சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

நாளை நமக்காக!

நாளை நமக்காக!

நாளை நமக்காக!
##~##

ராமபிரானின் கணையாழியை அடையாளப் பொருளாகத் தன்னிடம் கொண்டுவந்து கொடுத்த அனுமன் மீது அளவற்ற பாசம் தோன்றியது சீதாப்பிராட்டிக்கு. உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தவளின் முடிவை மாற்றி, வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்தி விட்டானே? கடல் தாண்டி வந்து தன்னைக் காப்பாற்றிய அபார சாதனையாளனான அவனுக்கு என்ன பரிசு தருவது?

''மகனே! நீ என்றென்றும் சிரஞ்ஜீவியாக இருப்பாயாக!'' என்று, தன் உயிரைக் காத்தவனுக்கு என்றென்றும் வாழும் சிரஞ்ஜீவித் துவத்தை வரமாக அளித்தாள் சீதாதேவி.

அனுமன் கேட்டுப் பெற்றது அல்ல அந்த வரம். கேட்காமலே கிடைத் தது. அந்த வரத்தின் சிறப்புத் தன்மை என்ன? யாரிடம் கேட்டறிவது? இதுபோல் என்றென்றும் சிரஞ்ஜீவியாக வாழ்பவர் வேறு எவரேனும் இருந்தால், அவரிடம் கேட்டு அறியலாம்.

அனுமனுக்குத் திடீரென ஜாம்பவான் ஞாபகம் வந்தது. அந்தக் கரடி, முதுபெரும் கரடி அல்லவா? ஜாம்பவானும் சிரஞ்ஜீவியாக என்றென்றும் வாழும் வரம் பெற்றவர்தானே! அவரிடம் விளக்கம் கேட்கலாமே..!

இலங்கையிலிருந்து மீண்டும் கடல்தாண்டி இந்தக் கரைக்கு வந்த பிறகு, ஜாம்பவானைத் தனியாகச் சந்தித்தான் அனுமன். சீதாப்பிராட்டியிடம் பெற்ற வரம் குறித்த சந்தேகங்களைக் கேட்டான். சிரஞ்ஜீவியாக இருப்பதால் என்ன லாபம், என்ன நஷ்டம் என்று விசாரித்தான்.

ஜாம்பவான் ஒரு பெருமூச்சோடு சொன்னார்... ''அனுமனே! நாம்தான் சிரஞ்ஜீவி. நம் உறவினர்களோ நண்பர்களோ சிரஞ்ஜீவி அல்லவே! ஆகவே, அவர்களின் நிரந்தர இழப்பை அடுத்தடுத்து நாம் தாங்க வேண்டியிருக்கும்!''

''சரி, இந்த வரத்தால் கிடைக்கும் லாபம் என்ன?''

ஜாம்பவான் பெருமிதத்துடன் சொன்னார்: ''நெடுங்காலம் உயிர் வாழ்வதால் நம் அனுபவ அறிவு அதிகமாகிக்கொண்டே இருக்கும். கல்வியால் கிடைக்கும் அறிவின் கன பரிமாணத்தைவிட, அனுபவத்தால் கிடைக்கும் ஞானத்தின் கன பரிமாணம், பல்லாயிரம் மடங்கு அதிகம். மற்றவர்கள் சிரமப்பட்டும் உணர இயலாத மாபெரும் உண்மைகளை, நம் மனம் அனுபவ ஞானத்தின் மூலம் ஒரே கணத்தில் உணர்ந்து கொள்ளும். உன் அனுபவ ஞானத்தால் நீ பலருக்கு வழிகாட்டலாம்!'' என்றார்.

ஆம். ஞானம் வேறு, அறிவு வேறு. கல்வியால் அறிவு வரும்; அனுபவத்தால்தான் ஞானம் பெறமுடியும். கல்வியை ஏட்டுப் படிப்பால் அடையலாம்; ஞானத்தை வாழ்க்கைப் பள்ளியில் படித்தே அடைய முடியும். அறிவுக்கு விலை உண்டு; ஞானம் விலைமதிப்பு அற்றது.

நாளை நமக்காக!

தாவர இயலில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவன், ஒரு கிராமத்துக்குச் சென்றான். அங்கே, மரத்தடியில் ஒரு விவசாயி அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அமோனியம் பாஸ்பேட், ஸோடியம் ஸல்பேட் போன்ற உரங்களைப் போட்டால் அந்த மரமானது கூடுதலாக ஐம்பது மாங்காய்கள் வரை காய்க்கும் என்று, தன் படிப்பறிவால் விளைந்த கர்வத்துடன் ஆலோசனை சொன்னான்.

''அப்படிப் போட்டாலும் இந்த மரம் கூடுதலாக மாங்காய்களைத் தராது, ஐயா!'' என்றார் அந்த விவசாயி.

''ஏன்?'' என்று கேட்டான் இளைஞன்.

''ஏனென்றால் இது மாமரம் அல்ல; கொய்யா மரம்!'' என்றார் விவசாயி.

ஏட்டுப் படிப்பு வேறு; அனுபவத்தால் கிடைக்கும் நடை முறை அறிவு வேறு!

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் டாக்டர் ரங்காச்சாரிக்கு சிலை வைத்திருக்கிறார்கள். அவரது மருத்துவ அறிவுக்கு வைக்கப்பட்ட சிலை அல்ல அது; அவரின் மருத்துவ ஞானத்துக்கு மதிப்புக் கொடுத்து வைக்கப்பட்ட சிலை. எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன், அனுபவத்தால் ஞானம் பெற்ற அந்த மருத்துவரைப் பற்றி வியப்புடன் அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.

கொட்டாவி விடும்போது தாடை மூட்டு கழன்று, பேசவோ சாப்பிடவோ இயலாத ஒரு பெண்மணியை அந்த மருத்துவரிடம் அழைத்து வந்தார்கள். பல மருத்துவர்களைப் பார்த்தும் பயன் கிடைக்காமல், கடைசியாக அவரிடம் நிராதரவாக வந்து சேர்ந்தாள் அவள். கழன்ற தாடை எலும்பை மறுபடி மேல் அண்ணத்தோடு ஒட்டிச் சேரச் செய்ய வேண்டும். அறுவைச் சிகிச்சை பெரும்பாடு. வெற்றி நிச்சயம் இல்லை. மறுபடி அவளே முயற்சி எடுத்து, மேல் கீழ் கடைவாய்ப் பற்களை ஒன்று சேர்த்து அழுத்தினால், எலும்பு தானாகப் பூட்டிக்கொண்டு பழையபடி ஆகும் சாத்தியம் உண்டு. ஆனால், அவ்வளவு கடின வலிமையுடன் தாடைகளைச் சேர்த்துக்கொள்வது அந்தப் பெண்மணியால் இயலுமா?

டாக்டர் ரங்காச்சாரி அவளை நாற்காலியில் உட்கார வைத்துக் கயிற்றால் கட்டினார். அவள் கண்ணெதிரிலேயே ஓர் இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சினார். ''கம்பியால் உன் கன்னங்களில் சுடுவேன்; பயங்கரமாய் எரியும். ஆனால், தாடை எலும்பு ஒன்று சேர்ந்துவிடும்; ஆனால், தழும்பு மட்டும் நிரந்தரமாய் இருக்கும். கவலைப்படாதே!'' என்றார்.

பெண் நடுநடுங்கிப் போனாள். தணலாய்ச் சிவந்த கம்பியுடன் அவளை நெருங்கினார் ரங்காச்சாரி. அடுத்த கணம், கம்பி சுட்டுவிடப் போகிறதே என்ற அச்சத்துடன் அந்தப் பெண் பட்டென்று வாயை மூடிக்கொண்டாள். எலும்புப் பூட்டு சேர்ந்துகொண்டு விட்டது!

ரங்காச்சாரி செய்தது உளவியல் மருத்துவம். இது வெறும் கல்வியால் வருவது அல்ல; அனுபவ ஞானத்தால் வருவது. மருத்துவக் கல்லூரியில் ஞானத்தைக் கற்றுத் தர இயலாது; கல்வியை மட்டுமே தர முடியும். அனுபவம் என்ற ஆசானிடம் பணிவாகப் பாடம் கற்றால்தான் ஞானம் ஸித்திக்கும்.

ம்புநாதன் என்று ஒரு மருத்துவர். திருச்சி ஆண்டார் தெருவில் பல்லாண்டுகளுக்கு முன்பு வசித்தவர். ஒரு தீபாவளி நேரத்தில், தையல் கடை ஒன்றில் பணி புரிந்த சிறுமி ஒருத்தி, ஏதோ அவசரத்தில் நூலோடு கூடிய ஊசியை தானே தன் கண்ணில் செருகிக்கொண்டுவிட்டாள். பாதி ஊசி கண்ணுக்குள்; பாதி ஊசி வெளியே. அதில் நூலும் தொங்கிக்கொண்டிருந்தது.

அவளை அள்ளியெடுத்துக்கொண்டு வந்து ஜம்புநாதன் முன் கிடத்தினார்கள். குழந்தை துடித்துக்கொண்டிருக்கிறாள். கண்ணுக்குப் பாதிப்பில்லாமல் அந்த ஊசியை எப்படி எடுப்பது?

யோசித்தார் ஜம்புநாதன். பத்துப் பதினைந்து தென்னந்துடைப்பங்களைக் கொண்டுவரச் சொன்னார். விளக்குமாறுகள் வந்து சேர்ந்தன. அவற்றின்  கட்டுகளைப் பிரித்து ஒரு போர்வையால் பொதிந்து, தலையணைபோல் செய்தார். சிறுமியின் தலையை அதில் நாசூக்காக வைத்து, அவளைப் படுக்க வைத்தார். ஊசியில் தொங்கிய நூலோடு இன்னும் கொஞ்சம் நூலை இணைத்து, அதைத் தளர்வாக மேலே துணி உலர்த்தும் கொடியில் கட்டிவிட்டார்.

இப்போது சிறுமியின் தலை, விளக்குமாற்றுத் தலையணையில். அவளின் கண்ணில் ஊசி. அதில் கோத்திருந்த நூலின் தொடர்ச்சி மேலே துணி உலர்த்தும் கொடியில்!

''எல்லோரும் ராம ராம என்று சத்தம் போட்டுச் சொல்லுங்கள்!'' என்று சுற்றிலும் கூடியிருந்த கூட்டத்தாரிடம் உத்தரவிட்டார் ஜம்புநாதன். அனைவரும் ராம நாமம் சொல்லத் துவங்கினார்கள். ஒவ்வொரு ராம நாமத்துக்கும் ஒவ்வொரு விளக்குமாற்றுக் குச்சியாக அந்தத் தலையணையிலிருந்து உருவி உருவி வெளியே போட்டுக்கொண்டு இருந்தார் மருத்துவர்.

மில்லி மீட்டர் மில்லி மீட்டராகத் தலையணையின் உயரம் குறைந்துகொண்டே வந்தது. பெண்ணின் தலை மெல்ல மெல்ல இறங்கியது. ஆனால், ஊசி கொடிக் கயிறோடு கட்டப்பட்டிருந்ததால், அது நின்ற இடத்திலேயே நின்றது. ஒரு கட்டத்தில் அவளின் கண்ணிலிருந்து ஊசி, தானே விடுபட்டுவிட்டது. அதன் பின்பு ஜம்புநாதன் சிறுமியின் விழிக்கு மருத்துவம் பார்த்து, அவள் பார்வையைக் காப்பாற்றித் தந்தார். இந்த அசகாய சாதனையை அறிந்து பலரும் பிரமித்தார்கள்.

இதை நிச்சயம் மருத்துவப் படிப்பு அவருக்குக் கற்றுத் தந்திருக்காது. அனுபவ ஞானம்தான் அவருக்கு அத்தகைய சாதுரியத்தைப் பெற்றுத் தந்தது.

நாளை நமக்காக!

ஒவ்வொரு துறையிலும் பல்லாண்டுகளாகப் பணிபுரிபவர்கள் பற்பல தொழில் சார்ந்த சிக்கல்களைச் சந்தித்திருப்பார்கள். அந்தந்தச் சிக்கலுக்குத் தங்கள் வழியில் முயன்று தீர்வு கண்டிருப்பார்கள். அப்படிக் கண்ட அனுபவங்கள் காரணமாக அவர்களுக்கு அவர்கள் தொழில் சார்ந்ததொரு ஞானம் உருவாகியிருக்கும்.

அந்தச் சிக்கல் ஏன் ஏற்படுகிறது என்று அறிந்ததோடு, அத்தகைய சிக்கல் இனி ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி என்பதையும் அவர்கள் அனுபவத்தில் கற்றிருப்பார்கள். எதிர்பாராமல் அப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டால், அதை எப்படித் தீர்ப்பது என்பதையும் அந்த அனுபவமே அவர்களுக்குக் கற்றுத் தந்திருக்கும். ஊழியர்களின் அனுபவத்தால் விளைந்த அந்த ஞானமே ஒரு நிறுவனத்தின் மிகப்பெரும் பலம்.

இதனால்தான் வேலைக்குச் சேருபவர்களிடம் இந்தத் துறையில் உங்களுக்கு எத்தனை வருட அனுபவம் என்று விசாரிக்கிறார்கள். வெறும் கல்வி அறிவைவிட அனுபவ ஞானமே உயர்ந்தது என்பதை எல்லா நிறுவனங்களும் உணர்ந்திருப்பதே இதற்குக் காரணம். சிக்கல் வரும்போது எப்படித் தீர்ப்பது என்பதை அனுபவசாலிகளிடம் கேட்டு அறிய வேண்டும். முதியவர்களிடம் அறிவுரை கேட்டு நடக்கும் குடும்பங்கள் நல்வாழ்க்கை வாழ்கின்றன. முதுமையை மதிக்கவேண்டும் என்று சொல்வது வெறுமே அவர்களின் வயதுக்காக அல்ல; வயதால் அவர்களுக்குக் கிட்டியிருக்கும் அனுபவத்துக்காக!

ஒருவன் மெத்தப் படித்த மேதாவியாக இருக்கலாம். அவன் பெற்றோர் படிப்பறிவற்ற தற்குறியாக இருக்கலாம். ஆனாலும், படிப்பால் பிள்ளை அடைந்தது அறிவு மட்டுமே. வயதால் விளைந்த அனுபவத்தின் காரணமாக அவன் பெற்றோர் அடைந்துள்ளது வெறும் அறிவல்ல; அது வாழ்வியல் ஞானம்.

பெற்றோரையும் முதியோரையும் மதிக்கவேண்டும் என்று நம் பாரதப் பண்பாடு சொல்வது ஏதோ சம்பிரதாயமல்ல. அதன் பின்னணியில் இந்த வாழ்வியல் ஞானம் குறித்த மதிப்பீடு அடங்கியிருக்கிறது. அனுபவசாலி களை மதித்து அவர்களிடம் அறிவுரை கேட்பதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. இன்று நாம் மதிக்கும் அனுபவசாலிகள் எல்லாம் ஒருகாலத்தில் தங்களைவிட அனுபவம் மிக்கவர்களிடம் பல நுணுக்கங்களைக் கேட்டுத்தான் அறிந்திருப்பார்கள். வழிவழியாக வற்றாத ஜீவநதிபோல் ஓடிவரும் அனுபவ ஞானம் என்ற வெள்ளத்தால்தான் வாழ்க்கை வளம் பெறுகிறது.

அனுபவத்தை மதிப்போம். அனுபவசாலிகளிடமிருந்து ஞானம் பெறுவோம்.

(சிறகு விரிப்போம்)