Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!

மூச்சு... பேச்சு!

வாழ்க வளமுடன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சாந்தமு லேக சௌக்கியமு லேது’ என்கிறார் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள். அதாவது, சாந்தமும் அமைதியும் இல்லாது போனால், அவர் எத்தனைப் பெரிய மனிதராக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, வேதங்களைக் கரைத்துக் குடித்தவராக இருந்தாலும் சரி... சௌக்கியமாக இருக்கமுடியாது என்கிறார்.

மனத்துள் சாத்விக குணம் இருக்கவேண்டும் என்பது ரொம்பவே முக்கியம். அமைதியான நிலையில் மனம் இருந்துவிட்டால், எதிலும் ஒரு நிதானம் வந்துவிடும். நிதானத்துடன் எதையும் அணுகத் துவங்கிவிட்டால், செயலில் தெளிவு வந்துவிடும். தெளிவுடன் செயலாற்றுகிறபோது, நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றியை அடைந்துவிட முடியும்.

எதற்கெடுத்தாலும் பரபரப்புடனும் பதற்றத்துடனும் இருக்கிற அன்பர் ஒருவர் வந்தார். ''சுவாமி, நான் கொஞ்சம் முன்கோபக்காரன். சட்டுன்னு கோபம் வந்துடும் எனக்கு. உடனே தாட்பூட்னு கத்த ஆரம்பிச்சிடுவேன். அப்படிக் கோபப்பட்டுக் கத்திக் கூப்பாடு போட்டு, டென்ஷனா இருக்கிற நேரம் ஒரு அஞ்சு நிமிஷமோ பத்து நிமிஷமோதான்! ஆனா, அடுத்த இரண்டு மூணு மணி நேரத்துக்கு என்னால இயல்பாவே இருக்கமுடியலை. கை கால்கள்ல லேசா நடுக்கம் வருது. பொலபொலன்னு வியர்த்துக் கொட்டிக்கிட்டே இருக்கு. வேலைல ஆழ்ந்த கவனம் செலுத்தமுடியலை. அப்படியே செய்தாலும், எல்லாமே தப்பும் தவறுமாத்தான் முடியுது.

நெஞ்சுக்கூடு வேகமா இயங்குது. சீக்கிரமே சோர்வாயிடுறேன்'' என்றார்.

##~##
அந்த அன்பரிடம் ''பத்து மணிக்கு வரவேண்டிய ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக வரும் என அறிவிக்கிறார்கள். நீங்கள் என்ன கோபப்பட்டாலும், கூப்பாடு போட்டாலும் அந்த ரயில் 20 நிமிடம் தாமதமாகத்தான் வரும். இதை உணர்ந்துகொண்டால், கோபம் வருமா என யோசியுங்கள்'' என்றேன்.

தொடர்ந்து, ''உங்கள் இரு சக்கர வாகனத்தை நண்பருக்கு இரவல் கொடுக்கிறீர்கள். குறுக்கே மாடு வந்தது என்றோ, குழந்தைகள் வந்துவிட்டார்கள் என்றோ அவர் வண்டியோடு கீழே விழுந்து, ஹெட்லைட்டை உடைத்துவிட்டால், நீங்கள் உடனே, 'இதுக்குத்தான் எவனுக்கும் நான் வண்டியைக் கொடுக்கறதே இல்லை. அடுத்தவன் வண்டியாச்சேன்னு பொறுப்பா, பார்த்து ஓட்ட வேணாமா?’ என்று கத்துவதாலோ, திட்டுவதாலோ ஒரு பயனும் இல்லை'' என்றும் சொன்னேன்.

அவர் மௌனமாக இருந்தார். ''அட, விடப்பா! வண்டியை ரிப்பேர் பண்ணிக்கலாம். ஆனா, அந்தக் குழந்தைக்கோ உனக்கோ ஒண்ணும் ஆகலியே?! அது போதும்!'' என்று சொல்லிப் பாருங்கள்; சட்டென்று உங்கள் மனசுக்குள் ஓர் அமைதி படர்வதை உணர்வீர்கள். அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும்போது ஒருவிதமாகவும், கோபமாகவும் ஆவேசமாகவும் இருக்கும்போது வேறு விதமாகவும் நம் மூச்சுக்காற்று இயங்குகிறது என்பது தெரியுமா உங்களுக்கு? முதலில் அதைத் தெரிந்து கொண்டுவிட்டீர்கள் என்றால், அடுத்தடுத்த பயிற்சிகள் இன்னும் நிறையவே உங்களுக்குப் புரியவைக்கும். அவற்றையெல்லாம் மிக எளிதாக உங்களால் உணரமுடியும்'' என்று சொல்லிவிட்டு, பத்து நாட்கள் கழித்து அந்த அன்பரை வரச் சொன்னேன்.

சந்தோஷம், துக்கம், அவமானம், வெற்றி, தேர்வு, உடல்நலமின்மை, அவசரம், வேகம், நல்லது, கெட்டது, தியாகம், ஏமாற்றுதல், ஏமாறுதல், அன்பு, கருணை, நேசமில்லாத நிலை, புரிந்துகொள்ளாத விரக்தி, நினைத்தது நிறைவேறாத வெறுமை... என எல்லா உணர்வுகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்.

எவரையோ காயப்படுத்தி அல்லது எவராலோ காயப்பட்டு, அவமானங்களில் சிக்கிச் சுழன்று, வேதனைகளில் துவண்டு, இயலாமைகளால் மனம் நொந்து... என ஒவ்வொரு சூழல்களிலும் நாம் நம் மூச்சைக் கவனித்தால், அதன் தப்பிப் போன தாள லயத்தைப் புரிந்து கொள்ளமுடியும். ஆகவே, மூச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நம் கடமை என்பதை உணருங்கள்.

உணர்வுகளுக்கும் மூச்சுக்கும் எப்படித் தொடர்பு இருக்கிறதோ, அதேபோல் உணவுக்கும் மூச்சுக்கும் கூடத் தொடர்பு இருக்கிறது. வயிறுமுட்டச் சாப்பிட்டுவிட்டு, ஒரு பத்தடி நடந்து பாருங்கள்; மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, அந்த மூச்சுக் காற்று சற்றே சிரமப்படும். அதாவது, முதுகுக்குப் பின்னே மூட்டையைச் சுமந்தபடி நடந்தால் எப்படி மூச்சு வாங்குமோ, அதுபோலத்தான் வயிற்றுக்குள் உணவை அடைத்து வைத்துக்கொண்டு நடந்தாலும் மூச்சு வாங்கும். கிட்டத்தட்ட பொதி சுமப்பதற்கு இணையானதுதான் வயிற்றில் உணவைச் சுமப்பதும்!

வாழ்க வளமுடன்!

கரணம்தப்பினால் மரணம் என்பார்கள். மூச்சின் லயம் சிறிது மாறினாலும், உடலில் சிக்கல்கள் ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அப்படி சிக்கல்கள் ஏதும் வராமல் இருக்கவேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவதுதான் மனவளக் கலைப் பயிற்சிகள்.

பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சியை எவர் ஒருவர் தினமும் செய்து வருகிறாரோ, அவருக்குச் சுவாசத்தில் உள்ள கோளாறுகள் அனைத்தும் நீங்கிவிடும். சுவாசத்தின்படியே நம்முடைய ஒருநாள் கழிகிறது. அந்த நாளை இனிமையாக்குவதும், வேதனைக்கு உள்ளாக்குவதும் சுவாசம்தான். ஆகவே, மனவளக்கலைப் பயிற்சியின் உடல் தளர்த்துதல் எனும் ஒரு பிரிவில், மார்புப் பகுதியையும் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

'மார்பு மற்றும் அதன் உள் உறுப்புகளைத் தளர்த்திக் கொள்கிறேன்’ என்று உடல் தளர்த்தி, மல்லாந்து படுத்துக்கொண்டு, கண்கள் மூடி, மனசுக்குள் ஒரு கட்டளை போல் சொல்லிக் கொள்ளுங்கள். ஒரேயரு முறை உடல் தளர்த்தி, நம் ஒவ்வொரு உறுப்புகள் அனைத்தையும் தளர்த்தி ஓய்வு தந்துவிட்டீர்கள் என்றால், பிறகு உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் உங்களுடன் இனிமையாகப் பேசும்; பேசி உறவாடும்! 'அப்புறம் இன்னிக்கு எப்ப ரிலாக்ஸ் பண்ணிக்கப் போறீங்க? நாங்க ரெடி!’ என்று சொல்லாமல் சொல்லும்.

ஓய்வுக்காலத்தில் உள்ள வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் எப்போதும் வேலை வேலை என்றே ஓடிக்கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் சரி... இந்த உடல் தளர்த்துதல் பயிற்சியை மேற்கொள்வது உத்தமம். இது மனத்தையும் உடலையும் ஒரே நேரத்தில் ரிலாக்ஸ் செய்யும் என்பது உறுதி.

சரி... அந்த முன்கோபக்காரரைப் பார்ப்போம். அவர் பத்து நாட்கள் கழித்து, பயிற்சிக்கு வந்தார். ''சுவாமி, கோபமா இருக்கும்போதும், ஒருத்தரை பொறாமையாப் பாக்கும்போதும், நாம நினைச்சபடி நடக்கலையேன்னு துவண்டுகிடக்கும்போதும் சட்டுன்னு என்னோட மூச்சின் லயம் மாறிடுச்சு சுவாமி! கோபப்படுறதுல அர்த்தமே இல்லைன்னு புரிஞ்சுடுச்சு. ஒவ்வொரு முறையும் எனக்கு வர்ற கோபம் சாப்பாட்டுப் பக்கம் போயிடுது. சாப்பாட்டைப் புறக்கணிச்சிட்டுப் படுக்கையில போய் விழுந்துடுறேன். கோபமும் ஆவேசமும் பட்டினியுமா படுக்கப்போனா, தூக்கம் வருவேனாங்குது. கொட்டக் கொட்ட ராப்பிசாசாட்டம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா நடந்து, டி.வி. பார்த்து, விடியற்காலை 4 மணிக்கு அசதில அப்படியே விழுந்து தூங்கிட்டு, காலைல அரைத் தூக்கத்துல எழுந்து, அவசர அவசரமா குளிச்சு ரெடியாகி, வேலைக்கு ஓடி, மத்தியானம் கண்ணுல தூக்கம் கட்டி நிக்க... தலைவலி வந்து, அந்த அயர்ச்சில பாக்கறவங்ககிட்டலாம் எரிஞ்சு விழுந்து... சேச்சே! இதுபோல ஒரு முட்டாள்தனம் இல்லைன்னு தெளிவா தெரிஞ்சிடுச்சு சுவாமி!'' என்று கண்ணீருடன் சொன்னார் அந்த அன்பர்.

மூச்சைக் கவனிக்க... பேச்சிலும் சிந்தனையிலும் நிதானம் கிடைக்கும். நிதானம் பதற்றத்தை ஒழிக்கும். பதறிய காரியம் சிதறும்; பதறாத காரியம் சிதறாது! புரிகிறதா அன்பர்களே!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism