தொடர்கள்
Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...
##~##
'ஓ
ம் நமோ நாராயணாய! இந்த மந்திரம்தான், எல்லா மந்திரத்தையும் விடச் சிறந்ததுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. இந்த எட்டெழுத்து மந்திரத்தை உச்சரிச்சபடி, வைணவக் கோயிலைத் தரிசனம் பண்றது ரொம்பவே நல்லது. அப்படித் தரிசனம் பண்ணி, பலன்கள் தரக்கூடிய இருபத்து எட்டு தலங்களைச் சொல்லி வைச்சிருக்காங்க. அதுல முதலாவது தலம்னு திருமயம் தலத்தைப் போற்றிக் கொண்டாடுறாங்கன்னா பாரேன்'' என்று தாத்தா, திருமயம் திருத்தலத்தைப் பற்றியும் நாராயண மந்திர மகிமையைப் பற்றியும் பேரனிடம் விவரித்தார்.

''இந்தத் தலத்துக்கு வந்து, எவர் ஒருத்தர் எட்டெழுத்து மந்திரத்தை ஜபிச்சபடி, கோயில் பிராகாரத்துல வலம் வந்து வேண்டிக்கறாங்களோ, அவங்களோட இந்த பூலோக வாழ்க்கைக்கு உண்டான சகல சம்பத்துகளையும் தந்து, அவங்களை நிம்மதியா வாழ அருள்வார் பெருமாள். அதேபோல, அவங்களோட கர்மா, அதாவது கடமைகள் எல்லாம் முடிஞ்சதும் தன்னோட திருவடியில அவங்களைச் சேர்த்துக்கிட்டு, மோட்ச கதி கொடுத்து பேரருள் புரிவார்னு சொல்றது ஸ்தல புராணம்'' என்று சொல்லிவிட்டு, கண்கள் மூடி, நாராயண மந்திரத்தை உதடு அசைக்காது ஜபிப்பதில் மூழ்கி, பிறகு அதிலேயே ஓர் ஐந்து நிமிடம் லயித்துப் போனார் தாத்தா.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த பேரனும் கண்களை மூடிக்கொண்டு, நிமிர்ந்து உட்கார்ந்தான். உள்ளுக்குள் கருவறையில் பிரமாண்டமாக காட்சி தரும் பெருமாளை நினைத்துக் கொண்டான். 'ஓம் நமோ நாராயணாய’ மந்திரத்தை, ஜபிக்கத் துவங்கினான். குழந்தைகளின் முதல் ரோல்மாடல், பெரியவர்கள்தானே! அவர்களைப் பார்த்துப் பார்த்துத்தானே நாளைய தலைமுறையினர் வளர்கிறார்கள்?!

கதை கேளு... கதை கேளு...

சிறிது நேரத்துக்குப் பிறகு கண்களைத் திறந்தார் தாத்தா. உள்ளே ஏதோ கிடைத்துவிட்ட பரவசம் அவர் முகத்தில் தெரிந்தது. ''புத்திர பௌத்திர சம்பத்துகள் மொத்தமும் தரக்கூடிய க்ஷேத்திரம்பா இது. ஞானமும் யோகமும் வழங்கக் கூடிய தலம். 'எனக்கு நல்லாப் படிப்பு வரணும். படிக்கறதெல்லாம் புத்தியில ஏறணும். நிறைய மார்க் எடுத்து, பெரிய படிப்பெல்லாம் படிச்சு, கைநிறைய சம்பாதிக்கற மாதிரி உத்தியோகத்துக்குப் போகணும்னு உனக்காக வேண்டிக்கிட்டேன். நீயும் நல்லா வேண்டிக்கோ!

இந்த திருமயம் கோயிலைப் பத்தி இன்னொரு விசேஷம் என்ன தெரியுமா? தலம் சிறப்பு, தீர்த்தம் சிறப்பு, மூர்த்தம் சிறப்புன்னெல்லாம் தனித்தனியாச் சொல்லுவாங்க ஒவ்வொரு கோயிலையும்! இங்கே தீர்த்தம் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.

ஆமாம். சத்தியகிரின்னு புராணங்கள் போற்றக்கூடிய இந்தத் தலத்துல, ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாள்னு திருநாமம் கொண்டு சேவை சாதிக்கிறார் திருமால். இங்கேயுள்ள புஷ்கரணியோட பேரு சத்திய தீர்த்தம். சின்ன தீர்த்தக் குளம்தான்னாலும் கூட, புண்ணிய நதிகளுக்கு இணையானதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.

இன்னும் சொல்லணும்னா... திருச்சிக்குப் பக்கத்துல திருவெள்ளறைன்னு ஒரு ஸ்தலம் இருக்கு. ஸ்ரீபுண்டரீகாக்ஷன்னு பெருமாளோட திருநாமம். அந்தக் கோயிலுக்கு உன்னை ஒருநாள் கூட்டிட்டுப் போறேன். அவ்ளோ பிரமாதமான கோயில் அது. ஆனா இப்ப சொல்ல வந்த விஷயம் அது இல்லப்பா. அந்தக் கோயில்ல உள்ள தீர்த்தமும் ரொம்ப விசேஷம். அதாவது 108 திருப்பதி ஸ்தலங்கள்ல, மகத்துவம் வாய்ந்த தீர்த்தங்களைக் கொண்டதுன்னு திருவெள்ளறை திருத்தலத்தையும் திருமெய்யம்னு சொல்லப்படுற திருமயம் தலத்தையும் முன்னோர்கள் சொல்லிருக்காங்க!

இங்கே, திருமயத்துல இருக்கிற தீர்த்தம் - சத்திய தீர்த்தம். இந்தத் தீர்த்தக்குளத்தோட சிறப்பு என்ன தெரியுமா? தாமரை மலரைப் போல வடிவத்துல, எண்கோண வடிவத்தைக் காட்டினபடி அற்புதமா இருக்கு, தெரியுதா? எட்டுத் திக்குகளுக்கு ஒரு படித்துறைன்னு பார்க்க எவ்ளோ அழகா இருக்கு பார்.

அதுமட்டுமா? எட்டுத் திக்குகளிலும் இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்னு அஷ்டதிக் பாலகர்களும் வாசம் செய்து அருள்பாலிப்பதா ஐதீகம்'' என்று சொல்லி திருக்குளத்தைக் காட்டினார் தாத்தா. பேரன் குளத்தையும் அதன் அழகையும் கண்டு மெய்ம்மறந்து நின்றான்.

கதை கேளு... கதை கேளு...

''இந்தத் தீர்த்தத்தை தலையில் தெளிச்சுக்கிட்டு, கண்களில் ஒற்றிக் கொண்டு, கொஞ்சமே கொஞ்சமாக குடித்தால் போதுமாம். நம்மைச் சுற்றியுள்ள தீய சக்திகளெல்லாம் ஓடிடும்; நோய் நொடியிலேருந்து நிவாரணம் கிடைச்சிடும்; இதுவரை செஞ்ச சகல பாபங்கள்லேருந்து விமோசனம் கிடைச்சிடும்னு ஒரு ஐதீகம்; நம்பிக்கை.

இன்னொண்ணையும் சொல்றேன் கேட்டுக்கோ. எப்பெல்லாம் முடியுதோ அப்பெல்லாம் இந்தக் கோயிலுக்கு வந்து, இந்தத் தீர்த்தத்தை தலைல தெளிச்சுக்கிட்டு, நாராயண மந்திரத்தை ஆயிரத்தெட்டு, பத்தாயிரத்தெட்டுன்னு சொல்றது மகா புண்ணியமாம்! அப்படி இப்படின்னு எட்டு லட்சம் முறை இந்த மந்திரத்தை ஜபிச்சா... ஏழேழு ஜென்மத்துப் பாபமும் விலகி, புண்ணியங்கள் கிடைச்சிடும். பித்ருக்களோட ஆசீர்வாதம் கிடைச்சிடும். வைகுண்ட பதவியை அடையலாம். அப்படி மந்திரம் ஜபிச்சவங்களுக்கு மறுபிறவி இருக்காதாம்!

ஆதிசேஷன், இந்த சத்தியகிரியிலதான் அஷ்டாட்சர மந்திரத்தை அதாவது எட்டெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து ஜபிச்சு, தவம் பண்ணினான். அதன் பலனாத்தான், திருமால் தனக்குப் பக்கத்துலயே இடம் கொடுத்தார். அதுமட்டுமா... திருப்பாற்கடல்ல ஆதிசேஷன் மேல பள்ளிகொண்டும் இருக்கிறார். இது எப்பேர்ப்பட்ட பாக்கியம் தெரியுதா? அதனாலதான் அத்தனை பிரமாண்டமான ஆதிசேஷன் மேல, அவ்ளோ பிரமாண்டமான பெருமாள் இங்கே சந்நிதி கொண்டிருக்கார் போல!'' என்று பிரமிப்பைக் கூட்டியபடியே பேசிக் கொண்டிருந்தார் தாத்தா.

''ஆமாம் தாத்தா, பெருமாள் எவ்ளோ பிரமாண்டம்'' என்று விழிகள் விரியச் சொன்னான் பேரன்.

''பின்னே... சுமார் முப்பதடி நீளத்துல ஸ்ரீசத்திய மூர்த்தி பெருமாள் காட்சி தர்றார். இத்தனை பிரமாண்டமான பெருமாளை இன்னொரு முறை தரிசனம் பண்ணணும்னு ஆசையா இருக்கு. உள்ளே போகலாமா'' என்று கிட்டத்தட்ட கெஞ்சுகிற பாவனையில் சிரித்தபடி தாத்தா கேட்க... ''அட... எனக்கும்தான் தாத்தா. நான் சொல்லணும்னு நினைச்சேன். நீங்களே சொல்லிட்டீங்க. வாங்க போகலாம் பெருமாளைப் பார்க்க...'' என்று பேரனும் சிரித்தபடி சொன்னான்.

இப்போது பேரன் முன்னே செல்ல, அவனை அடியற்றிப் பின்தொடர்ந்தார் தாத்தா!

- தரிசிப்போம்

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்