Published:Updated:

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

Published:Updated:
கதை கேளு... கதை கேளு!
கதை கேளு... கதை கேளு!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'க
ல்வெட்டுகளின்படி பார்த்தால், முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்னுதான் தோணுது. இந்தக் கோயிலுக்காக, ராஜேந்திர சோழன் ஏராளமான நிலங்களை தானம் பண்ணியிருக்கார். எறிபத்த நாயனார் வாழ்ந்த ஊர், ரோமானியர்களுக்கும் கருவூர்னு சொல்லப்படுற கரூருக்கும் வணிகத் தொடர்புன்னு நிறைய தகவல்கள், இந்தக் கோயிலின்  தொடர்போட இருக்கு'' என்று கரூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயிலில் அமர்ந்தபடி தாத்தா சொல்லிக்கொண்டே போனார்.

''ஸ்ரீபிரம்மா தோற்றுவித்த ஆதி தலங்களில் இதுவும் ஒன்று. நம் தேசத்தின் மூன்று நாட்டு மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் திருப்பணிகள் செய்த கோயில். முழுக்க முழுக்க கற்கோயிலாக... 108 அடி உயரம் கொண்ட ஏழு நிலை ராஜகோபுரத்துடன் இந்தக் கோயில், எவ்வளவு அழகாக இருக்கிறது பாரேன்'' என்று தாத்தா சொல்ல... கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான் பேரன்.  

''கோபுர பொம்மைகளில் திருவிளையாடற் புராணங்களும் தசாவதாரக் காட்சிகளும் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன. கோபுரமும் அழகு; அதில் உள்ள சின்னச் சின்ன சுதைச் சிற்பங்களும் பேரழகு. இத்தனை பிரமாண்டமான கோபுரத்தைக் கடந்து, உள்ளே சென்று ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசிக்கும்போதே,

நம்முள்ளே இருக்கிற கர்வமும் அலட்டலும் காணாது போய்விடும். கடவுளுக்கு முன்னே நாம் வெறும் தூசு என்கிற சிந்தனை மேலோங்கும்'' என்று தத்துவார்த்தமாகச் சொல்லும் தாத்தாவின் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டான் பேரன்.

''இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு என்னன்னு தெரியுமா? பங்குனி மாசத்துல, 14, 15, 16-ன்னு மூணு நாட்களும் சூரிய பகவான், தன் கதிர்களால கருவறைக்குள் இருக்கிற சிவலிங்கத் திருமேனியை வந்து நமஸ்கரிப்பதா ஐதீகம். இந்த மூன்று நாட்களும், சூரியக் கதிர்கள் லிங்கத் திருமேனி மேல வந்து விழறதைத் தரிசிக்கறதுக்காகவே ஏராளமான பக்தர்கள் வந்துருவாங் களாம்!'' என்றார் தாத்தா.

கதை கேளு... கதை கேளு!

''ஏழு நிலை ராஜகோபுரம்தான் பிரதான கோபுரம். அதையடுத்து ஐந்து நிலை கோபுரமும் இருக்கு, பார்த்தியா? இந்த ரெண்டு கோபுரங்களுக்கும் நடுவுல, ஒரு கல்தூண் இருக்கு, தெரியுதா? அது விளக்குத் தூண். சாயந்திரமாகி, இருட்டத் துவங்கிருச்சுன்னா, இந்த தூணின் உச்சியில விளக்கேத்திருவாங்க. மொத்தக் கோயிலுக்கும் கோயில் வாசலுக்குமா வெளிச்சம் பரவியிருக்குமாம்!'' என்று கோபுரங்கள், விளக்குத் தூணைக் காட்டி விவரித்தார் தாத்தா.

''அப்புறம், தெற்குப் பார்த்த விநாயகர் சந்நிதி. பக்கத்துல கிழக்குப் பார்த்தபடி பன்னிரண்டு நாகங்கள்

சிற்பங்களா இருக்க... காமதேனுப் பசு தன் நாவால் சிவலிங்கத்தை வருடிக்கொண்டே, பால் சொரிந்து அபிஷேகிக்கும் காட்சியையும் பார்த்தியா? அதே போல, யானை மீது உக்கார்ந்துகிட்டு, கையில் ஆயுதம் ஏந்தினபடி வீரர் ஒருத்தர் போறது மாதிரியான புடைப்புச் சிற்பம் எவ்வளவு நேர்த்தியா செதுக்கப் பட்டிருக்கு, பார்!'' என்று தாத்தா, சிற்பங்களைத் தொட்டுத் தொட்டு விவரித்தார். பேரன் சிலிர்த்துப் போனான். தாத்தா தொடர்ந்தார்...

''இவரை எறிபத்தர்னு சொல்றாங்க. அது எந்த அளவுக்கு நிஜம்னு தெரியலை. அதேபோல, அதோ அந்த சிற்பத்தைப் பார்... அதில், ஒருவர் தன் இரண்டு கைகளாலும் ஒருவரின் தலையைப் பிடித்திருப்பது போல் இருக்கிறது அல்லவா? அவர்தான் புகழ்ச்சோழர்னு சொல்றாங்க. இதுவும் சரியா தப்பானு தெரியலை. ஆனா ஒவ்வொரு தூணும் பட்டை வடிவத்துல, பத்மபீட அமைப்புல எவ்வளவு நுட்பமாச் செய்யப்பட்டிருக்குங்கறதுதான் மலைப்பா இருக்கு. இதுக்கு அடுத்தாப்ல நூற்றுக்கால் மண்டபம். இதை புகழ்ச்சோழர் மண்டபம்னும் சொல்லுவாங்க'' என்று தாத்தா விவரித்தார்.

சுற்றிலும் பார்த்துக்கொண்டே வந்த பேரன், ''தாத்தா... அந்த வன்னிமரத்தடியில இருக்கறது ஸ்ரீபிரம்மா திருமேனிதானே?!'' என்று கேட்டான். ''அட... கரெக்ட்டா சொல்லிட்டியே. ஆமாம், அது பிரம்மா சந்நிதிதான். பக்கத்துல இருக்கிற கிணறு, சாதாரண கிணறு இல்லை. கோயிலோட அக்னி மூலைல இருக்கறதால, இது அக்னி தீர்த்தக் கிணறு! இந்தத் தீர்த்தத்தை தலையில தெளிச்சுக்கிட்டு ஸ்வாமிகிட்டப் பிரார்த்தனை பண்ணிக்கிட்டா, சகல பாபங்களும் தோஷங்களும் விலகிருமாம்!

கதை கேளு... கதை கேளு!

அப்புறம்... வெளிப்பிராகாரத்துல, கிழக்குப் பார்த்தபடி கருவூர்ச் சித்தரோட சமாதி இருக்கு. இங்கே வந்து ஒரு பத்து நிமிஷம் கண்மூடி, தியானம் பண்ணினாலே... நமக்கு ஞானமும் யோகமும் கிடைச்சிரும்னு ஒரு ஐதீகம்.

கோயிலின் உட்புறம், ஈசான்யத்தில் வேள்விச்சாலை; பக்கத்துல ஸ்ரீசந்திரன்; அக்னி மூலையில் மடப்பள்ளி; பக்கத்துல ஸ்ரீசூரிய பகவான். அதையடுத்து அறுபத்து மூவர், கன்னிமூல கணபதி, அவருக்குப் பக்கத்துல ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீநாகேஸ்வரர். அப்புறம்... தேவியர் சமேதராக ஸ்ரீசண்முகர்... ஸ்ரீகாந்திமதி சமேத ஸ்ரீகரியமாலீஸ்வரர். அடேங்கப்பா... எத்தனை சந்நிதிகள்; எவ்வளவு இறை விக்கிரகங்கள்!

இங்கே, அம்பாள் தனிக்கோயிலாவே சந்நிதி கொண்டிருக்கா, தெரியுமா? ஸ்ரீஅலங்கார வல்லின்னும் ஸ்ரீகிருபாநாயகின்னும் சொல்லப்படுற அம்பிகை கிழக்குப் பார்த்தபடி தரிசனம் தர... ஸ்ரீசௌந்தரநாயகின்னும் ஸ்ரீவடிவுடையாள்னும் அழைக்கப்படுற அம்பிகை தெற்கு நோக்கியபடி தரிசனம் தர்ற அழகே அழகு! இவங்களை தரிசனம் பண்ணினா, கல்யாண வரம் கைகூடும்.

அப்புறம்... சிவ சந்நிதியின் கோஷ்டத்துல, ஸ்ரீநர்த்தன விநாயகர், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கைன்னு சந்நிதிகள் வழக்கம்போல இருக்கு!

இங்கேயுள்ள ஸ்ரீபைரவர் பிரமாண்டமா காட்சி தர்றார். அதேபோல மகாமண்டபத்துல ஸ்ரீநடராஜ பெருமானோட உத்ஸவத் திருமேனி கொள்ளை அழகு. இதோ... மார்கழி திருவாதிரை நெருங்கற வேளைல, ஆடலரசனை, தில்லையம்பலத்தானை, ஸ்ரீநடராஜமூர்த்தியை மனசார வேண்டிக்கோப்பா. நீ நல்லா இருப்பே!'' என்று பேரனிடம் தாத்தா சொல்ல... அவன் முகத்தில் அப்படியரு பிரகாசம்!

- தரிசிப்போம்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism