Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

இதயமே... இதயமே..!

வாழ்க வளமுடன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ந்த வாழ்க்கை சுவாரஸ்யமானது; வாழ்கிற மனிதர்களும் ரொம்பவே சுவாரஸ்யமானவர்கள்.

நீங்கள் ரொம்பவும் அமைதியானவராக, கலகலப்பாகப் பேசாதவராக இருந்தால், 'உம்மணாமூஞ்சி’ என்று சொல்வார்கள். அதுவே, எப்போதும் எல்லோரிடத்தும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் பேசிக்கொண்டே இருந்தால், 'அவன் ஒரு லொட லொட கேஸ்’ என்று கேலி செய்வார்கள். பேசினால் 'வாயரட்டை ஆசாமி’ என்றும், பேசாமல் இருந்தால் 'உம்மணாமூஞ்சி’ என்றும் சொல்கிற விசித்திர மனிதர்கள் வாழும் தேசம் இது!

அதுபோலவே, வயிறாரச் சாப்பிடுபவனை தீனிப் பண்டாரம் என்றும், சாப்பாட்டு ராமன் என்றும் கேலி செய்பவர்களே, அவன் குறைத்துச் சாப்பிடுபவனாக இருந்தால், 'அப்படி வயித்துக்குப் பட்டினி போட்டாவது காசு சேர்த்து எந்த அரண்மனையை வாங்கப் போறானோ?!’ என்று நையாண்டி செய்வார்கள்.

'வாழறதே சந்தோஷமா இருக்கறதுக்குத்தானே..? அதனால வாயை ஏன் கட்டணும்? வயிறாரச் சாப்பிடுறதுக்குத்தானே இவ்ளோ கஷ்டமும் படுறோம்! நல்லா சாப்பிடவேண்டியதுதானே?’ என்பார்கள். அவர்களே, 'நாற்பது வயசுக்கு மேல ஆயிடுச்சுன்னா, உணவுல கொஞ்சம் கவனம் தேவை. கட்டுப்பாடு தேவை. உப்பைக் குறைக்கணும்; காரத்தைக் கிட்டேயே சேர்க்கக்கூடாது. எண்ணெய் அயிட்டங்களைத் தொடவே கூடாது’ என்றெல்லாம் மருத்துவர்கள்போல் ஆலோசனை சொல்வார்கள்.

ஆனால், பொதுவாகவே உணவில் எப்போதும் ஒரு நிதானத்தை நாம் கைக்கொண்டுவிட்டால், உடலை எந்தப் பிரச்னையும், நோய் நொடியும் தீண்டாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை, வாலிபப் பருவத்தில் இஷ்டத்துக்கு உணவை எடுத்துக்கொண்டவராக இருந்தால்கூட, குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு, கவனத்துடன் உணவை உட்கொள்வது ரொம்பவே நல்லது.

எண்ணெய் அதிகம் உள்ள உணவுப் பண்டங்களும், கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளும் நம் சுவாசத்தையே கெடுக்கவல்லவை என்பது தெரியுமா உங்களுக்கு? இதுபோன்ற உணவுகளை உட்கொள்வதால் தேவையற்ற கொழுப்பு கரையாமல், அப்படியே ஒரு 'லேயர்’ போல் படிந்துவிடும். இதனால் தொப்பையும் தொந்தியுமாக, ஊளைச் சதை போட்டு... நின்றால் கொடுமை, நடந்தால் கொடுமை என்று அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.

வாழ்க வளமுடன்!

இதுமாதிரியான உணவுப் பண்டங்களால் அடிக்கடி மூச்சுப்பிடிப்பு ஏற்படும். இடுப்பு, மார்பு, முதுகுப் பகுதி எனச் சில இடங்களில் சட்டென்று பிடித்துக்கொள்ளும். நம்மை அசையவிடாமல் இம்சை பண்ணும். கொஞ்சம் அசைந்தால்கூட வலி அதிகரிக்கும். ஒருகட்டத்தில், மூச்சு விடுவதிலேயே மிகுந்த சிரமம் ஏற்படும்.

நாம் கால்களைக் கொண்டு சைக்கிள் ஓட்டுகிறோம்; கைகளைப் பயன்படுத்தி பெரிய மூட்டையைச் சுமக்கிறோம்.

இதுபோன்ற வேலைகளிலும் தருணங்களிலும் நாம் நம் கைகளையும் கால்களையும் வெகுவாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. நாமேகூட சில தருணங்களில், 'வீட்டுக் குழாய்ல தண்ணி வரலை. அதனால, காலங்கார்த்தால நாலு மணிக்கெல்லாம் எழுந்து, வரிசைல கால் கடுக்க நின்னு, கை வலிக்க வலிக்க அடிபம்புல தண்ணியடிச்சு, குடம் குடமா நிரப்பி, மூணாவது மாடியில இருக்கிற என் வீட்டுல கொண்டு போய் ஊத்தினேன். ரெண்டு தோள்லயும் செம வலி! ரெண்டு முழங்காலையும் தனியா கழற்றி எடுத்து வைச்சா தேவலைபோல, வலி பின்னியெடுக்குது’ என்று புலம்பியிருப்போம்.

அதேபோல, 'கண்ணு முழிச்சு வேலை செஞ்சேன். நாலு நாளா டபுள் டியூட்டி! கண்ணெல்லாம் செவசெவன்னு இருக்குது. கண்ணுல மண்ணு புகுந்தா மாதிரி ஒரே இம்சை’ என்று சொல்வார்கள் சிலர்.

இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டரைப் பார்த்து வேலை செய்வது அதிகரித்து வருகிறது. 'கம்ப்யூட்டர்லதான் வேலை. அதனால கண்ணும் கழுத்தும் வலிக்குது. உக்கார்ந்து பாக்கற வேலைங்கறதால, முதுகுத் தண்டுலயும் கடுமையான வலி!’ என்று புலம்புவார்கள் சிலர்.

வாழ்க வளமுடன்!

ஆனால், நம் உடலில் ஒரேயரு உறுப்பு மட்டும், அதுபாட்டுக்கு தேமே என்று வேலை செய்துகொண்டே இருக்கிறது. 'நான் மிகவும் அயர்ச்சியாகிவிட்டேன்; ஒரு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொள்கிறேனே!’ என்றெல்லாம் அது சொல்வதே இல்லை.

அந்த உறுப்பு, அந்த பாகம் என்ன என்று கேட்கிறீர்களா? சுவாசப் பைதான்! 'நேத்திக்கு முக்கால் மணி நேரம் மூச்சு விட்டேன். இன்னிக்குக் கால் மணி நேரம்தான் என்னால மூச்சுவிட முடிஞ்சுது’ என்றெல்லாம் நாம் சொல்கிறோமா என்ன?

மூட்டை தூக்கினாலும் சரி, நாற்காலியில் அமர்ந்தபடியே வேலை செய்தாலும் சரி... அவ்வளவு ஏன், நாம் தூங்கும்போதுகூட சுவாசப்பையானது, தன் நிலையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்போல 'என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தொடர்ந்து தன் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருக்கிறது.

ஆனால் என்ன... சிக்கல் எழாதவரையில், சுவாசத்தின் அருமையை உணராமல் அதை நாம்தான் கெடுத்துக்கொள்கிறோம். ஒரு சிலர், மோசமான பழக்கங்களாலும், புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களாலும் நுரையீரல் பகுதியைக் கெடுத்துக் கொள்கின்றனர். சீரான சுவாசம் கெட்டுப்போய், மோசமான சுவாச வாழ்க்கைக்கு மாறிப் போகின்றனர்.

உடல் பருமனும் உணவுச் சீர்கேடுகளும் மோசமான பழக்கங்களும் சேர்ந்து நமது சுவாசத்தின் சீரான கட்டமைப்பை ரொம்பவே பலஹீனப்படுத்திவிடுகின்றன. ரயில் இரைவது போன்ற சத்தத்துடன் நாம் மூச்சு விடுவதைப் பார்த்து, 'என்னங்க உங்களுக்கு இப்படி மூச்சு வாங்குது? உங்க வெயிட்டைக் கொஞ்சம் குறைங்களேன்’ என்று எதிரில் இருப்பவர் அட்வைஸ் பண்ணும் அளவுக்கு மிக மோசமாகிவிடுகிறது நம் நிலைமை.

##~##
ஆகவே அன்பர்களே, சுவாசத்தில் மிகுந்த கவனம் தேவை! இந்த சுவாசத்தின் தாள லயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டால், கோளாறுகள் ஒவ்வொன்றாக நம் உடம்பின் மீது படையெடுத்து வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நேற்று வரை நீங்கள் மூச்சுவிடுவது உங்களுக்கே தெரியாமல் நிகழ்ந்திருக்க, இப்போது நீங்கள் மூச்சுவிடுவது எதிரில் இருப்பவருக்கும் தெரிகிறதென்றால்... இந்த உடம்பின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதை உடனே புரிந்துகொண்டு, திட்டமிட்டு வாழுங்கள். திட்டமிடலும் ஆரோக்கியமும் நிறைந்த மனவளக் கலைப் பயிற்சி, உண்மையிலேயே உங்கள் சுவாசத்தை சீராக்கும்; சுவாசப் பையை பலப்படுத்தும்.

உடலுக்கு ஓய்வு தரும் பயிற்சியில், உடலின் ஒவ்வொரு பாகங்களையும் தளர்த்திக் கொண்டே வந்தீர்கள்தானே..? இதோ, மார்புப் பகுதியையும் தளர்த்திக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.

ஒரு ஊரின் முக்கியமான பகுதியை 'இதயப் பகுதி’ என்று சொல்வோம். அப்படியெனில், உடலில் இதயத்துக்கு இருக்கிற முக்கியத்துவத்தைக் கொஞ்சம் உணர்ந்து பாருங்கள்.

முடிந்தால்... இரண்டு நிமிட நேரம் உங்கள் சுவாசத்தைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்களேன்.

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா