Published:Updated:

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

Published:Updated:
வானம் தொடுவோம்!
வானம் தொடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருநாள், பார்வதிதேவிக்கு மிகவும் அலுப்பாக இருந்தது. சிவபெருமானிடம் வந்தவள், தனக்கு ஒரு கதை சொல்லுமாறு கேட்டாள். பனி சூழ்ந்த கயிலாயத்தில், ஒரு குகையின் உள்ளே, பார்வதிதேவிக்குக் கதை சொன்னார் சிவபெருமான். இதுதான், முதன்முதலாக சொல்லப்பட்ட கதை.

இந்தக் கதை, மலைச் சிகரத்தின் பனிபடர்ந்த இடத்தில் கூறப்பட்டதால், அங்கேயே உறைந்துபோய், யாருக்கும் கேட்கவில்லை - ஒரே ஒரு பறவையைத் தவிர!

அந்தப் பறவை, தான் கேட்ட கதையை ஒரு மீனுடன் பகிர்ந்துகொண்டது. அந்த மீன், அதை ஒரு கந்தர்வனுடன் பகிர்ந்துகொள்ள... அந்தக் கந்தர்வன், அதை ஒரு யட்சனிடம் சொன்னான்.  

அந்தக் கதை மனித குலத்தை அடையும் முன், பல வடிவங்கள் எடுத்துவிட்டது. அது ஒரு கதையாக அல்லாமல், பல நூறு கதைகளாக வழங்கப்பட்டன.  

வெவ்வேறு கதாபாத்திரங்கள், விதவிதமான கதை முடிச்சுகள்; முடிவுகளும் பலப்பல விதம். அதை 'பிருஹத் கதா’ என்றார்கள். அதாவது, மிகப் பெரிய கதை என்று பொருள்.  

பின்னர், அதுவே 'கதாசரித்சாகர்’ என்று வழங்கப்பட்டது. அதற்கு 'கதைக் கடல்’ என்று அர்த்தம். கதைக்குள் கதையாக இழுத்துக்கொண்டே போகும். அப்படி ஒரு சுவாரஸ்யம் அதில் இருக்கும்.

மிருகங்களும் பறவைகளும் கதை கேட்பதில்லை. கதை சொல்வதற்கான சாத்தியக்கூறு அவற்றிடம் இல்லை. மனிதர்களுக்கு இருப்பதுபோன்ற மூளைப் பகுதி அவற்றுக்கு இல்லை.

நமது மூளைதானே நம்மைச் சிந்திக்க வைக்கிறது?  கற்பனை செய்ய வைக்கிறது?  

கற்பனை இல்லாமல் கதைகள் இல்லை. மிருகங்களைப் பொறுத்தவரை, அவற்றுக்குக் கதைகள் தேவை இல்லை. பசிக்கும்போது சாப்பிடுகின்றன; தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கின்றன. மனித குலம் அப்படிப்பட்டதல்ல. நமக்கு ஏன் பசிக்கிறது, ஏன் தாகம் எடுக்கிறது என்று நமக்குத் தெரிய வேண்டும். அந்தக் கேள்வி, நம்மைக் குடைகிறது. நாம் அதற்கு ஒரு விளக்கம் கூறுகிறோம். அதற்கு ஒரு கதை நமக்குத் தேவைப்படுகிறது. ஒன்றா... இரண்டா... நம்மிடையே ஏராளமான கேள்விகள் இருக்கின்றன; அவற்றுக்குப் பதில்களாக நிறையக் கதைகளும் இருக்கின்றன.

வானம் தொடுவோம்!

யாரோ சொன்னார்கள், 'பசியும் தாகமும் கடவுள் நமக்குக் கொடுத்த சாபம்’ என்று! ஏனென்றால், நாம் அவர் சொன்னதைக் கேட்கவில்லையாம்.

'கடவுளா, யார் அது?’ என்று கேட்பவர்களும் உண்டு. கதைகளில் இருந்து நமக்கு ஏதாவது கருத்து கிடைக்குமா? கதைகள் நம்மை சிந்திக்க வைக்கின்றனவா? கதைகள் நமக்குத் தேவையா? இவை குறித்து விவாதித்தால், முடிவே இருக்காது.

கதைகளுக்குப் பின்னால் வந்ததுதான் விஞ்ஞானம். அது, கதைகள் நமக்குச் சொன்ன எல்லாவற்றையும் மறுத்தது. இப்போது சில விஞ்ஞானிகள் கடவுள் இல்லை என்கிறார்கள். சாஸ்திர வல்லுநர்களும் கதைகளில் சொல்லப்பட்ட ஹீரோ, வில்லன் எல்லாம் உண்மையல்ல என்பார்கள்.  

ஒரு ஹீரோவை வர்ணிக்க, எந்தவிதமான நிபந்தனையோ வரைமுறையோ கிடையாது. ஒருவருக்கு ஹீரோவாக இருப்பவர், இன்னொருவருக்கு வில்லனாக இருப்பார். எல்லாமே நம் கற்பனையில் உதிப்பவைதாம்!

டி.வி. சுவிட்சைப் போட்டால் போதும்; அல்லது, செய்தித்தாளைப் புரட்டினால் போதும். கதை சொல்வோர் எப்படி நமக்காக ஒரு புதிய உலகத்தையே சிருஷ்டிக்கிறார்கள், திருப்பங்களையும் எதிர்பாராத முடிவுகளையும் திணிக்கிறார்கள், ஒரே கதையை வைத்துக்கொண்டு சிரிக்கவும் வைக்கிறார்கள், அழவும் வைக்கிறார்கள் என்பதை எல்லாம் அறியலாம்.

இவற்றை நாம் உண்மை என்று பிரமிக்கிறோம். உண்மையில், அதிலிருந்து ஏதேனும் உண்மை வெளிப்படுகிறதா?

ஒருவேளை, இந்தக் கேள்வியை நம்மிடையே தூண்டவே, சிவபெருமான் பார்வதிதேவியிடம் முதன்முதலாகக் கதை சொன்னாரோ?

இருக்கலாம். கதைகளிலிருந்து உண்மை வெளிப்படலாம்; அல்லது, உண்மையே சற்றுத் திரிந்து கதையாக உருப்பெறலாம்.

ஆனால், கதைகளே இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். நம்மிடையே ஹீரோவோ, வில்லனோ யாருமே இருக்கமாட்டார்கள். வீர தீர சாகசங்கள் எதுவுமே இருக்காது;  சொர்க்கம் இருக்காது; நரகம் இருக்காது. கதைகள் இல்லாத வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது.

உண்மையைச் சொல்வது என்றால், கதைகள் நம் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்து, மனித குலத்துக்கு அத்தியாவசியமாகிவிட்டன.