Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'சத்தியகிரி விமானம், சத்திய க்ஷேத்திரம், சத்தியகிரி, சத்தியபுரம்னு ஏகப்பட்ட பெயர்கள் கொண்ட திருத்தலத்துக்கு நாம போகப் போறோம், தெரியுமா?'' என்று தாத்தா சொல்ல, பேரன் மலைத்துப் போனான்.

''ஏன் தாத்தா... ஒரே ஊருக்கு இத்தனை பேரா?!'' என்று விழிகள் விரியக் கேட்டான்.

''ஆமாம். அதுமட்டுமா? ஏழு பெருமைகள் கொண்ட திருத்தலம் அது. சத்திய தீர்த்தம் அங்கே இருக்கு. சத்தியவனம்னு இந்த ஊருக்குப் பேரு உண்டு. அவ்வளவு ஏன்... திருமெய்யம்னுகூட ஒரு பேர் இருக்கு. இது காலப்போக்குல மருவி, இன்னொரு பேரும் வந்திருக்கு. அந்தப் பேர்லதான் இன்னிக்கும் எல்லாரும் சொல்றாங்க'' என்று சொல்லிவிட்டு தாத்தா நிறுத்த...

##~##
''ஹய்... எனக்குத் தெரியும். நீங்க திருமெய்யம்னு சொன்னீங்கதானே! இப்ப பஸ்ல கண்டக்டர்கிட்ட, ரெண்டு மூணு பேர் 'திருமயத்துக்கு டிக்கெட் கொடுங்க’ன்னு கேட்டாங்க. அப்படின்னா, இப்ப அந்த ஊர் பேரு திருமயம்தானே?!'' என்று பேரன் கேட்க, அவனைப் பெருமிதத்துடன் பார்த்தபடி, அவனின் கன்னம் கிள்ளிக் கொஞ்சினார் தாத்தா.

திருச்சி- காரைக்குடி சாலையில் உள்ளது திருமயம். புதுக்கோட்டை யில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள திருமயத்துக்கு பஸ் வசதி நிறையவே உண்டு. ஊருக்குள் நுழையும்போதே ஒரு மலை தென்படும். அங்கேதான் திருமால் குடிகொண்டிருக்கிறார்.

''பிரமாதமான கோயில் இது. ஒரு சின்ன மலை. அதன் மீது அழகா கோயில் கொண்டிருக்கார் பெருமாள். 108 திருப்பதிகள்ல, இந்தக் கோயிலும் ஒண்ணு. தவிர, புராண- வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள்ல, இந்தத் திருமயம் கோயிலுக்கும் முக்கியமான இடம் உண்டு'' என்று தாத்தா விவரித்தார்.

''சரி... எதனால திருமெய்யம், சத்தியகிரின்னெல்லாம் பேரு வந்துச்சு தாத்தா?'' என்று கேட்டான் பேரன்.

''வடமொழியில, பிரமாண்ட புராணத்தில் இந்தக் கோயில் பத்திச் சொல்லப்பட்டிருக்கு. சத்திய க்ஷேத்திரம்னு ரொம்ப விரிவா குறிப்பிடப்பட்டிருக்கு. சத்திய க்ஷேத்திரம்னா 'உண்மையின் இருப்பிடம்’னு அர்த்தம். அதனாலதான் இங்கேயுள்ள பெருமாளுக்கு திருமெய்யன்னு பேரு. அப்படின்னா... உண்மையானவன், சத்தியமானவன்னு அர்த்தம்!

இன்னொரு விஷயம் தெரியுமா? திருச்சி ஸ்ரீரங்கத்தை பூலோக வைகுண்டம்னு பெருமையாச் சொல்லுவாங்கன்னு உங்கிட்ட சொல்லியிருக்கேன், இல்லியா..? அந்தத் தலத்துக்கு இணையா அந்தக் காலத்துலேருந்தே இருக்கிற தலம் இது'' என்று தாத்தா சொல்லி முடிக்கவும், பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்கவும் சரியாக இருந்தது. பேரனைக் கையில் பிடித்தபடி இறங்கிய தாத்தா, மெதுவாகச் சாலையைக் கடந்தார்.

கதை கேளு... கதை கேளு...

''அதோ பார்த்தியா மலை! அந்த மலைக்கு மேலேதான் பெருமாள் கோயில் இருக்கு. போலாமா?'' என்று சொல்லிக்கொண்டே கோயிலை நோக்கி நடந்து வந்தார், தாத்தா. பேரன் கண்ணுக்கு முன்னே தெரியும் பிரமாண்டமான அந்த மலையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே வந்தான்.

''யுகங்கள் பலவற்றைக் கடந்து நிற்கிற ஆதித் திருத்தலங்கள்ல இந்தத் தலமும் ஒண்ணு. திருமயம் சத்தியகிரிநாதர், சுமார் 96 சதுர்யுகங்களுக்கு முன்னால எழுந்தருளியிருக்கிறதா சொல்லுது ஸ்தல புராணம்!

இங்கே... இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? எம்பெருமாள் ஸ்ரீமந் நாராயணன், நின்ற கோலத்திலும் கிடந்த திருக்கோலத்திலுமாகக் காட்சி கொடுக்கிறார். திரு மெய்யன், அழகிய மெய்யன், மெய்ய மணாளன்னு ஸ்வாமிக்குத் திருநாமங்கள். உத்ஸவ மூர்த்தியோட திருநாமம் - ஸ்ரீசத்தியமூர்த்தி.

இந்தப் பகுதிகள்ல முக்கியமான குடைவரைக் கோயில் இது. இந்த மலையோட செங்குத்தான தென்முகச் சரிவுல, பெருமாளுக்குக் கோயில் இருப்பது போல சிவபெருமானுக்கும் கோயில் இருக்கு'' என்று சொல்லியபடி, கோயிலுக்குள் நுழைந் தார் தாத்தா, நாராயணா எனும் திருநாமத் தைச் சொல்லியபடியே!

கதை கேளு... கதை கேளு...

அதுவரை மலையைப் பார்த்தபடியும், மலையில் இருந்து ஊரைப் பார்த்தபடியும் வியந்திருந்த பேரன், கோயிலின் உள்கட்டுமானத் தைப் பார்த்ததும் அசந்து போனான். கல்லைக் குடைந்து அழகிய கோயிலாக்கிய நுட்பத்தைப் பார்த்தால், யார்தான் வியந்து போகமாட்டார்கள்?

''சுமார் அறுபதடி தொலைவுல இந்த ரெண்டு ஆலயங்களும் இருக்கு. ஆதியில, சிவன் கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்குமாக ஒரே ஒரு வழிதான் இருந்ததாம்! காலப்போக்குல, நீலகண்டனையும் நீலமேனியானையும் தரிசிக்க தனித்தனி வாசல்கள் அமைச்சு, தனித்தனிக் கோயில்களா மாத்திட்டாங்களாம்! அதனால இப்ப பக்தர்களுக்கு இரண்டு கோயில்களைத் தரிசிக்கிற திருப்தி!'' என்றார் தாத்தா.  

''சரி... கோயிலைப் பார்த்தியா? எவ்வளவு பிரமாண்டம்! எத்தனை நேர்த்தி! செங்குத்தான பாறையை எப்படிக் குடைஞ்சிருப்பாங்க? மலைகளுக்குள்ளே எந்த வெளிச்சத்தை வைச்சு, சிற்பங்களைப் பண்ணியிருப்பாங்க? அதிலேயும், ஒரே கல்லுல சிற்பம் வடிச்ச நுட்பம் என்ன? கல்லைக் குடைஞ்சு கோயில் கட்டியிருக்காங்கன்னா... அதுக்கு உண்டான வசதிகளும் வாய்ப்புகளும் இன்னிக்கி மாதிரி அன்னிக்கிக் கிடையாது. ஆனாலும், இத்தனை நேர்த்தியோட பண்ணிருக்காங்கன்னா... அதுக்குக் காரணம்... அந்தக் கால மக்களுக்கு பகவான் மேல இருந்த அபார பக்திதான்!'' என தாத்தா வியந்தபடியே சொல்லிக் கொண்டு வந்தார்.

''இப்படியரு கோயிலை யார் கட்டினாங்க தாத்தா? யாரோட பிளான்ல இந்தக் கோயில் உருவாச்சு?'' என்றான் பேரன்.

''வேற யாரு..? கல்லுக்கும் சிற்பத்துக்கும் கலை வடிவம் கொடுத்த பல்லவர் காலத்துக் கோயில்தான் இது! பல்லவ மன்னரோட ஆட்சிக் காலத்துலதான் ஏராளமான குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. நரசிம்மவர்ம பல்லவன்னு ஒரு ராஜா... பல்லவ தேசத்துல நல்லாட்சி கொடுத்த ராஜாக்கள்ல முக்கியமானவர் இவர்.

கி.பி.630 - 668-தான் இந்த ராஜாவோட ஆட்சிக் காலம். அந்த காலகட்டத்துல கட்டப்பட்டதுதான் திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயில். சத்தியமும் சாந்நித்தியமும் இத்தனைக் காலங்கள் கடந்தும் நிக்கிற அற்புதமான கோயில்டா கண்ணா இது! சொல்லப்போனா... எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காம, தேசமும் மக்களும் செழிப்பா இருக்கணும்கிற ஒரே நோக்கத்துலதான் மன்னர்கள் அந்தக் காலத்துல இப்படியான கோயில்களைக் கட்டியிருக்காங்க! அதனாலதான் எத்தனையோ படையெடுப்புகள் எல்லாம் வந்தும்கூட, இதுமாதிரியான ஆலயங்களை யாராலயும் எதுவும் செய்யமுடியலை'' என்று நெஞ்சு நிமிர்த்தி, கம்பீரத்துடன் தாத்தா சொல்ல... பேரன் இப்போது தாத்தாவை வியந்து பார்த்தான்.

- தரிசிப்போம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்