Published:Updated:

எண்ணமே இறைவன்!

எண்ணமே இறைவன்!

எண்ணமே இறைவன்!

எண்ணமே இறைவன்!

Published:Updated:
எண்ணமே இறைவன்!
##~##

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அழகான கதை ஒன்று சொல்கிறார். உலகமே போற்றி வணங்கும் புகழ்பெற்ற கதைசொல்லி அல்லவா அவர்! பள்ளிப் படிப்பு இல்லாதவர்தான். ஆனாலும், சுவாமி விவேகானந்தருக்குக் குருநாதராகத் திகழ்ந்தவர் அவர். ஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய கதைகள், பகவத்கீதைக்கும் திருக்குறளுக்கும் இணையானவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கதை, ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து உணர்ந்துகொள்ள வேண்டிய கதை. இது ஒரு புழுவின் கதை!

தரையில் ஊர்ந்து செல்கிறது ஒரு புழு. அந்தப் புழு ஓர் ஆசைக் கனவு கண்டால், அதிகபட்சம் என்ன கனவு காணும்? எழுந்து நடக்கவேண்டும் என விரும்பலாம். அந்த விருப்பத்தை அது வெளியே சொன்னால், கேட்பவர்கள் நிச்சயம் கேலி செய்வார்கள். 'ஊர்ந்து செல்லும் புழுவுக்கு நடக்க ஆசையாம்!’ என்று கைகொட்டிச் சிரிப்பார்கள். ஆனால், அந்தப் புழு நடப்பதற்கு அல்ல...ஆகாயத்தில் பறக்க ஆசைப்பட்டது.

கனவு காண்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா? ஆனால் ஆச்சரியம்... அதன் ஆசை சாத்தியமா கியது. ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டு உள்ளே குடியிருந்த புழு, சிறிது காலத்தில் கூட்டை உடைத்துக்கொண்டு, வண்ணமயமான சிறகுகளோடு பட்டாம்பூச்சியாக வெளியே பறந்து சென்றது. இது எப்படி நிகழ்ந்தது?

சுவாமி பரமஹம்சரே விளக்குகிறார்.

அந்தப் புழு, இரண்டு செயல்களைச் செய்தது. ஒன்று, 'நான் பட்டாம்பூச்சி... நான் பட்டாம்பூச்சி...’ என்று விடாமல் நினைத்துக்கொண்டே இருந்தது. இன்னொன்று... அந்த நினைப்பின் தீவிரத்தை வேறு எவரும் கெடுத்துவிடாமல் இருக்க, தன்னைச் சுற்றி ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டது. பிறகு என்ன... குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, தான் நினைத்தபடியே வண்ணத்துப்பூச்சியாக ஆனந்தமாக விண்ணில் பறந்தது.

புழுவாக இருக்கும் நம் குழந்தைகள் பட்டாம் பூச்சிகளாக மாற வேண்டாமா? அவர்கள், தாம் விரும்பும் துறையில் மேலே மேலே பறக்க வேண்டாமா? அப்படிப் பறக்க என்ன செய்ய வேண்டும் அவர்கள்?

கூட்டுப் புழு தன்னைப் பட்டாம்பூச்சி என்று எப்படி விடாமல் சதா நேரமும் நினைத்துக்கொண்டு இருந்ததோ, அதேபோல் நம் குழந்தைகளும் கட்டாயம் தான் விரும்பிய துறையில், தான் விரும்பியபடி தன்னால் முன்னேற முடியும் என்று ஓயாமல் நினைக்கவேண்டும். அந்த நினைப்பை மற்றவர் தடை செய்யாத வகையில், ஒருமித்த சிந்தனையோடு அதே நினைப்பிலேயே இருக்கப் பழக வேண்டும். இதற்குப் பெற்றோரும் உதவ வேண்டும்.

'நீ உருப்பட மாட்டாய்! நீ எங்கே தேறப் போகிறாய்!’ என்பது போன்ற எதிர்மறை வாக்கியங் களை நம் பிள்ளைகளிடமும் பெண்களிடமும் ஒருபோதும் சொல்லக் கூடாது. அவர்கள் மனத்தில் இந்த வார்த்தைகள் அழுத்தமாகப் பதிந்துவிட்டால், பிறகு நாம் விரும்புகிற அல்லது குழந்தைகள் விரும்புகிற பலன் கிடைப்பது அரிதாகிவிடும். நம்மால் சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்ற உண்மையை குழந்தைகள் உணர மறுப்பார்கள். இது மிகப் பெரிய வலி!  

எண்ணமே இறைவன்!

மாறாக, 'உன்னால் முடியும். நிச்சயமாக முடியும்!’ என்று உற்சாகப்படுத்துங்கள்.அவர்கள் மனத்தில் தன்னம்பிக்கை விதையை விதையுங்கள். அவர்களும் அப்படியே நினைக்கப் பழகிவிடுவார்கள். அந்த நினைப்பை வேறு எதுவும் குறுக்கிடாதவாறு காப்பாற்றுவது பெற்றோரின் பொறுப்புதான். தேவையற்ற புறக் கவர்ச்சிகளுக்கு குழந்தைகள் ஆட்படாமல் பார்த்துக்கொள்வதும் பெற்றோரின் கடமைதான்!

மனம் என்ன நினைக்கிறதோ, அதுவாகவே மனிதன் ஆகிறான். இது வெறும் தன்னம்பிக்கை வார்த்தை மட்டும் அல்ல; நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை. வெறும் பாத்திரத்தில் எல்லாக் காய்கறிகளையும் போட்டு, எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் சமையல் நடக்காது. அடுப்பை ஏற்ற வேண்டும். அதுதான் அடிப்படை. அப்புறம் விருப்பம்போல் விதம் விதமாகச் சமைக்கலாம். அடுப்பை ஏற்றுவது என்பது, மனத்தில் ஓயாமல் நம் லட்சியத்தைத் தீவிரமாக நினைப்பதுதான். லட்சிய நெருப்பு உள்ளே கனன்றுகொண்டிருந்தால், ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் நாம் எண்ணியதை எண்ணியவாறு சமைத்துவிடுவோம்.

முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் இளைஞர்களிடம் சுடராய்ப் பற்றிக்கொள்ளும் காலத்தில், 'உன்னால் முடியாது’ என்ற அவநம்பிக்கைத் தண்ணீரை மறந்தும் கொட்டி அந்தச் சுடரை அணைத்துவிடாதீர்கள். 'என்னால் முடியாது’ என்று தயங்கும் குழந்தைகளைக்கூட 'கவலைப்படாதே! உன்னால் முடியும்!’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி, அவர்களுக்கு உற்சாகமூட்டி அரவணைத்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை. தன்னால் சாதிக்க முடியும் என்று நம்பத் தொடங்கிவிட்ட பிறகு, அவன் வாழ்வில் நிகழும் அற்புதங்களை நீங்களே கண்டுணர்வீர்கள். நீங்களும் சேர்ந்து அனுபவித்து மகிழ்வீர்கள்.

சிபாரிசின் பேரில் ஒருவன் பதவிகளை அடைந்துவிடலாம். உலகியலில் அப்படிப் பதவிகளை அடைபவர்களை நாம் பார்க்கவும் செய்கிறோம். ஆனால், தகுதிகளை யார் சிபாரிசின் பேரில் எப்படி அடைய முடியும்? ஆழ்மன நம்பிக்கை, அந்த நம்பிக்கையைச் செயல்படுத்தும் வகையிலான கடின உழைப்பு ஆகியவை மட்டுமே ஒருவரைத் தகுதி உடையவராக்கி, மேலான நிலைக்கு இட்டுச் செல்லும். சுயமரியாதை உள்ள இளைஞர்கள் தகுதிகளால் மேன்மையை அடைய முற்படுவார்களே தவிர, பரிந்துரைகள் என்கிற கொல்லைப்புற வழிகளை ஒருபோதும் நாடமாட்டார்கள்.  

எண்ணமே இறைவன்!

ஒருவன் தன்னை எப்படி நினைத்துக் கொள்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிறான் என்பதும், கடின உழைப்பு என்ற உளி அவன் ஆழ்மன எண்ணத்தைச் சிறுகச் சிறுகச் செதுக்கி, அவனை அவன் விரும்பியவாறே உருவாக்குகிறது என்பதும் கற்பனை அல்ல; உளவியல் விஞ்ஞானம் சொல்லும் உண்மை!  

பரமஹம்சர் சிறிது காலம் ஆஞ்சநேய உபாசனை செய்தார். அந்த வேளையில், தன்னை அனுமனா கவே பாவித்துக் கொண்டார். மரத்தின் மேலேயே குடியிருந்தார். உச்சிக்குச் சென்று, மரத்தில் இருந்த தேங்காயைக் கடித்துச் சாப்பிட்டார்.

சில காலம் கழித்து உபாசனை முடிந்து அவர் கீழிறங்கியபோது, அவரின் அடியவர்கள் அவரைக் கண்டு வியந்தார்கள். காரணம், பரமஹம்சரின் பின்புறத்தில் வால் ஒன்று சின்னதாக வளர்ந்திருந்ததாம்! அந்த ஆஞ்சநேய பாவனை அவரிடம் இருந்து நாளடைவில் மெள்ள மெள்ள மறைந்தபோது, அந்த வாலும் தானாகவே மறைந்துவிட்டதாம்.

இந்த அற்புதத்தைப் பற்றி பரமஹம்சரின் நேரடி சீடரான சாரதானந்தர், தாம் எழுதிய குருதேவரின் ஆராய்ச்சிபூர்வமான  வாழ்க்கை வரலாறு என்ற நூலில் பதிவு செய்துள்ளார் (ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு.)

கூட்டுப் புழு பட்டாம்பூச்சியானபோது செயல்பட்ட விதி, பட்டாம்பூச்சிக்கு மட்டுமல்ல, பரமஹம்சருக்கும் பொருந்தக்கூடியதுதானே?

எந்தத் துறையில் சாதனை செய்த எவரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்... 'சின்ன வயதிலேயே எனக்கு இப்படி ஆகவேண்டும் என்று ஆசை இருந்தது’ என்றுதான் தன் பேச்சைத் தொடங்குவார். 'நான் சின்ன வயதிலேயே சாக்பீஸால் சுவர்களில் ஓவியம் என்ற பெயரில் கிறுக்கி வைப்பேனாம்; அதற்கு என் பெற்றோர் கோபித்துக்கொள்ளாமல் சந்தோஷப்பட்டு, பேப்பர், கிரேயான்கள் வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவார்களாம்’ என்று பிரபல ஓவியர்களும், 'நான் சிறுவனாக இருந்தபோதே தகர டின்களிலும், எவர்சில்வர் அண்டாக்களிலும் குச்சியால் அடித்தபடி ராகம் போட்டுப் பாடி அமர்க்களம் செய்வேன். அதன் நீட்சியாகத்தான் இன்றைக்கு இசையமைப்பாளர் என்கிற அந்தஸ்தை அடைந்திருக்கிறேன்’ என்று பிரபல இசையமைப்பாளர்களும் பத்திரிகை பேட்டிகளில் சொல்லியிருப்பதை நாமும் படித்திருக்கிறோம். அது சத்தியமான உண்மை. அந்தப் பிரபலங்கள் அன்றுதொட்டுத் தன் எண்ணத்தை எச்சரிக்கையாக அடைகாத்ததன் பலனைத்தான் இன்று அனுபவிக்கிறார்கள்.

எண்ணம் என்பது அருமையான குழந்தை. அதைச் சரியான முறையில் போஷித்து வளர்த்தால், அது கட்டாயம் செயல் என்ற வலிமை நிறைந்த மனிதனாக உருவாகும்.

நம் லட்சியம் குறித்துத் தீவிரமாக எண்ணுவதிலும், அந்த எண்ணத்தைப் பராமரித்து வளர்ப்பதிலும், அதைச் செயலாக்குவதிலும், அதற்கான கடின உழைப்பிலும் மட்டுமே நமது வெற்றி அடங்கி இருக்கிறது. எண்ணத்தில் தீவிரம் இருந்தால் கடின உழைப்புக்கு மனம் அஞ்சாது. பிறகென்ன, வெற்றி நூறு சதவிகிதம் உறுதிதானே?

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின்’ என்று தென்னிந்தியாவில் திருவள்ளுவர் எழுதிய குறளுக்கு வட இந்தியாவில் தம் வாழ்க்கை மூலம் உரை எழுதியவர் பரமஹம்சர். சின்னஞ்சிறு வயதிலேயே கடவுளை நேரில் காணவேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். விடாது செய்த ஆஞ்சநேய உபாசனை உள்ளிட்ட பல சாதனைகள் மூலம் தாம் கடவுளைக் கண்டது மட்டுமல்ல; விவேகானந்தருக்கும் கடவுளைக் காண்பித்தார்.

அது சரி, கடவுள் என்பதுதான் என்ன?

எண்ணம்தான் கடவுள். எண்ணத்தை உபாசித்தால் எண்ணியதைப் பெறலாம். 'என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ, தன்னை வென்றாலவை யாவும் பெறுவது சத்தியமாகும்!’ என்று மகாகவி பாரதி முழங்கியதும் இதைத்தான்.  

பரமஹம்சர் ஆன்மிகத்தில் பயன்படுத்திய சூத்திரம் உலகியலிலும் பயன்படுத்தப்படுவதற் காகக் காத்திருக்கிறது. கூட்டுப் புழுக்களாய் இருக்கும் இளைஞர்கள் தாங்கள் விரும்பும் துறைகளில் பட்டாம்பூச்சிகளாய்ப் பறப்பதைக் காண ஆகாயமும் ஆவலோடு காத்திருக்கிறது!

(சிறகு விரிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism