Published:Updated:

எப்போதும் இன்புற்றிருக்க...

எப்போதும் இன்புற்றிருக்க...

எப்போதும் இன்புற்றிருக்க...

எப்போதும் இன்புற்றிருக்க...

Published:Updated:
எப்போதும் இன்புற்றிருக்க...
எப்போதும் இன்புற்றிருக்க...
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, எதிர்பார்ப்புகளற்று வாழ்வது அவசியம். எதிர்பார்ப்புகளின் அடர்த்தி அதிகரிக்கும்போது, ஏமாற்றமும் துன்பமும் எடைக்கு எடை பரிசளிக்கப்படுகிற வாய்ப்புகள் உள்ளன. 'எதிர்பார்ப்புகளே இல்லாமல் வாழமுடியுமா? அப்படி வாழ்வது சுவாரஸ்யமாக இருக்காதே!’ என்று பலர் கேட்கலாம். எப்போது எதிர்பார்க்கலாம், எதுவரை எதிர்பார்க்கலாம் என்பதில்தான் பகுத்தறிவும் பக்குவமும் பணிபுரிகின்றன.

தேர்வாகிவிடுவோம் எனும் எதிர்பார்ப்பின்றிப் படிக்க முடியுமா? பிரசவமாகும் எனும் எதிர்பார்ப்பின்றி கர்ப்பம் தாங்கமுடியுமா? திருமணம் கைகூடும் எனும் எதிர்பார்ப்பின்றிப் பெண்பார்க்கச் செல்லலாமா? இப்படி எதிலும் எதிர்பார்ப்பின்றி இருந்தால், மனிதர்களின் மகிழ்ச்சியே கபளீகரமாகிவிடும் என்று சொல்லலாம்.

தேர்வாகிவிடுவோம் எனும் நம்பிக்கையின்றித் தேர்வை அணுகுபவன், தோற்றுப் போவான். அவனால் படிக்கவும் முடியாது; படித்தாலும் புரியாது. எனவே, ஆக்கபூர்வ சிந்தனையுடன் அணுகுவது அவசியம். ஆனால், 'நான்தான் முதல் மதிப்பெண் பெறுவேன்; என்னைவிட எவராலும் சிறப்பாக எழுதமுடியாது’ என எதிர்பார்ப்பது அதீத நம்பிக்கையாகவும், சில தருணங்களில் மூட நம்பிக்கையாகவும்கூட மாறலாம். தேர்வு எழுதும்வரை, நேர்மறைவாதி; எழுதி முடித்ததும் எதிர்மறைவாதி என ஆகிவிடுபவன் நான். படிக்கும்போது, 'முதல் மதிப்பெண்’ எனும் குறிக்கோள்; தேர்வு எழுதிய பிறகு எதிர்பார்ப்பின்றிக் காத்திருப்பேன்.

முதலில், என் சிந்தையில் தேர்வு மட்டுமே இருக்கும். தேர்வு அறையில் அமர்ந்திருப்பதுபோல், கனவுகள் வரும். காலையில் எழுந்ததும், தேர்வு அறையில் பயமின்றி அமர்ந்திருப்பது போலவும், வினாக்கள் அனைத்தும் தெரிந்தவை போலவும், முத்துமுத்தான கையெழுத்துகளால் விடை எழுதுவது போலவும் மனசுக்குள் காட்சிப்படுத்திப் பார்ப்பேன். தேர்வு அறையை விட்டு வெளியே வந்த பின், அந்தத் தேர்வு குறித்துச் சிந்திக்கமாட்டேன்.  'தேர்வாகிவிடுவேன்’ என்றாலும் 'முதல் மதிப்பெண்’ குறித்து எதிர்பார்க்கமாட்டேன். என் மகிழ்ச்சியை, மதிப்பெண்களுக்காக இழந்ததே இல்லை.

எப்போதும் இன்புற்றிருக்க...

இப்போதுகூட, எந்தத் துறைக்குச் சென்றாலும், ஒவ்வொரு நாளும், அன்றைய தினம் ஓய்வு பெறுவது போன்றே தீவிரமாகப் பணியாற்றுவேன்; கோப்புகளை, எங்கும் தேங்கிவிடாதபடி விரட்டுவேன். இந்தத் துறையில் இதுவரை இருந்தவர்களைவிடச் சாதனை புரிய வேண்டும் என ஈடுபடுவேன். ஆனால் அது சாதனைக்காகவோ, புகழ் பெறவோ, பிரபலமாவதற்கோ அல்ல. எனக்குள் ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொள்ளவும், உந்துசக்தியை உற்பத்தி செய்துகொள்ளவும் அது உதவியாக இருக்கும் என்பதே காரணம். அதே நேரம், அந்தத் துறையைவிட்டு வந்ததும், அங்கே என்னைப் பற்றி என்ன பேசுகின்றனர், எப்படி விமர்சிக்கின்றனர் என சிந்தித்தது மில்லை; எதிர்பார்த்ததுமில்லை. எனவே, என் மகிழ்ச்சிக்கு குறையே இல்லை.  

ஒவ்வொரு பெண்ணும், குழந்தையைக் கருவில் தாங்குகிறபோது புதிய அழகு பெறுகிறாள்; முழுமை அடைகிறாள். அதாவது, குழந்தை பிறக்கும்போது, தாயும் பிறக்கிறாள். பெண்ணின் உள்ளம் வேறு; தாயுள்ளம் வேறு. குழந்தையின் அழகு முகத்தைக் காணும் குதூகலத்தில்தான் கர்ப்பம் தாங்குகிறாள். 'குழந்தை இறந்தே பிறக்கும்’ எனும் எதிர்மறைச் சிந்தனையுடன் இருந்தால், பிரசவம் என்பது பிற'சவம்’ ஆகிவிடும். ஆனால், 'குழந்தை செக்கச் செவேலென, குங்குமப்பூ நிறத்தில், கன்னத்தில் குழி விழப் பிறக்கவேண்டும்; அதிலும், ஆண் குழந்தையாகப் பிறக்கவேண்டும்’ என்றெல்லாம் எதிர்பார்த்தால், அது பூர்த்தியாகும் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் எவரும் தரமுடியாது!

சாப்பிடுவதற்காகத்தான் உணவு விடுதிகள். ஆனால், நாம் நினைக்கிற உணவு வகைகள் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்புடன் செல்லமுடியாது. அம்மாவின் கைப்பக்குவம் போல வெந்தயக் குழம்பும், கீரை மசியலும் கிடைக்கும் என எதிர்பார்ப்புகள் எகிறினால், ஏமாற்றம்தான் எஞ்சும்; விரக்தியே மிஞ்சும்!

திருமணம் கைகூடும் எனும் எதிர்பார்ப்பின்றி பெண் பார்க்கச் செல்வது சாத்தியமில்லைதான். ஆனால், தான் பார்க்கப்போகும் பெண், எல்லா திரைப்பட நடிகைகளின் சிறந்த(!) அம்சங்களுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்த்தால், நம் வாழ்வு சோகத்தின் சொர்க்கபுரியாக மாற்றிவிடும்.

எப்போதும் இன்புற்றிருக்க...

அந்தக் காலத்தில் உணவு வகைகளும் சரி; உணவு விடுதிகளும் சரி... இவ்வளவு இல்லை. அதேபோல், பற்பசைகளும் சோப்புகளும்கூடக் கிடையாது. பல கிராமங்களில் மின் வசதிகூட இருக்கவில்லை. இரண்டாம் வகுப்பு படிக்கும்போதுதான், எங்கள் வீட்டுக்கு மின்வசதியே கிடைத்தது. ஆனால் ஒன்று... அந்தக் காலத்தில் மகிழ்ச்சிக்கு ஒரு குறையும் இருக்கவில்லை. சொல்லப்போனால், குறைவான வசதிகள் இருந்தபோதுதான், மனிதன் அதிக மகிழ்ச்சியில் இருந்தான். மின்சாரம் இல்லாமல், தொலைக்காட்சியும் இல்லாமலிருந்தபோது, அவனது மனம் நிர்மலமாக இருந்தது. அவன், தனது வாழ்க்கையைப் புகார் புத்தகமாக்கிக் கொள்ளவில்லை. இன்றைக்கு, ஒரு விநாடி நேரம் மின்சாரம் போனால் கூட, பதற்றமடைகிறோம்; எல்லோரையும் சபிக்கிறோம்! இந்தியாவில் பிறந்ததற்கே வருத்தப்படும் அளவுக்கல்லவா போய்விடுகிறோம்!

நர்மதையில் அணை கட்டப்படுவதற்கு முன், அங்கே பல கிராமங்களில், பழங்குடி மக்களுடன் தங்கியிருக்கிறேன். அவர்களது வாழ்வை, மின்சாரம் இல்லாதது எந்த வகையிலும் பாதிக்கவில்லை; மாறாக, பண்பு பாதுகாப்பாக இருந்தது; இயற்கையுடன் இயைந்து வாழ்ந்ததால், இன்னும் மேன்மையானவர்களாக இருக்கின்றனர் என்பதை உணர முடிந்தது.  

தொலைக்காட்சியின் தொடக்கத்தில், ஒருசில வீடுகளில் மட்டுமே அவை இருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில், திரைப்பட ஒளிபரப்பு வேளையில், ஒரே வீட்டில், பல வீடுகள் குவிந்திருக்கும்.  ஆனால், இன்றைக்கு..?! பல அலைவரிசைகள். விளம்பரங்கள் வரும்போது தாவுவதற்கு வசதியாக நம் கையில் ரிமோட்! நம் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது; ஆனால், திருப்தி அதிகரித்துள்ளதா? யோசிக்கவேண்டும்!  

தந்தையும் மகனும் அடர்ந்த காட்டின் வழியே பயணித்தனர். வெளிச்சம் கீழே விழாத அளவுக்குப் பசுமை போர்த்தியிருந்த 'கன்னிமைக்காடு’. இரவு நேரம்; அடுத்த அடி எடுத்துவைக்க, மகன் பயந்தான். ''இத்தனை இருளாக இருக்கிறதே, எப்படிச் செல்வது? வழியே தெரியவில்லையே? தீப்பந்தமோ மெழுகு வத்திகளோகூட இல்லையே?'' என்றான்.  தந்தை ஓர் உபாயம் சொன்னார். ''கண்களைப் பல நிமிடங்களுக்கு இறுக மூடிக்கொள். பிறகு, மெதுவாகக் கண்களைத் திற. அப்போது, காட்டில் நடப்பதற்கான மங்கலான வெளிச்சம் தெரியும். அந்தச் சின்ன ஒளியில், வழியைக் கண்டுபிடிக்க முடியும்'' என்றார். மகனும்  கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்துவிட்டுச் சிறிது விநாடிகள் கழித்துத் திறந்தான். அப்போது, வனத்தின் இருட்டு அவனைப் பயமுறுத்தவில்லை. பிறகு, இருவரும் பாதுகாப்பாக, காட்டின் மறுபக்கத்தை அடைந்தனர். 'எப்போது உன்னிடம் இருட்டை ஒளிமயமாக்க விளக்கு இல்லையோ... எப்போது வெளிச்சத்தைப் பயன்படுத்த முடியாதோ... அப்போது இருட்டில் வழிதேட, இருட்டையே பயன்படுத்து!’ - இந்தச் சூட்சுமத்தை அறிந்து விட்டால், மகிழ்ச்சி மறையாது!

எதிர்பார்க்காதவனுக்கு, எதிர்பார்க்காத திசைகளில் இருந்தெல்லாம் மகிழ்ச்சி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாத மனிதனுக்கு, எல்லாக் காலங்களும் வசந்தகாலமே!

மன்னர் ஒருவர் தன் மந்திரியிடம், ''இன்றைக்கு என் மனம், ஈகைக் குணத்தால் நிறைந்திருக்கிறது. பிச்சைக்காரனைப் போல் வேடமிட்டு, நகரெங்கும் சுற்றி வருவேன். அப்போது, என்னைத் தனது வீட்டுக்கு வரவேற்று உபசரிக்கும் முதல் மனிதனுக்கு நூறு பானை தங்கம் தர உள்ளேன்'' என்றார். அதன்படி, மாறுவேடத்துடன் நகர்வலம் வந்த மன்னரை யாரும் வரவேற்கவும் இல்லை; உபசரிக்கவும் இல்லை!

சோகத்துடன் திரும்பிய மன்னர், மந்திரியிடம், ''நம் மக்கள், ஒருவர் என்னவாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமே அவரை மதிக்கிறார்கள். இன்னொன்று... அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில், அவர்கள் எதிர்பாராத தருணங்களில், இடங்களில்கூட, அவர்களுக்கான மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை அவர்கள் அறியவே இல்லை!'' என்றார்.

ஆக, மகிழ்ச்சி எல்லா இடங்களிலும் இருக்கிற காற்று; அதை, சிலிண்டர்களில் அடைபட்டுள்ள எரிவாயு என்பதாகவே நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்!  

  (இன்பம் பொங்கும்)
- படங்கள்: கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism