Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

த்தனையோ தெய்வங்களை வணங்கினாலும், மனசுக்கு நெருக்கமான தெய்வமா நாம எல்லாருமே நினைக்கறது விநாயகரைத்தான்! இந்த முறை, தாத்தாவும் பேரனும் கிளம்பிச் சென்று இறங்கியதும்... ஆனைமுகத்தானின் அற்புதத் தலத்தில்தான்!

''தமிழகத்துல, பிரதான தெய்வமா பிள்ளையார் இருக்கிற கோயில்கள் நிறையவே இருக்கு. திருச்சி உச்சிப்பிள்ளையாரும் பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகரும் இதுல முக்கியமானவர்கள்; முதன்மையானவர்கள். இப்ப நாம வந்திருக்கிறது பிள்ளையார்பட்டிக்கு!'' என்று தாத்தா பெருமிதத்துடன் சொல்ல... ''தெரியும் தாத்தா! போன சக்தி விகடன்லகூட ஏரியல் வியூ போட்டோ போட்டு, இது இன்ன கோபுரம், இது இன்ன சந்நிதின்னு அழகா காண்பிச்சிருந்தாங்களே! அதோடு, பக்கத்துல இருக்கிற குன்றக்குடிக்குப் போய் முருகக் கடவுளைத் தரிசனம் பண்ணினப்ப, பிள்ளையார்பட்டியைப் பத்தி நீ கூட கொஞ்சம் சொன்னியே, தாத்தா!'' என்று மிகத் தெளிவாகப் பேசினான் பேரன்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில், சுமார் 14-வது கி.மீ. தொலைவில் உள்ளது பிள்ளையார்பட்டி.

''ஜடாமகுடமும் இரண்டு கைகளும் கொண்டு கம்பீரமா உக்கார்ந்திருக்கிற ஸ்ரீகற்பக விநாயகரைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். 'பிள்ளையார்பட்டி எனும் பேரருள் சுரங்கத்தின் கண்’ என்று கவியரசு கண்ணதாசன் இந்தத் தலத்தைப் பாடியிருக்கிறார். அருட்சுரங்கம் நிறைஞ்ச பூமி இது! கோயிலுக்குப் பக்கத்துலயே வேத பாடசாலை இருக்கு. அங்கே... உன்னைப் போல இருக்கிற பசங்களுக்கெல்லாம் வேதம் கத்துக்கொடுக்கற அறப்பணி நடந்துட்டிருக்கு. அதனால எந்நேரமும் அங்கே வேத கோஷங்கள் முழங்கிட்டே இருக்கு'' என்று கோயிலைப் பற்றியும் வேத பாடசாலை பற்றியும் விவரித்தார் தாத்தா.

''இப்ப நாம பிள்ளையார்பட்டின்னு சொல்றோம், இல்லியா? அந்தக் காலத்துல, எடுக்காட்டூர்; மருத மரங்கள் சூழ்ந்திருந்ததால, மருதங்குடி; ஈங்கை மரம் அதாவது சந்தன மரங்கள் நிறைஞ்சிருந்ததால, திருஈங்கைக்குடி; பிறகு, அதுவே மருவி ஈச்சங்குடி; ராஜநாராயணபுரம், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளை நகர்னு ஏகப்பட்ட பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கு இந்த ஊர். கோயிலோட ஸ்தல விருட்சம் - மருதமரம்'' என்று தாத்தா சொல்ல... 'அடேயப்பா! ஒரு ஊருக்கு இத்தனைப் பெயரா!’ என்று வியந்து போனான் பேரன்.

##~##
''இந்தக் கோயிலுக்கு இரண்டு கோபுரங்கள். வடக்குப் பார்த்த சந்நிதி. ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம். இதற்கு நேராகத்தான் ஸ்ரீகற்பக விநாயகர் சந்நிதி. கிழக்குப் பார்த்த கோபுரம் ஸ்ரீமருந்தீஸ்வரருக்கு உரியது. ஏழு நிலை கோபுரம் இது. சுமார் 1,600 வருஷத்துப் பிரமாண்டக் கோயில் இது. இங்கே, கம்பீரமா அமர்ந்த திருக்கோலத்துல இருக்கிற ஸ்ரீகற்பக விநாயகர்; புடைப்புச் சிற்பமா, குடைவரைப் பிள்ளையார். சுமார் ஆறடி உயரத்துல, அற்புதமான திருமேனில காட்சி தர்றார் விநாயகர். கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா... ஓங்கார வடிவத்துல விநாயகர் திருமேனி இருக்கிறதை நாம உணர முடியும். அவரோட இடது காதுலேருந்து தொடங்கி, வலது காதுக்கு வந்து, அப்படியே துதிக்கையில் பார்வையைச் செலுத்தினா... அந்த வடிவத்தை ரொம்ப ஈஸியா நாம உணரமுடியும்!'' என்று சொல்லிவிட்டு அமைதியானார் தாத்தா.

அங்கே... அற்புதமான ஸ்ரீகற்பக விநாயகப்பெருமானின் திருச்சந்நிதி. தாத்தாவும் பேரனும் பிள்ளையாரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தனர். பிறகு, கண் மூடிப் பிரார்த்தனை செய்தனர். தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட்டபடி வணங்கினர்.

''பார்த்தியா... பத்மாசனத்துல கால்களை மடிச்சு உக்காருவது ஒருவகை. அர்த்த பத்மாசனத்துல, அதாவது பாதி அமர்ந்த நிலையில, ஒரு காலை லேசா மடிச்சபடி, அழகா உக்கார்ந்திருக்கார் பிள்ளையார். அதாவது, பக்தர்கள் அழைத்தால், உடனே எழுந்து ஓடோடி வந்து அருள்பாலிக்கிறதுக்குத் தயாரா இருக்கிற பாவனைல காட்சி கொடுக்கறார். பொதுவா எல்லா ஆலயங்களிலும் இருப்பதுபோல இல்லாம, இங்கே ஸ்ரீவலம்புரியாக, அதாவது வலது பக்கம் தும்பிக்கை வளைஞ்ச நிலையில பிள்ளையார் இருப்பது ரொம்பவே சிறப்பு.

கையில் வைத்திருப்பது மோதகம்னு சொல்றாங்க. சிவலிங்கம்னு சொல்றவங்களும் உண்டு. அதாவது, கஜமுகாசுரனை அழிச்சதுனால உண்டான தோஷம் நீங்க, இந்தத் தலத்துல விநாயகர், சிவலிங்க பூஜை செஞ்சு வழிபட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.  

கதை கேளு... கதை கேளு...

இன்னொரு விஷயம்... அவரோட வலது தந்தம் நீண்டும், இடது தந்தம் சின்னதாவும் இருக்கும். வியாசர் சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை எழுதறதுக்குப் பிள்ளையார் தன் தந்தத்தை முறித்து எழுத்தாணியாப் பயன்படுத்தினார், அதனால்தான் ஒரு பக்கத் தந்தம் சின்னதா இருக்குன்னு ஒரு தகவல் உண்டு. ஆண் யானைக்குத் தந்தம் நீண்டிருக்கும். பெண் யானைக்கு தந்தம் இருக்காது. இங்கே, பிள்ளையார்பட்டியில் ஆண்- பெண் என்கிற நிலையைக் கடந்த பரிபூரணனா காட்சி கொடுக்கிறார் பிள்ளையார்னு ஒரு ஐதீகம்!'' - சொல்லிவிட்டு நிறுத்திய தாத்தா, பிராகார வலத்தை முடிக்கும் வரை பொறுமையாக இருந்தார். பேரனும் கோயிலின் தூண்களையும் சிற்பங்களையும் பார்த்து வியந்தபடியே வந்தான்.

''தேசி விநாயகர்னு இவருக்கு ஒரு திருநாமம் உண்டு. தேசின்னா தேஜஸ்னு அர்த்தம். தேசிகன்னா குருன்னு அர்த்தம். ஆச்சார்யன்னும் சொல்லலாம். தேசிகன் என்பது வணிகர்களையும் குறிக்கும். அதாவது, நகரத்தார் எனப்படும் செட்டி இன மக்களால் போற்றிக் கொண்டாடப்படும் தெய்வம், அவர்களின் குலம் காக்கும் கடவுள் எனும் அர்த்தத்தில்கூட இந்தத் திருநாமம் அமைந்திருக்கும்னு சொல்லலாம்.  

தவிர, ஸ்ரீவரத கணபதி, ஸ்ரீகணேசன், ஸ்ரீகணேசபுரேசன்னு பெயர்கள் உண்டு. இங்கே, விநாயகர் சதுர்த்திக்குச் செய்யப்படும் மோதக நைவேத்தியம் பிரமாண்டமா இருக்கும். சிவனாரோட திருநாமம்- ஸ்ரீமருதீசர். அம்பாள்- ஸ்ரீவாடாமலர் மங்கை. இந்தக் கோயில் சிற்பங்களையெல்லாம் வடிச்ச சிற்பியோட பேரு என்ன தெரியுமா? எக்காட்டூர்கோன் பெருபரணன். பெருபரணன்னா பெருந்தச்சன்னு அர்த்தம்! இங்கே பார்த்தியா... சிற்பியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கு!'' என்று பேரனுக்கு அதைச் சுட்டிக் காட்டினார் தாத்தா.

''நம் விக்னங்களையெல்லாம் அகற்றி அருளும் தலம் இது. திருமணத் தடைகளை நீக்கியருளும் கோயில். சங்கடஹர சதுர்த்தி நாளில், சிவகங்கை மாவட்டம்னு இல்லாம அக்கம்பக்க மாவட்டத்துலேருந்தும் ஊர்கள்லேருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பண்ணிட்டுப் போறாங்க! விநாயகர் சதுர்த்தி விழா, பத்து நாள் சீரும் சிறப்புமா நடைபெறும். தினமும் ஒவ்வொரு வாகனத்துல திருவீதியுலா வர்ற அழகைப் பார்க்க ஆயிரம் கண் வேணும். தேரோட்டத்தோட விழா முடியும். அப்பா சிவபெருமானைப் போல ரிஷப வாகனத்துல வருவார் பிள்ளையார். அதேபோல அம்மாவோட சிம்ம வாகனத்துலயும், தம்பியோட மயில்வாகனத்துலயும் திருவீதியுலா வருவார் பிள்ளையார்.

அப்புறம், இன்னொண்ணு கவனிச்சியா... சிவ சந்நிதியும் அம்பாள் சந்நிதியும் கொஞ்சம் உசரத்துலதான் இருக்கும். இங்கே வந்து, சிவ-பார்வதியை வணங்கிட்டு, ஸ்ரீகற்பக விநாயகரையும் தரிசனம் பண்ணினா... பக்தர்களாகிய நாம உயர்ந்த ஆத்மாவா மாறுவோம்கிறது நம்பிக்கை!'' என்று சொல்லியபடியே கோயிலைவிட்டு வெளியே வந்தார் தாத்தா. அவரின் விரலைப் பற்றியபடியே வந்தான் பேரன்.

வேத கோஷங்கள் அவர்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

- தரிசிப்போம்
படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்