Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எ
ப்படி இருக்கீங்க?’ என்று கேட்டால், 'ஏதோ இருக்கேன்’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி சுமாரான வாழ்க்கையைக் கொண்டிருந்தாலும் கூட, 'பிரமாதமா இருக்கேன். எனக்கு என்னங்க குறைச்சல்?’ என்று உற்சாகத்துடன் சொல்பவர்களும் உண்டு.

நாம் எப்படி இருக்கிறோம் என்று ஒருவர் கேட்கிற சாதாரண குசல விசாரிப்புக்கு, உடனே புலம்பலும் அழுகையுமாக விவரிப்பது தேவையற்ற செயல். மாறாக, 'எனக்கென்ன குறைச்சல்? நான் பிரமாதமா, சௌக்கியமா, ஆனந்தமா இருக்கேன்?’ என்று பதில் சொல்வதில் என்ன நேர்ந்துவிடப் போகிறது?

இங்கே, இந்தச் சொற்களின் வீரியத்தைத்தான் நாம் கவனிக்கவேண்டும். ஒற்றைச் சொல் விசாரிப்புக்கு ஒருமணிநேரம் புலம்பினால், அடுத்தடுத்த நேரமும் அன்றைய நாளும் ஒருவித விரக்தியில்தான் கழியும். அதே ஒற்றைச் சொல் விசாரிப்புக்கு நேர்மறையான ஒற்றை வார்த்தை, நம் அன்றைய ஒருநாள் மட்டுமின்றி, அடுத்தடுத்த நாட்களுக்கும் நம்மை உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் வேலை செய்ய உசுப்பிவிடும்.

வார்த்தைகள் உதட்டில் இருந்து வெளிவருகின்றன. இந்த விஷயத்துக்கு இந்த வார்த்தைகளைச் சொல்லச் சொல்லி, மூளையானது நமக்குக் கட்டளையிடுகிறது. 'ஆமாம், இந்தவொரு செயலுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னால்தான், நிம்மதி கிடைக்கும்; மகிழ்ச்சி பொங்கும்’ என மனமானது, தன் எண்ணத்தைச் சொல்லி, உசுப்பிவிடுகிறது. ஆக, மனத்தின் நிம்மதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மனத்தின் எண்ண ஓட்டத்துக்குத் தக்கபடி நாம் இயங்குகிறோம்.

அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று சொல்கிறார்கள் சிலர். மனம்தான் மந்திரச் சாவி என்று போற்றுகின்றனர் பலர். ஆக, மனித வாழ்வின் சுகங்களுக்கும் துக்கங்களுக்கும், கோபத்துக்கும் பேரமைதிக்கும், உளைச்சல்களுக்கும் உண்மைத்தன்மைக்கும் மனமே காரணமாக அமைகிறது. மனம், ஒருவரைப் பற்றிப் புறம் பேசக் கட்டளையிடுகிறது. அடுத்தவரின் நற்குணத்தைப் போற்றச் சொல்கிறது. தனக்கு என்ன தேவையாயினும் எப்படி வேண்டுமானாலும் ஈடுபட்டு காரியம் செய்யத் தூண்டுகிறது. நல்லதை மீறி கெட்டதாக நெல்முனையளவுக் காரியத்தைக் கூட செய்யவே கூடாது என்று உறுதி எடுத்து, எச்சரிக்கை விடுக்கிறது.

மனம் என்பது கிட்டத்தட்ட நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிற குதிரைக்கு இணையானதுதான்! ஆனால், அந்த குதிரையின் கடிவாளத்தை இணைத்து, அந்தக் கடிவாளத்தின் முனையை நம் கையில் வைத்திருப்பதில்தான் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் இருக்கிறது.

சாமர்த்தியம், புத்திசாலித்தனம் என்பதெல்லாம் கடைகளில் கிலோவாக, லிட்டர் கணக்கில் விற்கப்படுபவை அல்ல. சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம் என்பதற்கு ஏற்ப, சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் நம் செயல்பாடுகளில்தான் இருக்கிறது.

வாழ்க வளமுடன்!

நம் ஒவ்வொரு செயல்பாட்டிலும் இவை வெளிப்பட்டே தீரும். அதைக் கொண்டு நம்மைப் பிறர் எடை போடுவதற்கு முன்னால், நாமே நம்மை எடை போட்டுப் பார்த்துக் கொள்வது நல்லது. அப்படிப் பார்த்துக் கொள்கிறபோது, நம்முடைய பலமும் பலஹீனமும் நமக்குத் தெளிவுறத் தெரிந்துவிடும். அதையடுத்து, பலத்தை அதிகப்படுத்தி பலவீனத்தை விட்டொழிப்பதில்தான் வாழ்வின் வெற்றியும் சந்தோஷமும் நிறைந்திருக்கிறது.

மனத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், இங்கே எல்லாமே சாத்தியம். அப்படி கட்டுக்குள் கொண்டுவருகிற வித்தைதான்... மனவளக்கலை. இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டுவிட்டால், மனக்குதிரை தறிகெட்டு ஓடாது; அதன் லகான் நம் கையைவிட்டு விலகாது. ஓடுகிற குதிரையை நிறுத்தி வைக்கவும் சுருண்டு படுத்திருக்கிற குதிரையை நாம் சொல்கிற இலக்கு நோக்கி ஓடவைக்கவும் நம்மால் முடியும்.

இவை அனைத்துக்கும் மனவளக் கலை பயிற்சி என்பது மிக மிக அவசியம்.

'சுவாமி, காலையில் நான்கு இட்லியை விட அதிகமாக இரண்டு இட்லி சாப்பிட்டாலோ அல்லது வேலை, மீட்டிங், வெளியூர் பயணம் என்கிற காரணத்தால் மதிய உணவைச் சாப்பிடவே முடியாமல் போய்விட்டாலோ குண்டாகிவிடுவோம் என்றோ அல்லது அல்சர் வந்துவிடுமோ என்று பயப்படுகிறேன்.

அதேபோல், பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது, தேவையே இல்லாமல், கெட்ட விஷயங்களாகவே நினைக்கத் தோன்றுகிறது.  விபத்து, உடலில் காயம், ரத்தம், மருத்துவமனை, சிகிச்சை என்று மனத்துள் படபடவென காட்சிகள் ஓடுகின்றன.

'அடடா... நம் முதலாளி இந்த விஷயத்தைச் செய்யச் சொன்னார். மறந்தே போய்விட்டோமே... இன்றைக்குக் கேட்கப் போகிறார். அந்த வேலையை ஏன் செய்துமுடிக்கவில்லை என்று எல்லோர் முன்னிலையிலும் செம டோஸ் விடப்போகிறார். பிறகு மெமோ தரப்போகிறார்’ என்றெல்லாம் யோசித்தபடியே காலையில் எழுந்திருக்கிறேன். இந்தப் படபடப்பும் பயமும் டென்ஷனும் மற்ற வேலைகளைச் சரிவர செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடுகின்றன. நான் என்ன செய்யவேண்டும் சுவாமி? என்னை நல்வழிப்படுத்துங்கள்’ என்று தென்தமிழகத்தின் மிக முக்கியமான அந்தக் கம்பெனியின் மேலாளர் சொல்லும்போது அழுதேவிட்டார்.

கற்பனைகள் செய்யாத, கற்பனைகளில் மூழ்காத மனிதர்களே இல்லை. அப்படி இருந்துவிட்டால் நாம் மனிதர்களாகவே இருக்கமுடியாது. எலுமிச்சைப் பழத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் பழத்தை நமக்கு எதிரே இருப்பவர், இரண்டாக நறுக்கி, அப்படியே பிழிவதைக் கவனித்திருக்கிறீர்களா? அப்போது உடனே நம் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என இப்போது யூகிக்க முடிகிறதா உங்களால்? உடனே நம் நாக்கில் இருந்து வாயில் இருந்து நீர் சுரக்க ஆரம்பிக்கும். எலுமிச்சையின் புளிப்புச் சுவையை அப்படியே உள்வாங்கிக் கொண்டு, 'அடேங்கப்பா... லெமன் சுவையே சுவைதான்!’ என்று நாமே நமக்குள் பேசிக்கொள்கிற விந்தை நடைபெறும். 'வழியில கடை எங்கனா இருந்தா, ஒரு லெமன் ஜூஸ் குடிக்கணும். எவ்ளோ நாளாச்சு?’ என்று உடனே ஒரு தம்ளர் பழச்சாறுக்கு ஏங்கித் தவித்துவிடும் மனசு! அந்த இரண்டு நிமிடங்களுக்குள் எப்படியும் ஒரு நான்கைந்து தம்ளர் ஜூஸ், கற்பனையாகவே நமக்குள் போய், நம் அடிவயிறைக் குளிரப்பண்ணியிருக்கும். இது மனித மனத்தின் இயல்புதான்!

ஆனால், எதையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து, செயல்படுத்துவதில்தான் வெற்றியும் ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது. அமைதியான, நிம்மதியான, ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கை வேண்டும் எனில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு இயங்கினால்தான் எல்லாமே சாத்தியமாகும்.

அந்தக் கட்டுப்பாடுகளைத் தருவதுதான் மனவளக் கலைப் பயிற்சி. ஓரிடத்தில் அமர்ந்து, முதுகை நேராக்கி, கண்களை மூடிக்கொண்டு, சுவாசத்தைச் சீராக்கி, உள்ளுக்குள் இருக்கிற உங்களை நீங்களே கவனிக்கக் கவனிக்க... அதாவது ராமு என்பவர் தனக்குள்ளே இருக்கிற ராமுவைக் கூர்ந்து கவனிக்க கவனிக்க... அலைபாய்கிற மனமானது, நங்கூரம் பாய்ச்சி நிற்கிற கப்பலைப் போல் ஓரிடத்தில் நிற்கும்! பிறகு நங்கூரத்தின் இணைப்பில் இருந்து விடுவித்தால்தான் கப்பல் நகரும்!

ஆக, மனவளக் கலைப் பயிற்சி என்பது, மனக்கப்பலுக்கான நங்கூரம்! என்ன... புரிகிறதா அன்பர்களே!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism