Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!
##~##

ரோக்கியமான உடலும் அமைதியான மனமும் நிம்மதியான வாழ்க்கைக்கான அத்தியாவசியத் தேவைகள் என்பது நமக்குத் தெரியும். வண்டிக்கு அச்சாணி எத்தனை முக்கியமோ, வாழ்க்கைக்கு தேக ஆரோக்கியம் அத்தனை முக்கியமானது. அமைதியான மனம் இருந்தால்தான் தேகம் ஆரோக்கியமானதாக அமையும். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் நமக்குத் தீவிர ஆசை இருக்கவேண்டும். முனைப்பு இருக்க வேண்டும். அப்படி ஆசைப்படுவதற்கும், ஆசைப்பட்டதை நிறைவேற்றுவதற்குமான அமைதியும் நிதானமும் முனைப்பும் நம் மனத்துள் குடிகொண்டிருக்கவேண்டியது ரொம்பவே முக்கியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு ஆரோக்கியம் குறித்த ஏக்கம் இருக்கிறதே தவிர, அதற்கான முயற்சிகளில் நாம் இறங்குவதே இல்லை. மனம் அமைதியாக இருக்கவேண்டும் என்று சதாசர்வகாலமும் சொல்லிக்கொண்டே இருக்கிறோமே தவிர, மனத்தை அமைதியாக ஒருபோதும் வைத்துக்கொள்வது இல்லை; எப்படி அமைதியாக வைத்துக்கொள்வது என்று யோசிப்பதும் இல்லை.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அழகு என்பது நல்ல சிந்தனைகளைக் குறிக்கிறது. நல்ல சிந்தனைகள் இருப்பின் புத்தியில் எந்தத் தடுமாற்றமும் இருக்காது. புத்தியானது தடுமாறாமல் தெளிவாக யோசிக்கத் துவங்கிவிட்டால், செய்கிற செயல்கள் அனைத்திலும் ஒரு நிதானம் வந்துவிடும். பக்குவம் வந்துவிடும். முகத்தில் தேஜஸ் கூடும். உடலின் அனைத்து பாகங்களும் பதறாமல் செயல்படும். காரியங்களில் வீரியம் கூடி, வெற்றியே வந்து சேரும்.

வாழ்க வளமுடன்!

அவர் மிகப்பெரிய தொழிலதிபர். தென்மாவட்டத்தில் விவசாயத்திலும் அச்சுத் தொழிலிலும் உச்சத்தில் இருப்பவர். பணத்துக்கோ உறவுக் கூட்டத்துக்கோ, மதிப்பு மரியாதை களுக்கோ, கௌரவத்துக்கோ அந்தஸ்துக்கோ ஒரு குறைவும் இல்லை. ஆனால், ஏனோ அவர் எப்போதும் சிடுசிடுப்புடனே இருப்பார்; எவரிடமும் கடுகடுப்பாகவே பேசுவார்.

அவர் தனது நிலையை உணர்ந்து, மனவளக்கலைப் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். தொழிலைப் பற்றிக் கவலைப்படாமல், ஆர்டர், டெலிவரி, அந்த விழாவுக்குத் தலைமை, இந்த விழாவுக்கு முன்னிலை என்பதையெல்லாம் சுத்த மாக மறந்துவிட்டு, ஊரை விட்டு வந்து ஆழியாறில் பத்து நாட்கள் தங்கினார்.

பயிற்சியின் நான்காம் நாள் என்னிடம் வந்தார். ''சுவாமி, இயல்பாகவே எல்லோர் மீதும் அன்போடு இருப்பவன்தான் நான். எல்லோரையும் மதிப்பவன்தான். ஆனால், சமீபகாலமாக எதற்கெடுத் தாலும் கோபப்படுகிறேன். பத்து மணிக்கு முடியவேண்டிய வேலை, ஒரு பத்து நிமிடம் தாமதமானால்கூட, பூமிக்கும் வானுக்குமாகக் குதித்துச் சத்தமிடுகிறேன். எப்போதும் ஒருவித பதற்றமும் படபடப்பும் உள்ளுக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. சிலசமயம், இந்தத் தொழிலையே விட்டுவிட்டுப் பேசாமல் வீட்டிலேயே அக்கடாவென இருந்துவிடலாமா என்றுகூடத் தோன்றுகிறது. ஏன் சுவாமி இப்படி? நிம்மதியின்றித் தவிக்கும் எனக்கு நீங்கள்தான் ஒரு நல்வழி காட்டவேண்டும்'' என்றார்.

''இது சின்ன பிரச்னைதான். மிக எளிதில் சரிப்படுத்திவிடக்கூடிய ஒன்றுதான். கவலையே படாதீர்கள்!'' என்றேன்.

வாழ்க வளமுடன்!

வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றி பெறுவது என்பது மிக மிக எளிது. ஊருக்குள் மதிப்பு பெறுவதும் கௌரவத்தைச் சம்பாதிப்பதும்கூட வெகு சீக்கிரமாக நடந்தேறிவிடுகிற விஷயம்தான். ஆனால், அடைந்த வெற்றியையும் மதிப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்குத்தான் இங்கே மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடவேண்டியிருக்கிறது. வாழ்வில் சின்னதொரு சறுக்கல் வந்தால்கூட, 'இனி நாம் அவ்வளவுதானோ? ஆரம்ப இடத்துக்கே கொண்டு போய் விட்டுவிடுமோ!’ என்கிற அச்சம் எப்போதும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இது ஏழை- பணக்கார வித்தியாசமின்றி எல்லா மனிதர்களுக்குமே இருக்கக்கூடிய ஒன்றுதான். இந்த அச்சம்தான் பதற்றத்தையும் படபடப்பையும் ஏற்படுத்துகிறது.

மனவளக்கலைப் பயிற்சியை எடுத்துக்கொள்வதற்கு முன்பு வரை, எப்போதும் அயர்ச்சியுடனும் அவநம்பிக்கையுடனும் இருந்தவர்கள்கூட, இந்தப் பயிற்சிக்குப் பின்னர் புத்துணர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உற்சாகமாக ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றியும் தோல்வியும் நிரந்தரமல்ல. பாதாளமும் மிகப் பெரிய மேடுமான வாழ்க்கை முறை நமக்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஏற்றத்தாழ்வுகள் இங்கே எல்லோருக்கும் பொதுவானவை. ஆனால், தோல்வி கண்டு பதறாத நிதானமும், வெற்றியின்போது தன் நிலை மறந்து ஆடாத முன்னெச்சரிக்கையும் எப்போதும் எல்லாருக்கும் தேவை என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

அதிகாலையில் 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று மனத்துக்குக் கட்டளையிட்டு, அதன்படியே எழுந்துகொள்வது நம் கையில் இருக்கிறது. ஆனால், ஆழியாறில் இருந்து பொள்ளாச்சிக்கு 20 நிமிடத்துக்குள் போக வேண்டும் என்று கங்கணம் கட்டமுடியாது. நாம் நமது வண்டியின் வேகத்தைக் கூட்டினாலும் கூட, சாலை நன்றாக இருக்கவேண்டும்; குறுக்கே ஆடு மாடுகள் கூட்டமாகச் செல்லாதிருக்கவேண்டும். டிராஃபிக் ஜாம் ஏற்படலாம். காவல்துறையோ அல்லது வேறு எவரேனுமோ வண்டியை நிறுத்தச் சொன்னால், அங்கே ஐந்தாறு நிமிடங்கள் நிற்கவேண்டிய நிலை வரலாம். பெட்ரோல் இருப்பைக் கவனிக்க மறந்திருக்க லாம். 'அடடா... வண்டிக்கு பெட்ரோல் போடவேண்டுமே’ என்று சுதாரித்துப் போனால், பெட்ரோல் பங்க்கில் நமக்கு முன்னே பத்துப் பன்னிரண்டு வண்டிகள் நிற்கலாம். பாதி வழியில் வாகனம் திடீரெனப் பழுதாகிவிடலாம்.

எனில், 'சே..! குறித்த நேரத்துக்குள் போக முடியவில்லையே..!’ என்று பதற்றப்படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? தாமதத்துக்கான காரணங்களை முன்கூட்டியே யூகித்துச் செயல் படலாம். ஆனால், அதையும் மீறி எதிர்பாராத நெருக்கடிகளால் தாமதம் ஏற்பட்டால், அது குறித்து அலுத்துக்கொண்டோ வருத்தப்பட்டோ என்னாகிவிடப் போகிறது? தேவையில்லாத மன உளைச்சலும் டென்ஷனும் ஏற்படுவது தவிர, நமது பதற்றத்தால் வேறு என்ன லாபம் கிடைக்கப் போகிறது?

தவிர, நம் எண்ண அலைகளின்படியே நம்மைச் சுற்றி நடைபெறுகிற விஷயங்கள் அமைகின்றன. நம்மிடம் உள்ள நல்ல எண்ண அலைகள் நம்மோடு தொடர்புகொள்கிற மனிதர் களைத் தொட்டுப் பரவுகிறபோது, அல்லது அவர்களின் நல்ல எண்ண அலைகள் நமக்குள் ஊடுருவுகிறபோது நல்லதே விளையும். அப்படி நமது எண்ண அலைகளை சீராக்கவும் நெறிப் படுத்தவும் பக்குவப்படுத்தவும் மனவளக்கலைப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன.

உடலுக்கும் மனதுக்குமான பிணைப்பை எளிய பயிற்சிகளின் மூலம் அதிகப்படுத்த முடியும். அந்த இணைப்பும் பிணைப்புமே, தேகத்தில் ஆரோக்கியத்தையும் மனதில் அமைதியையும் தருகின்றன. முக்கியமாக, மனவளக் கலைப் பயிற்சியின் நிறைவில் உடலைத் தளர்த்தி ஓய்வு தருகிற பயிற்சியைச் செய்யும்போது, உடலுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போலான உணர்வை மிக எளிதாகப் புரிந்து உணர முடியும்.

கண்களை மூடி, உடலை மறந்த நிலையில், வேறு எந்த எண்ணங்களும் உள்ளே பொங்கித் ததும்பாமல், சுவாசமானது உள்ளுக்குள் வருவதையும் அங்கே எதையோ தொட்டுவிட்டு வெளியே செல்வதையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது ரொம்பவே முக்கியம். அப்படிச் செய்யத் துவங்கிவிட்டால், பரபரப்பிலும் படபடப்பிலும் சிக்கிக்கொள்ளாத மனத்துக்கு நாம் சொந்தக்காரர்கள் ஆகிவிடலாம்.

''படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது. இந்தப் பக்கம் அந்தப் பக்கம்னு மணிக்கணக்கா மாறி மாறிப் புரண்டு படுத்து ரொம்பவே அல்லாடுறேன்'' என்று தவிப்பவர்கள் கூட, இந்தப் பயிற்சி எடுத்துக்கொண்ட பின், படுத்த 5 அல்லது 7 நிமிடங்களில் நிம்மதியாக உறங்குவார்கள்.

தூக்கம் மிகச் சிறந்த துயர நிவாரணி!

- வளம் பெருகும்

தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism