பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம்! - 5
##~##

'தினமும் ஐந்து கிலோ மீட்டர் நடைப் பயிற்சி செய்கிறேன். ஆனாலும், இந்த இரண்டு மாதங்களில் மூன்று கிலோ ஏறியிருக்கிறேன், டாக்டர்!'' என்று அந்த அன்பர் சொன்னதும், அதிர்ந்து போனார் மருத்துவர். அவரிடம் நடைப்பயிற்சி செய்வது எங்கே என்றும், அப்போது என்னவெல்லாம் செய்வீர்கள் என்றும் விவரமாகக் கேட்டார். 

''காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்சு, வீட்ல ஒரு காபியைக் குடிச்சிட்டு, தெருவுல இறங்கினா... நாலாவது தெருமுனைல, டீக்கடை இருக்கு. அங்கே, ஃபில்டர் காபி பிரமாதமாப் போடுவான். அதை ஒரு கப் வாங்கிக் குடிச்சிட்டு, அப்படியே நடையைத் தொடர்வேன். ஒரு கிலோமீட்டர் தாண்டும்போது, கொஞ்சம் வியர்க்க ஆரம்பிச்சிருக்கும். அங்கே இருக்கிற வாட்டர் பாட்டில் ஒண்ணு வாங்கலாம்னு நினைப்பேன். ஆனா, தண்ணிக்கு பைசா செலவழிக்கிறதுக்குப் பதிலா கூல்டிரிங்க்ஸே வாங்கிடலாம்னு தோணும். ஸோ, கூல்டிரிங்க்ஸைக் குடிச்சுக்கிட்டே நடையைக் கட்டுவேன். அடுத்த ஒரு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கறதுக்குள், பொலபொல வென விடிஞ்சி, பரபரன்னு ஆகிட்டிருக்கும் ஏரியா.

அன்பே தவம்! - 5

அங்கே ஒரு ஹோட்டல் வாசல்ல, சுடச்சுட உளுந்த வடையும் மெதுவடையும் போட்டு எடுத்துட்டிருப்பாங்க. கமகமன்னு அடடா... என்ன வாசனைங்கறீங்க! அந்தப் பக்கம் போறவங்க, வடையோட வாசத்துலேருந்து தப்பவே முடியாது, டாக்டர்! நீங்க அந்தப் பக்கம் போகும்போது நிச்சயமா வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க, சூப்பரா இருக்கும்! அதுல அதிகமில்லே, ரெண்டே ரெண்டு வடையை மட்டும் வாங்கிச் சாப்பிட்டுட்டு, பேப்பர்ல துடைச்ச கையோட திரும்பவும் வீடு நோக்கி நடக்க

அன்பே தவம்! - 5

ஆரம்பிப்பேன். வழியில ஒரு ஹோட்டல் இருக்கு. அந்தக் காலத்து ஹோட்டல். அங்கே சாம்பார் இட்லி ரொம்பப் பிரமாதமா இருக்கும். ஒருநாள் அங்கே சாம்பார் இட்லி சாப்பிடலேன்னாக்கூட, எதையோ இழந்துட்ட மாதிரி மனசு கனமாயிடும் எனக்கு!'' என்று அந்த அன்பர் விவரிக்க, விவரிக்க... டாக்டர் தலையில் கைவைத்து, அப்படியே நாற்காலியில் சாய்ந்துவிட்டார்.

''உடல் உழைப்பு அதிகம் இருந்தாலும் உணவுலயும் கொஞ்சம் கவனம் தேவைங்கறதை இப்படி ஒரு கதை போல் சிரிக்கச் சிரிக்கச் சொல்லும்போது, கிராம மக்கள் அதைச் சட்டுனு புரிஞ்சுக்கிட்டு, எண்ணெய்ப் பதார்த்தங்களை விட்டு விலகிடுறாங்க. காலத்துக்கு தக்க உணவும், தேவைக்கு ஏத்த உணவுமா சாப்பிடும்போது, உடல்ல தேவையற்ற கொழுப்பு சேராது; எப்பவுமே ஸ்லிம்மா இருக்கமுடியும் என்று ஜருகு கிராம மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது, அதைக் கைதட்டி வரவேற்றாங்க!'' என்று பெருமிதத்துடன் சொன்னார் மனவளக்கலைப் பயிற்சிப் பேராசிரியர் வெங்கடேசன்.

உண்மைதான். பொதுவாக கிராமத்து ஜனங்கள் கட்டுறுதியான உடல் கொண்டவர்கள். ஆனால், இந்த நவீன யுகத்தில் காளையைப் பூட்டி ஏர் உழுவதற்குப் பதிலாக, டிராக்டர் வந்துவிட்டது; ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சுவதற்குப் பதிலாக பம்ப் செட் வந்துவிட்டது. இப்படிப் பல மாற்றங்களால், கிராமத்து ஜனங்களுக்கும் தனிக் கவனம் எடுத்து, உடம்பை நல்ல முறையில் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. தவிர, கிராமங்களில் உடல் அளவைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், பசிக்குச் சாப்பிடவேண்டும் என்ற காரணத்தைச் சொல்லியே, அதீத ஆர்வத்துடன் பரிமாறுவார்கள். 'வயித்துக்கு வஞ்சனை பண்ணாம சாப்பிடுப்பா’ என்று விழுந்து விழுந்து கவனிப்பார்கள். இதனால் பொதபொதவென உடல் பெருத்துப் போகும். பிறகு, நடைப்பயிற்சிகூட செய்யமுடியாத நிலை ஏற்படும்.

''மனவளக் கலைப் பயிற்சிக்கு நடுவுல, உடம்பை எப்படியெல்லாம் வைச்சுக்கணும்; எப்படிப்பட்ட உணவையெல்லாம் சாப்பிடணும்னு கதை கதையாச் சொன்னோம். அது அவங்க மனசுல நல்லாவே பதிஞ்சிருக்கு. அதுவரை ஏதேதோ உணவுகளை இஷ்டத்துக்குச் சாப்பிட்டுட்டிருந்தவங்ககூட, அப்புறம் சாப்பாட்டு விஷயத்துல ரொம்பக் கவனமா இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்படி சீரான உணவுக்கு மாறினவங்க நிறையப் பேர்'' என்கிறார் வெங்கடேசன்.

உடற்பயிற்சி ஒருபுறம் இருந்தாலும், உணவில் கட்டுப்பாடு வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான பயிற்சி போலும்!

- வாழலாம்

படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு