சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

மிக அருமையாக வாழும் சூழல் கொண்ட காலத்தைப் பொற்காலம் என்று சொல்வார்கள். காற்றும் மரங்களும் எப்போதும் கைகோத்துக்கொண்டிருக்கும், ஆரோக்கியமான சுவாசத்துக்குப்

 பஞ்சமில்லாத காலம் அது. முப்போகமும் விளைச்சல் பெருகி, நெல்லும் வாழையுமாக ஊரே மணத்துக் கிடக்கும். பார்க்கும் இடமெல்லாம் பசுமை நிறம் நீக்கமற நிறைந்திருக்கும். உணவுக்குப் பஞ்சமிருக்காது.

##~##

மரங்கள் நிறைய இருந்ததால், மழைக்குக் குறைவில்லாத காலம் அது! அதிகாலை மேகங்கள் நகருவதைக் கணக்கிட்டே, 'இன்னிக்குக் கண்டிப்பா மழை பெய்யும்யா’ என்று சொல்லிவிடுவார்கள், கிராமத்துப் பெரியவர்கள். அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்காமல், மழையும் தப்பாமல் பெய்து, பூமியைக் குளிரச் செய்தது. மழையும் விவசாயமும் சிறந்திருக்க, ஆரோக்கியமான உணவும் காற்றும் கிடைத்த வாழ்க்கை நிச்சயமாகப் பொற்காலம்தான். இதெல்லாம் 20, 30 வருடங்களுக்கு முந்தைய சந்தோஷம்!

இப்போது மழையும் பொய்த்து, விவசாயமும் நலிந்து, ஆரோக்கியமற்ற நிலையும் வெவ்வேறான உணவு முறை களும் வந்துவிட்டன. இவை எல்லாவற்றை யும்விட, மனிதர்கள் மிகுந்த மன அழுத்தத்திலும் மன அயர்ச்சியிலுமாகச் சிக்கி உழல்கிறார்கள் இப்போது.

அந்தக் காலத்தில், பள்ளிக் கூடங்களுக்கு இத்தனை அல்லாடல்கள் இல்லை. ஊருக்கு ஓர் அரசுப் பள்ளி இருக்கும். அந்தப் பள்ளியில்தான் ஊரில் உள்ள அத்தனைக் குழந்தைகளும் படிப்பார்கள். பிறகு, கல்லூரிப் படிப்புக்காக அக்கம்பக்கத்தில் உள்ள முக்கிய ஊர்களில் அமைந்துள்ள கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்று, அடுத்து வேலைக்காக வெளியூர் அல்லது வெளி மாநிலம் அல்லது வெளிநாடுகளுக்குப் பயணமாவார்கள்.

ஆனால், இன்றைக்குத் தங்கள் குழந்தைகளை எல்.கே.ஜி-யில் சேர்ப்பதற்குக்கூட மிகவும் பிரயத்தனப்படுகிறார்கள் பெற்றோர்கள். அதிகாலையிலேயே எழுந்து, பள்ளிக்கூட வாசலில் வரிசையில் நின்று, தனக்கு முன்னே நின்ற ஆயிரத்துச் சொச்சம் பேரும் விண்ணப்பத்தை வாங்கிய பிறகு, விண்ணப்பத்தை வாங்கிக்கொண்டு வெளியே வரும்போதே, தங்கள் குழந்தைகள் டாக்டராகிவிட்டார்கள்; வக்கீலாகிவிட்டார்கள்; இன்ஜினியர்களாகி விட்டார்கள் என்பது போன்ற வெற்றிக் களிப்புடன் வருகிறார்கள் பெற்றோர்கள்.

வாழ்க வளமுடன்!

பள்ளியில் இடம் கிடைக்குமா கிடைக் காதா என்று பல நாட்கள் தூங்காமல் இருந்து, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் ஆகியோரின் சிபாரிசுகளைப் பெற்று, நன்கொடைகள் வழங்கி, ஒருவழியாகப் பள்ளியில் குழந்தையைச் சேர்த்ததும், 'அப்பாடா...’ என்று நிம்மதி அடைவார்களா என்றால், அதுதான் இல்லை.

குழந்தைகளை எப்போதும் 'படி... படி...’ என்று வலியுறுத்திக்கொண்டே இருப்பார்கள். காலையில் எழுந்து, இசை கற்றுக் கொள்ளவோ ஹிந்தி கற்றுக் கொள்ளவோ அனுப்பி வைத்துவிட்டு, அது முடிந்ததும் பள்ளிக்கு அனுப்பி, மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் திரும்பாததுமாக ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ளவோ சங்கீதம் கற்றுக் கொள்ளவோ கராத்தே பயிலவோ அனுப்பி வைத்து, அக்கம்பக்கத்துக் குழந்தைகளிடம் தோழமையுடன் விளையாடச் சென்றால், 'ம்... படி! ஹோம் வொர்க் பண்ணு!’ என்று, வெளியில் ஓடி விளையாடத் துடிக்கிற பிள்ளையை அதட்டி வீட்டுக்கு அழைத்து வந்து, பாடம் எழுத வைத்து, ரேஸில் ஓடுகிற குதிரையை விரட்டுவதுபோல் குழந்தைகளை சதா விரட்டிக் கொண்டும் தானும் பின்னே ஓடிக் கொண்டும் என எப்போதும் பதைபதைப்புடன் பரபரப்புடன் இருக்கிற பெற்றோர்களையும் அவர்களின் குழந்தைகளையும் நினைக்க நினைக்க... கவலையாகவும் பயமாகவும் இருக்கிறது.

பெங்களூருவில் இருந்து மருத்துவ அன்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் மகன் பல் மருத்துவத்தில் முதலிடம் பெற்றுத் தேர்ந்திருந்தார். அவரை அறிமுகம் செய்யும்போது, 'சுவாமி! பல் மருத்துவத்தில் இவன் நம்பர்-ஒன்னாக வந்தவன். ஆனாலும், படிப்பில் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால், மிகப்பெரிய நரம்பியல் துறை நிபுணராகவோ இதய நோய் மருத்துவராகவோ வந்திருக்க முடியும். அப்படி இவன் வரமுடியாமல் போனது எனக்கு மிகப் பெரிய வருத்தமே!’ என்று சோகமாகச் சொன்னார்.

''இதற்கு யார் அல்லது எது காரணம் என்று நினைத்து வருந்துகிறீர்கள்?'' என்று கேட்டேன். உடனே அவர், ''நான்தான் சுவாமி, காரணம். இவனை மிகச் சிறந்த தனியார் பள்ளியில், ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்கு முடிவு செய்திருந்தேன். எப்படியும் ஸீட் கிடைத்துவிடும் என்று கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டேன். ஆனால், அந்தப் பள்ளியில் என் மகனுக்கு இடம் கிடைக்கவில்லை. வேறொரு பள்ளியில் பிறகு சேர்த்தேன். அந்தப் பள்ளியில் மட்டும் இவனைச் சேர்த்திருந்தால், பிளஸ்-டூவில் அதிக மார்க் எடுத்திருப்பான். அடுத்த கல்லூரிக் கல்வியிலும் அது எதிரொலித்திருக்கும். இந்த மன வேதனை இன்றைக்கும் உள்ளது, சுவாமி!'' என்று வருத்தத்துடன் சொன்னார்.

வாழ்க வளமுடன்!

இப்படியான மன உளைச்சல்களும் மனக் குமுறல்களும் கொண்டு இன்றைக்கு நிறைய பெற்றோர்கள் மருகித் தவிக்கிறார்கள். 'இந்தப் பள்ளியில் சேர்த்தால்தான் பையன் பெரிய ஆளாக வருவான்; பொறியாளராவான்; மருத்துவராவான்’ என்று தாங்களே முடிவு செய்துகொண்டு, அந்த முடிவின்படி எதிர்காலம் அமையவில்லை என்றால், அதில் மனம் நொந்து போகிறார்கள்.

காலம் ரொம்பவே மாறிவிட்டது. பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது, நகரத்துக்கு வெளியே இடம் வாங்கிப் போட்டு சொந்த வீடு கட்டுவது என உறவுகளிடையே தான் பெரிய அந்தஸ்தை அடைந்துவிட்டதைக் காட்டிக் கொள்ளாவிட்டால் மதிப்பு தரமாட்டார்கள் என்று பரபரப்புடன் ஓடிக் கொண்டு இருக்கிறது, இன்றைய மனித வாழ்க்கை.

எதிர்காலம் குறித்த பயமும் எச்சரிக்கையும் தேவைதான். ஆனால், அந்த பயமும் எச்சரிக்கை உணர்வும் நம்மைப் பதற்றப்படுத்திவிடக் கூடாது. அவை திடமான குறிக்கோளாகவும் உறுதியான லட்சியமாகவும் நம்முள் வலுப்பெற வேண்டும். மனத்தில் நம்பிக்கையை ஆழமாக விதைத்துவிட்டால் வெற்றியை அடையலாம் என்பதை மறந்துவிட்டு, வாழ்க்கையையே ஒரு ரேஸ் போல் அமைத்துக்கொள்கிற மனோநிலைதான் அத்தனை மனப் பிரச்னைகளுக்கும் காரணம்.

அரசுப் பள்ளி, சாதாரண பள்ளி, சூப்பர் பள்ளி எனப் பள்ளிக்கூடங்களில் தராதரம் இருக்கலாம். ஆனால், கல்வியில் உயர்நிலை, தாழ்நிலை என்பதெல்லாம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான், 'படிக்கிற புள்ளை எங்கேருந்தாலும் படிக்கும். ஜெயிக்கிறவன் எந்தத் தொழில்ல இருந்தாலும் ஜெயிப்பான்’ என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.

கல்வி, பொருளாதாரம் தொடர்பான ஏக்கத்திலும் துக்கத்திலும்தான் இன்றைக்குப் பெரும்பாலான ஜனங்கள் மன அழற்சிக்கு ஆளாகிறார்கள். ஒருவித மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். இதனால் ரத்தக் கொதிப்பு, திடீர் மயக்கம் என பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மனதை லேசாக வைத்துக்கொள்கிற வித்தையை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளவேண்டும். அந்த வித்தையை மனவளக் கலைப் பயிற்சி மூலம் மிக எளிதில் அடையலாம்.

மனவளக் கலைப் பயிற்சியை எடுத்துக்கொண்டுவிட்டால், தேவையற்ற பயங்களில் இருந்தும் வீணான மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட்டுவிடலாம்.

இனிது இனிது மெல்லிய மனம் இனிது; அதனினும் இனிது தெளிவான மனம்!

- வளம் பெருகும்

தொகுப்பு: ஆர்.கே.பாலா