சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

குருகுலம் தெரியுமா? குரு ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருக்க, சுற்றிலும் மாணவர்கள் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நம் கற்பனைச் சிறகுகள் விரியும். இங்கேதான் குரு- சிஷ்ய பரம்பரையை நாம் புரிந்து கொள்வதில் தவறு நேருகிறது.

 பரம்பரை என்பது, பாரம்பரியத்தில் இருந்து வருகிறது. அது, குறிப்பிட்ட ஒரு வழிமுறையைச் சுட்டுகிறது. இன்றைய நவீன கல்வி முறைக்கும் குரு- சிஷ்ய பாரம்பரியத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு, நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. தகவல் என்பது, நோக்கத்தின் அடிப்படையில் அமைந்தது. ஆனால், அறிவு என்பது விஷயத்தைப் பொறுத்தது.

##~##

ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அதை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஒருவர் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும்; அதை அலச வேண்டும். பின்னர், எந்தப் பின்னணியில் அது சொல்லப்படுகிறது என்பதை, நீங்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையில் வைத்துப் பார்க்க வேண்டும். கற்றுக் கொள்வது என்பது சிக்கலான விஷயம். அதிலும், புரிந்து கொள்வது மேலும் சிக்கலானது. அந்தக் காலத்து இந்தியர்கள் அதை அறிந்திருந்தார்கள்.

மார்ஷியல் ஆர்ட் எனப்படும் உடற்பயிற்சிக்கலை, சீனர்களின் கல்வி முறையில் இருந்தது. மிகக் கடுமை யான ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அதில் முக்கிய அம்சம். அதை ஆசிரியர் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பார். ஆனால், குரு- சிஷ்ய பாரம்பரியத்தில், அணுகுமுறை அப்படி அல்ல.

ஐரோப்பிய கல்வி முறை கிரேக்க, ரோமானிய விவாத முறையின் அடிப்படையில் அமைந்தது. தத்துவ ஞானிகளின் விவாதங்கள் வாயிலாக உண்மை நிரூபிக்கப்படுகிறது. அல்லது, பலர் ஒருமனதாக ஓர் உண்மையை அறிந்துகொள்கிறார்கள். இந்த உண்மைதான் வகுப்பில் மாணவர்களுக்குப் பாடமாகப் போதிக்கப்படுகிறது. மனப்பாடமாக இது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அவர்கள் அதைக் கேள்விக்கு உள்ளாக்கலாம் என்றாலும், இறுதியில் போதிப்பவர்களுக்கு அடங்கித்தான் போக வேண்டும். இதையேதான் நவீன கல்வி முறையிலும் பின்பற்றுகிறார்கள். அதாவது, தேர்வுகள் மூலம் ஒரு மாணவனின் திறமையை வெளிப்படுத்துகிறார்கள்; திறமையை அளவிடுகிறார்கள்; ஒரு கருத்தை ஆராய்ந்து கட்டுரையாக எழுதி, டாக்டர் பட்டம் பெறுகிறார்கள்.

வானம் தொடுவோம்!

குரு- சிஷ்ய பாரம்பரியத்தை எளிதாகப் புரிந்துகொள்ள, பணி புரியும் இளம் சிறார்களைப் பார்த்தால் போதும். பையன்கள் வேலை செய்தே தொழிலைக் கற்றுக்கொண்டு விடுவார்கள். எஜமான், தானாக அவர்களுக்கு எதுவும் கற்றுக்கொடுக்க மாட்டார். தான் தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாணவனுக்குப் பசி இருக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்கும் தைரியம் பையனுக்கு வந்தவுடன், தன் வழியைப் பார்த்துக்கொண்டு போக அவன் தயாராகிவிடுகிறான். இதில் ஓர் ஒழுங்குமுறை இல்லாமல் போய்விடுகிறது. இது கற்பதற்கா அல்லது வேலை பார்ப்பதற்கா? சுரண்டுவதா அல்லது சொல்லிக்கொடுப்பதா? சில வேளைகளில் குரு தன் சீடர்களை வேலை வாங்குவதாகப் படித்திருக்கிறோம்.  

தௌம்யருக்கு மூன்று சீடர்கள். முதலாமவன் ஆருணி. குருவின் விளை நிலத்தில் ஏற்பட்ட உடைப்புக்குத் தன் உடலையே தடுப்பாகப் பயன்படுத்தித் தண்ணீர் வருவதைத் தடுக்கிறான். இரண்டாமவன் உபமன்யுவுக்கு, குருவின் மாடு கன்றுகளை மேய்த்துப் பால் கறந்து கொடுக்கிற வேலை. அப்போது விஷப் புல்லைத் தெரியாமல் தின்று, தற்காலிகமாகப் பார்வையை இழக்கிறான். மூன்றாமவன் வேதாவை குரு கடைசி வரை விடுவதாக இல்லை. அவன் கிழமாகித் தலைமுடி நரைத்துவிட்டதை உணர்கிறான்.

குரு- சிஷ்ய பாரம்பரியத்தில் குருவானவர் கற்பிப்பதன் மூலம் கற்றுக்கொள்கிறார். சீடன், கற்பதன் மூலம் கற்பிக்கிறான். அவரவர் ஞானத்துக்கு ஏற்றவாறு அவரவர் ஏற்ற வகையில் புரிந்துகொள்கிறார்கள்.

குரு- சிஷ்ய உறவு முறையில், குரு எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். அதனால்தான் 'அடிபணிதல்’, 'பணிந்து போதல்’ போன்ற ஒழுக்கங்கள் மாணவனிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.

வானம் தொடுவோம்!

கற்பது என்பது மனத்தைத் திறப்பது. பிரஹ் என்றால் திறப்பது. மனஸ் என்பது மனம். அதுதான் பிரஹ்மனஸ் என்பது. தகவல்களைச் சேகரித்துக்கொண்டு, அலசி ஆராய்ந்து- உண்மையை அறிவது. குரு தருவது- ஸ்மிருதிகள்; அதாவது, கருத்துக்கள் மட்டுமே! அவற்றைப் பதிவு செய்துகொண்டு, அடுத்தவருக்கு அளிக்க வேண்டும். குரு தனக்குத் தெரிந்ததைக் கற்பிக்கும்போதே, ஒவ்வொரு மாணவனும் எப்படித் தனிப்பட்டவன் என்று அலசி ஆராய்ந்து அறிந்துகொள்கிறார். தம் கற்பிக்கும் திறனை அவர் மேன்மைப்படுத்திக்கொள்கிறார். மாணவன் பதில் அளிக்கையில், அவருக்குத் தன்னம்பிக்கை அதிகமாகிறது. மாணவன் பதிலுக்குத் திணறுகையில், அவர் பொறுமையைக் கற்கிறார்.

ஞானத்துக்கு அதிதேவதையான சரஸ்வதி எங்கும் இருக்கிறாள். அவள் அருளைப் பெற நாம்தான் தாகத்தோடு அவளைத் தேடிப் போக வேண்டும். தாகம் இருப்பதாக நடிக்கக் கூடாது. குரு பாதையைத்தான் காட்டுவார். மாணவன்தான் அந்தப் பாதையில் நடக்க வேண்டும்.

மகாபாரதத்தில் முனிவர் ஒருவர், ஒரு குடும்பத் தலைவியிடம் இருந்தும் கசாப்பு வியாபாரி ஒருவனிடம் இருந்தும் பாடம் கற்கிறார். காட்டில் பீமன் ஒரு குரங்கிடமிருந்து பாடம் கற்கிறான். அர்ஜுனனோ ஒரு பழங்குடியினத்தவனிடம் இருந்து கற்கிறான்.  

குருதட்சிணை கொடுப்பதன் மூலம் சீடனுக்குக் கடன் எதுவுமில்லாத விடுதலை உணர்வு கிடைக்கிறது. அவன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் சென்று, அவன் பயின்றதைப் பயன்படுத்தி வாழ்ந்து, அடுத்த தலைமுறைக்கு அதை அளிக்கக் காத்திருக்கிறான்.

இதுதான் குரு- சிஷ்ய பாரம்பரியம். அந்தப் பாரம்பரியம் நமக்கும் வேண்டும்.