Published:Updated:

வாழ்க வளமுடன்!

அருட் பேராற்றல்...!வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்!

அருட் பேராற்றல்...!வேதாத்திரி மகரிஷி

Published:Updated:
##~##

நாம் எல்லோரும் மனிதர்கள்தான். எல்லோருக்கும் வீடு வாசலும், மனைவி மக்களும் இருக்கிறார்கள். எல்லோரும் ஒவ்வொரு இடத்தில் வேலை செய்கிறோம்; சம்பாதிக்கிறோம்; சம்பாதித்ததில் ஒரு பகுதியைச் செலவு செய்கிறோம்; கொஞ்சம் சேமிக்கிறோம். அப்படிச் சேமிக்கிற பணத்தில், வருடம் ஒருமுறை கோயில்களுக்குப் பயணித்து, ஸ்வாமி தரிசனம் செய்கிறோம்; கோடை விடுமுறையில் மலைவாசஸ்தலங்களுக்குச் செல்கிறோம். வெளிமாநிலங்களுக்குச் செல்பவர்களும், வெளிநாடுகளுக்குச் செல்பவர்களும்கூட இருக்கிறார்கள். வாழ்க்கை முறை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், மனிதர்களுக்கு இடையேதான் எத்தனை எத்தனை வேற்றுமைகள்? எவ்வளவு ஆசைகள்?

பிள்ளையை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கவேண்டும் என்பதற்காகவே, எந்த நிறுவனத்தில் அதிகச் சம்பளம் கொடுக்கிறார்கள் என்று கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக்கொண்டிருந்து, வாய்ப்புக் கிடைத்ததும் உடனுக்குடன் மாறுகிறவர்கள் இருக்கிறார்கள். தற்போதைய சூழலில், ஆடம்பர வாழ்க்கையே அத்தியாவசியமாகி விட்டதால் நிறையக் கடன்கள் சேர்ந்து, அந்தச் சுமையில் இருந்து மீள்வதற்காகவே வேறு அலுவலகம், வேறு வேலை என்று ஓடுகிறவர்களும் உண்டு. இன்று இரண்டு பேர் சம்பாதித்தால்தான் குடித்தனம் பண்ண முடியும் என்கிற நிலை. 'என் சம்பளம் வீட்டுச் செலவுக்கு, மனைவியின் சம்பளம் சேமிப்புக்கு’ என்று திட்டமிட்டுக் காசு சம்பாதிக்கும் மனிதர்களும் இங்கே உண்டு. ஆனால், இந்தப் பிரயத்தனங்களின் பின்னணியில் எத்தனை போராட்டங்களும் வலிகளும் இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்பெல்லாம், 'அவர் என்னை எடுத்தெறிந்து பேசிவிட்டார்... இவர் என்னுடன் பேசுவதே இல்லை’ என்று மனம் புழுங்கியவர்கள், வருத்தப்பட்டுப் புலம்பியவர்கள் உண்டு. ஆனால், இன்றைய மனிதர்களின் மனோபாவம் மாறிவிட்டது. 'அவர் என்னுடன் பேசுவதே இல்லை. அதனால் என்ன, எனக்கு அதனால் ஒரு நஷ்டமும் இல்லை’ என்கிற எண்ணம் மேலோங்கிவிட்டது. இதுபோன்ற விட்டேத்தியான உறவு மனப்பான்மை வளர்ந்து, சக மனிதர்களை தனித்தனித் தீவுகளாகப் பிரித்துப் போட்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்!

சரி, மனிதர்கள் விலகிவிட்ட பிறகும், ஒருவருக்கு எதனால் மனக்குழப்பம்? ஏன் மனக்குமுறல்? அலைச்சலும் குமைச்சலும் எதற்காக? இவையெல்லாம் அவர்களே வரிந்து கட்டிக்கொண்டு ஏற்படுத்திக்கொண்ட வலிகள்; விரும்பி வரவழைத்துக் கொண்ட வாழ்வியல் முறைகள்.

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, ரமேஷ் எனும் நண்பன் நம்மைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதை மகேஷ் எனும் நண்பனிடம் பகிர்ந்து, புலம்புவோம். பதிலுக்கு அவனும், 'டேய்... ரமேஷ§க்கு என்ன பிரச்னைன்னு தெரியுமா உனக்கு? பாவம்டா அவன்...'' என்று ரமேஷின் பிரச்னையை நமக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைப்பான். 'அடடா... நம்மளைவிடப் பெரிய துக்கத்துல இருக்கிற அவனை, நாமதான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டோமா?’ என்று அறிந்து, வருந்துவோம். ஓடிப்போய் ரமேஷ§க்கு ஆறுதல் சொல்லித் தேற்ற முற்படுவோம். ஆனால், இன்றைக்கு ரமேஷ், மகேஷ் உறவுகள் எல்லாம் வெறும் பேச்சு சுவாரஸ்யத்துக்கான மேலோட்டமான நட்பாக மாறிவிட்டிருக்கின்றன. நாமும் அவ்விதமே ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம்.

'தீதும் நன்றும் பிறர்தர வாரா’ எனும் அற்புதமான வாழ்வியல் தத்துவம், இங்கே ஒவ்வொரு மனிதராலும் ஒவ்வொரு கணமும் நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், அப்படி நிரூபித்தவர்களுக்குக்கூட வாழ்வின் பொருளும் அடர்த்தியும் தெரிவது இல்லை. அவர்கள் மன அழுத்தத்தாலும் அயர்ச்சியா லும் ஒருவித சோர்வுடனே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமான புத்தாக்க வழிமுறைதான் மனவளக் கலை எனும் பயிற்சி. கறுப்புப் பூனையை இருட்டில் தேடுகிற கதை நிஜத்தில் வேண்டுமானால் இயலாததாக இருக்கும். ஆனால், அறியாமை இருட்டில் தொலைத்துவிட்ட வாழ்க்கையை, மனவளக் கலை எனும் வெளிச்சத்தில் தேடிக் கண்டடையலாம் என்பதற்கு இங்கே தமிழ்கூறும் நல்லுலகில் இருக்கிற லட்சோப லட்சம் அன்பர்களே சாட்சி!

உடலுக்கும் மனத்துக்குமான ஓய்வும் ஒழுங்கும் இங்கு மிகவும் அவசியம். அவற்றை தரவல்லதுதான் இந்தப் பயிற்சி. தனியரு மனிதர் இந்தப் பயிற்சியை மேற்கொண்டுவிட்டால், அவர் நலமும் மனவளமும் பெறுவார்; அதனால், அவரின் வீடும் குடும்பமும் நிம்மதியாகவும் ஆரோக்கிய மாகவும், திடமாகவும் தெளிவாகவும் வளரும் என்பதில் சந்தேகமே இல்லை.

வண்டி மக்கர் பண்ணினால், உடனே ஒரு நல்ல மெக்கானிக்கைப் பார்த்து, வண்டியை அவரிடம் ஒப்படைத்துவிடுகிறோம். அவரும் வண்டியை முழுவதுமாகக் கழற்றிப் பிரித்து, துடைத்து மாற்றி, பழைய வேகத்துடன் இயங்கும்படி வண்டியைச் செப்பனிட்டுத் தந்துவிடுகிறார். உடல் சோம்பிக் கிடக்கும்போதும், மனம் துக்கங்களாலும் சோகங்களாலும் உழன்று கலங்கும்போதும், இந்த உடலுக்கும் மனத்துக்கும் அப்படியான ஒரு ஓவராலிங் தேவையாக இருக்கிறது. பழையபடி மனத்தையும் உடலையும் செம்மைப்படுத்தி, துரிதப்படுத்துவதற்கு ஒரு மெக்கானிக் அவசியமாக இருக்கிறது. அந்த மெக்கானிக்தான் இந்த மனவளக்கலைப் பயிற்சி!

வாழ்க வளமுடன்!

உடலுக்குள் இருக்கிற ஒவ்வொரு பாகத்தையும் கூர்ந்து நோக்கி, அவற்றை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் வேலையை இந்தப் பயிற்சி மேற்கொள்கிறது. கால்கள், முழங்கால்கள், இடுப்பு, முதுகு, கழுத்து, கண்கள், கைகள் என ஒவ்வொரு பாகத்துக்குமான பயிற்சியைச் செய்யச் செய்ய, ஒரு புத்துணர்ச்சி ஊடுருவுவதை நம்மால் வெகு எளிதாக உணரமுடியும்.

அதை உணரத் துவங்கிவிட்டால், பயிற்சியின் மீதான தெளிவும் கிடைத்துவிடும். உடலின் மீதான அக்கறையும் அதிகரித்துவிடும். அக்கறையுடன் தெளிவாகப் பயிற்சி செய்கிற தருணங்கள், மிக அரிய தவத்தில் ஈடுபடுவதற்கு இணையானவை. காட்டிலும் மேட்டிலும் இருந்து, குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல், உணவையும் இருளையும் பற்றிக் கவலைப்படாமல், சதாசர்வ காலமும் தவத்தில் மூழ்கித் திளைக்கிற சித்த புருஷர்களுக்கு இணையாக, மகான்களைப் போல நாமும் வெகு எளிதாக மனவளக்கலை எனும் தவத்தில் மூழ்கிவிட முடியும். மூழ்கினால்தான் முத்துக் கிடைக்கும் என்பது தெரியும்தானே நமக்கு?!

போக்குவரத்து மிகுந்த மிகப் பரபரப்பான சாலையின் நடுவே பயம் இல்லாமல் பதற்றம் இல்லாமல் நிற்கமுடியுமா நம்மால்? முடியாதல்லவா? அதே போல்தான், வாழ்க்கைப் பயணத்தின் நடுவில் நாம் பதற்றமாக நின்று கொண்டிருக்கிறோம். ஒருகட்டம் வரைக்குமான வாழ்க்கையை எப்படியோ திக்குமுக்காடிக் கடந்துவிட்டு, பின்னொரு பாதியை நோக்கிப் பயணத்தைத் துவங்குகிற இந்தத் தருணத்தில், இதுவரை நாம் வந்த பாதையையும் இனி செய்யப் போகும் பயணத்தையும் பற்றிச் சற்றே யோசித்துப் பார்ப்போம்.

அப்படி யோசிப்பதற்கும், யோசித்து மேற்கொண்டு பயணத்தைச் சிறப்பானதாக அமைத்துக்கொள்வதற்கும் ஒரு சரியான திட்டமிடல் அவசியம். அதற்குச் சின்னதான இடைவேளை ஒன்றும் அவசியம்!

யோசியுங்கள். திட்டமிட்டுப் பயிற்சியில் ஈடுபடுங்கள். வெற்றியும் ஆரோக்கியமும் உங்கள் பக்கம்தான்!

அருட்பேராற்றல் இரவும் பகலும்
எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும்
எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும்
பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும்
அமையுமாக!
வாழ்க வையகம்...
வாழ்க வளமுடன்!

(நிறைவுற்றது)

தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism