கும் ரொம்பவே பொருந்தும். உடல் ஒரு சக்கரம்; மனம் ஒரு சக்கரம். இந்தச் சக்கரத்தின் அளவு மற்றும் செயல்பாடுகள் எதில் குறைந்தாலும், அது நிறைவு தராது; நிம்மதியைக் கொடுக்காது; சீராக இயங்கும் நிலையில் இருக்காது; சிறப்பு சேர்க்காது!

அதற்காகத்தான் இந்த மனவளக் கலைப் பயிற்சியில் மனத்துக்கு மட்டுமின்றி உடலுக்குமான பயிற்சிகளையும் சேர்த்திருக்கிறேன். மனமும் உடலும் இந்தப் பயிற்சிகளால் தக்கையாகி, லேசாகி விடுகின்றன. லேசான உடல்தான், எந்த வேலையையும் எப்போது வேண்டுமானாலும் செய்கிற திறனுடன், தேவையான சக்தியுடன் இருக்கும். அதேபோல், மனமும் எப்போதும் வேலை செய்கிற சுறுசுறுப்புடன் இருக்கும். எந்தவொரு விஷயத்தையும் கூர்ந்து, ஆழ்ந்து பார்க்கிற நிலையில், தெளிவாக இருக்கும்.

இதுவரை பார்த்து வந்த அக்குபிரஷர் என்கிற பயிற்சி, உங்கள் மனத்தையும் உடலையும் சுறுசுறுப்படையச் செய்கிற அற்புதமான பயிற்சி. மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒருவர் திடமாகவும் சுறுசுறுப்புடன் திகழ்ந்தால்தான், எந்தச் செயலைச் செய்தாலும் அதில் தனி முத்திரையைப் பதிக்க முடியும்!

வாழ்க வளமுடன்!

இப்படித்தான், டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில், தினமும் வேலை நேரம் போக கூடுதலாக நான்கு மணி நேரம் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார். ஒவ்வொருவராக என்னிடம் பேசிக்கொண்டே வந்தபோது, அந்த அன்பரும் எழுந்திருந்தார். அவர் முகத்தில் வாட்டம் தெரிந்தது. அவர் கண்களில் இருந்த ஏக்கத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது. முகமும் கண்களும் சோர்ந்திருக்க... அந்தச் சோர்வு பேச்சிலும் வெளிப்பட்டது.

''நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?'' என்று அவரிடம் கேட்டேன். சொன்னார். ''ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன். ''சுமார் 12 மணி நேரம்'' என்று பதில் அளித்தார். ''அந்த 12 மணி நேரம் என்பது, காலையில் துவங்கி மாலை வரையா அல்லது எவ்விதம்?'' என்று கேட்டேன். உடனே அவர், ''காலை 6 மணி முதல் 2 மணி வரை வேலை பார்த்துவிட்டு, அடுத்து நான்கு மணி நேரம் ஓவர்டைம் வேலை பார்ப்பேன். அடுத்த வாரம் மதியம் 2 முதல் இரவு 10 மணி வரை வேலை பார்த்துவிட்டு, அதையடுத்து நான்கு மணி நேரம் ஓவர்டைம் பார்ப்பேன். பிறகு, இரவு 10 முதல் காலை 6 மணி வரை வேலை பார்த்துவிட்டு, அதன் பின்னர் நான்கு மணி நேரம் வேலை பார்ப்பேன்'' என்று விளக்கமாகச் சொன்னார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த மும்பை அன்பர் ஒருவர், ''வெளிநாடுகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்களும் பி.பி.ஓ. எனும் கால்சென்டர்களும் இப்போது மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் மெள்ள மெள்ள வரத் துவங்கிவிட்டன. அங்கேயும் ஓர் இயந்திரத்தைப் போல உழைக்கவேண்டிய நிலையில் இளைஞர்களும் யுவதிகளும் உள்ளனர். இது போகப் போக, மிகப் பெரிய மன இறுக்கத்திலும் மன அழுத்தத்திலும் கொண்டு போய்விடும் என்று தோன்றுகிறது சுவாமி!'' என்றார்.

உண்மைதான். மனதில் இறுக்கமோ அழுத்தமோ வந்துவிட்டால், அது உடலையும் பாதிக்கும். உடலும் சட்டென்று தளர்ந்துவிடும். வேலைப் பளு, வேலையில் சிக்கல்கள் என்று பல விஷயங்கள் இருந்தாலும், தூக்கமின்மை என்பது மிகப் பெரிய சோகம். அதிக நேரம் வேலை செய்கிற உடலுக்கும், அதிகம் யோசிக்கிற புத்திக்கும் நல்ல ஓய்வு மிக மிக அவசியம். அந்த ஓய்வு தூக்கம் என்பதாக இருந்தால், உடலின் எல்லா நரம்புகளுக்கும் ஓய்வு கிடைத்துவிடும். அப்படிக் கிடைக்கிற ஓய்வுக்குப் பிறகு, புதிய வலுவுடன் திரும்பவும் உழைப்பதற்கு நரம்புகள் தயாராகிவிடுகின்றன.

அக்குபிரஷர் என்கிற பயிற்சியைச் செய்தால், தூக்கமின்மை பிரச்னையில் இருந்து நிவாரணம் நிச்சயம் உண்டு. ஆழ்ந்த, கனவுகளற்ற தூக்கம் கிடைக்கப் பெறுவீர்கள். தூக்கம் என்பது மிகப் பெரிய விடுதலை. ஆத்மாவுக்கு ஓய்வு அவசியமில்லை. ஆனால், அதைத் தாங்கிக் கொண்டிருக்கிற உடலுக்கு ஓய்வு என்பது அவசியத் தேவை!

##~##
காலையில் டிபன் சாப்பிடவில்லை. பிறகு மதிய உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்காக, இரவு வேளையில், காலையில் சாப்பிட வேண்டிய நான்கு இட்லி, சட்னி, சாம்பார்; மதியம் சாப்பிட வேண்டிய சாம்பார் சாதம், ரசம் சாதம், மோர் சாதம், பொரியல், கூட்டு சமாசாரங்கள் ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு, இரவுக்கான உணவைச் சாப்பிட முடியுமா? இந்த உலகில் எந்த மனிதராலும் முடியாத காரியம் அது! அதேபோல்தான் தூக்கமும்!

தினமும் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம் என்கிறது விஞ்ஞானம். ஆனால், நான்கு நாட்கள் சரிவரத் தூங்கவில்லை என்பதற்காக நான்காம் நாளிலிருந்து இழுத்துப் போர்த்திக்கொண்டு சேர்த்து வைத்து கும்பகர்ணன் மாதிரி 32 மணி நேரம் தூங்க முடியுமா? அப்படி ஒருவேளை தூங்கினாலும்கூட, எழுந்திருக்கும்போது அயர்ச்சியும் சோம்பேறித்தனமும்தான் இருக்குமே தவிர, சுறுசுறுப்போ விறுவிறுப்போ இருக்காது!

ஆக, ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை, அக்கு பிரஷர் பயிற்சிகள் தருகின்றன. உடலில் உள்ள மின் ஓட்டம், சீரமைக்கப் படுகிறது. எங்கெல்லாம் மின் ஓட்டத்தில் சிக்கல்களும் தடைகளும் இருக்கிறதோ... அந்த இடங்களில் உடனே மாற்றங்கள் ஏற்படும்.

ரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரமைக்கும் வல்லமை, இந்தப் பயிற்சிக்கு உண்டு. இதய நோயில் இருந்து விரைவில் நிவாரணம் பெறவும் இந்தப் பயிற்சி பெரிதும் உதவுகின்றன.

உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்தவும் சீராக இயங்கச் செய்யவும் அக்கு பிரஷர் பயிற்சிகள் பேருதவி புரிகின்றன.

தூங்கிக்கொண்டிருக்கும்போது, காலில் சுள்ளென்று நரம்புகள் இழுத்துக்கொள்ளும். ஓரிடத்தில் சுருண்டுகொண்டு, கட்டி போல் நின்று வலியைத் தரும். இந்த இம்சைகள் அனைத்துமே அக்கு பிரஷர் பயிற்சியால் விலகிவிடும்.

இந்த உலகில் தூங்கிக்கொண்டே இருப்பதும், தூங்காமலேயே இருப்பதும் வியாதியின் குறியீடுகள். இந்த நிலை நீடித்தால், இன்னொரு பெரிய வியாதியில் ஒருநாள் கொண்டு போய் விட்டுவிடும். அந்த வியாதியின் பெயர்... மனோவியாதி!

மனநோய் வராமல் தடுக்கிற சக்தியும் இந்தப் பயிற்சிக்கு உண்டு, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு