Published:Updated:

நாளை நமக்காக!

சிரிக்கத் தெரிய வேண்டும்!திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

நாளை நமக்காக!

சிரிக்கத் தெரிய வேண்டும்!திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

Published:Updated:
நாளை நமக்காக!
##~##

ரே ஒரு சிரிப்புதான் ஓர் இதிகாசத்தையே உருவாக்கியது என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம். பாஞ்சாலி சிரித்த ஒரே ஒரு சிரிப்பால் விளைந்ததுதான் மகாபாரத இதிகாசம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தருமபுத்திரர் இந்திரப்பிரஸ்தம் என்ற புதிய மாளிகையைக் கட்டினார். அதன் புதுமனை புகுவிழாவுக்குத் துரியோதனன் அழைக்கப்பட்டான். தரையை இழைத்து இழைத்துக் கட்டியிருந்தார்கள் அந்த மாளிகையை. தரை எது, தண்ணீர் எது என்று தெரியாதவாறு தரை பளபளத்துக் கொண்டிருந்தது.  

துரியோதனன் அடிமேல் அடிவைத்து மெள்ள மெள்ள நடந்தான். தண்ணீர் என்று ஜாக்கிரதையாகக் கால் வைத்தால், தரை சடக்கென்று காலில் தட்டியது. சரிதான், தரை என்று மேலாகக் கால் வைத்தால், தண்ணீரில் சளக்கென்று கால் உட்புகுந்தது. என்ன மாய வேலை இது! அவன் திகைத்தான்.

அவன் தடுமாற்றத்தை உப்பரிகையிலிருந்து உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தாள் திரௌபதி. தாங்க இயலாமல் 'க்ளுக்’ என்று ஒரு சிரிப்பு பிறந்தது, அவளின் சிவந்த உதடுகளிலிருந்து. (பார்வையற்ற திருதராஷ்டிரனின் மகனும் பார்வை யற்றவன்தானோ என்று அவள் கேட்டதாகவும் ஒரு கதையில் வருகிறது.)

குழந்தை தடுமாறி விழும்போதுகூடத் தாய் கலகலவெனச் சிரிப்பது உண்டு. அதை ஏளனமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. குழந்தை அப்படி எடுத்துக்கொள்வதுமில்லை. ஆனால், துரியோதனன் குழந்தையல்லவே? அந்தப் புது மாளிகையின் கட்டுமான அழகைப் பார்த்து நெஞ்சு கொள்ளாத ஆற்றாமை அவனுக்கு. அந்தப் பொறாமைத் தீயில் நெய்வார்த்தது பாஞ்சாலியின் எள்ளல் சிரிப்பு.

என்ன ஏளனம் என்னைப் பார்த்து அவளுக்கு? என்னை யாரென்று நினைத்து இப்படிச் சிரிக்கிறாள் அவள்? தெரியாமல் தடுமாறியது ஒரு குற்றமா?

துரியோதனன் மனத்தில் வஞ்சினம் பிறக்கிறது. இந்தச் சிரிப்புக்குப் பழிவாங்க வேண்டும் என்று அவன் ஆழ் மனம் உறுதியெடுத்துக் கொள்கிறது.

அந்தச் சிரிப்பால்தான் பின்னால் அவள் துகில் உரியப்படும் நிலைக்கு ஆளாகிறாள். ஸ்ரீகண்ணபிரான் அவள் மானத்தைக் காப்பாற்றிய பின்பும், அவள் தன் ஐந்து கணவர்களோடு கானக வாழ்வை மேற்கொள்ள நேர்கிறதே.., அதற்கும் மூல காரணம் அவள் அடக்கமாட்டாமல் சிரித்த அந்த முதல் சிரிப்புதான்!

பின்னாளில் பஞ்ச பாண்டவர் அணி வெற்றியடை கிறது. அந்த வகையில் அவள் வெற்றியடைகிறாள். 'பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோ தனன் ஆக்கை ரத்தம் மேவி இரண்டும் கலந்தே குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே’ சீவிக் குழல் முடிக்கிறாள் அவள். தன் சபதத்தை நிறைவேற்றிக் கொள்கிறாள்.

நாளை நமக்காக!

வெற்றி வெகுநாள் கழித்து என்றோ வருகிறது. ஆனால், அதுவரை அவள் வாழ்வில் பட்ட கடும் துயரங்களுக்கெல்லாம் காரணம் அந்தச் சிரிப்புதான். அவள் மட்டும் சிரிக்காமல் அன்று அடக்கத்தை மேற்கொண்டிருந்தால், பாஞ்சாலி அத்தனை துன்பப்பட்டிருக்க நேர்ந்திருக்காது.

சீதையின் திருமணத்துக்கு வருகிறார் சிவ பெருமான். எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார் என ஸ்ரீராமன், சிவதனுசாகிய வில்லொடித்து நடந்த திருமணம்.

மிதிலையில் கோலாகலமாக நடைபெறுகிறது சீதா கல்யாணம். எல்லோரும் சீதாதேவிக்கு ஆசி கூறி, பரிசுப் பொருட்களைக் கொடுக்கிறார்கள். நடப்பது, நடக்கப் போவது அனைத்தும் அறிந்த சிவன், சீதையையே பாசத்தோடு சிறிது நேரம் பார்க்கிறார். பின்பு, தன் அன்பளிப்பாக, தான் திரிபுரம் எரித்தபோது சிரித்த சிரிப்பை அவளுக்குத் தருகிறார். சிவனின் திரிபுரம் எரித்த சிரிப்பை மரியாதையோடு வாங்கித் தன் ஆழ்மனத்தில் நிரப்பிக் கொள்கிறாள் சீதாதேவி.

பின்னொரு காலம் வருகிறது. அசோக வனத்தில், திரிஜடையை மட்டுமே துணையாய்க் கொண்டு அவள் தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த காலம். ராமபிரான் சேதுபந்தனம் கட்டி அவளைச் சிறைநீக்கி அழைத்துச் செல்ல வருகிறார். அப்போது அரக்கர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க இயலவில்லை. சீதை, சிவனார் தனக்குத் தந்த கல்யாணப் பரிசை நினைத்துக் கொள்கிறாள். அந்தப் பரிசின் பெருமையை வெளிப்படுத்த இதுவல்லவோ தகுந்த நேரம்!

ஆழ்மனத்திலிருந்து அந்தத் திரிபுரம் எரித்த சிரிப்பை வெளியே எடுக்கிறாள். இலங்கையில் வாழும் அரக்கர்களைப் பார்த்துக் கடகடவென ஒரு சிரிப்புச் சிரிக்கிறாள். என்ன உக்கிரம் அந்தச் சிரிப்பில்!  ராமனின் வீரத்தோடு, பரிசாகச் சிவனார் தந்த திரிபுரம் எரித்த சிரிப்பின் உக்கிரமும் சேர்ந்துகொள்கிறது. அரக்கர் குலம் அழிந்து சாம்பலாகிறது.  

ஏளனச் சிரிப்பு எதிர்விளைவுகளைத் தோற்று விக்கும்; கோபச் சிரிப்பு குலத்தையே நாசமாக்கும். தவிர, சொல்லாமல் பல விஷயங்களைச் சொல் லும் சிரிப்புகளும் உண்டு.

ராமனே சரண் என்று வந்திருக்கிறான் விபீஷணன்.

அவனைத் தங்கள் அணியில் சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என முடிவெடுக்க வேண்டும். ராமன் அனுமனிடம் கருத்துக் கேட்கிறான். அனுமன், தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம், விபீஷணன் மிக நல்லவன் என்கிறான். பின்னர், சுக்ரீவனிடம் கருத்துக் கேட்கிறான் ராமன். 'சொந்த அண்ணனையே பகைத்துக்கொண்டு வருபவனை எப்படி நாம் முழு நம்பிக்கை வைத்து ஏற்க முடியும்?’ என்று கேட்கிறான் சுக்ரீவன்.

சுக்ரீவனின் வார்த்தைகளைக் கேட்டதும், லட்சுமணனைப் பார்த்து மெல்லிய முறுவல் பூத்தான் ஸ்ரீராமன் என்கிறது ராமாயணம். 'சுக்ரீவனே அப்படித் தன் அண்ணன் வாலியைப் பகைத்துக்கொண்டு நம்மிடம் சரண் என்று வந்தவன்தானே? தனக்கொரு நியாயம், மற்றவனுக்கு வேறொரு நியாயமா?’ என்று கேட்காமல் கேட்கிறது ராமனின் ரோஜாப்பூ உதடுகளி லிருந்து பிறந்த முல்லை மலர்ச் சிரிப்பு.

சிரிப்பு தொடர்பான ரம்மியமான பல கற்பனைகளை இந்துப் புராணங்கள் தாங்கியுள்ளன. துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதியது 'பிரபுலிங்க லீலை’ என்னும் பழைய செய்யுள் நூல். சிவப்பிரகாச சுவாமிகளைக் கற்பனைக் களஞ்சியம் என்பார்கள். பார்வதியின் சிரிப்பு தொடர்பாக ஓர் அரிய கற்பனையைத் தன் நூலில் புகுத்தியிருக்கிறார் அவர்.

சிவனார் வீதியுலா வருகிறார். அவரைப் பார்த்து சர்வாலங்கார பூஷிதையான பார்வதி மலர்ந்து ஆனந்தமாக நகைக்கிறாள். அவள் சிரிப்பைக் குனிந்து பார்க்கிறது அவள் மூக்கில் தொங்கிக் கொண்டிருந்த புல்லாக்கில் இருந்த

ஒரு விசேஷ முத்து. சிரிக்கும்போது பளீரென்று தெரியும் பார்வதியின் முத்துப் பல் வரிசையில் உள்ள பல் முத்துக்கு தான் இணையாக இல்லையே என்று புல்லாக்கில் தொங்கிக் கொண்டிருந்த முத்துக்குத் தாளாத துக்கமாம். அதனால்தான், புல்லாக்கிலிருந்த முத்து தாங்கொணாத் துயரத்தில் மூக்கில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்குகிறது என்று எழுதுகிறார் சிவப்பிரகாசர்.

நாளை நமக்காக!

வார்த்தைதான் பேசும் என்பதில்லை; சிரிப்பே பேசும். இன்னும் சொல்லப் போனால், வார்த்தை மொழிசார்ந்துதான் இயங்கும். சிரிப்போ மொழி கடந்தும் இயங்கும் வலிமை பெற்றது. ஏனென்றால் சிரிப்பு, மனிதர் எல்லோர்க்கும் புரிவதான ஒரு பொதுமொழி.

என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ. மதுரம் பாடிய திரைப்பாடல் ஒன்று உண்டு. எல்லா விதமான சிரிப்பைப் பற்றியும் சிரிக்கச் சிரிக்கச் சொல்லும் பாடல் அது. அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு, சதிகாரர்களின் சாகசச் சிரிப்பு, சங்கீதச் சிரிப்பு என்றெல்லாம் பலவகைப்பட்ட சிரிப்புகளைத் தன் அபார ஆற்றலால் சிரித்துக் காட்டுவார் என்.எஸ்.கே.

நாம் மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கும்போது எச்சரிக்கையாகச் சிரிக்க வேண்டும்.

அடுத்தவர் மனத்தைப் புண்படுத்தாமல் சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சக மனிதர்கள் மேல் நேசமும் பிரியமும் கலந்த சிரிப்பு மட்டுமே நம் முகத்தில் தோன்ற வேண்டும்.

ஏளனம், கேலி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் சிரிப்புகளைத் தொடர்ந்து சிரித்து வந்தால், நம் வாழ்க்கை சிரிப்பாய்ச் சிரிக்கும். மற்றவர்கள் நம்மேல் அன்பு பாராட்ட மாட்டார்கள். பாஞ்சாலி மேல் விரோதம் கொண்ட துரியோதனன் மாதிரி நம்மைச் சுற்றி விரோதிகளே பெருகுவார்கள்.

இப்போது பல இடங்களில் 'ஹ்யூமர் கிளப்’ என்று சொல்லப்படும் சிரிப்புக் குழுக்கள் தொடங்கப்படுகின்றன. அந்தக் குழுவைச் சார்ந்தவர்கள் பற்பல நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். சிரிப்பது உடல் நலத்துக்கு நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.

கடவுள் வாழ்த்துப்போல, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னால் அவர்கள் எல்லோரும் சேர்ந்து வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். 'வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்று தங்கள் சிரிப்புக்கு ஆதரவாக ஒரு பழமொழியையும் மேற்கோள் காட்டுகிறார்கள்.

ஆதரவான ஒரு மெல்லிய முறுவல் எத்தனையோ செயல்களை எதிராளிகள் நமக்கு ஆதரவாகச் செய்யுமாறு அவர்களைத் தூண்டும். ஆனால், கடுகடுப்புடன் கூடிய ஓர் ஏளனச் சிரிப்பு நண்பர்களைக்கூட நிரந்தரப் பகைவர்களாக்கிவிடும்.

ஸ்ரீமுருகன், ஸ்ரீராமன், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகுருவாயூரப்பன் என நம் இந்துக் கடவுளரின் முகத்தில் தென்படும் தெய்வீகச் சிரிப்பைப் பார்த்துப் பார்த்து நாம் பழகுவோம். நம் முகத்திலும் சாந்தம் கலந்த இனிய சிரிப்பு தவழுமாறு பார்த்துக் கொள்வோம். அந்தப் புன்சிரிப்பின் மூலம் வாழ்க்கையை வெற்றிகொள்வோம்.  

(சிறகு விரிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism