Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

Published:Updated:
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...

'புதுக்கோட்டை பக்கத்துல, திருமயம் மலையில இருக்கிற இந்தக் கோயில் ரொம்பவே பிரசித்தி வாய்ந்தது. இங்கே இருக்கிற ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாள், சாந்நித்தியம் நிறைஞ்சவர். அதனாலதான் பல்லவ மன்னர்கள் மட்டும் இல்லாம, பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், விஜய நகரப் பேரரசர்கள், சேதுபதி ராஜாக்கள், நாயக்க மன்னர்கள், முத்தரையர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்னு நிறையப் பேர் திருப்பணி செய்திருக்காங்க, இந்தக் கோயிலுக்கு!'' என்று தாத்தா மொத்தச் சரித்திரத்தையும் ஒரு எஸ்.எம்.எஸ். அளவில் சொல்லி முடித்தார். பேரன் ஆச்சரியத்துடன் அந்தக் கோயிலை அண்ணாந்து பார்த்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தெற்குப் பார்த்த ராஜகோபுரம் இருக்கே... இது ஆரம்பத்துல இல்லையாம். பிற்காலப் பாண்டியர்கள் காலத்துல, செங்கல்- சுண்ணாம்பைக் கொண்டு கட்டப்பட்ட கோபுரம் இது! இந்தக் கோயில்ல ஒரு விஷயம்... கோபுரத்துல பொம்மைகள் வைக்கப்படலை. ஆனா, கோயில் விமானத்துல பொம்மைகள் நிறையவே இருக்கு, பார்த்தியா?'' என்று கேட்டுவிட்டு, கோபுரத்தையும் விமானத்தையும் பார்த்து விளக்கினார் தாத்தா.

##~##
''உள்ளே நுழைஞ்சதும் முதல் மண்டபத்தின் இடது பக்கத்துல ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோருக்கு சந்நிதிகள்

இருக்கு. வலது பக்கத்துல, வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடக்கறதுக் காகவே ஒரு மண்டபம் இருக்கு. எவ்ளோ அழகா இருக்கு பாரேன்! அதுக்கு அடுத்தாப்லதான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் சந்நிதியும், வாகனங்கள் நிக்கிறதுக்கான மண்டபமும் இருக்கு. இதோ... முதல் மண்டபத்துல, தூண்கள் எல்லாத்துலயும் எவ்ளோ சிற்பங்கள் எத்தனை அழகா வடிக்கப்பட்டிருக்கு, பார்!'' என்று விவரித்தார் தாத்தா.

உடனே எழுந்து மண்டபத் தூண்களைத் தொட்டு, தடவி, ஊடுருவிப் பார்த்தான் பேரன்.

''இந்தக் கோயில்ல ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு எதிர்ல, தூண்ல... பொம்மியைத் தூக்கிக்கிட்டு நிக்கிற மதுரைவீரன் சாமியைத் தத்ரூபமா வடிச்சிருக்காங்க. இதுக்கு எதிர்த்தாப்ல இருக்கிற தூண்ல சங்கு, சக்கரம்,

ஜடாயு, அதன் மீது ஸ்ரீராமர், அன்னப்பறவை, ஸ்ரீஅனுமன் என அனைத்துத் திருமேனிகளும் ரொம்பவே அற்புதமா, சிற்பமா வடிக்கப் பட்டிருக்கு. பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாளைத் தரிசனம் பண்ணிட்டு, எல்லா சந்நிதிகளுக்கும் போயிட்டு வந்து, கடைசியா அந்தத் தூணுக்குப் பக்கத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுக் கிளம்பறதை வழக்கமா வைச்சிருக்காங்க. இந்த இடத்துல நல்ல வைப்ரேஷன் இருக்கும்னு நினைக்கிறேன். நாமளும் கோயில்ல தரிசனம்லாம் முடிஞ்சதும் அங்கே உட்கார்ந்துட்டுக் கிளம்புவோம். மறக்காம ஞாபகப்படுத்து!'' என்று தாத்தா சொல்ல... ''நானாவது மறந்துடுவேன்; நீங்களாவது மறக்கறதாவது!’ என்று பேரன் சொல்ல... அடேங்கப்பா, தாத்தாவின் முகத்தில் அப்படியரு பெருமிதம்!

''பதினாறு திருக்கரங்களோடு, அந்தக் கரங்கள்ல வஜ்ரம், கேடயம், சங்கு, சக்கரம், கோடரி, வில், அம்பு, உலக்கை, நாகபாசம், சூலம், அனல், அங்குசம், கலப்பை, குறுந்தடி, கதை, கமல மொட்டுன்னு ஏந்தியபடி காட்சி தர்ற ஸ்ரீசுதர்சனர்- அதாவது ஸ்ரீசக்கரத்தாழ்வார் ரொம்பவே விசேஷம் இங்கே! இவரை வணங்கி வழிபட்டா, எதிரிகள் தொல்லை முழுசா ஒழியும்னு ஒரு ஐதீகம். அதேபோல, ஆடிப்பூர தினத்துல ஸ்ரீஆண்டாள் சந்நிதி அமர்க்களப்படுமாம். அன்னிக்கு, ஸ்ரீஆண்டாளுக்குச் செய்யற அலங்காரத்துல, அவள் முகத்துல கூடுதலா தெரியற குதூகலத்தையும் சந்தோஷத்தையும் நம்மால பார்த்து உணரமுடியும்.

அப்புறம், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கொள்ளை அழகு! இவருக்கு பானக நைவேத்தியம் செஞ்சு வேண்டிக்கிட்டா, நல்லாப் படிப்பு வரும்; கை நிறையச் சம்பளம் கிடைக்கிற மாதிரியான நல்ல உத்தியோகம் கிடைக்கும்; வெளிநாட்ல வேலை, பதவி உயர்வு, குழந்தை வரம்னு எதைக் கேட்டாலும், அதைத் தந்து அருள்பாலிக்கற கருணாமூர்த்தி இந்த நரசிம்மர்'' என்றார் தாத்தா.

கதை கேளு... கதை கேளு...

''பங்குனி உத்திர நாள்னா, முருகப்பெருமான் தலங்கள்ல கோலாகலமா விழாக்கள் நடக்கும்தானே?! அது மாதிரி, அந்த நாள்ல இங்கேயும் திருவிழா பிரமாண்டமா நடக்கும். அழகிய மெய்யனான ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாள், தாயார் சந்நிதிக்குச் சென்று எழுந்தருள்வார். கனிவும் கருணையுமா, சகல கடாட் சமும் அருள்வதற்குத் தயாரா இருக்கிற தாயார், அன்னிக்குப் பூரித்துப் போவாளாம்! அவளோட திருநாமம் - ஸ்ரீஉய்யவந்தாள் நாச்சியார்.

கிழக்குப் பார்த்தபடி தரிசனம் தர்ற தாயாரைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். மாங்கல்ய பாக்கியத்தை வழங்கும் மகராசி, இந்தத் தாயார். மனநோயால் பாதிக்கப்பட்டவங்க, பிசாசு, பில்லி சூனியம்னு தீய சக்தியால சிக்கித் தவிக் கிறவங்க, இவளைத் தரிசனம் பண்ணினாப் போதும்... எல்லாப் பிரச்னைகளும் பனி போல விலகிடும்கறது பக்தர்களோட நம்பிக்கை.

இன்னொண்ணு தெரியுமா... திருக்குடந்தை தாயார் ஸ்ரீகோமளவல்லி நாச்சியாரைப் போலவே இந்தத் தாயாரும் கோயிலை விட்டு வெளியே வரவே மாட்டா. வருஷத்துல ஒரேயரு நாள் மட்டும், தை மாத கணு உத்ஸவத்தின்போது, தாயாரோட உத்ஸவத் திருமேனி, பிராகாரத்துல வர்ற அழகைப் பாக்கப் பாக்க அப்படியரு பரவசத்தைத் தரும். ஆனாலும் என்ன... சந்நிதியை விட்டுக் கோயிலுக்குள்ளே வலம் வருவாளே தவிர, வீதியுலாவுக்கெல்லாம் வரமாட்டா தாயார்!'' என்று சிலாகித்தபடியே சொன்னார் தாத்தா.

''அப்படியா தாத்தா? அன்னிக்கி என்ன விழா நடக்கும்?'' என்று ஆவலுடன் கேட்டான் பேரன்.

''கோயில்ல சத்தியபுஷ்கரிணி தீர்த்தம் இருக்கு இல்லையா... அந்தத் தீர்த்தக் குளத்தோட மேற்குப் படித்துறைக்கு முன்னால, கோயில் வாசப்படியைத் தாண்டாம, கோயிலுக்கு உள்ளேயே இருப்பா தாயார். அங்கே எழுந்தருளி, தீர்த்தமாடி, அழகிய மெய்யருடன் ஜோடியாக் காட்சி தர்ற அழகுக்கு எதுவும் ஈடாகாது. அன்னிக்குப் பக்தர் களுக்கு, முக்கியமா பெண்களுக்கு மங்கலப் பிரசாதமா எண்ணெய் (நல்லெண்ணெய்), மஞ்சள்

பிரசாதம் தருவாங்க. எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சு, மஞ்சள் பூசிக்கிட்டா, மாங்கல்ய பலம் கிடைக்கும்; நினைச்சதெல்லாம் நிறைவேறும்னு ஒரு நம்பிக்கை!

எண்ணெய், சூட்டைத் தணிக்கும்; மஞ்சள் குளிர்ச்சியைத் தரும். உடம்புல சூடு தணிஞ்சாலே புத்தி குளிர்ச்சியாயிடும். பதற்றமே இல்லாம தெளிவா யோசிக்கும்; துடிப்பாச் செயல்படும். நீயும் தாயாரையும் பெருமாளையும் நல்லா வேண்டிக்கோ. 'படிப்பைக் கொடுப்பா பெருமாளே’னு பிரார்த்தனை செய்'' என்று சந்நிதியில் வந்து, கண் குளிரத் தரிசித்த தாத்தா, கண்மூடிப் பிரார்த்தித்தார். பேரனும் அப்படியே கரம் குவித்து வேண்டிக் கொண்டான்.

- தரிசிப்போம்
படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism