Published:Updated:

வாழ்க வளமுடன்!

இளைஞர் சக்தி

வாழ்க வளமுடன்!

இளைஞர் சக்தி

Published:Updated:
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்நேரமும் பரபரப்பாகவே இயங்குகிறது இந்த உலகம். இன்னும் சிறிது நேரத்தில் மொத்த வேலைகளையும் முடித்துவிட்டுத்தான் மறுவேலை என்பது போல், பம்பரமென சுற்றிக்கொண்டிருக்கிறது. முடித்துவிடவேண்டுமே என்கிற பதற்றமும், சரியாக நடந்துவிட வேண்டுமே என்கிற தவிப்பும்தான் இந்த உலகின் மிக முக்கியமான எண்ணங்களாக இருக்கின்றன.

எண்ணம் என்னவோ சரிதான்! ஆனால், பதற்றமும் தவிப்பும் மனிதர்களின் மிக முக்கியமான எதிரிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பதற்றம் இருக்கிற இடத்தில் தெளிவாகச் சிந்திக்க முடியாது; தெளிவாகச் சிந்திக்க முடியாத நிலையில், தீர்க்கமாகச் செயலாற்றவும் இயலாது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்றொரு பழமொழி உண்டு. சட்டி என்கிற சிந்தனையில் தெளிவு இல்லாதபோது, அகப்பை எனும் செயலில் மட்டும் எப்படித் தெளிவு வரும்?

காலையில் 10 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றால், 9 மணிக்குள் பேருந்து அல்லது ரயிலைப் பிடிக்க வேண்டும். இதற்குக் குறைந்தபட்சம் 7 மணிக்காவது எழுந்திருக்க வேண்டும். ஆனால், இதை எத்தனை பேர் செய்கிறோம்? 8 மணி அல்லது எட்டேகாலுக்குதான் எழுந்திருக்கிறோம். எழுந்ததும் கடிகாரத்தைப் பார்த்துப் பதறி, கால்களில் சக்கரங்களைப் பொருத்திக் கொள்கிறோம்.

வேகமாகப் பல் துலக்கி, காலைக் கடன்களை முடித்து, நாளிதழை அவசரம் அவசரமாகப் புரட்டிவிட்டு, குளித்தும் குளிக்காமல் உடம்பை நீரால் நனைத்துக்கொண்டு குளித்ததாகப் பேர் பண்ணி, சாப்பிட உட்காருகிறபோதே மணி 9-ஐ நெருங்கியிருக்க... என்ன சமையல் என்றே தெரியாமல் ஏதோ ஒரு வாய் அள்ளிப் போட்டுக்கொண்டு, எழுந்து கை கழுவி, அவசரம் அவசரமாக உடுத்திக்கொண்டு, சட்டைப் பாக்கெட்டிலும் பேன்ட் பாக்கெட்டிலும் என்னென்ன எடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமோ அவற்றை இயந்திர கதியில் அள்ளி வைத்தபடி, பரபரவென தலை சீவி, அப்போது பார்த்து வருகிற போன் அழைப்புகளுக்கும் பொறுமையின்றி எரிச்சலும் கடுப்புமாக பதில் சொல்லி, குழந்தைகள் மீதும் மனைவி மீதும் சிடுசிடுவென விழுந்து, டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி ஓட்டமும் நடையுமாக பேருந்து நிறுத்தம் அல்லது ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றால்... வண்டி போய்விட்டிருக்கிறது. அடுத்த வண்டி பத்துப் பதினைந்து நிமிடத்தில் வருமா, இல்லை அரை மணி ஆகுமா எனப் பதைபதைப்புடன் காத்திருக்கிறோம். அந்த வண்டி வந்ததும் கூட்டத்தில் ஏறி, நசுங்கிச் சாறாகி, உள்ளே ஓரிடத்தில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டபோதுதான், அலுவலக ஐ.டி. கார்டு அல்லது மூக்குக் கண்ணாடியை வீட்டிலேயே மறந்து விட்டுவிட்டு வந்திருப்பது தெரிகிறது.

அடுத்து... என்னாகும்? அதுவரை ஏறியிருக்கிற டென்ஷன் இரட்டிப்பாகும். இன்னும் படபடப்பு கூடும். பதற்றமும் தவிப்பும் அதிகரிக்கும். இதயம் ஏகத்துக்குத் துடிதுடிக்கும்.

''என்ன சுவாமி பண்றது? நேத்திக்கு ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போதே மணி 10 ஆயிடுச்சு. சாப்பிட்டு முடிச்சு, தூங்கும்போது மணி 12. காலைல எழுந்திருக்கலாம்னா ஒரே கண் எரிச்சல்! முதுகுத் தண்டுல அப்படியரு வலி. இன்னும் ஒரு பத்து நிமிஷம் அப்படியே படுத்துக் கிடந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு. உடம்பு அப்படியே அடிச்சுப் போட்டது மாதிரி இருந்துது. அதான், கொஞ்சம் கண் அசந்துட்டேன்!'' என்று என்னிடம் வருகிற அன்பர்கள் சொல்வது வழக்கம்தான்.

அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றுதான்.

வாழ்க வளமுடன்!

''நாம் எப்படிக் குளிக்க வேண்டுமோ அப்படிக் குளிப்பதில்லை; என்ன சாப்பிட வேண்டுமோ அதைச் சாப்பிடுவதில்லை; எப்படி வேலையில் ஈடுபட வேண்டுமோ அப்படியாக வேலையில் இறங்குவதில்லை; எவ்விதம் குடும்பத்தாரையும் மற்றவர்களையும் அணுகவேண்டுமோ, அவ்விதம் யாரையும் அணுகுவதில்லை. முக்கியமாக, எப்படித் தூங்க வேண்டுமோ அப்படித் தூங்க முற்படுவதும் இல்லை!''

உடலை இறுக்கிக்கொண்டும் முறுக்கிக்கொண்டும் தூங்குவதால் ஒரு பலனும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், அது ஓய்வைத் தருவதாகவே இருக்காது. மாறாக, கழுத்திலோ காலிலோ இன்னும் வலியை அதிகப்படுத்துவதாகவே அமையும்.

இரவு உணவு முடித்து தூங்கப் போகும் வேளையில், படுக்கையில் முகத்தை மேல்நோக்கியபடி மிகவும் தளர்ந்த நிலையில் வைத்துக்கொண்டு, மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை படுக்கையில் இல்லாமல், ஒரு சாதாரண விரிப்பின்மீது இதனை மேற்கொள்வது உத்தமம்.

வாழ்க வளமுடன்!

விரிப்பின் மீது மல்லாந்து படுத்தபடி, உடல் முழுவதையும் தளர்த்திக்கொண்டு, முகத்தை மேல்நோக்கியபடி வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். கால்கள் இரண்டையும் ஒட்டிக் கொள்ளாமல், பிணைத்துக் கொள்ளாமல் தளர்வாகவும், தனித்தனியாகவும், அதே நேரம் கால்களை ரொம்பவும் அகட்டி வைத்துக் கொள்ளாமல் அருகருகே வைத்துக் கொள்ளுங்கள்.

கிட்டத்தட்ட, ஒரு நாளின் 8 அல்லது 10 மணி நேர வேலையில், வேலை நிமித்தம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக, அந்த இடத்துக்கும் இந்த இடத்துக்குமாக நம் உடம்பைத் தூக்கிச் சுமக்கிற கால்களுக்குத்தான் முதலில் ஓய்வு தேவை.

ஏனென்றால், கால்களைச் சரியாக நீட்டி, ஒழுங்கானபடி படுத்துத் தூங்கவில்லையென்றால், சில தருணங்களில் காலின் நரம்புகள் சுருட்டிக்கொண்டு இம்சிக்கும். கணுக்கால் பகுதியிலோ, ஆடுகால் தசையிலோ தடாலென்று ஒரு கனம் கூடிக் கிடக்கும். பெரிய கருங்கல் போன்று அங்கே ஏதோ கெட்டிப்பட்டு வலி உயிர் போகும்.

அப்போது கால்களை அசைப்பதே பெரும்பாடாகிவிடும். அப்படியே அசைத்தாலும், அந்தக் கல் போன்ற இடத்தில் இருந்து வலி அதிகமாகி, நம்மை வதைத்தெடுக்கும். உதவிக்கு யாரையேனும் அழைக்கும் அளவுக்கு 'அம்மா...’ என அலறித் துடிக்க வைக்கும். அவர்கள் வந்து கெட்டிப்பட்டு இருக்கிற இடத்தைத் தொட்டாலே, அழுது ஊரையே கூட்டிவிடுவோம். அந்த அளவுக்கு வலி மிரட்சியை ஏற்படுத்தும்!

ஆகவே, கால்களைக் கவனிப்பது ரொம்பவே அவசியம். கால்களை நீட்டித் தளர்வாக வைத்துக்கொண்ட பிறகு, மனம் முழுவதும் அந்தக் கால்களிலேயே நிலைத்திருக்கும்படி செய்யுங்கள். முதலில், பாதங்கள் முழுவதற்கும் நம் மனமானது ஊடுருவட்டும். பாதங்களில் துவங்கி, அப்படியே மேல்நோக்கியபடி உடலை மனதாலும் தளர்த்துங்கள். உடலை உடலால் தளர்த்துவது ஏற்கெனவே நிகழ்ந்ததுதான் என்றாலும், இப்போது மனதால் உடலைத் தளர்த்த... நம் மொத்த உடலும் நம் மனசின் கட்டளைக்கு, ஒரு பார்வைக்கு வெகு எளிதில் கட்டுப்படும்.

'என்ன... நீ மட்டும் முரண்டு பண்றியா? எல்லாம் சரியா இருக்கு. நீ ஏன் விறைப்பா இருக்கே?’ என்று மனம் அதட்ட... அங்கே மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் நம் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றும் மனசுக்குக் கட்டுப்படும். மெள்ள மெள்ளத் தளர்ச்சி அடையும்!

'அட... ஆச்சரியமாக இருக்கிறதே!’ என்கிறீர்களா?

ஒருமுறை செய்து பாருங்கள்... மனதைக் கட்டளையிடச் செய்யுங்கள். மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பென உடல் சட்டென்று அந்தக் கட்டளையை ஏற்று, பெட்டிப் பாம்பாக தளர்வதை உணர்வீர்கள்!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism