சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

அன்பே தவம்!

ஆர்.கே.பாலாவளமுடன் வாழலாம்!

##~##

மிழகத்தில் பலராலும் உச்சரிக்கப்படுகிற தாரக மந்திரம்... லாரி, ஆட்டோ முதலான லட்சக்கணக்கான வாகனங்களில் எழுதப்பட்டிருக்கிற அற்புதமான வாழ்வியல் மந்திரம்... 'வாழ்க வளமுடன்!’ உலக சமுதாய சேவா சங்கம் எனும் அமைப்பை நிறுவி, வாழ்க்கைக்கான வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் வகைப்படுத்தி, சத்தமில்லாமல் மிகப்பெரிய விழிப்பு உணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியவர் சுவாமி வேதாத்திரி மகரிஷி. அவர் அருளிய சத்திய வார்த்தைதான் 'வாழ்க வளமுடன்!’

உலக சமுதாய சேவா சங்கம் எனும் பெயரில், மனவளக்கலை எனும் பயிற்சியை நடத்தி, 'வாழ்க வளமுடன்’ என்கிற மந்திரச் சொல்லை, தன் அறிவுக்கோயில் மூலமாகப் பல லட்சம் மக்களை உச்சரிக்க வைத்ததுதான் மகரிஷியின் மகோன்னத சக்தி! இன்றைக்கு ஒவ்வொரு ஊரிலும் ஊருக்குள் பல பகுதிகளிலும் சேவா மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கே மனவளக்கலைப் பயிற்சிகள் சிறப்புற நடைபெற்று வருகின்றன. பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆழியாறு பகுதியில் மிகப்பெரிய அறிவுத் திருக்கோயில், தலைமையகமாக உள்ளது. அங்கேதான் வேதாத்திரி மகரிஷியின் திருச்சமாதியும் அமைந்துள்ளது.

அன்பே தவம்!

சுவாமி வேதாத்திரி மகரிஷியின் சமூக சேவையைப் பாராட்டி, அவரின் நூற்றாண்டு விழாவில் சிறப்புத் தபால்தலை வெளியிட்டு மரியாதை செய்தது இந்திய அரசு. இது இந்திய அளவில், உலக சமுதாய சேவா சங்கத்துக்குக் கிடைத்த அங்கீகாரத் தின் அடையாளம். அதேபோல், மகரிஷி அளித்த மகோன்னதமான அறிவுத் திருக்கோயிலையும், எளிமையான பயிற்சி முறைகளையும் லட்சக்கணக்கான மக்களுக்குக் கொண்டு சேர்த்து, இன்னமும் அந்தச் சேவையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை முன்னிட்டு, உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் ஐயாவுக்குச் சில நாட்களுக்கு முன் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தார் நமது குடியரசுத் தலைவர்.

''கடந்த சில வருடங்களாக எங்களின் மனவளக்கலைப் பயிற்சியானது, பல்கலைக் கழகங்களில் பட்டயப் படிப்பாகவும் இருந்து வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றுச் சான்றிதழ் வாங்கியவர்கள் பலர் உள்ளனர். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று அங்கேயே தங்கி, அந்தக் கிராமத்தைத் தத்தெடுப்பதுபோன்று அங்குள்ள மக்கள் அனைவருக்கும் மன வளக்கலைப் பயிற்சியைக் கொடுத்து வருகிறோம். இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறோம்'' என்று உற்சாகத்துடன் தெரிவிக்கிறார் மயிலானந்தன் ஐயா. இப்படி மனவளக் கலைப் பயிற்சிகளை மேற்கொண்ட எண்ணற்ற மக்கள், மனதளவிலும் உடலளவிலும் ஒரு தெளிவும் புத்துணர்வும் பெற்று, ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அன்பே தவம்!
அன்பே தவம்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஜருகு எனும் கிராமத்துக்குச் சென்றோம். மனவளக்கலை மையத்தின் துணைப் பேராசிரியர் வெங்கடேசன் ஆர்வமும் உற்சாகமும் பொங்க, அந்தக் கிராமத்தில் நடைபெறும் தங்களது பணிகள் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அங்கே...  மனவளக்கலைப் பயிற்சியை மேற்கொள்ள வந்திருந்த பூங்கொடியைச் சந்தித்தோம்.

''இது என் கணவரின் சொந்த ஊர். எங்களுக்குக் கல்யாணமாகி பன்னண்டு வருஷமாச்சு. என் கணவர் முருகனுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. கால நேரம் இல்லாம எப்பப் பார்த்தாலும் குடிச்சிட்டு வருவார். 'பெண்ணும் ஆணுமா ரெண்டு குழந்தைங்க இருக்கும்போது அவங்களுக்காக

அன்பே தவம்!

வாழாம, தினமும் இப்படிக் குடிச்சிட்டு வந்து சண்டை போடுறது உங்களுக்கே நல்லா இருக்குதா?’னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனா, அவர் கேக்கவே இல்லீங்க. ஒருகட்டத்துல, குடிக்கிறதும் அதிகமாச்சு; அடிக்கறதும் அதிகமாச்சு.

ஒருநாள் பொறுக்கமுடியாம, பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷன்ல போய், 'என் நகைகளை மீட்டுக் கொடுங்க. என் கணவரோட இனிமே என்னால வாழ முடியாது’ன்னு புகார் கொடுத்தேன். இந்த ஜென்மத் துல நாம இப்படி வாக்கப்பட்டு, அடியும் உதையும் பட்டு, புருஷன் இல்லாம அல்லாடி, ஒத்தையாளா இருந்து குழந்தைங்களைக் காபந்து பண்ணிக் கரை சேர்க்கணும்னு அந்த ஆண்டவன் என் தலையில எழுதிட்டான்போலன்னு தலையில அடிச்சுக்கிட்டு அழுதேன். வேற என்னத்தப் பண்றது?'' என்று சொல்லி நிறுத்தினார் பூங்கொடி.

குடிகாரக் கணவன், அடி- உதை, போலீஸ் புகார், விவாகரத்து என்றெல்லாம் கசப்பின் உச்சத் துக்குப் போய்க் கொண்டிருந்த பூங்கொடியின் வாழ்வில், இனிப் பான விஷயமாகக் கிடைத்தது உலக சமுதாய சேவா சங்கத்தின் மனவளக் கலைப் பயிற்சி. அதுதான் முருகன்- பூங்கொடி தம்பதி வாழ்வில் நிகழ்ந்த மிக முக்கியமான திருப்புமுனை!

- வாழலாம்

படங்கள்: க.தனசேகரன்