தொடர்கள்
Published:Updated:

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!
##~##

'நான் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி. நேரம் காலம் பார்க்காமல் உழைத்துதான், கோடிகள் கொட்டும் அந்தப் பதவியில் அமர்ந்தேன். எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. ஓய்வுபெற வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. இந்தச் சூழலில் திடீரென்று பாதுகாப்பின்மையை உணர்கிறேன். அதனால் என் சொந்த வாழ்க்கையிலும் அலுவலக வாழ்க்கையிலும் அமைதி போய்விட்டது. அதனால் ஏற்பட்ட மன இறுக்கத்தைத் தவிர்க்கும் உத்தேசத்தில், நிறுவனத்தில் முன்னுக்கு வந்துகொண்டிருந்த இளம்பெண் ஒருத்தியுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். இது சரியா என்று தெரியவில்லை. அதேநேரம், யாரிடமுமே என்னால் மனம்விட்டுப் பேச முடியவில்லை; என் பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. தர்மசங்கடத்தில் இருக்கிறேன். எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்' என்று கேட்டு, என் முன் அமர்ந்திருந்த மாதவனுக்கு 55 வயது இருக்கும்.

 குழப்பமான மனநிலையில் இருந்து அவரை வெளியில் கொண்டுவர, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கதை ஒன்றை அவருக்கு நான் சொல்லவேண்டி இருந்தது.

'ஜைன சரித்திரத் தொகுப்பாளர்களின் தகவல்கள்படி, பரதன் (இந்தியாவுக்கு பாரதம் என்ற பெயர் வரக் காரணமானவன் இவனே!) அகில உலகையும் வென்று, உலகின் மையத்தில் இருந்த மேரு மலை மீது தனது கொடியை நாட்டப் போனான். அங்கே அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே ஏராளமான வண்ணங்களில் பல சக்ரவர்த்திகளுடைய கொடிகள் அங்கே பறந்துகொண்டிருந்தன. அவர்கள் பரதனுக்கு முன்னரே உலகை வென்றவர்கள் போலும்! ஆனால், அவர்களை எல்லாம் யாரும் நினைவு வைத்துக் கொள்ளவில்லை. நீங்கள் இப்போது அந்த பரதனின் நிலையில்தான் இருக்கிறீர்கள். சாதனை புரிந்தும், 'இது ஒன்றும் புதிய சாதனை அல்லவே!’ என உங்களையே நீங்கள் அற்பமாக உணர்கிறீர்கள்.உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் எல்லாவற்றையுமே நீங்கள் அடைந்துவிட்டதாக நினைத்திருக்கிறீர்கள். ஆனால், உண்மையில் அங்கே ஒரு வெற்றிடம் தோன்றியிருக்கிறது. அதை நிரப்பியாக வேண்டும்...' என்று நான் சொல்லி நிறுத்த, அடுத்து நான் என்ன சொல்லப்போகிறேன் என ஆர்வமாய்ப் பார்த்தார்.

வானம் தொடுவோம்!

''நிறுவனங்கள் பலவும் சாதனைகளைத்தான் அளவுகோலாக வைத்து ஒருவரை மதிப்பிடுகின்றன. அவர் யார், அவர் குடும்பம் எத்தனை பெரியது என்பது போன்ற அளவீடுகளை வைத்து அல்ல. இப்போது பாயும் புலியாக வலம் வந்துகொண்டிருக்கும் நீங்கள், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின்னர் கிழட்டுப் புலி ஆகிவிடுவீர்கள். சாதனை என்னும் இரைதேடும் கூர்மையை இழந்துவிடுவீர்கள். அப்போது உங்களால் எதையும் சாதிக்க முடியாது. ஆகவே, இன்றைக்கு உங்களுக்கு இருக்கும் பெயர், புகழ் எல்லாம் அடுத்த தலைமை நிர்வாகிக்கு மாறிவிடும். அந்த இலக்கைக் கைப்பற்ற, பல ஓட்டக்காரர்கள் உங்களுடனே பக்கத்தில் உத்வேகத்தோடு தொடர்ந்து ஓடி வந்துகொண்டிருக்கிறார்கள். உங்களால் இப்போது அவர்களுக்கு ஈடாக ஓட முடியாது. ஆனாலும், 'நான் பெரிய ஆள்’ என்று பார்க்கப்படுவதைத்தான் நீங்கள் விரும்புவீர்கள். உங்கள் மீது எல்லோரது பார்வையும் விழவேண்டும் என்று நினைப்பீர்கள். இப்போது நீங்கள் நெருங்கிப் பழகிக்கொண்டிருப்பதாக சொன்னீர்களே, அந்த இளம்பெண் உங்களுக்கு அப்படியரு தரிசன அனுபவத்தைத்தான் தருகிறாள். நிறுவன பங்குதாரர்களோ, எம்.டி-யோ தராத அனுபவம் அது. அவர்களைப் பொறுத்தவரையில், உங்களுக்குப் பிறகு அடுத்த நபரைத் தேடுவார்கள். ஆனால், அந்தப் பெண்மணி உங்களை ஹீரோ என்று கொண்டாடுவார். அல்லது, அப்படிக் கொண்டாடுவதாக நீங்களே கற்பனை செய்து கொள்வீர்கள்; நம்புவீர்கள். உண்மையில், உங்கள் வெற்றியையும் சாதனையையுமே அவள் கண்டு வியக்கிறாள்; உங்களை அல்ல! ஆனால், அந்த உண்மையைச் சந்திக்க நீங்கள் விரும்புவதில்லை. நீங்கள் இளம் புலியாகவே இன்னும் உங்களைக் கற்பனை செய்துகொண்டிருக்கிறீர்கள்...' என்று நான் சொன்னபோது, ஆமாம் என்பது போல் தலையாட்டினார். நாடியில் கைவைத்து இறுக்கமாக யோசித்தார். ஆனால், பேச்சு மட்டும் வர மறுத்தது. அவருக்குள் ஒரு தெளிவான முடிவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்கிற நம்பிக்கையில், தொடர்ந்து அவரிடம் பேசினேன்.

வானம் தொடுவோம்!

'இப்போது உங்களைப் பார்த்து நீங்களே சில கேள்விகள் கேட்க வேண்டியது அவசியமாகிறது. நீங்கள் யார்? உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நிச்சயமாக உங்களுக்குத் தெரியுமா? கோடிகள் கொட்டும் அந்தப் பதவிக்கு ஏன் குறி வைத்தீர்கள்? அதுதான் உங்களது இறுதி இலக்கா? இதற்கான பதில்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், உங்களைச் சுற்றிப் பார்வையைச் செலுத்த வேண்டும். உங்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஏன் உங்களைப் பின்பற்றுகிறார்கள், நீங்கள் அடைய விரும்பியதையே அவர்களும் ஏன் அடைய விரும்புகிறார்கள் என்கிற உண்மையையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நம் ஒவ்வொருவரது அடிமனத்திலும், நாம் எல்லோருக்கும் மேலானவனாக உயர்ந்து நிற்க வேண்டும் என்ற விருப்பம் தலைதூக்கி நிற்கிறது. இந்த விருப்பம் எதிலிருந்து வருகிறது தெரியுமா? அச்சத்தில் இருந்துதான்.

இந்த அச்சம் எப்போது போகும்? உங்களைச் சுற்றி இருப்போரின் பயத்தை நீங்கள் உணர்ந்து, அவர்களிடம் அனுதாபம் செலுத்தும்போது மறைந்துவிடும். மற்றவர்கள் மேலே வர நீங்கள் கைகொடுத்து உதவி செய்து அவர்களின் அச்சத்தை நீக்கும்போது, தானாகவே உங்களின் அச்சம் மறைந்து போகும். நீங்கள் உங்களது அச்சத்தை அடக்கி வென்றவராக வளர்ந்து நிற்பீர்கள்' என்று நான் சொல்லி முடித்தபோது, மாதவனின் முகத்தில் அவர் தெளிவான முடிவெடுத்துவிட்டதன் அடையாளமாக மெல்லிய புன்னகை பிறந்தது.