Published:Updated:

வாழ்க, வளமுடன்

வாழ்க, வளமுடன்

வாழ்க, வளமுடன்

வாழ்க, வளமுடன்

Published:Updated:
வாழ்க, வளமுடன்
##~##

வாழை இலையில் சாப்பிடுகிற சுவையும் அனுபவமும் அலாதியானது. தட்டில் சாப்பிடத் தெரியாத குழந்தைகள்கூட இலையைப் பார்த்ததும், 'எனக்கும் இலை போடு. அதுலதான் சாப்பிடுவேன்’ என்று எல்லா வீடுகளிலும் அழுது ரகளை பண்ணுவார்கள் பாருங்கள்... கொள்ளை அழகு அது! இலையின் பசுமையும், அதன் வடிவமும் பச்சை நிறமும் ரொம்பவே ஈர்ப்பானவை. முக்கியமாக, வாழை இலையில் சுடச்சுட உணவு பரிமாறியதும்... உணவும் இலையும் கலந்த நறுமணம் சட்டென்று வீசுவதை சிறு வயதில் உணர்ந்திருக்கிறேன். நீங்களும்தானே? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இலையில் சோற்றைப் போட்டு...’ என்கிற பாப்பாப் பாடல்களெல்லாம் இதைச் சொல்லும்போது நினைவுக்கு வருகின்றன. இலைகளில் பல வகைகள் உண்டு. அதிலும், வாழை இலைகளில் பல பிரிவுகள் இருக்கின்றன. தலைவாழை இலைக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. தஞ்சாவூரில் அந்தக் காலத்தில் விருந்தினர்களுக்குத் தலைவாழை இலை போட்டுத்தான் பரிமாறுவார்களாம். அதனால், தஞ்சாவூர் தலைவாழை இலை என்றே பெயர் அமைந்ததும் உண்டு.

வாழ்க, வளமுடன்

வீட்டுக்கு வந்தவருக்கு இலையில் உணவிடுவது என்பது ஒரு சம்பிரதாயம். பெருமைப்படுத்துகிற காரியம். பரிமாறுவது என்பது மிகப்பெரிய கலை. அதிலும் குறிப்பாக, இலையில் பரிமாறுவது என்பது ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்யவேண்டிய செயல். இலையில் மொத்தமும் பரிமாறி முடித்த பிறகே சாப்பிடத் துவங்க வேண்டும் என்று அமைதியாக இருப்பார்கள் பெரியோர். மணக்க மணக்க உணவு கண்ணுக்கு முன்னே இருந்தாலும், உடனே எடுத்துச் சாப்பிடாமல், சில நிமிடங்கள் பொறுமையுடன் இருக்கிற நிதானத்தை பூடகமாகச் சொல்லிக் கொடுத்தார்கள்.  

இலையில் கொஞ்சம் உணவுகளை மிச்சம் வைத்துவிட்டு, அந்தக் காலத்தில் கொல்லையிலும், பிறகு வந்த காலத்தில் குப்பைத் தொட்டியிலும் போடுவார்கள். வீணாக்கும் உத்தேசத்தில் அல்ல; அந்த உணவை மாடு, நாய் போன்ற உயிரினங்கள் சாப்பிடட்டுமே என்றுதான் அப்படிச் செய்தார்கள். இன்றைக்கு நகரங்களிலும் பெருநகரங்களிலும் வாழை வளர்ப்பதே ஆச்சரியப்படும்படியான விஷயமாகிவிட்டது. வாழை இலையில் சாப்பிடுவதற்கு இளைஞர்கள் பலருக்கேகூடத் தெரியவில்லை.

நுனி இலை வலது கைப்பக்கம் இருக்கவேண்டுமா, இடது கைப்பக்கமாக இருக்கவேண்டுமா என்று குழம்புகின்றனர். சாப்பிட்டு முடித்ததும், இலையை முன்னிருந்து மூடவேண்டுமா அல்லது பின்னிருந்து மூடவேண்டுமா என்று யோசித்தபடியே, பக்கத்தில் இருப்பவர் தனது இலையை எப்படி மூடுகிறார் என்று நோட்டம் விடுகிறார்கள்.

இலையையும் இலையின் நுனியையும் எந்தப் பக்கமாக வைத்துக்கொள்வது என்பதும், இலையை எப்படி மூட வேண்டும் என்பதும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் சொல்லப்பட்ட விஷயங்கள். இதைச் செவ்வனே கடைப்பிடிக்கிற அன்பர்கள் பலர் இருக்கிறார்கள். இவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்... நம் தேக நலனுக்காகவும் உடல் ஆரோக்கியத்துக்காகவும், இலையில் உணவு சாப்பிடுவதற்கு, பின்னாளில் ஒரு உத்தியைக் கையாளச் சொன்னார்கள்.

வாழ்க, வளமுடன்

அதாவது, இலைக்கு நடுவே இந்தியா- பாகிஸ்தான் எல்லை மாதிரி, கோடு போலான பகுதி இருக்கும். அதற்கு இந்தப் பக்கம் சாதம் வைத்து, குழம்பு ரசமெல்லாம் ஊற்றுவார்கள். இன்னொரு பக்கம் அதாவது எதிர்ப்பக்கத்தில் காய், கூட்டு, பொரியல் என சைடு 'டிஷ்’களையெல்லாம் பரிமாறுவார்கள்.

நாம் என்ன செய்வோம்? பருப்புக்கு ஒருமுறையும் சாம்பாருக்கு அடுத்த முறையும் சாதத்தைக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவோம். அடுத்ததாக, ரசத்துக்கும் மோருக்குமாக சாதம் வாங்கிச் சாப்பிடுவோம். இடையில் வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு என்று இருந்தால், அதற்கும் 'இங்கே கொஞ்சம் சாதம் போடுங்க’ என்று கூச்சப்படாமல் கேட்டுத் திருப்தியாகச் சாப்பிடுவோம்.

ஆனால், எதிர்ப்பக்கம் வரிசைகட்டி நிற்கிற கூட்டு, பொரியல் வகையறாக்களை அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டோம். கொஞ்சம் கூட்டையும், கொஞ்சமே கொஞ்ச மாகப் பொரியலையும் சாப்பிட்டுவிட்டு, சாதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிட்டதும் கையலம்பி, ஏப்பம் விட்டு, 'அடேங்கப்பா... சாப்பாடு பிரமாதம். மூக்கு முட்டச் சாப்பிட்டாச்சு’ என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டே, 'உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு’ என்று வசனம் பேசிவிட்டு, வாகாக ஓர் இடம் தேடி, கை கால்களை நீட்டிப் படுத்து, ஒரு தூக்கத்தைப் போடுவோம்.

களைப்பாகும் அளவுக்கு உழைத்தால்தான் நன்றாகப் பசியெடுக்கும். பசிக்கிறது என்று சாப்பிட்டு, அப்படிச் சாப்பிட்டதாலேயே களைப்பு வரலாமா? அப்படிக் களைப்பு வருமளவுக்குச் சாப்பிட்டால், நாமே சிவப்புக் கம்பளம் விரித்து நோயை வரவேற்கிறோம் என்றுதான் அர்த்தம்.

'ஐயய்யோ... எனக்கு நோய் வரவேண்டும் என்று நானே எப்படி ஆசைப்படுவேன்!’ என்று பதறாதீர்கள். உண்மை அதுதான். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா!’ என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

'அப்படின்னா என்ன செய்யணும்? எப்படிச் சாப்பிடணும்?’ என்று கேட்கிறீர்களா?

உணவில் கட்டுப்பாடு இருந்தால்தான் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கவேண்டும் என்றால் ஆரோக்கியமான, சத்தான உணவுகளைச் சாப்பிடுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நம் உடலுக்குத் தேவையான சத்துகள், காய்கறிகளிலும் கீரைகளிலும் அதிகம் இருக்கின்றன. இவற்றையெல்லாம் அறிந்து உணர்ந்தவர்கள், இலையில் சாப்பிடும் முறையை மாற்றச் சொல்லி, சத்தான உணவுகள் எவை என்பதை மிக எளிமையாகப் புரியவைத்தார்கள்.

அதாவது, இரண்டு பகுதிகளாக இருக்கும் இலையின் முன்பகுதி, அதாவது நம் உடலுக்கும் கைக்கும் அருகில் இருக்கிற பகுதியில் சாதத்தைப் போட்டுக்கொள்ளுங்கள். எதிர்முனையில் வெண்டைக்காய், புடலங்காய், அவியல் என்று காய்கறிகளால் செய்த பதார்த்தங்களைப் பரிமாறுவார்கள். எல்லாம் பரிமாறி முடித்ததும், அப்படியே இலையை ஒரு சுற்றுச் சுற்றுங்கள். அதாவது, உங்கள் கைக்கு அருகில் இருந்த சாதம் எதிர்ப்பக்கமும், எதிரில் இருந்த பதார்த்தங்கள் உங்கள் கைக்கு அருகிலும் இப்போது இருக்கும். அதாவது, உணவில் காய்கறிகளை அதிகமாகவும், சாதத்தைக் கொஞ்ச மாகவும் சேர்த்துக்கொண்டால் தேக ஆரோக்கியத்துடன் வாழலாம் என்பதைத்தான் இப்படி விளையாட்டாகச் சொல்லி, நமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். மற்றபடி, இலையை இப்படி மாற்றிப் போட்டுக்கொள்ள வேண்டுமா என்று உங்கள் யோசனையை வேறு திசையில் செலுத்திவிடாதீர்கள்.

'பசிக்கும்போது சாப்பிடவேண்டும்; இன்னும் கொஞ்சம் பசி மிச்சம் இருக்கும்போதே எழுந்துவிடவேண்டும்’ என்கிற விஷயத்தையும் மறந்துவிடாதீர்கள். உணவில் கவனம் செலுத்தி, மனவளக்கலைப் பயிற்சியிலும் ஈடுபட்டு, அந்தப் பயிற்சிகளை அனுதினமும் செய்து வந்தால், நம்மைப் போல அதிர்ஷ்டசாலியும் புத்திசாலியும் வேறு எவருமில்லை.

அதிர்ஷ்டசாலியாகவும் புத்திசாலியாகவும் இருக்கவேண்டும் என்பதுதானே, இந்த உலகில் உள்ள அத்தனை மனிதர்களுக்குமான ஆசை!

- வளம் பெருகும்

தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism