Published:Updated:

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!
வானம் தொடுவோம்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கிப்தில் இருந்து ஹீப்ரூ வம்சத்தினர் வெளியேறியபோது, அவர்களின் தலைவர் மோஸஸ் பத்துக் கட்டளைகளை அவர்களுக்குச் சொன்னார். வாக்களிக்கப்பட்ட பூமியை (ஜெருசலேம்) நோக்கிச் செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகள் அவை. ஹீப்ரூக்கள் அவற்றை அப்படியே கடைப்பிடித்தனர். அது அத்தனை எளிதான காரியமல்ல. அவை, மிகக் கடுமையானவை. ஆனாலும், சிரமப்பட்டுப் பின்பற்றினர். தாங்கள் பின்பற்றும் பத்துக் கட்டளைகளும் கடவுளிடம் இருந்து வந்தவை என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள்.

ஹீப்ரூ மக்களைப் பொறுத்தவரை, அந்தக் கட்டளை களைத் தந்த கடவுள், அவர்களைக் காக்கும் தந்தை. தவறிழைக்காமல் அவர்களை தமது நல்வழிக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்பிய தந்தை.

பைபிள் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை கிரேக்க புராணக் கதைகள். சாதாரணமாக, கிரேக்க நாயகன் பிறந்தால், அவன் தன் தந்தையைக் கொன்றுவிடுவான் என்று தேவ வாக்கு முன்கூட்டியே சொல்லிவிடும். அதனால், அந்தக் குழந்தையை காட்டுக்குத் தூக்கிச் சென்று ஓநாய்களுக்கு இரையாகப் போட்டுவிடும்படி அதன் தந்தை உத்தரவிட்டுவிடுவார். ஆடு மேய்ப்பவர் ஒருவர் அந்தக் குழந்தை மீது இரக்கப்பட்டு, அதை ரகசியமாக எடுத்து வளர்ப்பார். குழந்தை வளர்ந்து, அழகான வீரமிக்க இளைஞ னாகி, தன்னுடைய தந்தை என்று அறியாமலே அவருடன் போரிட்டு, அவரைக் கொன்றும் விடுவான்.

அதனால், கிரேக்க புராணங்களில் வரும் தந்தை 'பாதுகாக்கும் தந்தை’ அல்ல; அவர் கொடுமைக்காரத் தந்தை!

ஆக, கிரேக்க நாயகன் தன் தந்தையை எதிர்க்கிறான்; அது அவனுக்குப் புகழைத் தருகிறது.

முதல் கதையின்படி, பத்துக் கட்டளைகளுக்குப் பின்னால் அன்பான தந்தை இருக்கிறார். அதனால்தான், கட்டளைகளைக் கேட்டுப் பிள்ளைகள் கீழ்ப்படிகிறார்கள். அவற்றை மீற வேண்டும் என்று மக்கள் நினைத்தால்... அது, அந்தக் கட்டளைகளுக்குப் பின்னே ஒரு கொடுமைக்காரத் தந்தை இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

நமது இந்துப் புராணங்களில் இந்த இருவகைத் தந்தையரும் இருக்கிறார்கள். ராமாயணத்தில் காக்கும் தந்தை தசரதன். அவர் மகன் ஸ்ரீராமர். தந்தை சொற்படி கேட்டு நடந்தவர் என்பதால், ஸ்ரீராமர் இன்றும் கொண்டாடப்படுகிறார்.

ஆனால், ஸ்ரீகிருஷ்ணர் கட்டளைகளை மீறுகிறார். அவரது மாமன் கம்சன், தந்தைக்கு சமமானவன். ஆனால், கொடுமைக்காரத் தந்தை. அதனால், கம்சனை எதிர்த்து நிற்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். கீழ்ப்படிதலால் ஸ்ரீராமர் வணக்கத்துக்குரியவர் ஆகிறார். அதே நேரம், மீறிச் செயல்பட்ட ஸ்ரீகிருஷ்ணரும் வணங்கப்படுகிறார்.

வானம் தொடுவோம்!

இனி, நம் விஷயத்துக்கு வருவோம்...

மருந்து தயாரிக்க உதவும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தினர், தங்களுக்கு ஆலோசனை வழங்க ஒரு நிறுவனத்தை அமர்த்திக் கொண்டனர். அந்த ஆலோசனை நிறுவனத்தில்தான் ராகுல் பணிபுரிந்தார். இலக்கு, செயல்பாடு இரண்டுக்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தினார். நவீன வழிமுறைகளும், செயல்பாடுகளும் வகுக்கப்பட்டன. அவரது செயல்பாடுகளால் நிறுவனத்தின் அமைப்பே புதிதாக ஆனது போல் உருமாறியது. ஆலோசனை நிறுவனத்தினர் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டனர். ஆனால், உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவன ஊழியர்களோ மந்தமாகவே இயங்கினர். சோம்பலாகச் செயல்பட்டனர்.      

ராகுலுக்கு இது வியப்பாக இருந்தது. எங்கே தவறு? ஏன் ஊழியர்கள் எல்லோரும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள்? நிறுவனம் மேன்மை அடையும்போது, மறைமுகமாக ஊழியர்களும்தானே பயனடைவார்கள் என்றெல்லாம் யோசித்தார். புதிய விதிமுறைகளின்படி நடப்பது என்பது, ஏதோ நிர்வாகத்துக்குத் தாங்கள் காட்டும் சலுகை என்பதுபோல் அவர்கள் நடந்துகொள்வது ராகுலுக்குப் புரிந்தது.

ராகுல் தன் முதலாளியிடம் நிர்வாகக் குழுக் கூட்டம் ஒன்றில் இந்த பிரச்னையை எழுப்பியபோது, ஓர் இயக்குநர் 'அவர்களிடம் நேர்மை இல்லை!' என்றார். ஆனால், ராகுல் அதை ஏற்கத் தயங்கினார். தங்களை ஆலோசனைக்காக அமர்த்திக்கொண்ட நிறுவனத்துக்கே சென்றார்.

நிறுவனத்தின் இளைய நிலை அதிகாரிகளுடன் ராகுல் அதிக நேரம் செலவிட்டார். அவர்கள் சொன்னதில் பொருள் இருந்தது.

'இந்தப் புதிய ஏற்பாடு ஏன் இங்கே அமல் செய்யப்படுகிறது என்றால், நிறுவனத்தின் பெயர் உயரும்; புதிய முதலீட்டாளர்கள் நிறையப் பேர் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்பதற்காகத்தான். அப்படி நிறுவனத்தின் பெயர் பிரபலமான பிறகு, அதை அதிக தொகைக்கு விற்றுவிட வேண்டும் என்பதில்தான் நிர்வாகம் அக்கறை காட்டுகிறது. எங்களுடைய எதிர்காலம் பற்றி இவர்களுக்குக் கொஞ்சமும் அக்கறை கிடையாது. அப்படியிருக்க, நாங்கள் ஏன் இவர்களுக்கு அனுதாபம் காண்பிக்க வேண்டும்? புதிய திட்டங்களின்படி நாம் ஏன் உழைத்து, நிறுவனத்தின் பெயரையும் புகழையும் உயர்த்த வேண்டும்? அதற்குப் பின் நாங்கள் இளித்தவாயர்களாக இருக்க, இவர்கள் கூடுதல் லாபத்துக்கு இந்த நிறுவனத்தை லட்டு போல் விற்றுவிட்டுப் போய்விடுவார்கள், அப்படித்தானே?' என்று ராகுலிடம் அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். அதைக் கேட்டு திகைத்துப் போனார் ராகுல்.

உண்மையைச் சொல்வது என்றால், மருந்து தயாரிக்க உதவும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவன ஊழியர்களுக்குப் புதிய விதிமுறைகள், கொடுமைக்காரத் தந்தையின் கட்டளைகளாக இருந்தன. அதனால் அவற்றை மீற நினைத்தார்கள். அந்த விதிமுறைகள் கருணை காட்டும் தந்தையின் கட்டளைகளாக இருந்தால், நிச்சயமாக அவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். நமக்கும் தேவை, கருணைத் தந்தைதான்!