Published:Updated:

வாழ்க, வளமுடன்!

வாழ்க, வளமுடன்!

வாழ்க, வளமுடன்!

வாழ்க, வளமுடன்!

Published:Updated:
வாழ்க, வளமுடன்!
##~##

ழைக் காலம், குளிர்காலம், கோடைகாலம் என்றெல்லாம் இயற்கையில் பருவ மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களுக்குத் தக்கபடி நாமும் மாறிக்கொள்கிறோம். வெயில் வந்தால் மொட்டை மாடியில் படுத்தால்தான் காற்று வரும்; காற்று வந்தால்தான் தூக்கம் வரும் என்று இருக்கிற நாமே, குளிர்காலம் வந்துவிட்டால், கதவை சார்த்திக்கொண்டு, அறைக்குள் இழுத்துப் போர்த்தியபடி தூங்குகிறோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெயில் காலத்தில் ஜில்லென்று குடிக்கச் சொல்லிக் கேட்கிறது நாக்கு. குளிர்காலத்தில் சூடாக ஏதேனும் உள்ளுக்குள் இறங்கினால், சுகமாகவும்  இதமாகவும் இருக்கிறது.

'உஷ்... என்ன வெயில்... என்ன வெயில்..! போன வருஷத்தைவிட இந்த வருஷம் ரொம்ப அதிகம். இப்படிக் கொளுத்தி எடுக்குதே...’ என்று அங்கலாய்க்காதவர்கள் எவரும் இல்லை. அதேபோல், 'போன மார்கழியைவிட இந்த முறை செம குளிர், கவனிச்சீங்களா? சாயந்திரமே பனி இறங்க ஆரம்பிச்சிடுது’ என்று புலம்புகிறோம்.

வாழ்க, வளமுடன்!

அதாவது, மாற்றங்களை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டபடியே புலம்புவதுதான் மனிதர்களின் இயல்பாகிவிட்டது. குழந்தைகள், 'அப்பா... ஐஸ்கிரீம்..!’ என்று கேட்டால், 'ஐஸ்கிரீம்லாம் இந்தக் குளிர்காலத்துல சாப்பிடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? தொண்டை கட்டிக்கும். சளி பிடிச்சுக்கும். இருமல் வரும். தொண்டைல சதை வளர ஆரம்பிச்சிடும்’ என்று ஒரு டாக்டர் ரேஞ்சுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிடுவோம். இத்தனைக்கும் சிறு வயதில், நாமும் ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப்பட்டவர்கள்தானே? ஐஸ்கிரீம் வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறோம், இல்லையா? ஆனால், இப்போது நமக்கு ஐஸ்கிரீம் மீது அவ்வளவாக நாட்டமில்லை. இயற்கையின் மாற்றத்தைப் போலவே நமக்கு உள்ளேயும் இப்படியான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுவும் ஒரு சுவாரஸ்யம்தான்!

''சுவாமி, சிறு வயதில் இருந்தே எனக்கொரு பழக்கம் உண்டு. காபி குடித்துவிட்டுப் பார்த்தால், அந்த டம்ளரில் கொஞ்சம் சர்க்கரை தேங்கியிருக்கவேண்டும். அதை ஒரு ஸ்பூனால் எடுத்து எடுத்துச் சாப்பிட்டால்தான், காபி சாப்பிட்ட நிறைவே வரும் எனக்கு. பத்தாவது படிக்கிறவரை இப்படிக் காபி சாப்பிடுவதும், சாப்பிட்டு முடித்ததும் அடியில் தேங்கியிருக்கிற சர்க்கரையை ஸ்பூனால் எடுத்துச் சுவைப்பதுமாகவே இருந்தேன்.

அதன் பிறகு, சர்க்கரையைத் தின்பது நின்றுவிட்டது. ஆனால், காபியில் சர்க்கரையைக் கொஞ்சம் கூடுதலாகப் போட்டுக்கொள்வது மட்டும் நிற்கவே இல்லை. திருமணம் நடந்து, குழந்தைகளும் வந்துவிட்ட நிலையிலும், காபிக்கு அதிக சர்க்கரை போட்டுக்கொள்வது தொடர்ந்தது.

வாழ்க, வளமுடன்!

இதோ... வயது நாற்பதைக் கடந்துவிட்டது எனக்கு. உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டது என்கிறார்கள், மருத்துவர்கள். இனிப்புப் பண்டங்களை அறவே ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார்கள். முன்பு எந்தச் சர்க்கரை இனித்ததோ, அதே சர்க்கரை இப்போது கசக்கத் துவங்கிவிட்டது, சுவாமி. மீதமுள்ள நாட்களைச் சர்க்கரை வியாதியுடன்தான் கழிக்கவேண்டுமா?'' என்று கேட்டார் திருச்சி அன்பர் ஒருவர்.

''சர்க்கரை வியாதி வந்துவிட்டால், அடுத்தடுத்த வியாதிகளையும் அதுவே கொண்டுவந்துவிடும் என்கிறார்கள் நண்பர்கள். என்னால் பழையபடி அன்றாடப் பணிகளில் ஈடுபடமுடியாதா, சுவாமி?'' என்று அவர் மேலும் கேட்டு முடிப்பதற்குள் கிட்டத்தட்ட அழுதேவிட்டார்.

பருவ மாற்றம், கால மாற்றம், உடல் மாற்றம், சிந்தனை மாற்றம் என மாற்றங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்கிற பக்குவமும் நிதானமும் இருந்துவிட்டால், அவற்றை வெகு எளிதில் பழகிக்கொள்ளலாம். 'இத்தனை வருஷப் பழக்கத்தை எப்படி விடுறதுன்னே தெரியலை’ என்று புலம்புவதற்கு இடமே இல்லாமல், மிக எளிதாக, சட்டென்று அந்த மாற்றத்துக்குள் நம்மைப் பொருத்திக்கொள்ளலாம். அதற்கான நிதானத்தையும் பக்குவத்தையும் தரவல்லதுதான் மனவளக்கலைப் பயிற்சி.

கைகளுக்கும் கால்களுக்குமான பயிற்சி, கண் பயிற்சி, உடலை மசாஜ் செய்து கொள்ளும் பயிற்சி, அக்கு பிரஷர் பயிற்சி என மனவளக் கலைப் பயிற்சிக்குள் பல பயிற்சிகள் இருக்கின்றன. இந்தப் பயிற்சிகள், நமது கை கால்களுக்கும் கண்களுக்கும், மொத்த உடலுக்கும் மட்டுமின்றி, நம் மனசையும் ஊடுருவி புது உத்வேகம் தரவல்லவை.

சிறு வயதில், பென்சிலை எடுத்துக்கொண்டு மீசை வரைந்து, நெஞ்சை நிமிர்த்தி, பெரிய மனிதன்போல் நம்மைக் காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறோம். பிறகு, நாற்பது வயதைக் கடக்கிறபோது, நம்மை இளமையாகக் காட்டிக்கொள்ள, நரைத்த தலைமுடியை மறைத்து 'டை’ அடித்துக் கொள்கிறோம். மாற்றங்களில் இதையும் கவனித்துக்கொள்ளுங்கள் அன்பர்களே!

'உணவில் எதெல்லாம் கசக்கிறதோ, அதெல்லாம் இனிமையான வாழ்க்கைக்குத் தேவையான உணவு’ என்று கசப்பின் மூலம் கிடைக்கிற இனிமையான வாழ்க்கையைச் சொன்னேன் அந்த நண்பருக்கு.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், சிறு வயதில் பாகற்காயை அப்படியே தட்டில் ஒதுக்கி வைத்து மற்றதையெல்லாம் சாப்பிட்ட 18 வயது இளைஞர், பிறகு அவரே நாற்பது வயதில் அடியெடுத்து வைத்ததும், 'நீ எனக்கு தினமும் பாகற்காய் கறி பண்ணிக் கொடுத்தாலும் நல்லதுதான் தாயி'' என்று மனைவியிடம் கேட்டுக் கொள்வார்.

'நான் என்ன ஆடா, மாடா... எப்பப் பார்த்தாலும் இலை தழையையே தின்னுக்கிட்டிருக்க?’ என்று உணவில் கீரைக் கூட்டு அல்லது கீரைப் பொரியல் செய்ததற்கு அம்மாவிடம் சண்டை போட்ட எத்தனையோ பேர், பின்னாளில், அதாவது தங்கள் மகன் அல்லது மகளிடம் 'டேய் கண்ணா.. கீரை ரொம்ப நல்லதுப்பா. வயித்துல இருக்கற பூச்சியெல்லாம் செத்துப் போயிடும்; வயித்துப் புண்ணையெல்லாம் ஆத்தும்’ என்று வேளாண் விஞ்ஞானிபோல உபதேசிக்கத் தொடங்குவதைக் காணலாம்.

''என்னன்னே தெரியலீங்க... எனக்கு உடம்புல அந்த வியாதி இந்த வியாதின்னு ஏதேதோ சொல்றாங்க. அதைத் தின்னாதே, இதைச் சாப்பிடாதேன்னு பெரிய லிஸ்ட்டே போட்டுக் கொடுத்திருக்காங்க’ என்று புலம்பிய காலம் ஒன்று இருந்தது. 'எங்க அப்பாருக்கு இருந்துச்சு. எனக்கும் வந்துருச்சு’ என்று பரம்பரைச் சொத்துபோல நோயைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொண்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது.

'ஸாரிங்க... நான் டயட்ல இருக்கேன்’ என்று ஒற்றை வார்த்தையில், தன் உடலுக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மனதால் ஏற்றுக்கொண்டு, அதன்படி இயைந்து வாழ்கிற தன் போக்கைச் சொல்கிறவர்கள்தான் இன்றைக்கு இருக்கிறார்கள். இத்தனை மாற்றங்களில் இருந்தும் மிக எளிதாகத் தப்பித்துக் கொள்ளவும், மிக இனிமையாக உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் நீங்கள் செய்ய வேண்டிய ஒரேயரு மாற்றம்... மனவளக்கலைப் பயிற்சியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதுதான்.

இந்த மாற்றம், மனதளவில் உங்களை இன்னும் பலம் கொண்டவராக ஆக்கியே தீரும் என்பது உறுதி!

- வளம் பெருகும்

தொகுப்பு: ஆர்.கே.பாலா