பிரீமியம் ஸ்டோரி
நாளை நமக்காக!
##~##

டம்பை வருத்திக்கொண்டு பக்தி செய்வதை நமது மதம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. உடல் நலத்தைப் பேண வேண்டும் என்பதே நமது ஆன்மிகம் நமக்குத் தரும் செய்தி. 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!’ என்று முழங்குகிறார் 3,000 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் மெய்ஞ்ஞானி திருமூலர். திடம்பட மெய்ஞ்ஞானம் சேர வேண்டுமானால், நாம் நம் உடம்பை வளர்ப்பது அவசியம் என்பது திருமந்திரச் சிந்தனை.

 அப்படியானால் ஏகாதசி விரதம், சஷ்டி விரதம் இவையெல்லாம் எதற்காக? உடம்பைப் போற்றிப் பராமரிப்பதே ஆன்மிகத்தின் வழி என்றால், பின்னர் பட்டினி கிடந்து உடலை வருத்தவேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா? பட்டினி கிடப்பது உடலை வருத்த அல்ல; பராமரிக்கவே!

மாதம் ஒருமுறை பட்டினி என்பது, உடலிலுள்ள கழிவு- நச்சுக்களை நீக்கி, உடலைச் சீராக்கிப் புதுப்பிக்கும் ஒரு யுக்தி! நாம் பட்டினி கிடந்தாலும் உடல் ஆரோக்கியக் கண்ணோட்டத்தில்தான் பட்டினி கிடப்போமே தவிர, உடல் நலத்தைக் கெடுத்துக்கொண்டு பட்டினி கிடக்கமாட்டோம். அதற்கு நமது மதத்தில் அனுமதி இல்லை. சபரிமலைக்கு ஒரு மண்டலம் (உண்மையாக) விரதம் இருப்பவர்களின் விதிமுறைகளைச் சற்று எண்ணிப் பாருங்கள். இரண்டு வேளை நீராடல், பிரம்மசரியம் உள்பட அந்த விரதத்துக்கான விதிகள் ஆரோக்கியத்தைப் பெருக்கும் வகையில்தான் அமைந்திருக்கும்.  

நாளை நமக்காக!

கடவுள் என்ற தாயின் குழந்தைகள் அல்லவா நாம்..? அந்தத் தாய் தன் குழந்தைகள் நலமாக, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க விரும்புவாளா? நோஞ்சானாகவும், பலவீனமாகவும், வியாதியுடனும் இருக்க விரும்புவாளா? தான் கொடுத்த பொன்னான உடலை அளவுக்கு மீறி வருத்திக்கொண்டு பக்தி செய்வது, இறைவனுக்கு உவப்பான விஷயமாக இருக்க முடியுமா?

நமது பண்டிகைகளின் நிவேதனப் பொருட்கள் எல்லாமே நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. நவராத்திரியின்போது, கொண்டைக் கடலை, பட்டாணி என்று விதவித மாய்ச் சுண்டல் செய்து, எத்தனை விட்டமின்களை நம் குழந்தைகளின் உடலில் அவர்களே அறியாமல் ஏற்றிவிடுகிறோம்! துவாதசி அன்று சாப்பிடும் அகத்திக்கீரை மூலம் எவ்வளவு இரும்புச் சத்தை நம் உடல் ஏற்றுக்கொள்கிறது! கோடை காலத்தில் வரும் ஸ்ரீராமநவமியை ஒட்டி நாம் அருந்தும் நீர்மோரில் எத்தனைக் குளுமை! இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

பரமஹம்ச யோகானந்தரின் சுய சரிதை நூலில், 'கிரிபாலா’ என்ற பெண்மணியைப் பற்றிய செய்தி வருகிறது. அந்தப் பெண்மணி பல்லாண்டுகளாக எந்த உணவுமே சாப்பிடாமல் இருந்தார் என எழுது கிறார் யோகானந்தர். ஆனால், அதோடு நிறுத்தவில்லை. அப்படிச் சாப்பிடாமல் இருந்தாலும்கூட, பூரண உடல் வலிவோடு இருந்தார் என்றும், காற்றின் மூலம் தாவரங்கள் உணவு தயாரித்துக் கொள்வதுபோலான ஒரு விசேஷ சக்தியை அவர் இறை அருளால் பெற்றிருந்தார் என்றும் எழுதுகிறார். எனவே, ஆரோக்கியம்தான் நோக்கம். உணவு சாப்பிடாமல் இருப்பது நோக்கமல்ல.

நாளை நமக்காக!

விஸ்வாமித்திரர், யாகத்தைக் காப்பதற்காக ராம- லட்சுமணர்களை அழைத்துச் செல்கிறார். அப்போது, சரிவரச் சாப்பாடு கிடைக்காத கானகத்தில், பசியால் அவர்களின் உடல் வாடிவிடாமல் இருப்பதற்காக பலை, அதிபலை என்ற இரண்டு மந்திரங்களை அவர்களுக்கு உபதேசிக்கிறார். அந்த மந்திரங்களை ஜபிப்பதன் மூலம் சாப்பிடாமல் இருந்தாலும் உடல்நலத்தைக் காப்பாற்றிக்கொண்டு திடமாக இருக்க முடியும். உடல் நலமில்லாது இருந்தால் ராம- லட்சுமணர்கள் தாடகையையும் சுபாகுவையும் கொல்வதெப்படி?

அசோகவனத்தில் இருக்கும் சீதாப்பிராட்டி, 'யார் பரிமாறி ராமபிரான் சாப்பிடுவார்?’ என்று ராமனது உணவைப் பற்றித்தான் பெரிதும் வருந்துகிறாள். 'அருந்து மெல்லடகு யாரிட அருந்தும் என்றழுங்கும்’ என்று சீதாதேவியின் கவலையை விவரிக்கிறது கம்பராமாயணம்.  

உடல் நலன் பராமரிக்கப்படுவது மிக மிக முக்கியம் என்பதை நம் மதம் பல இடங்களில் தொடர்ந்து வலியுறுத்துகிறது. உடல் வலிமையின் உச்சத்துக்கு ஒரு சான்றாக பீமன் என்ற தனிப் பாத்திரத்தையே படைத்துக் காட்டுகிறது, மகாபாரதம். 'உடலினை உறுதி செய்!’ என்றும், 'ஊண் மிக விரும்பு!’ என்றும் பாரதியார் சொல்லும் புதிய ஆத்திசூடி வாசகங்கள் உண்மைதான். நல்ல சத்துள்ள உணவை உண்டு, உடலினை உறுதி செய்வது ஒவ்வோர் ஆன்மிகவாதியின் கடமை.    

நண்பர் வீட்டுக்குப் போனேன். அவரைப் பார்த்துக் கொஞ்ச நாள் ஆகிவிட்டது. வியாதியில் படுத்து எழுந்தவர் மாதிரி மிகவும் மெலிந்திருந்தார். நண்பரின் மனைவியிடம், ''என்ன இவர் உடம்புக்கு?'' என்று கேட்டேன். ''அவருக்குச் சாப்பிட நேரம் இல்லை. அவசர அவசரமாக எதையாவது கொறித்துவிட்டு ஓடுகிறார். நாலைந்து மாதமாகவே இப்படித்தான்'' என்று பதில் வந்தது.

''சாப்பிடக்கூட நேரமில்லாமல் அப்படி என்ன பிரச்னை?'' என்று நண்பரிடம் விசாரித்தேன். ''வேலை அதிகமப்பா. சாப்பாடு என்ன வேண்டிக் கிடக்கிறது சாப்பாடு?'' என்று தன்னையே செல்லம் கொஞ்சிக்கொண்டு பேசினார் அவர்.

''சரியாகத் தூங்குவதும் கிடையாது'' என்று மனைவியிடமிருந்து இரண்டாவது குற்றச்சாட்டு எழுந்தது. ''தூங்கித் தூங்கி என்ன கண்டோம் இப்போது! சினிமா ரசிகர் சங்க வேலை, கட்சி வேலைகள் எல்லாவற்றையும் இரவில்தான் கண் விழித்துச் செய்ய வேண்டியிருக்கிறது!'' என்று அங்கலாய்த்தார் நண்பர். அந்த அங்கலாய்ப்பில் தனிப் பெருமிதம்.  

நம்மில் பலர் இப்படித்தான் இருக்கிறோம். உடல் நலனைக் கவனிக்காமல் இருப்பது அவமானகரமா னது. ஆனால், அதையே ஒரு பெருமையாகப் பேசும் போக்கு நம்மிடம் இருக்கிறது. 'எனக்கு வேலை மிகுதி. வேளா வேளைக்குச் சாப்பிட மாட்டேன்!’ என்று சொல்ல ஒருவன் கூச்சமல்லவா அடைய வேண்டும்? 'என் உடல் நலனில் எனக்கு அக்கறை அதிகம். என்ன வேலை இருந்தாலும் சரியான நேரத்துக்குச் சாப்பிட்டுவிடுவேன்!’ என்று கம்பீரமாகச் சொல்ல, எப்போது பழகப் போகிறோம்?

சிலர் எங்கு போனாலும் சாப்பாட்டைக் கட்டிக் கொண்டு போவார்கள். இதனால் ஒரு சௌகரியம். நேரத்துக்குச் சாப்பிடலாம். சுகாதாரமான சாப்பாட்டையும் சாப்பிடலாம். உணவகங்களை நம்புபவர்களுக்கு, செல்லும் இடங்களில் எல்லாம் தரமான உணவகங்கள் இருந்தால் சரி; இல்லாவிட்டால் உடல்நலம் கெடுவது நூறு சதவிகிதம் உறுதி. வேளைக்குச் சாப்பிடாமல் அல்சர் வந்த பின்பு, ''அன்புள்ள அல்சரே! என்னை விட்டுவிடு. எனக்கு வேலை மிகுதி. அதனால்தான் சரியான நேரத்துக்குச் சாப்பிட முடியவில்லை!'' என்று வேண்டினால், அல்சர் கருணை கூர்ந்து நம்மை விட்டுப் போய்விடப் போகிறதா என்ன?

''நான் ரொம்ப பிஸி! எனக்கு வாக்கிங் போக நேரம் கிடையாது!'' என்று சொல்லி பிஸியாக இருப்பதாக மறைமுகமாகப் பெருமையடித்துக் கொள்பவர்கள் நிறையப் பேர் உண்டு. நாள்தோறும் நடைப்பயிற்சிக்குப் போகாதவர்களை நோக்கி சர்க்கரை வியாதி நடந்து வராது; ஓடியே வரும். சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, நடக்க வேண்டியது அவசியம். உடல் நலனைப் பராமரிக்காவிட்டால் சிரமம் நமக்கு மட்டுமல்ல; பணிவிடை செய்யும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும்தானே?

சுருக்கமாகச் சொல்லப்போனால், உடல் ஆரோக்கியத்துக்கான வழிகள் இரண்டு. மது, புகை போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாதிருப்பது என்பது ஒன்று. சரியான நேரத்தில் சாப்பிடுவது, நன்கு உறங்கி ஓய்வெடுப்பது, நாள்தோறும் நடப்பது போன்ற நல்ல பழக்கங்களை மேற்கொள்வது என்பது இன்னொன்று. இந்த இருவகையிலும் உடல்நலனைப் பராமரிக்காதவர்கள் ஏளனத்துக்கு உரியவர்கள். ஏன், பரிதாபத்துக்கு உரியவர்கள் என்றே சொல்லலாம்.

ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் உடற் பயிற்சிகளை அலுவலக இடைவேளைகளில் கூட்டம் கூட்டமாய்ச் செய்வதாகச் சொல்கிறார்கள். இணையதளங்களில் அத்தகைய படங்களைப் பார்க்கும்போது மனம் பரவசம் கொள்கிறது. அவர்கள் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள். எதற்கெல்லாமோ வெளி நாடுகளை உதாரணம் காட்டுகிறோம். உடல் நல விஷயத்தில் அவர்களைப் பார்த்து எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?

'கால்பந்து விளையாடு; கீதை உனக்கு நன்றாகப் புரியும்!’ என்றாரே, இப்போது 150-ஆம் ஆண்டு விழாக் காணும் விவேகானந்தர்! 'வலிமையான உடலில்தான் வலிமையான மனம் இருக்கும்’ என்கிற 'விவேக சிந்தனையை’ எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம் நாம்?

(சிறகு விரிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு