Published:Updated:

நாளை நமக்காக!

மாண்புமிகு மண்டோதரிகள்!திருப்பூர் கிருஷ்ணன்

நாளை நமக்காக!

மாண்புமிகு மண்டோதரிகள்!திருப்பூர் கிருஷ்ணன்

Published:Updated:
நாளை நமக்காக!
##~##

ராமாயணத்தில் மனைவி பேச்சைக் கேட்டுக் கெட்டவர்கள் இரண்டு பேர். கேளாமல் கெட்டவர்கள் இரண்டு பேர். கேட்டுக் கெட்டவர்கள் தசரதனும் ஸ்ரீராமனும். கைகேயி பேச்சைத் தசரதன் கேட்டதால், ஸ்ரீராமன் வனவாசம் போனான். வனவாசத்தில் மான் வேண்டும் என்ற சீதை பேச்சை ஸ்ரீராமன் கேட்டதால், சீதை இலங்கை போனாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வந்தது மான் அல்ல, மாயமான்; அது ஏதோ அரக்கன் என்பது தம்பி லட்சுமணனுக்கே தெரிந்தபோது, ஸ்ரீராமனுக்குத் தெரியாமல் இருக்குமா? மனைவியின் பேச்சு அந்த உண்மையை அவன் மறக்கும்படி செய்துவிட்டது. (சரி... அண்ணன் பேச்சையாவது தம்பி கேட்டானா? 'அண்ணிக்குக் காவல் இரு’ என்று அண்ணன் சொன்னானே? அண்ணி என்ன அபவாதம் சொன்னால் என்ன? ஸ்ரீராமனுக்கு எந்த ஆபத்துமில்லை என்று லட்சுமணன் உறுதியாய் நம்பினான் அல்லவா? அப்படியானால், ஸ்ரீராமனைத் தேடிப்போவதுபோல் போக்குக் காட்டிவிட்டு, கானகப் புதரில் மறைந்திருந்து, சீதையைக் காவல் காக்க வேண்டியதுதானே? சீதை லட்சுமணனைத் தவறாகப் பேசியது தவறு என்றால், அண்ணன் உத்தரவை மீறி லட்சுமணன் சீதையை விட்டுவிட்டு ராமனைத் தேடிப் போனதும் தவறுதானே?)

மனைவி பேச்சைக் கேளாமல் கெட்டவர்கள் வாலியும் ராவணனும்! மூலப் பரம்பொருளான ஸ்ரீராமனின் துணை சுக்ரீவ னுக்கு இருப்பதாய்ச் சொல்கிறார்கள் என்றும், தம்பியுடன் சமாதானமாகப் போய்விடும்படியும் தாரைதாரையாய்க் கண்ணீர் விட்டுக் கெஞ்சினாள் தாரை. அதைக் கேளாத வாலி மாண்டான். 'பிறன் மனைவி மேல் ஏனிந்தக் காமம்? விட்டு விடுங்கள் சீதையை!’ என்று ஓயாமல் ராவணனுக்கு அறிவுறுத்தினாள் மண்டோதரி. ராவணனுக்கு இருபது காது. ஆனாலும் மனைவி சொன்னால், அந்த அறிவுரையை எந்தக் காதும் கேட்காது! எனவே, அவனும் மாண்டான்.

நாளை நமக்காக!

கணவனுக்கு நல்ல அறிவுரைகளை எடுத்துச் சொல்லி, அவனை வழி நடத்த முனைபவர்களெல்லாம் மண்டோதரி களே! இன்றும் நம் நாட்டில் ஏராளமான மண்டோதரிகள் வாழ்கின்றனர். ஆனால் ராவணேஸ்வரர்கள், மனைவி சொல்வதைக் கேட்பதில்லை என்று ராமாயண காலம் தொட்டுத் தீவிர மாக இருக்கிறார்கள்.

'குடிக்காதீர்கள்! குடிக்காதீர்கள்!’ என்று தன் குடிகாரக் கணவனிடம் கெஞ்சாத மனைவியில்லை. ஆனால், மனைவி பேச்சைக் கணவன் கேட்கக் கூடாது என்றும், அப்படிக் கேட்பது ஆண்மைக்கு இழுக்கு என்றும் பெரும்பாலான இந்திய ஆண் மனம் நினைப்பதால், மனைவி எதிர்க்கும் காரணத்தாலேயே மதுக்கடைகளுக்கு அதிகம் போகிறான் கணவன். இந்த அவலத்தை எங்குபோய்ச் சொல்லி நியாயம் கேட்பது? கண்ணன் பிறந்த யாதவ குலம் முற்றிலுமாக அழியக் காரணம், யாதவர்கள் அனைவரும் குடித்துவிட்டு ஒருவரையரு வர் நாணற்புதரால் அடித்துக் கொண்டு சண்டையிட்டதுதான். குடி ஒரு குடியையே அழித்திருக்கிறது பாகவத காலத்தில்!  

இப்போதெல்லாம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர்களைப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. பலர் தேவையில்லாமல் தாங்களே ஒரு பழக்கத்துக்குத் தவறுதலாக ஆட்பட்டு பிறகு மீள முடியாமல் தவிக்கிறார்கள். சிகரெட் பிடிப்பது புற்று நோய்க்கு அடிகோலுகிறது. இது தெரிந்தும் சிகரெட் பிரியர்களின் எண்ணிக்கை குறையவில்லை. வெற்றிலை, புகையிலை இரண்டும் கெட்ட பழக்கங்களே. வெற்றிலை போடுவது ஜீரணத்துக்கு நல்லது; ஆனால், அதிகமாக வெற்றிலை போடுபவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் வரும்.

அளவை மீறினால் காபியும் கெடுதலே! பால், சர்க்கரை என இரண்டு நல்ல விஷயங்கள் காபியில் இருப்பதால், மது, சிகரெட் இரண்டையும் எதிர்த்த அதே தீவிரத்துடன் காந்தி காபியை எதிர்க்க வில்லை. ஒரு நாளைக்கு ஆறு கப் காபியில் உள்ள காஃபினை உடல் வெளியேற்றிவிடும். அதற்கு மிஞ்சினால் ஆபத்து.

பொடி போடுவது மிகவும் கெடுதலான பழக்கம். அது காலப்போக்கில் மூளையின் செயல்பாட்டைப் பெருமளவு குறைக்கும். அல்சீமர் என்னும் நினைவாற்றல் குறை வால் அவதிப்பட்ட வயதானவர்கள் சிலர் அதிகம் பொடிபோட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது.  

நாளை நமக்காக!

மதுப் பழக்கத்துக்குப் பல இளைஞர்கள் புதிது புதிதாக அடிமையாகிறார்கள். சிலர் மதுப்பழக்கத்தின் காரணமாக குடும்பச் செலவுக்கே பணம் தருவதில்லை. மது அருந்த வேண்டும் என்ற வேட்கை வரும் போது, மான அவமானமின்றிப் பலரிடம் கை நீட்டிக் கடன் வாங்கவும் இவர்கள் தயங்குவதில்லை. சுய மரியாதை இழந்தவர்களாய் எள்ளி நகையாடப்பட்டுத் தாங்கள் வாழ்ந்துவருவதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. குடிகாரக் கணவனை மணந்த பெண் ணின் துயரங்களுக்கு முற்றுப்புள்ளியே இல்லை.

சுஜாதா விஜயராகவன் என்ற எழுத்தாளர், 'அடி வாங்கிப் பாரும் ஐயா சிவனே!’ என்று தொடங்கும் ஒரு கீர்த்தனை எழுதியிருக்கிறார். சாக்கிய நாயனார் சிவனைக் கல்லால் அடித்தார்; பாண்டியன் பிரம்பால் அடித்தான்; அர்ச்சுனன் வில்லால் அடித்தான். இவர்கள் அடித்த அடியெல்லாம் என்ன அடி? சிவன் தமிழகத்தில் வந்து பெண்ணாய்ப் பிறக்கவேண்டும்; டாஸ்மாக் கடைக்குச் செல்லும் பழக்கமுடைய ஒருவனைத் திருமணம் புரிந்துகொண்டு அவனிடம் நாள்தோறும் அடிவாங்க வேண்டும். அப்போதல்லவா தெரியும் அடியின் வலி’ என்கிறது அந்தப் பாடல்.

கண்ணதாசன் குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒருபோதும் குடிப்பதை ஆதரித்துப் பேசியதில்லை. 'என்னைப் போல் குடிக்காதீர்கள்!’ என்றுதான் வற்புறுத்தி வந்தார். கல்லூரிகளில் இளைஞர்கள் மத்தியில் பேசும்போதெல்லாம் குடிக்காதீர்கள் என்றுதான் அறிவுறுத்தினார்.

மக்கள் மனம் வைத்தால் 'விற்பனையாக வில்லை என்ற காரணத்தால் மதுக்கடைகள் மூடப்பட்டன’ என்ற நிலையைக்கூட உருவாக்க முடியும். மக்களிடையே ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்பு உணர்ச்சி வந்தால்தான் இது சாத்தியம். மதுவிலக்கு குறித்த தொடர்ந்த பிரசாரம் ஓயாமல் தேவைப்படுகிறது. ராஜாஜி தமது 'விமோசனம்’ இதழ் மூலம் மது எதிர்ப்பை விடாமல் செய்து வந்தார். இன்று நிறைய காந்தி களும் ராஜாஜிகளும் தேவைப்படுகிறார்கள்.

கொஞ்சநாள் முன்பு, ஒரு கிராமத்தில் காந்தி சிலைக்கு எதிரே கள்ளுக்கடை இருந்ததற்கு எதிர்ப்பு எழுந்தது. நடந்தது என்ன தெரியுமா? கள்ளுக்கடை அகற்றப்படவில்லை. எதிரே இருந்த காந்தி சிலை அகற்றப்பட்டுவிட்டது! (முன்பு வள்ளலார் மட்டன் ஸ்டால் என்று ஒரு கடை திறக்கப்பட்டது. அதைப் பார்த்துச் சிலர் கடுமையாய் எதிர்த்தார்கள். பின்பு அது சைவ உணவகமாக மாற்றப்பட்டது. வள்ளலார் அன்பர்கள் அதன் பிறகுதான் 'மட்டனற்ற’ மகிழ்ச்சி அடைந்தார்கள்!)

காந்தி வேர்க்கடலை நிலையம் என்று பெயர் வைத்தால் பொருத்தம். ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் காந்தி கள்ளுக்கடை என்று பெயர் தோன்றிவிடாமல் இருக்க வேண்டுமே எனக் கவலை எழுகிறது.

மது அருந்தும் சிலர் அது தங்கள் சொந்த விஷயம் என்கிறார்கள். தவறு. அவர்கள் மனைவிக்கும் பெற்ற குழந்தைகளுக்கும் பெரும் துரோகம் செய்வது சொந்த விஷயமா? வாங்கும் சம்பளத்தில் கணிசமான பகுதி குடிக்கே போனால் குடும்பம் வாழ்வது எப்படி?

நாளை நமக்காக!

ஆண்களின் குடிப்பழக்கத்தால் குடும்பம் சீரழிந்ததாகத்தான் கேள்விப்படுகிறோம். நல்ல வேளை, பெண்கள் குடித்து அதனால் குடும்பம் சீரழிந்தது என்று இதுவரை செய்தி வரவில்லை. குடிகாரனை மணந்த பெண், கஷ்டங்களைக் கூடத் தாங்கிக் கொள்வாள். ஆனால், கணவன் குடிகாரன் என்பதால் விளையும் அவமானத்தை அவளால் தாங்க இயலாது. மது குடிப்பது பாவம் என்ற பழைய கண்ணோட்டத்தோடு இதை எதிர்க்கத் தேவையில்லை. மது உடல் நலத்துக்குக் கெடுதல் என்கிற மருத்துவ விஞ்ஞானம் சொல்வதைப் புரிந்துகொண்டால் போதும்.

குடிக்கு அடிமையானவர்கள் சுலபமாகக் குடியின்மைக்கும் அடிமையாகலாம். கெட்ட பழக்கத்துக்குத்தான் மனம் அடிமைப்படும் என்று சொல்வது சரியல்ல. கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகும் அதே வேகத்துடன் நல்ல பழக்கத்துக்கும் அடிமையாகலாம். நாள்தோறும் காலை 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந் திருந்து பாருங்கள். கொஞ்ச நாட்களில் அலாரம் இல்லாமலேயே உடல் உங்களை எழுப்பிவிடும். இனி சிகரெட் பிடிக்க மாட்டேன் என்று எண்ணி சிகரெட் பிடிக்காமலிருக்கப் பழகுங்கள். சிகரெட் பிடிக்காமல் இருக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவீர்கள்.

உடலுக்குத் தீங்கு தரும் குடிப்பழக்கத்தை விட்டுவிடுவது மிகச் சுலபம். தீவிர மன உறுதிதான் அதற்குத் தேவை. அந்த மன உறுதி வேறெங்கும் வெளியே இல்லை. நம் மனத்திலேயே இருக்கிறது. அதைப் பெறுவதற்குச் செலவே கிடையாது.

சில தவறான முன் முடிவுகளில் சிக்கிக் கொண்டு சிகரெட், குடி போன்ற பழக்கங்களிலிருந்து மீள முடியாது என்று தீவிரமாக நம்பி வருகிறார்கள் பல இளைஞர்கள். அதுதான் சிக்கல். எந்தப் பழக்கத்திலிருந்தும் யார் வேண்டுமானாலும் மீண்டு புதிய நல்ல பழக்கங்களைப் பழகிக் கொள்ளலாம். அதற்கான பரந்த வாய்ப்பை வாழ்க்கை எப்போதும் தருகிறது.

மீள வேண்டும் என்ற மனம் வேண்டும். அவ்விதம் மீள நினைத்தால் நிச்சயம் மார்க்கம் உண்டு. மண்டோதரிகள் நல்ல அறிவுரை களைத்தான் சொல்கிறார்கள். ஆனால், ராவணர்கள் செவியில் அது ஏற வேண்டுமே?

(சிறகு விரிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism